டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு தற்போது ராமலிங்கம் சந்திரசேகரிடம்!
தேசிய மக்கள் சக்தியின் 21 பேர் கொண்ட அமைச்சரவையில் இரு தமிழமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடற்றொழில் நீரியல் வள, மற்றும் கடல்வளங்கள் அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இராமலிங்கம் சந்திரசேகரன் தமிழ் கலாச்சார வேட்டி மேற்சட்டையோடு பாராளுமன்றம் சென்று தமிழில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
சரோஜினி சாவித்ரி போல்ராஜக்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுராவின் கீழ் பாதுகாப்பு, நிதி – திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி, டிஜிற்றல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள் செயற்படும். புதிய பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சை பொறுப்பேற்றுள்ளார். விஜித ஹேரத் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சுற்றுலாத்துறை அமைச்சை ஏற்றுக்கொண்டுள்ளார். தங்களுடைய ஆட்சியில் அமைச்சரவை 25யைத் தாண்டாது என மக்களுக்கு உறுதியளித்தபடி 21 அமைச்சுப் பொறுப்புக்களே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல மில்லியன் நிதி வீண்விரயம் தடுக்கப்பட்டுள்ளது. மக்கள் எங்களுக்கு மட்டற்ற அதிகாரத்தைத் தந்துள்ளார்கள். அதனைத் துஸ்பிரயோகம் செய்யாமல் பொறுப்பான முறையில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் நிறைவேற்றுவதற்கு அதனைப் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தன்னுடைய அமைச்சரவையில் உரையாற்றும் போது ஜனாதிபதி அனுரா குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர் வறுமை போசாக்கின்மை ஆகியவற்றுக்கு புதிய அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறந்த ஆதரவு வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரா உறுதியளித்துள்ளார். இது பற்றி கருத்துத் தெரிவித்த ஒளிரும் வாழ்வு அமைப்பின் ஸ்தாபகரும் உடல்ஊனமுற்ற பிள்ளைக்கு தந்தையுமான அனஸ்லி இது பற்றி தேசம்நெற்க்குத் தெரிவிக்கையில் “தமிழர் பூர்வீக பிரதேசங்களில் கடந்த கால 30 ஆண்டுகால யுத்தம் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். நவம்பர் மாதத்திலும்; மேடைகளிலும் மட்டும் உணர்ச்சி பொங்க பேசும் இவர்களிடம் கடந்த காலங்களில் நாங்கள் உதவிகளுக்கும் சட்டவாக்கங்களை ஏற்படுத்தவும் கோரி இருந்தோம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் காத்திரமாக எதனையும் செய்யவில்லை. ஆனால் தேசிய மக்கள்சக்தி மாற்றுத்திறனாளியான வசந்த டி சில்வாவை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதரவு வழங்கும் ஜனாதிபதி அனுரவின் உறுதி மொழி பாராட்டுக்குரியது. எஸ் சிறிதரனும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் மற்றையவர்களும் நவம்பரில் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்து விளக்கேற்றி ஊடகங்களுக்கு படங்களை அனுப்பினால் மட்டும் போதாது. தழும்புகளுடன் வாழும் போராளிகளின் வாழ்க்கையில் நிரந்தரமாக விளக்கேற்ற வழிசெய்ய வேண்டும். இதனை ஜனாதிபதி அனுராவின் ஆட்சி செய்யுமாக இருந்தால் அது தமிழ் மக்களால் காலத்துக்கும் போற்றப்படும். தேசிய மக்கள் சக்தியின் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.
தேசிய மக்கள் சக்தியின் அலையில் சிக்குண்டு கடந்த காலங்களில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 11 தமிழர்கள் உட்பட 150 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை ‘எல் போர்ட்’ என்று எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்கள் சார்பு ஊடகங்கள் கிண்டலடிக்கின்றன. அதனால் என்ன நாங்கள் புதியவர்கள் ‘எல் போர்ட்’ தான் என்கிறார் சரோஜினி சாவித்திரி போல்ராஜ். நாங்கள் ‘எல்போர்ட்’ தான் அதனால் எங்களுக்கு ஊழல் செய்யத் தெரியாது என க இளங்குமரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் மக்களுடைய நெருக்கடி நிலையைக் கணக்கிலெடுத்து கெடுபிடியில்லாமல் சமநிலை அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம் தேசிய மக்கள் சக்தி யாழ் பாராளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் வந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த ஆட்சியாளர்கள் போலல்லாமல் அவர்களிடம் பச்சைத் தண்ணியும் வாங்காமல் அவர்கள் முதலீடுகளை மேற்கொள்ளவும் தொழிலை விருத்தி செய்யவும் எமது அரசு ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். வேம்பிலிருந்து சூழல் நேய பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பாக புலம்பெயர் தமிழர் சுந்தரமூர்த்தி புவனகுமார் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்துடன் உரையாடியுள்ளார். சுந்தரமூர்த்தி புவனகுமார் மும்பையை தலைமையகமாகக் கொண்ட உலக வேம்பு அமைப்பின் உறுப்பினரும் கூட.
தமிழ் தேசியவாதக் கட்சிகள் மற்றும் தேசியவாதக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்விகளிலிருந்து மீள்வதற்கு முன்னரேயே தேர்தல் ஆணைக்குழு நவம்பர் 27 கூடி பிரதேசசபை மற்றும் மாகாணசபைக்கான தேர்தல்கள் தொடர்பில் ஆராய உள்னனர்.
