பன்றிக் காய்ச்சல் இலங்கைக்குள் பரவுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறு மட்டங்களிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பன்றி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட தகரத்தில் அடைக்கப்பட்ட உணவு வகைகள் என்பவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக கால்நடை அபிவிருத்தி அமைச்சர் சி. பி. ரட்நாயக்க் தெரிவித்தார்.
உலகின் பல நாடுகளில் பன்றிக் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பன்றி இறைச்சியும், பன்றி இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட தகரத்திலடைக்கப்பட்ட உணவு வகைகளின் இறக்குமதியும் கடந்த திங்கட்கிழமை முதல் முழுமையாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.
தாய்லாந்து, சீனா போன்ற நாடுகளிலிருந்து பன்றி இறைச்சியும், பன்றி இறைச்சியை அடிப்ப டையாகக் கொண்ட தகரத்தில் அமைக்கப்பட்ட உணவுகளும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. பன்றி இறைச்சி மாத்திரம் மாதாந்தம் சுமார் 1700 கிலோ கிராம் இறக்குமதி செய்யப்படுகின்றது.
பன்றிக் காய்ச்சலின் எதிரொலியாக இவற்றின் இறக்கு மதி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்கள் சுங்கப் பிரிவினருக்கும், விமான நிலைய மற்றும் துறைமுக அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.