இன்றைய செய்திகள்: 12.12.2024
உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது இலங்கை!
குரங்கின் கையில் தேங்காய்: தேங்காய் அரசியல்!
1) கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: அமெரிக்க ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகல்!
கொழும்பு துறைமுகக் கட்டுமானத்தை அதானி குழுமம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த கால இலங்கையரசை வற்புறுத்திச் செய்து கொண்ட இந்த ஒப்பந்தத்தை புதிய தேசிய மக்கள் சக்தி அரசும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா வழங்கி வந்தது. ஆனால் அதானி குழுமம் இக்கட்டுமானத்தை மேற்கொள்ளத் தேவையான 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்க வங்கியிலிருந்து கடன்பெற்றே அதனைச் செய்வதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அமெரிக்க நீதிமன்றம் அதானி மோசடியான முறையில் நடந்துகொண்டதாகக் கூறி அதானிக்கும் அவருடைய குழுமத்தினருக்கும் பிடியாணை பிறப்பித்துள்ளதை அடுத்து, துறைமுகக் கட்டுமானத்திற்கான நிதியை வழங்க அமெரிக்க நிறுவனம் மறுத்துள்ளது. தற்போது அதானி குழுமம் தானாகவே கொழும்பு துறைமுகக் கட்டுமானத்திலிருந்து விலகிக்கொள்ள வாய்ப்புள்ளதாக பொருளியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இவர்கள் மன்னார் காற்றாலைத் திட்டத்திலிருந்தும் விலக வேண்டும் என இலங்கை மக்கள் குறிப்பாக மன்னார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில், கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் (CWIT) எனப்படும் ஆழ்கடல் கொள்கலன் முனையத்தின் வளர்ச்சி, கட்டுமானம் மற்றும் இயக்கத்துக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதானி போர்ட்ஸ், இலங்கை கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை (CWIT) ஆகியவற்றின் கூட்டமைப்பினால் CWIT உருவாக்கப்பட்டு ள்ளது.
அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மற்றும் ஏழு பேர் மீதுஇ இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சமாக கொடுக்க சதி செய்ததாக அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம்இ இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பின்னணியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகியுள்ளது. அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுக்களை ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுத்துள்ளது. மேலும் சட்டப்படி இவ்விவகாரம் கையாளப்படும் என தெரிவித்துள்ளது.
இருப்பினும், மேற்கு முனையத்தின் அபிவிருத்திட்டத்திற்கு, அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் 51 சத வீத பங்கை வைத்திருக்கும் அதானி குழுமம் US IDFC இன் நிதியுதவியின்றி திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2. குரங்கின் கையில் தேங்காய்: தேங்காய் அரசியல்!
சடுதியாக தேங்காயின் விலை அதிகரித்துள்ள சூழலில் இதற்கான முழுமையான பொறுப்பும் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் திட்டமிடப்படாத பொருளாதார கொள்கைகளின் விளைவே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். வருடாந்தம் 20 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது, இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாக, இலங்கையில் அதீதமாக இனவிருத்தியடைந்துள்ள குரங்குகளின் ஒரு தொகுதியை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தி, மரத்தில் புடவை கட்டுதல், தாள்களை தொங்கவிடுதல், நிலத்தின் ஒரு பகுதியை மீண்டும் புல்வெளிக்கு விடுதல் போன்ற நடைமுறைக்கு மாறான தீர்வுகளை வழங்கியதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் குரங்குகளை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இன்னும் வாய்ப்பு இருப்பதால், அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்ததின் பின்னர் அதிகரித்துள்ள குரங்குகளின் இனவிருத்தியினால் வடக்கு மக்களை குறிப்பாக வன்னி மாவட்ட மற்றும் தென்மராட்சி மக்களும் மிக அதிகமான சிரமங்களை எதிர்கொள்ளவதாக முறையிடுகின்றனர். கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் குரங்குகள் தேங்காய்களை மட்டுமல்ல, முருங்கைக்காய்கள், மாங்காய்கள், வாழைக்குழைகள் மற்றும் இதர உப பயிர்களையும் சேதப்படுத்தி அழிப்பதாகவும் மக்கள் முறையிடுகின்றனர். இன்று நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இயற்கையும் மிருங்களும் கூட மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன.
