மெடிக்கல் மாஃபியாக்களின் கைகளில் மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சாவிகள்..? – மக்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாத இலங்கை சுகாதார அமைச்சு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சுகாதார அமைச்சின் கடிதத்திற்கு அமைய, வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் முன்னிலையில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த ராமநாதன் அர்ச்சுனாவை மாற்றக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு ஆதரவாக தென்மராட்சி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஏற்பாட்டில் நேற்று பாரிய போராட்டம் நடாத்தப்பட்ட நிலையில், பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா சுகவீன விடுமுறை என தெரிவித்து கொழும்புக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா;  யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் ஆகியோரின் குற்றங்களையும் – ஊழல்களையும் – தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்த நிலை பற்றியும் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே பதவி நீக்கப்பட்ட நிலையில் குறித்த குற்றங்கள் தொடர்பில் யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் மீது எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதே வேளை இன்று புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக பொறுப்பேற்றுள்ள வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் ஏற்கனவே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிரான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தவராவார்.

இவ்வாறான நிலையில் யார் மீது குற்றஞ்சுமத்தி வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தன் மக்களுக்கான போராட்டத்தை ஆரம்பித்தாரோ அதே குற்றவாளிகளின் கைகளுக்கே மீளவும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சென்றுள்ளதா என்ற ஐயம் பல தரப்பினராலும் எழுப்பப்பட்டு வருகிறது.

இலங்கை மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக கல்வி கற்று வைத்தியர்கள் ஆகும் மருத்துவர்கள் அந்த மக்களுக்கான அரசாங்கம் வழங்கும் இலவச மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு இத்தனை இழுபறிகளை மேற்கொண்டு வருகின்றனர். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலேயே இந்த நிலை என்றால் ஆ.கேதீஸ்வரன் போன்ற மருத்துவர்கள் பிரதானமாக இயங்கும் யாழ்ப்பாண வைத்தியசாலையின் நிலை ..? அங்கு நடக்கும் ஊழல்கள் குறித்து யார் பேசுவார்கள் போன்ற விடயங்கள் சிந்திக்க வைக்கின்றன.

இலங்கை சுகாதார அமைச்சு விரைந்து ஊழல் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து தரமான சேவையை எதிர்பார்த்து நிற்கும் மக்களுக்கான தீர்வை விரைந்து வழங்க வேண்டும். மக்கள் இலவச மருத்துவத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காப்பாற்றுவது இலங்கை சுகாதார அமைச்சின் முக்கியமான பணியுமாகும்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *