சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் – ஏப்ரல் இறுதியில் விசாரணைகள் !
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை இவ்விடயம் தொடர்பாக ஆலோசனைகளை கோரும் தீர்மானத்தை அங்கீகரித்ததை தொடர்ந்து, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, காசாவின் பெண்களிற்கு மருத்துவசதிகளை வழங்கும் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் திட்டமிட்டு மேற்கொண்ட தாக்குதலை, இனப்படுகொலை நடவடிக்கைகளிற்கு சமனானது எனவும் பாலஸ்தீன பிரதேசங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அவற்றை அழிப்பதற்கும் இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறையை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்தினார்கள் எனவும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் பாலியல் மற்றும் பாலின வன்முறைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீன ஆணைக்குழு மேற்கொண்ட 49 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.