இப்பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து சூழலியல் ஆர்வலர்களும் இணக்கமான ஒரு தீர்வுக்கு வர வேண்டும்.
3. அபிவிருத்தியும் இல்லை வேலையும் இல்லை: புலம்பெயரும் இளையதலைமுறை !
உள்ளூராட்சி சபைகளை பலப்படுத்துவதன் மூலம் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்களை தடுக்கலாம் என்கின்றார் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன். அதற்கு வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைய செய்யும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் எனவும் தெரிவிக்கின்றார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் டிசம்பர் 11 இல் இடம்பெற்ற பண்பாட்டு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எமது மாகாணத்தின் இளையோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் எமது மாகாணத்தில் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்கு முதலீடுகளை இங்கு ஊக்குவிக்க வேண்டும். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிலர் வந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் கேட்டபோது, முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கின்றார்கள் என்று சொன்னார்கள். அது அன்றைய நிலைமை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரானது. பல முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் வரவேற்க வேண்டும். எமது உள்ளூராட்சி மன்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படவேண்டும். அவர்களை அலைக்கழிக்கக்கூடாது. எமது மாகாணத்தை நாம் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைத்து செயற்பட வேண்டும்” எனவும் அறைகூவல் விடுக்கின்றார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது மாகாண சபை முறைமைக்கு அப்பால் ஒவ்வோர் பிரதேசங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற தொனிப்பொருளில் இயங்குவதை அவதானிக்க முடிகிறது. ஏற்கனவே இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைகள் அரசியல் கட்சிகளின் கெடுபிடிகளாலும், ஊழல்களாலும் நிறைந்துள்ளதாக பலத்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக வடக்கு மாகாண சபை ஊழலால் கவிழ்க்கப்பட்டதும் கடந்த கால வரலாறு. இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்திக்கான கட்டமைப்பானது நாட்டின் அடிமட்டத்தில் இருந்து கட்டியெழுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டை கடந்த காலங்களிலும் வெளிப்படுத்தியிருந்தது. இந்த அடிப்படையிலேயே அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதே போன்றதான ஓர் கருத்தையே ஆளுநர் வேதநாயகன் வெளிப்படுத்தியுள்ளமை கவனிக்கத்தக்கது.
4. சர்வதேச அளவில் சாதிக்கும் இலங்கைத்தமிழ் வீரன் புசாந்தன் !
சினிமா தொடங்கி விளையாட்டு வரை தென்னிந்திய ஊடகங்களும், இந்திய ஊடகங்களுமே கதி என இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரின் பெயர் தெரியுமோ இல்லையோ ஆனால் தென்னிந்திய அரசியலின் அத்தனை அசைவுகளையும் தெரிந்து வைத்திருப்பர். அது போலவே தான் எப்படி இந்தியாவில் கிரிக்கெட் என்கிற விளையாட்டு வணிகமயப்படுத்தப்பட்டு ஏனைய விளையாட்டுக்களும், திறமையானவர்களும் ஊடகங்களின் பார்வையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டார்களோ அதே நிலை தான் இலங்கை தமிழர் மத்தியிலும் நீடிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டில் தமிழர்களுக்கு வாய்ப்பு இல்லை – இது ஓர் இனவாத நாடு என ஒரு தரப்பினர் கூறிக்கொண்டே இருந்தாலும் மறுபுறமாக திறமை உள்ள தமிழ் இளைஞர்கள் தேசிய சர்வதேச மட்டத்தில் சாதித்துக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கான சமீபத்திய எடுத்துக்காட்டு பளுதூக்கும் வீரர் சற்குணராசா புசாந்தன்.
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான (Power Lifting) பளு தூக்கல் போட்டிகளில், யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் 3 பதக்கங்களைப் பெற்றிருந்தார். இது இலங்கை விளையாட்டுத்துறையின் பாரிய மைல்கல்லாக அமைந்ததுடன் தமிழ் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளையும் இது திறந்து விட்டிருந்து.
இந்த நிலையில் தற்போது உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்றுவரும் சர்வதேச ஆசிய பளுதூக்கல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட புசாந்தன் 3ம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய வெற்றியை பலரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
5. பணம் செலுத்தி இந்திய மீனவர்கள் வடகடலில் மீன்பிடிக்கலாம் முன்னாள் கடற்தொழில் அமைச்சரின் திட்டத்தை இந்நாள் அமைச்சர் நிறுத்தினார்!
அத்துமீறி இலங்கையில் மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வாக முன்னாள் கடல்த்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவால் கொண்டுவரப்பட்ட திட்டம் கைவிடப்பட்டதாக புதிய கடல்த்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வடமாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
டக்ளஸ் தேவாநந்தா முன்னதாக அரசாங்கத்துடனும் கடல்த்தொழில் திணைக்களத்துடனும் கலந்திரையாடி வடகடலில் கட்டணம் செலுத்தி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்தை முன்மொழிந்திருந்தார். இத் திட்டமானது இலங்கை மற்றும் இந்திய கடல்த்தொழில் பிரச்சணைகளுக்கு நிரந்தர தீர்வாகாது என்றும் கூறும் அமைச்சர் சந்திரசேகர் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களிடையேயான நேரடியான கலந்துரையாடல் மூலம் இப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வை காணலாம் என்கிறார்.
இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணும் வரை கைதுகள் தொடரும். எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்படுவார்கள் என வடக்கிலுள்ள கடற்தொழிலாளர் சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
6. உணவு உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி அடி எடுத்து வைக்கின்றது இலங்கை!
இலங்கை உணவு உற்பத்தியில் தன்நிறைவை நோக்கி தனது முதலாவது அடியை எடுத்து வைத்துள்ளது. அரிசி இறக்குமதிக்கான வரியை 66 வீதம் வரை உயர்த்தி உள்ளது இலங்கை அரசு. இலங்கையின் உணவுப் பாதுகாப்பையும் போசாக்கு உணவையும் உறுதிப்படுத்தும் அமைப்பு ஒன்றையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இறக்குமதிக்கான வரியை அதிகரித்து அதனை கமக்காரர்களுக்கு வழங்குவதனூடாக உள்ளுர் உற்பத்தியை மீள ஊக்குவிப்பதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஒரு தொன் அரசியை இறக்குமதி செய்ய 65,000 ரூபாய் வரி விதிக்கப்படுகின்றது. உள்ளுர் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக இறக்குமதிகளுக்கு வரியை அதிகரிக்கும் காத்திரமான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. கடந்த அரசுகளைப் போலல்லாமல் உள்ளுர் பொருளாதாரத்தை பாதுகாக்கின்ற கொள்கையின் அடிப்படையிலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் ஜனவரி யில் பதவியேற்க உள்ள டொனால் ட்ரம் பதவியேற்றவுடன் இறக்குமதிக்கான வரிகளை ரொக்கட் வேகத்தில் ஏற்றப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். டொனால் ட்ரம்மின் இந்த மிரட்டல் வெறும் வாய்ச்சவடால் அல்ல. அவருடைய கடந்த ஆட்சிக் காலத்திலும் இதே போன்ற நடவடிக்கையில் அவர் குதித்து சீனாவோடு ஒரு வர்த்தகப் போரையே நடத்தினார். இம்முறை இவருடைய வர்த்தகப் போர் அமெரிக்காவின் நெருங்கிய நட்புநாடான பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இருக்கும் என்பதையும் அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால் ட்ரம் தெரிவித்துள்ளார். தற்போது முதலாளித்து நாடுகளே சந்தைப் பொருளாதாரத்தை ஓரம்கட்டிவிட்டு தங்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் குறியாக உள்ளன.
ஆனால் உலகப் பொருளாதாரச் சண்டியர்களான அமெரிக்காஇ சீனாஇ இந்தியாவுக்கு மத்தியில் குட்டி இலங்கையும் தன்னுடைய பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப இறக்குமதி வரியை அதிகரித்து இருப்பதை உள்ளுர் உற்பத்தியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இலங்கையில் அரிசியின் விலையை நிர்ணயிப்பவர்களாக விரல்விட்டு எண்ணக் கூடிய இறக்குமதியாளர்கள் சிலர் உள்ளனர். இவர்கள் லட்சக்கணக்கான கமக்காரர்களின் அடிமடியிலிருந்து புடுங்கி லாபமீட்டுகின்றனர். தற்போது அரசுக்கும் அரிசி மாபியாக்களுக்குமிடையே ஒரு யுத்தம் போய்க்கொண்டுள்ளது. சிறிதுகாலத்துக்கு விலை விடயத்தில் நெருக்கடியைக் கொடுத்து அரசுக்கும் மக்களுக்கும் உள்ள தேன்நிலவுக்கு ஆப்புவைப்பதில் இந்த அரிசிஇ தேங்காய் மாபியாக்கள் தீவிரமாக உள்ளனர்.
7. நிதிமுகாமைத்துவ சந்தை நிபுணர்களை உருவாக்கு யாழ் பல்கலையோடு ஒப்பந்தம்!
இலங்கையின் எஸ்ஈசி – Securities and Exchange Commission யாழ் பல்கைலக்கழகத்துடனான தன்னுடைய ஒப்பந்தத்தை மீளுறுதி செய்துள்ளது. இதன்படி இலங்கையின் அடுத்த தலைமுறையினருக்கான நிதிச் சந்தை நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கு வழங்குவதற்கு இது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைந்து செயற்படும் முறையால் கல்வியல் ரிதியிலும் நிபுணத்துவ ரிதியிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிதி முகாமைத்தவத்தில் புதிய சிந்தனைகளைக் கொண்டுவருவதற்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இது வழிகோலும் என எதிர்பார்க்கப்டுகின்றது. இவ்வாறான ஒப்பந்தங்கள் ஏனைய பல்கலைக்கழகங்களோடு செய்யப்படுவதால் சிந்தனைப் பரிமாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இது இட்டுச்செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அண்மையில் சீனத் தூதுவர் செய்ய வந்த உதவியைத் தட்டிக்கழித்த யாழ் பல்பலைக்கழகம்இ அதற்குப் பின் இந்தியா வழங்கிய உதவியை கூடிப் பெற்று அதன் படங்களையும் வெளியிட்டுக் கொண்டாடினர். தற்போது பல்கலைக்கழகம் உள்ள கீழ் நிலையிலிருந்துஇ அது பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சமூகத்திற்குப் பயனுள்ளதாக மாற்றுவதற்கான எவ்வித முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லையெனஇ தன்னுடைய உயர்கல்விக்காக வெயிநாடு சென்றுள்ள விரிவுரையாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். கலைப்பீடத்தில் உள்ள பேராசிரியர்கள்இ விரிவுரையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்த அவர்இ அண்ணாமலை பல்கலைக்கழக கலாநிதிப் பட்டம் என்றால் அது சபாநயகர் ரத்வலவின் கல்லா நிதிப்பட்டம் போன்றது தான் என்றார்.
8. சந்தை நிலைமைகளும் தேசிய மக்கள் சக்தியுடன் தேன்நிலவில் உள்ளது!
ஜனாதிபதி அனுராவின் அமோக வெற்றியைத் தொடர்ந்தும்இ தேசிய மக்கள் சக்தியின் மிகப்பெரும்பான்மைப் பலத்தைத் தொடர்ந்தும் 12வது வாரமாக சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கையின் அரச பங்குகளில் முதலிட்டு வருகின்றனர். கடந்த வாரம் மட்டும் 33 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளது. கடந்த 12 வாரங்களில் நூறு மில்லயன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பண வீக்கத்தை குறைக்கும் கொள்கைகள் சாதகமான பொருளாதார நிலைமைகளை ஏற்படுத்துதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும் வட்டி வீதத்தை குறைத்ததும் அதனை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் ரூபாயின் பெறுமதியை அதிகரிக்கச் செய்துள்ளது.