கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளது – இந்தியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் இன்று நடைபெற்றது.

டில்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து விசேடமாக ஆராயப்பட்டது.

இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக ஜெயசங்கர் தெரிவித்தார்.

அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொடுக்கும் இந்தியாவின் கொள்கை குறித்தும் இந்த சந்திப்பில் கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய பொருளாதார மாற்றச் சட்டத்தின் மூலம் விவசாயம், சுகாதார கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு உண்மை மற்றும் நல்லிணக்கச் சட்ட மூலம் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் செயற்படுத்தப்பட்டுள்ள விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக விரைவான தீர்மானத்தை எட்டுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுகா செனவிரத்ன, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ட்ரா பெரேரா மற்றும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கனலந்துகொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *