ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துன்பம் இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. – வடக்கு ஆளுநர் சார்ள்ஸ்

பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்படுகிறது.

 

கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களை வளப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, மாணவர்களை அடித்து, துன்புறுத்தி வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்குள் இவ்வாறாக செயற்பட்ட ஆசிரியர்கள் தொடர்பில், ஆளுநரின் செயலகத்தால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

நேற்று பதிவாகிய மூன்று சம்பவங்கள் தொடர்பில் கௌரவ ஆளுநரின் பணிப்புரைக்கு அமைய உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

“எழுத்தறிவித்தவன் இறைவன்” எனும் கூற்றுக்கு அமைய, இறைவனாக போற்றப்படக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் துன்பம் இழைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.

 

கற்றலில் சிக்கல்களை எதிர்நோக்கும் மாணவர்களை எவ்வாறு கற்றலில் ஈடுபடச் செய்வது என்ற யுக்தியை கண்டறிந்து அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

அதற்காகவே ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு, அரசினால் ஆசிரிய நியமனம் வழங்கப்படுவதோடு, மாதாந்த கொடுப்பனவும் வழங்கப்படுகிறது.

 

எனினும், ஒருசில ஆசிரியர்கள் மாணவர்களின் நிலையை அறியாது அவர்களை அடித்து துன்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, தற்போது பதிவாகியுள்ள இந்த சம்பவங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருக்க பாடசாலை அதிபர்களும், ஆசிரியர்களும் தங்களின் பொறுப்புக்களை உணர்ந்து கடமைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறின்றி பொறுப்பற்ற வகையில் செயற்படும் அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறியத்தருவதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *