புலிகள் மூர்க்கத்தனமாக எதிர்த்த மாகாண சபை முறையை கட்டிப்பிடித்துத்தொங்கும் தமிழ்தேசியம்!
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறை கொஞ்சம் கூட முஸ்லீம் மக்களை கவனத்தில் கொண்டு உருவாக்கப்படவில்லை என சட்டத்தரணியும் – சமூக செயற்பாட்டாளருமான பஷீர் செய்யத் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களும் – தமிழ் அரசியல்வாதிகளும் தங்களை பெரும்பான்மை சிங்களவர்கள் அடக்குகிறார்கள் என கூறிக்கொண்டே தங்களுக்குள் உள்ள இன்னுமொரு இனத்தவர்களான தமிழ்பேசும் முஸ்லீம்களை – அவர்களின் அரசியல் உரிமைகளை கிஞ்சித்தும் கணக்கெடுக்காத துயரம் தொடர்கிறது. புலிகளின் வழியில் முஸ்லீம் எதிர்ப்பு அரசியல் தொடர்வதாக பலரும் குற்றச்சாட்டி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களும் தமிழர்களும் இணைந்து வாழும் ஓர் இணைப்பான சூழல் உள்ள நிலையில் முஸ்லீம் எதிர்ப்பை சூசகமாக வெளிப்படுத்தியே இரா.சாணக்கியன் தன் பாராளுமன்ற ஆசனத்தை தக்கவைத்துக் கொண்டார் என சமூக வலைத்தளங்களில் பலரும் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையிலேயே முஸ்லிம்களுக்கு கொஞ்சமும் சாதகமான சூழல் இல்லாத மாகாண சபை முறையை தமிழ்தேசிய அரசியல் தரப்பு மீள மீள வலியுறுத்தி வருகிறது.
தமிழர்களுக்கான தீர்வு என இந்திய நலன்விரும்பிகள் எதிர்பார்த்த மாகாண சபை முறை முழுவதுமாக ஊழல் நிறைந்ததாகவும் – பக்கச்சார்பாகவும் காணப்பட்ட நிலையில் அது தோல்வியடைந்த அமைப்பாக மாறியது அறிந்ததே. இதேநேரம் தமிழர்களை காக்க வந்த மீட்பர் என கஜா – கஜா அணியினர், தமிழரசுக்கட்சியினர் விலையேற்றிய நீதியரசர் விக்கினேஸ்வரன் முதலமைச்சர் பதவியையும் அனுபவித்து பார்பேர்மிட் பெற்றது தான் மிச்சம். இதேவேளை 13ஆவது திருத்தம் வேண்டாம், மாகாண சபை வேண்டாம் என கூறி தெருத்தெருவாக கோசமிட்டு திரிந்த கஜா கஜா அணி மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது. இப்படியான நிலையில் எந்த பயனுமே இல்லாத மாகாண சபை முறையை நீக்கி அதற்கு மேலான அதிகாரங்களுடன் கூடிய ஓர் அரசமைப்பு முறையை கொண்டுவர எண்ணுகிறோம் என தேசிய மக்கள் சக்தி கூறியதற்கு தான் இத்தனை எதிர்ப்புக்களை முன்வைக்கின்றனர் குறுந்தேசியவாதிகள். இந்த நிலையில் தேசம் நெட் நேர்காணலில் பேசிய சட்டத்தரணி பஷீர் செய்யத் “மாகாண சபை முறையால் முஸ்லீம்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. மாறாக அது புதிய பல சிக்கல்களைத்தான் தோற்றுவித்தது. இதனாலேயே மூத்த அரசியல்வாதி அஷ்ரப் 13ஆவது திருத்தம் முஸ்லீம்களின் மீது எழுதப்பட்ட அடிமைசாசாசனம் என கூறுகிறார். தேசிய மக்கள் சக்தி அனைத்து மக்களுக்கும் பயனளிக்க கூடிய ஓர் அரசியலமைப்பு முறையை உருவாக்க எத்தனிக்கிறது. அதற்கு சிறுபான்மை இனங்களின் தலைவர்கள் இடமளிக்க வேண்டும் என்கிறார். இதேவேளை பாராளுமன்ற சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க , இன்னும் மூன்று வருடங்களில் தான் புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும். அனைத்து தரப்பினருடனும் பேசியே அரசியலமைப்பு பற்றிய தீர்மானங்கள் எட்டப்படும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.