“மாகாணசபை வேண்டாம், ஆனால் வேணும்“ தமிழ் தேசியம் – “மாகாணசபை நீக்கப்படாது” அரசு உத்தரவாதம்
லாகூர்னே சிவனும் ஆவாக் குழுவின் அழித்தலும்!
1. “மாகாணசபை வேண்டாம், ஆனால் வேணும்“ தமிழ் தேசியம் – “மாகாணசபை நீக்கப்படாது” அரசு உத்தரவாதம்!
அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் புதிய அரசியலமைப்பொன்று உருவாகும் போது மாகாணசபை முறை நீக்கப்படும் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியது ‘மாகாணசபை நீக்கப்படும்’ எனக் குறுக்கப்பட்டு தமிழ் தேசியவாதத்திற்கு அவல் கிடைத்தது போல் ஆகியது. இதுதொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன..? என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஏனையோர் சொல்வதைக் கேட்டு முறையற்ற சந்தேகங்களை எழுப்ப வேண்டாம். மாகாண சபை முறைமையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் தற்போதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை. புதிய அரசியலமைப்பு மூன்று வருடங்களின் பின்னரே கொண்டுவரப்படும். அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாட போதுமான கால அவகாசம் உள்ளது. புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறை தொடர்ந்தால் தற்போது இருக்கும் அதிகாரங்களுக்கு அப்பாலான அதிகாரப்பகிர்வு இருக்காது என்றும் தெரிவித்தார்.
ரில்வின் சில்வா மாகாணசபை பற்றிப் பேசிய கருத்தை வைத்து என்.பி.பி அரசு மீதான எதிர்ப்பு அரசியலை தமிழ்த் தேசிய தரப்பு பதிவு செய்து வருகின்றது. இந்த நிலையில் “மாகாண சபை முறைமையை நீக்குவதற்கான மக்கள் ஆணை எதுவும் பெறப்படவே இல்லை. அதற்கான முயற்சியில் தேசிய மக்கள் சக்தி ஈடுபடவும் இல்லை. ஆனால், மாகாண சபையையும் விட ஒரு வலிமையான சபை – அனைத்து மக்களுக்கும் சமனான அந்தஸ்த்தை வழங்கக்கூடிய ஓர் அரசமைப்பு தேவை. அதில் மாகாணசபை இருக்குமா? இல்லையா? என்பதே விடயம்” என ரில்வின் சில்வா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துகொள்ள ரில்வின் சில்வா “2024 நவம்பர் 30 வீரகேசரி செய்தித்தாள் என்னுடன் நடாத்திய நேர்காணலைச் சார்ந்ததாக பிரசுரித்துள்ள பிரதான செய்தி மற்றும் அதற்காக இடப்பட்டுள்ள தலைப்பு ஊடாக நான் வெளியிட்ட கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன. இந்த செய்தி மற்றும் தலைப்பு காரணமாக வாசகர் மத்தியில் தவறான கருத்து தோன்றுவதால் அதனை சரிசெய்ய வேண்டியுள்ளது. வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க 1987 இல் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தம் தவறியுள்ளதெனவும் அதனால் வடக்கு மக்களின் சிக்கல்களைத் தீர்த்துவைக்க மிகவும் நடைமுறைச்சாத்தியமானதும் சரியானதுமான தீர்வினை முன்வைக்க வேண்டியுள்ளதெனவும், அத்தகைய மிகச்சிறந்த தீர்வினை முன்வைத்து நடைமுறைப்படுத்தும்வரை 13 வது திருத்தத்தையும் மாகாணசபைகளையும் ஒழிக்கப்போவதில்லை எனவுமே அதன்போது நான் கூறினேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி நாட்டின் சகல இனத்தவராலும் ஏற்றுக்கொண்ட ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை இனங்களின் அரசியல் பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக என்.பி.பி மீது கல் எறிவதற்கான சூழலை எதிர்பார்த்து நிற்கின்றார்கள். இனவாதம் நீங்கிப் போனால் தாம் அரசியல் செய்ய முடியாது என்ற அச்சத்தின் வெளிப்பாடே தமிழ்த் தேசிய தலைமைகளின் எதிர்ப்புக்கு காரணம் என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
மேலும் 13ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபை முறையை தமிழர்கள் தம் ஆஸ்தான நாயகர்கள் என கூறப்படும் புலிகளே ஏற்றுக்கொள்ளவில்லை என சட்டத்தரணி பஷீர் செய்யத் தேசம் நெட் நேர்காணலில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2. வடக்கில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னணியில் கடற்தொழிலாளர்! குருநகரில் புதிய துறைமுகம்!
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் யாழ் வந்த ஜனாதிபதி அனுராவின் மாபெரும் கூட்டம் குருநகரிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. அரசாங்கம் இந்திய மீனவர்களின் விடயத்தில் மிக இறுக்கமான போக்கைக் கடைப்பிடித்து எல்லை மீறும் இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்து வருகின்றது. அவர்களுடைய கடற்தொழில் உபகரணங்களை படகுகளைக் கைப்பற்றி வருகின்றது. மேலும் கடற்படைவீரர் ஒருவர் அத்துமீறிய இந்திய மீனவர்களால் படுகொலை செய்யப்பட்ட போது நூற்றுக்கணக்கான வடக்கு மீனவர்கள் தென்பகுதி சென்று அக்கடற்படை வீரரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர்.
இச்சூழலில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் குருநகர் கடற்தொழிலாளர் அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் உலக கடற்றொழிலாளர் விழாவில் கலந்து சிறப்பித்துளார். மேலும் அங்கு மக்களிடம் பேசிய ஆளுநர் “கடற்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கின்ற இராமலிங்கம் சந்திரசேகர், எமது பிரதேசத்தின் மேம்பாடு தொடர்பில் அக்கறையுள்ளவர். அவர் பலவற்றை உங்களுக்காகச் செய்வார். குருநகர் பகுதிக்கு ஓர் துறைமுகம் தேவை என்பதை நாங்களும் ஏற்றுக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இணைந்து இப்பகுதியில் துறைமுகம் அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடந்து முடிந்த தேர்தல்கள் ஊழலுக்கு எதிரானதாக இருந்தாலும் வடக்கு – கிழக்கில் தமிழர் பகுதிகளில் எந்த பொருளாதார அபிவிருத்தி திட்டங்களையும் தொடங்க தமிழ் தேசியவாத பாராளுமன்ற உறுப்பினர்களே முட்டுக்கட்டையாக இருந்த நிலை தொடர்ந்தது. அதற்கு தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளால் பதிலளித்திருந்தனர். தற்போது யாழ் மக்கள் தெரிவு செய்த தேசிய மக்கள் சக்தியின் புதிய மூன்று பிரதிநிதிகளுடனும் மக்கள் தேன்நிலவைக் களிக்கின்றனர். குறிப்பாக அரசாங்கத்தின் பிரதிநிதியாக பொறுப்பேற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு மக்கள் தமது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதையும் அவதானிக்க முடிகிறது. அவர் ஆக்கப்பூர்வமான பல திட்டங்களை வடக்கில் முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பாதைகள் கூட ஆளுநர் வேதநாயகனின் கோரிக்கையின்படியே என ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.
எதிர்ப்பு அரசியலை விட்டு மக்களும் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்து வருவதன் மூலம் எதிர்ப்பில்லாமல் பல அபிவிருத்திகளை தமிழர் பகுதிகளில் இனிவரும் காலங்களில் எதிர்பார்க்க முடியும் என சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தெரிவித்துள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
3. லாகூர்னே சிவனும் ஆவாக் குழுவின் அழித்தலும்!
பண, வரி மோசடிக்காக முற்றுகையிடப்பட்ட லாகூர்னே சிவன் கோவில் அங்குள்ள வன்முறைக் குழுக்களுடன் மட்டுமல்ல ஆவா குழுவுடனும் தொடர்பு பட்டிருப்பது தெரியவந்துள்ளது. லாகூர்னே சிவன் கோவிலின் பண வரி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆலயத்தின் பணிகளோடு தொடர்புடைய கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் இன்னமும் விடுவிக்கபடவில்லை. இப்பின்னணியில் பரம் பாரிஸ்வரி ( Param Paariswary) என்ற பெயரில் பதியப்பட்டு இயங்கும் லார்க்கூர்னே சிவன் கோயிலானது பாரிஸில் இயங்கிவரும் ரவுடிக் குழுக்களின் பின்னணியில் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இக்கோயிலுடன் தொடர்புபட்டிருந்த ஆவாக்குழுவின் பிரசன்னா பாரிஸில் படுகொலை செய்து தப்பியோடி தற்போது கனடாவில் மாட்டுப்பட்டு உள்ளார்.
1985 களில் பாரிஸில் அட்டகாசங்கள் புரிந்த குளுமாஸ் குழுவின் முக்கிய உறுப்பினரான வட்டி லிங்கம் என்று அழைக்கப்படும் புஸ்பராஜா குமாரசுவாமி லார்க்கூர்னே சிவன் கோயிலின் கணக்காளராகவும் புஸ்பராஜாவின் மனைவியும் குளுமாஸ்ஸின் சகோதரியுமான மயில்வாகனம் புஸ்பராஜா தவேஸ்வரி சிவன் கோயிலின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்கள்.
இது இப்படி இருக்க கனடாவில் கைது செய்யப்பட்ட ஆவா குழு பிரான்ஸ் கிளையை சேர்ந்த பிரசன்னா நல்லலிங்கமும் லார்க்கூர்னே சிவன் கோயில் நிர்வாகத்துடன் தொடர்புபட்டிருந்ததாக தகவல்கள் தெரியவருகின்றது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களிலில் யாழ்ப்பாணத்தில் ஈடுபட்டு வருகின்ற ஆவாகுழுவின் பிரான்ஸ் கிளையின் தலைவராக செயற்பட்டு வந்த நபரே சன்னா என்றழைக்கப்படும் பிரசன்னா நல்லலிங்கம். சன்னா தலைமையில் LC Boys என்ற பெயரில் லார்க்கூர்னேயில் இக்குழு இயங்கியது.
இக்குழுவின் பெயரில் பிரான்ஸ் தொலைபேசி இலக்கத்துடன் சிவன் கோயிலின் உரிமையாளரான குடும்பி ஜெயா என்றழைக்கப்படும் வெற்றிவேலு ஜெயேந்திரனின் தூண்டுதலில் குடும்பியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
சன்னா தலைமையிலான ஆவாகுழுவிற்கும் பிறிதொரு ரவுடிக்குழுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் செப்ரெம்பர் 21 ஆம் திகதி 2022 ஆண்டு இரண்டு இளைஞர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் அபிராமன் பாலகிருஸ்ணன் உயிரிழந்தார். பிரசாந்த் குலசேகரம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர்தப்பினார்.
சன்னா ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற ஒரு கொலைக்காக தேடப்பட்டு வந்த நபராக இருந்திருக்கின்றார். இறுதியாக பாரிஸில் நடத்திய கொலைக் குற்றத்திற்கான தண்டணையிலிருந்து கனடாவிற்கு தப்பியோடி கீயூபெக் மாநிலத்தில் மறைந்து வாழு;ந்து வந்தார். இவரை தற்போது இன்ரபோல் பொலிஸார் கைது செய்துள்ளனர். விரைவில் கொலை வழக்கு விசாரணைகளுக்காக பிரசன்னா பிரான்ஸ் கொண்டுவரப்பட இருக்கிறார். பிரான்ஸில் விசாரணைகள் நடக்கும் போது இவ்வாறான ரவுடிக்குழுக்களை நிதி உதவிசெய்து பின்னணியிலிருந்து இயங்குபவர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விசாரணைகளில் லாகூர்னே சிவன் ஆலயத்துடன் தொடர்புபட்ட பலர் சிக்க வாய்ப்புள்ளது.
சமீபகாலங்களில் பாரிஸ் சிவன் கோயிலில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பின்னணியிலிருந்து செயற்பட காட்டான் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது. லார்க்கூர்னே சிவன் கோயிலின் முன்னாள் குருக்களான சுதன் ஐயரை வலுக்கட்டாயமாக காட்டான் குழுவினூடாக மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும் சிவன் கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் வெற்றிவேலு ஜெயேந்திரனால் காட்டான் குழுவின் தலைவருக்கு மாதாந்தம் 1000 யூரோக்கள் கப்பம் கட்டிவருவதாகவும் தெரியவந்துள்ளது.
4. மாவீரர் தினம்: தூண்டியவர்கள் கைது செய்யப்பட்டார்கள்! கொண்டாடியவர்கள் கைது செய்யப்படவில்லை? கொழும்பு பிரதான நீதவான்!
நாட்டில் மாவீரர் தின நிகழ்வு நடத்தியோரை ஏன் கைது செய்யவில்லை? என கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே, குற்ற விசாரணைப் பிரிவினரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சிலரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர். மாவீரர் நிகழ்வுகளை கொண்டாடியவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஏன் கைது செய்யவில்லை? என நீதவான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னில்ங்கையைச் சேர்ந்த கெலும் ஹர்ஷனவை பிணையில் விடுதலை செய்த போது, நிகழ்வினை நடத்தியவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதவான் , சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்துவதற்கான சட்ட அவகாசம் குறித்த தகவல்களை முன்வைக்குமாறு, குற்ற விசாரணைப் பிரிவிவைக் கேட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இல்லாமற் செய்வோம் என்று உறுதியளித்த தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இவ்வாறான சில்லறை விடயங்களுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவது பொருத்தமா? என்ற கேள்வி மனித உரிமைவாதிகள் மத்தியில் எழுந்துள்ளது. இது அரசின் திட்டமிட்ட நடவடிக்கையா? அல்லது பொலிஸார் கடந்தகாலங்களில் மேற்கொண்டதையே தொடர்ந்தும் செய்கின்றார்களா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றது.
5. ஊசி அர்ச்சுனாவின் ரிக்ரொக் கிற்கான ‘டோக்பைற் னழப கiபாவ’
பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு சென்று வம்பிழுத்து ரிக்ரொக் போட்டு மீண்டுமொரு குறளிவித்தை காட்டி தனது ரிக்ரொக் வாசிகளுக்கு கிலுகிலுப்புக் காட்டியுள்ளார் ஊசி அர்ச்சுனா. இலங்கை மக்களும் தமிழ் மக்களும் எவ்வளவோ நெருக்கடியான சூழலில் இருக்கின்றபோது பாராளுமன்றம் கூடிய இரு தினங்களிலும் ஊசி அர்ச்சுனா ஊத்தைவாளி அர்ச்சுனாவாகவே தன்னை வெளிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு அருகில் வைத்து சுஜித் என்ற நபர் தன்னை தாக்கியதாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத்தில் குறுக்கிட்டு குழறுபடி, உளறுபடி செய்தார் பா உ ஊசி அர்ச்சுனா. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை நான் தாக்கவில்லை. தகாத வார்த்தைகளை பிரயோகித்து அர்ச்சுனாவே பேசினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ பெரேரா சபையில் தெரிவித்துள்ளார். இதேவேளை மற்றுமொரு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கீழ்த்தரமான முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் என சபையில் தெரிவித்தார்.
