இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பாகவும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்தும் பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினருக்கு ஜனாதிபதி விளக்கிக் கூறினார்.
இச்சந்திப்பில் அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோர் கலந்துகொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.