நாட்டையும் மக்களையும் முதன்மைப்படுத்தி சேவை புரியுங்கள்!

president_wp.jpgதேர்தல் வாக்குறுதிகளுக்காக மக்கள் வாக்களிக்கும் காலம் போய்விட்டது. மக்கள் இன்று அவர்களது வயிற்றை மாத்திரம் கருத்திற்கொண்டு வாக்களிப்பதில்லை. அவர்கள் நாட்டையே முதன்மைப்படுத்தியிருக்கிறார்கள். எனவே மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் நாட்டையும் அதேபோன்று மக்களையும் முதலில் நினைக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணசபையின் புதிய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

எமது அரசாங்கத்தின் கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொண்டிருப்பதோடு நாடு சரியானதொரு பாதையில் சென்றுகொண்டிருப்பதாக அவர்கள் நம்புவதையே தேர்தல்களில் அடுத்தடுத்து கிடைத்துவரும் வெற்றிகள் காட்டுகின்றன.

கொழும்பு மாவட்டம் சிங்களவர்கள்,  தமிழர்கள்,  முஸ்லிம்கள் என பல்வேறு இனங்கள் வாழும் ஒரு பிரதேசமாகும். எனவே மேல் மாகாணசபையில் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்கள் கொழும்புக் கண்ணோட்டத்தில் மாத்திரம் பார்க்காமல் பரந்துபட்ட
எல்லா மக்களினதும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அவ்வாறானதொரு மனப்பாங்கே இந்த வெற்றியில் மிகப்பெரும் சந்தோசத்தைக் கொண்டுவந்து தரும்.

தேர்தல் வெற்றிகள் என்பது பொறுப்புணர்வைத் தவிர வேறு ஒன்றுமில்லை. வெற்றியோடு ஒருவன் ஏற்றுக்கொள்வது பொறுப்புணர்வையாகும். எனவே இந்தப் புதிய மாகாணசபை முன்னைய சபைகளை விடவும் கூடுதல் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்.

நான் ஏன் இதனைச் சொல்கிறேன் என்றால் நாங்கள் இந்தத் தேர்தலில் எந்தவாக்குறுதிகளையும் ஒரு விஞ்ஞாபனமாக முன்வைக்க வில்லை. இருந்தும் மேல் மாகாண மக்கள் முன்னெப்போதுமில்லாதவகையில் எமக்கு வாக்களித்துள்ளனர்.

நாட்டுக்கான தேவையோடு ஒப்பிடுகின்றபோது ஏனைய எல்லாத்தேவைகளும் இராண்டாம் பட்சமானவையே. நாட்டை முதன்மைப்படுத்திய மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் என்றவகையில் உங்கள் மீது ஒரு மிகப் பெரும் பொறுப்பு உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் எப்போதும் நாட்டையும் அதேபோன்று மக்களையும் முதலில் நினைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *