“கட்சி, நிற வேறுபாடுகளுக்கு அப்பால் நாட்டை வெற்றியடையச் செய்யும் பாதையைத் தேசம் அடைந்துள்ளது. இதன் மூலம் உழைக்கும் மக்களின் இருப்பு உறுதிப்படுத்தப்படுமென திடமாக நம்புகின்றேன்” இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதினச் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்தச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
உலகெங்குமுள்ள தொழிலாளர்கள், மிகவும் பெருமிதத்துடன் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடும் இவ்வேளையில் அவர்களுடன் இணைந்து கொள்ளும் எமது நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக் கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நாட்டின் அபிவிருத்தியை சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமக்கு உழைக்கும் மக்கள் வழங்கிவரும் பலத்தை மறந்து விடமுடியாது. ஒரு பக்கத்தில் முழு உலகையும் அச்சத்துக்குள்ளாக்கி வருவதாகக் கூறப்படும் பயங்கரவாதத்துக்கு நாம் அச்சமின்றி முகங்கொடுத்தோம். அவ்வாறு முகங்கொடுத்து இன்று நாம் சுதந்திரமான ஒரு வருடத்துக்குள் காலடி வைத்துள்ளோம்.
அதேபோல் உலக பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் எமது நாட்டின் வளங்களைப் பாதுகாத்து மக்கள் வாழ்க்கையை சுபிட்சமடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றிகள் சகலவற்றிலும் பங்குதாரராவதற்கு இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் பொறுமையைக் கையாண்டிருப்பது உலகெங்குமுள்ள உழைக்கும் மக்களின் கெளரவத்துக்கு பாத்திரமாகலாம் என நம்புகிறேன்.இன்று நாம் வெற்றி மீது வெற்றிகொண்டு தேசத்தைப் பலப்படுத்தும் சந்தர்ப்பத்தை அடைந்துள்ளோம். எதிர்காலத்தில், இந்த நாட்டில் பிரிவினைவாதம் தொடர்பான எண்ணம் தலைதூக்காதவாறு உழைக்கும் மக்கள் ஐக்கியத்துடன் செயற்படுகிறார்கள்.
இவ்வாறான எல்லா சவால்களையும் வெற்றிகொண்டு நாட்டை முன்னேற்றும் பயணத்தின் போது மக்களுக்கு உதவிளைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளமை உழைக்கும் மக்களுடன் இருந்த எனக்கு பெருமையாதனதாகும். இன்று அரச சேவையைப் போலவே அரச ஊழியர்களும் உறுதியுடன் செயற்பட்டு வருகிறார்கள். தனியார்துறை ஊழியர்களின் உரிமைகளையும் நாம் மறந்துவிடவில்லை. விவசாயப் பொருளாதார உற்பத்திகளுக்கான திடமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும், தேசிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் நலன்காக்கும் அரசாங்கம் அதன் பொறுப்பை சரியாக உணர்ந்துகொண்டதன் காரணமாக எந்த உதவிகளையும் நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
புதியதோர் இலங்கையைக் கட்டியெழுப்ப மேற்கொள் ளப்படும் நடவடிக்கைகளைப் பலப்படுத்திய நாட்டின் உழைக்கும் சகலவித மக்களுக்கும் தேசத்தின் கெளரவம் உரித்தாகட்டும். எமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன்.