2024 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை முழுவதும் 284 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 3357 வேட்பாளர்கள் போட்டியிட்டு 1,16,000 வாக்குகளைப் பெற்றுள்ளனர். இது மொத்தமான வாக்குகளில் ஒரு வீதமாகும். இலங்கையில் அண்மைக்கால பாராளுமன்றத் தேர்தல்களில் சுயேட்சையாக எந்த வேட்பாளரும் வெற்றி பெற்றது கிடையாது. இலங்கையின் சகல பகுதிகளிலும் சுயேட்சையாகப் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வி காண யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஊசி அர்ச்சுனா வெற்றிபெற்றமை வரலாறாக மாறியுள்ளது. மேலும் ஊசி அர்ச்சனாவுடன் போட்டியிட்ட நரேன் கௌசல்யா சைக்கிள் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரைக் காட்டிலும் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். எஸ் சிறிதரன், பொன்னம்பலம் கஜேந்திரகுமார் போன்று ஊசி அர்ச்சுனாவும் பிரபாகரனையும் மாவீரர்களையும் வைத்துத் தான் அரசியல் வியாபாரம் செய்த போதும் ஒன்றாக கடை போட மாட்டோம் என்று மறுத்து வருகின்றனர்.
பாரிஸ் லாகூர்னே சிவன் கோவிலுக்குள் பிரான்ஸ் வருமான வரித்துறையினரும் பொலிஸாரும் புகுந்து கோயிலை சில மணி நேரங்கள் மூடி ஆவணங்களை கல்லாப்பெட்டியை, உண்டியலை எல்லாம் கொண்டு சென்றது உண்மை தான் ஆனாலும் மீண்டும் கோயில் இயங்குகிறது. கோயிலுக்கு வாருங்கள் வந்து உண்டியலை நிரப்புங்கள் எனக் கேட்கும் 40 நிமிட காணொலி ஒன்றை கோயில் முதலாளி சர்ச்சைக்குரிய கிரிமினல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வெற்றிவேலு ஜெயந்திரன் வெளியிட்டுள்ளார். பிரான்ஸில் பிடியாணையுள்ள உள்ள வெற்றிவேலு ஜெயந்திரன் பிரான்ஸில் உள்ள ஒரு யூரியூப்பரை அனுப்பி இக்காணொலியைப் பதிவு செய்துள்ளார். பொதுவாக ஆலயங்களுக்கு செல்லும் மக்கள் ஆலயங்களுக்கு நிதிப்பங்களிப்பை செய்ய வேண்டாம் என்றும் ஆலயங்களுக்கு வழங்கப்படும் பெருமளவான நிதி அதன் முதலாளிகளால் அறக்கட்டளை உறுப்பினர்களால் வீண் விரயம் செய்யப்படுகின்றது அல்லது சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் பல்வேறு ஆலயங்களிலிருந்தும் தெரிவிக்கப்படுகின்றது.
லண்டனில் வருமானம் கூடிய ஈலிங் ஆலயம் பல்கலைக்கழக மாணவர்களின் உயர்கல்விக்கு வழங்கி வந்த நிதியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிறுத்தியுள்ளதாக பயன்பெற்று வந்த மாணவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றனர். இதனால் 240 மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆலயத்திலிருந்து இது தொடர்பில் எவ்வித விளக்கங்களும் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகின்றது. ஆனால் இந்த மாணவர்களின் உயர்கல்விக்குரிய நிதி சேகரிக்கப்பட்டு வைப்பிலிடப்பட்டுள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆலயத்திற்கு சேருகின்ற வருமானத்தில் செலவீனங்கள் போக மீதியுள்ள நிதியில் மூன்றில் இரண்டு தாயக மக்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆலயத்தின் செயற்குழுவின் தீர்மானம் குறிப்பிடுகின்றது. ஆனால் அண்மைக்காலமாக தாயக மேம்பாட்டு நடவடிக்கைகளை ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் ஏனைய ஆலயங்களைப் போல் கைவிட்டு வருகின்றது என அம்பாள் அடியார்கள் குற்றம்சாட்டுகின்றனர். உயர்கல்வி மற்றும் மாணவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கான நிதி ஆலயத்தின் நிதியிலிருந்து வருவதில்லை. அவை மக்களிடமிருந்து பிறம்பாக சேகரிக்கப்படுகின்ற நிதி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிதியையும் வழங்காமல் ஆலய செயற்குழு தாயக மக்களின் கல்வி வளர்ச்சியில் தடையைப் போடுகின்றது.
நடந்த முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகள், தமிழ் தேசியம் பேசியவர்கள், லைக்கா மற்றும் ஐபிசி வியாபார முதலைகள் மட்டும் தோற்கடிக்கப்பட வில்லை. இவர்களுக்கெல்லாம் முண்டு கொடுத்து தமிழ் மக்களை தேசியவாதத்தின் பெயரால் முட்டாள்களாக்கலாம் என்று எண்ணிய தமிழ் தேசியவாத ஊடகங்கள் அத்தனையும் மண் கவ்வியுள்ளது. யாழிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் இவற்றுள் ஆய்வுகளை மேற்கொள்பவர்கள் அனைவரும் மண் கவ்வியுள்ளனர். தமிழ் தேசியவாத அரசியல் தலைவர்களோடு அவர்களின் ஊழல்களுக்கும் அநியாயங்களுக்கும் துணைபோன ஊடகங்களும் ஆய்வாளர்களும் கூட இத்தேர்தலில் மண்கவ்வியுள்ளனர். இதில் பொதுக்கட்டமைப்பை உருவாக்கி சங்கு சின்னத்தை விற்றதாகச் சொல்லப்படும் நிலாந்தன், ஜோதிலிங்கம் போன்றவர்களின் நிலை மிக மோசமானது.