ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் – சரத் வீரசேகர கூச்சல் !
மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர்களை இங்கு தங்க வைத்தால் தேவையில்லாத பிரசச்சினைகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அட்மிரல் சரத் வீரசேகர, பணம் செலுத்தி படகில் வருபவர்கள் அகதிகளல்ல, இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இலங்கையின் கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்து அனைத்து இனத்தவர்களுடன் இணக்கமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்கிறார்கள். பிற நாட்டு முஸ்லிம்கள் ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கிறார்கள். ஆகவே அவர்கள் இலங்கையில் இணக்கமாக செயற்படமாட்டார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கைக்கு வருகைத் தருபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் போர்த்துக்கேயர்களும் அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு தான் இலங்கைக்கு வந்து இலங்கையை ஆக்கிரமித்தார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.
இனவாத கருத்துக்களை கொண்ட தென்னிலங்கை தலைவர்கள் அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றுவது தொடர்பில் அதிகம் பேசி வருகின்றனர் – தென்னிந்தியாவுக்கு சென்ற இலங்கை தமிழ் அகதிகளை பற்றியே பேசாத தமிழ்தேசிய தலைமைகளிடம் ரோஹிங்கியா அகதிகளை பற்றி பேசுவார்கள் என எதிர்பார்ப்பது அபத்தமானது. இருந்தாலும் கூட மனித உரிமை அமைப்புக்களும் – சமூக செயற்பாட்டாளர்களும் – இலங்கை மக்களும் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றகூடாது என்பதை வலியுறுத்தி போராட்டங்களை பல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மியன்மாரிலிருந்து நாட்டுக்கு வருகைதந்திருக்கும் ரோஹிங்கிய அகதிகளைத் திருப்பியனுப்பவேண்டாம் எனக்கோரி கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை பொதுமக்களும் – சமூக செயற்பாட்டாளர்களும் மேற்கொண்டிருந்தமை கவனிக்கத்தக்கது.