இறந்தவனுக்கு ஏது தேசியம் ? வளமற்றவனது உயிரிலும் உழைப்பிலேயுமே தேசியம்
இலங்கையில் தமிழ் சிங்கள தேசிய வாதங்களின் போரில் சார்பாகவும் எதிராகவும் ஈடுபட்டு . போராளிகள் சிப்பாய்கள் துரோகிகள் என சமகாலப் பட்டப் பெயர்களையும் தாங்கி மாண்டு போனவர்கள் தொகை என்ன என்பதை முற்றாகச் சொல்லக் கூடிய ஞானிகள் யாரும் whatapps தளங்களில் கூட உள்ளார்களா எனத் தெரியவில்லை . ” பயன் இல்லை என்றால் மறந்திடுவதே விதி ” , என இறந்தவர்கள் யாரென நினைவு கூருவதை சொந்த பந்தங்களே மறந்து கொண்டு போகும் நிலைதான் இன்று நிஜமானது .
இந்நிலைக்கு தமிழீழத்தலைவர் என இன்றும் சிலரால் கொண்டாடப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூட விதிவிலக்கல்ல . ஆயுதப் போர்கள் முடிந்த மறுநாளிலிருந்தே
1. மற்றவருக்காக தம்மை அர்ப்பணிக்க முன்வந்தவர் யாவரையும் , ஒரே கண்ணுடன் நிலை கொள்ள வேண்டும் .
2. இறந்தவர் பட்டியல் ஒன்றினை தயாரிக்க வேண்டும் . 3.பிரபாகரனுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வொன்றினை நடத்த வேண்டும் .
4. இவர்கள் அனைவர் பேரிலும் ஒரேஒரு நாளினை தமிழ் பேசுவோரது இலங்கைத் தினமாக நடைமுகப் படுத்த வேண்டும் .
5. அமைப்புகள் பட்டப் பெயர்களைத் கடந்து , இறந்தவர்களை நினைவு கூரும் தலம் ஒன்றினை , முதலில் தற்காலமாக ஏதாவது ஒரு புகலிடத்திலும் , காலப் போக்கில் நிரந்தரமாக இலங்கையிலும் உருவாக்கிட வேண்டும் .
6.அவனை அல்லது இவனை மனித உரிமைக் கூண்டில் நிறுத்தப் போகிறோம் என்றபடி இலங்கையரது உழைப்பையும் , சொத்துகளையும் விரையம் செய்வதைத் தவிர்த்து , தென் ஆபிரிக்காவில் இடம் பெற்றது போல Truth and Reconciliation Commission ( TRC ) என்ற நடைமுறையாகக்கூடிய ஆணைக்குழுவை சட்ட பூர்வமாக நிலைநாட்ட வேண்டும் . என்ற ஆறு கோரிக்கைகளை பிரசுரமான ஆய்வுக் கட்டுரைகளிலும் , நேர்காணல்கள் போதும் . சகல விடுதலை அமைப்புகளது பிரதிநிகளுடன் நேரடியாகவும் , 2009 இல் இருந்தே குரல் கொடுத்து வந்ததால் பயன் எதுவும் இன்றும் இல்லை . ( Re : South Asia Research Group . Tamilview , Thesamnet , etc. , numerous meetings . } தேர்தல்களில் வாக்காளரது பட்டியல்களுடன் கதவுகள் தட்டும் தேசியம் பேசும் அரசில்வாதிகள் , கதவுகள் தட்டும் போது வீடுகளில் இறந்தவர்கள் உள்ளார்களா என விசாரித்து பட்டியல் செய்யக் கூடிய நிலமையை சாதகமாக்கியதோ கிடையாது.
சிங்கள சிப்பாய்களுக்கு இந்நிலை வேற்றுமையானதா ? இல்லை . ஆனால் , கைவசம் உள்ள அரசின் பணத்தை , தாமும் எடுத்து , அதேவேளை இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு சில சலுகைகளையும் வழங்கி அரசியல்வாதிகள் கொண்டாடி இருக்கலாம் . “ இறந்தவன் நினைவுகளில் மறைந்து போபவன் ” ” இறந்தவனுக்கே இறுதி நஸ்டம் ” என்ற நியதிகளையே சமூக நிலைப்பாடுகள் மீள் உணர்துகின்றன . இவ்விடத்தில் தமது வாழ்வின் இளமையை , பொருள் பண்டம் சேகரிக்கும் காலங்களை அதே தேசியவாங்களின் பெயரில் விரையம் செய்தவர்களை இங்கு நினைவுக்கு கொண்டுவந்து அவர்களது விரக்தியை மேலும் தூண்டிடும் நோக்கோ இங்கு இல்லை . ஆனால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தமது விரக்திகளை உள்ளடக்கி , சுய அறிவாக்கி ஆக்க பூர்வமாக தம்மை ஈடுபடுத்துபவர்கள் , இன்றும் தேசியவாத போலிக் கர்ச்சனைகளை தமது சொகுசான வீடுகளிலிருந்து கீச்சிடும் போது எப்படி கணிப்பது ?
” முதலாளிகள் மட்டுமல்ல , தேசியம் பேசும் போலிகளும் , வண்டி வளர்க்கும் மனிதப் பண்டிகள்தான் . அதுமட்டுமல்ல , இவர்கள் யாவரும் bloody bores . ” என்று ஆங்கிலம் பேசி முடித்து தன்னை அறிவித்தாரே அந்த whatsapp ஞானி , அவர் பெயர் ஞாபகம் இல்லை . ஆயினும் அவரது குரல் சில வேளைகளில் சுயஅறிவை மேவிடுவது தவிர்க்க முடியாமலே உள்ளது . தமிழுக்காக தீ குளிப்போர் இன்று தமிழகத்தில் இல்லை . அங்கு சாதிகள் அற்றுப் போவதற்கான சான்றுகள் உள்ளன என்று வேறு தகவல்கள் . இலங்கையிலோ , சிங்களவரது ‘ அறகலையா ‘ முடிந்து ஏதோ NPP என்ற பெயரில் ஒரு மாற்றம் நடப்பதாக தகவல்கள் . தமிழ் பேசுவோர்கள் யாவரும் தொப்பிரட்டிகளாக மாறி சிங்கள தேசியவாத தலைவர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தமையும் ஊர்ஜிதம் . தமிழ் பேசுவோரை அடிமைப்படுத்த போதைப் பொருட்களை விற்கும் கடைகளை சிங்கள தேசியவாதிகள் எல்லா இடங்களிலும் உருவாக்குகிறார்கள் என்ற கூக்குரலுடனேயே போதைவஸ்து கடைகள் நடத்தும் தமிழீழ வாதிகள் , தேசியம் பேசும் அரசில்வாதிகள் , அவர்களது அடிவருடிகள் , மதவாதிகள் , சாதியவாதிகள் , பொருட்களை பதுக்கி தமிழ் மக்களை சூறையாடும் தேசியக் கடைக்கார்கள் , chattering monkeys , என்ற யாவரும் ஏதோ கெட்டவர்கள் என அடையாளம் காணும் காலம் கூட தமிழ் பேசுவோரிடையே பரவுகிறது என்ற வதந்தியும்தான் எட்டுகிறது . அப்படியானால் , இன்றும் அதே வார்தைகளுடன் அதே உருவங்களுடன் தேசியம் பேசும் அந்தப் பிராணிகள் எங்கே அதிகளவில் உள்ளார்கள் ? என்ற கேள்வியே எஞ்சுவது , தற்காலிகமானதாக இருந்தாலும் ஏதோ மனச் சுகத்தையும் தான் தருகிறது .