ஒரு பாதிக்கப்பட்ட இனத்தின் சார்பில் பாராளுமன்றம் சென்றிருக்கும் ஒருவரது பொறுப்பற்ற நடவடிக்கைகள் தமிழ் மக்களை ஒரு பரிகசிப்பிற்குரிய சமூகமாகவே மற்றவர்கள் நோக்கும் நிலைமையை ஏற்படுத்தும். அவர் பாராளுமன்றத்துக்குள் பேசும் ஒவ்வொரு விடயமும் மற்றவர்களால் நகைச்சுவையாக நோக்கப்படுகின்றது. இது தொடருமாயின் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் அனைத்தும் பரிகசிப்பிற்குரிய ஒன்றாகவே நோக்கப்படும்” என யாழில் இருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகை அதன் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
6. டிகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் லண்டன் வந்து சேர்ந்தனர்!
டிகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகமோசமான ஆள்நடமாட்டம் அற்ற தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 சிறுவர்கள் உட்பட்ட தமிழ் அகதிகள் லண்டன் கட்விக் விமான நிலையம் வந்தடைந்தனர். மூன்று வருடங்களாக இடம்பெற்ற சட்டப் போராட்டத்தின் பின் இவர்களை பிரித்தானியாவிற்கு அழைத்துவர பிரித்தானிய உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தது சட்டத்திற்கு புறம்பானது என இவர்களின் விடுதலைக்காகப் போராடிய மனித உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடா செல்லப் புறப்பட்ட இவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக பட்ட இன்னல்களை விபரித்த இந்த அகதிக்குழுவில் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி அருண் கணநாதன் அவர்கள் மிகுந்த உளவியல் வலிகளோடும் தான் பிரித்தானியாவில் வந்திறங்கி உள்ளதாகவும் பிரித்தானியாவில் அகதிகளுக்கு எதிரான கடும்போக்கைக் கடைப்பிடித்த கொன்சவேடிவ் ஆட்சி போய் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த அகதிகளை இங்கு அழைத்து வருவதற்கான சூழலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
இவர்களைப் போன்று இன்னும் நூற்றுக்கணக்கான அகதிகள் உலகின் பல்வேறு நாடுகளிலும் கடும் துயரங்களை அனுபவிக்கின்றனர். சிலர் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்ய இராணுவத்தில் பலாத்காரமாக இணைக்கப்பட்டு மரணத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை இலங்கையில் உள்ள ரஸ்யத் தூதரகம் மறுத்துள்ளது. தாங்கள் யாரையும் பலாத்காரமாக இராணுவத்தில் இணைக்கவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
7. ‘அனுர ரட்டே’ யோடு கைகோர்த்து பயணிக்க தயாராகவுள்ளோம் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி !
ஜனாதிபதி அனுராவோடு கைகோர்த்து பயணிக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான நேற்றைய விவாதத்தின் போது பா உ சிறிதரன் குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி அனுர தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினையை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது என பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பேசிய அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு கேட்டுக்கொள்கின்றேன். சிங்களவர்களால் நடத்தப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், இந்த அரசாங்கத்தோடு கைகோர்த்து பயணிக்க தயாராகவுள்ளோம். 2/3 பெரும்பாண்மையை பெற்றுள்ள இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு தரப்போகின்றது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
நல்லிணக்க அரசியல் சூழல் ஒன்று இல்லாத சூழலே இலங்கையின் அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படையாகியுள்ளது என என்.பி.பி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோரும் அனுர அரசுடன் இணைந்து பயணிக்க ஏற்கனவே பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் சிறீதரன் எம்.பி இணைந்து செயற்பட முன்வருவதாக கூறியிருக்கின்றார்.
நினைவேந்தல் உரிமைகள் தமிழருக்கு வழங்கப்படுதல், அரசினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் விடுவிக்கப்படுதல் என்பன மூலம் தாம் தமிழ்மக்களை உள்ளிருந்து புரிந்து கொள்கிறோம் என்பதை அனுர அரசு வெளிப்படுத்துகிறது எனவும் தமிழ் மக்கள், தேசிய மக்கள் சக்தி தொடர்பில் அச்சம் கொள்ளத்தைவையில்லை எனவும் சட்டத்தரணியும் அரசியல் ஆய்வாளருமான பஷீர் செய்யத் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.