வவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களுக்கு தடையின்றி தண்ணீர் வசதி அளிப்பதற்காக 38 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இதனூடாக மே மாதம் நடுப்பகுதி முதல் சகல முகாம்களுக்கும் நீர்க்குழாய்களினூடாக நீர் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்னி நிலைமை தொடர்பாக விளக்கும் ஊடகவியலாளர் மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களுக்கு தற்பொழுது பவுசர் ஊடாகவே நீர் வழங்கப்படுகிறது. இடம்பெயர்ந்த மக்களுக்கென அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகராலயம் 25 ஆயிரம் கூடாரங்களும் 25 இலட்சம் லீட்டர் குடிநீர் என்பன வழங்கியுள்ளன. இது தவிர வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தமாக நீர்வசதி அளிக்கும் வகையில் குடிநீர் திட்டமொன்றை வழங்கவும் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஸ்தானிகராலயம் முன்வந்துள்ளது. இதற்கு 38 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதில் 20 மில்லியன் ரூபா வழங்க உள்ளது என்றார்.
இங்கு கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன கூறியதாவது, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மக்களுக்கு வழங்கும் வசதிகள் தொடர்பான தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. வவுனியா முகாமிலுள்ள மக்கள் தண்ணீர் வசதியின்றி இருப்பதாக ஒரு அரச சார்பற்ற தொண்டு நிறுவனமொன்று குறுஞ்செய்தியூடாக அறிவித்தது. ஆனால் நாம் அங்கு சென்ற போது நீண்ட வேலிகளில் பெருமளவு உடைகள் காயப்போடப்பட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.