பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொலிஸாருக்கு 25 ஆண்டுகளின் பின்பு ஆயுள் தண்டனை !

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் கொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தனி முன்னாள் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு வடமத்திய மாகாண உயர் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தம்பலகாமம் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த வீடொன்றில் வீடு குடி புகுதல் நிகழ்வின்போது 8 தமிழர்கள் ஆயுதம் தாங்கிய குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட தம்பலகாமம் – பாரதிபுரம் எனும் கிராமத்தில் 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு அடுத்த நாள் குறித்த குற்றச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த கொடூரச் சம்பவத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டு, குற்றவாளிகளாக இனம்காணப்பட்ட அன்றைய காலப்பகுதியில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் 3 பொலிஸ் சார்ஜன்ட்களுக்கே ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவைகயில், கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். ரணராஜ பண்டார, உப பொலிஸ் பரிசோதகர் ஜி.எல்.சோமரத்ன, பொலிஸ் சார்ஜன்ட்களான சந்திரரத்ன பண்டார, கே.எம். நிஹால் பிரேமதிலக்க, ஏ.ஆர்.சோமரத்ன பண்டார ஆகியோருக்கே இவ்வாறு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை மாத்திரம் குற்றமற்றவர்கள் என அறிவித்து விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரினால் அவசரகால உத்தரவு வழக்குகள் நடைமுறைகள் சட்டத்தின் 26 (1) பிரிவின் பிரகாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *