கனடா செல்லவுள்ளோருக்கு புதிய சிக்கல் – ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது கனடா!
சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு புதிய எல்லைப் பாதுகாப்பு விதிகளை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. கனடா, எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் நாய்கள், குழுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கூட்டு குழு உருவாக்கப்படவுள்ளது.
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்காவிட்டால், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரிவிதிப்புகளை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியதிலிருந்து கனடா கடும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றது. கனடா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும் மற்றும் அதன் மொத்த ஏற்றுமதியில் சுமார் 75 சதவிகிதம் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. ட்ரம்ப்பால் விதிக்கப்படும் புதிய கட்டணங்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு ஒரு அடியாக இருக்கலாம். இதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை கனடா முன்னெடுத்துள்ளது.
கடந்த ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப் பகுதிக்குள் 23,000 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் புதிய விதிகள் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோர் மற்றும் அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பில் மேலும் கெடுபிடிகள் அதிகரிக்கப்படலாம். விண்ணப்பதாரர்களின் பின்புலம் மற்றும் ஆவணங்கள் கடுமையாக சரி பார்க்கப்படலாம், பொது நலனுக்காக ஆவணங்களை ரத்து செய்யும் உரிமை கொண்ட புதிய சட்டத்தால், குடியேற்றக் கொள்கைகள் இன்னும் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.