நாட்டில் எரிபொருள் பிரச்சினையில்லை ! கமிஷன் பிரச்சினைதான் உள்ளது ! நாட்டின் நிதிக் கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலரைத் தொடுகின்றது !
நாட்டில் எரிபொருள் பிரச்சினையில்லை. கமிஷன் பிரச்சினையே உள்ளது. அதற்காகவே விநியோகஸ்தர்கள் காலிமுகத்திடலில் மூன்றுநாட்களாக முற்றுகையிட்டுள்ளனர். தங்களுக்கு வரவேண்டிய கமிஷன் வழங்கப்படவில்லை என்றே விநியோகஸ்தர்கள் கெம்பியுள்ளனர். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகஸ்தர்களுக்கு வழங்கிய கொமிஷனை ரத்து செய்ததால் இவர்கள் அந்தக் கொமிஷனைக்கோரி எரிபொருளுக்கான கோரிக்கையை வைக்காமல் நாட்டில் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரசாங்கத்தை பணிய வைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது சாத்தியமாகுமா அல்லது அரசாங்கம் இராணுவத்தை அனுப்பி விநியோகத்தை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த விநியோகஸ்தர்கள் 1400 பேர் 37 பில்லியன் ரூபாயை சட்டவிரோதமாக பகிர்ந்துகொண்ட தாக குற்றம்சாட்டியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்விநியோகஸ்தர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு புலனாய்வுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் ஊழல் மற்றும் விரயத்திற்கு எதிரான குடிமக்கள் சக்தி அமைப்பு, விநியோகஸ்தர்கள் பொதுமக்களை துன்புறுத்தி சட்டவிரோதமாக கொமிஷனை அறவிடுவதாக புகார் செய்துள்ளனர்.
இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசு இருக்கும் வரை எரிபொருள் பிரச்சினை ஏற்படுவதற்கு வழியில்லை என்றே பொருளாதார சுட்டிகள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பன இலங்கையின் பொருளாதாரச் சுட்டிகளில் திருப்தியடைந்துள்ளன. தற்போது இலங்கையின் அந்நியச் செலவாணி கையிருப்பு 6.4 பில்லியன் அமெரிக்க டொலராக உள்ளது. இது அடுத்த ஆண்டு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் தேசிய மக்கள் சக்தி அரசில் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பே இல்லை என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.