தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது…? – டக்ளஸ் தரப்பு கேள்வி !

இந்திய தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய ஜேவிபியின் தலைவர் வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் நிலை தொடர்பில் எவ்வாறான கருத்தை கொண்டுள்ளார் என வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்றையதினம் (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசம் தமிழர்களின் தாயக பிரதேசம் தொடர்பில் ஜே.வி.பி. எவ்வாறான கருத்தை கொண்டுள்ளது என பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பப்பட்டபோதும் அவர்களிடமிருந்து தமிழர் தாயக பிரதேசம் தொடர்பாக எவ்விதமான தெளிவூட்டல்களும் வெளியிடப்படவில்லை.

இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு ஜே.வி.பி.யே முக்கிய காரணமாக செயற்பட்டது.

ஆனால் ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நடைபெறலாம் என்ற கருத்து நிலவும் சூழலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜேவிபி எழுச்சி பெற்று வருவதாக ஊடகமொன்றிற்கு கூறியுள்ளார்.

ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக ஜேவிபி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை சரத்பொன்சேகா கூட தெரிவிக்க முயலவில்லை.

ஆகவே வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக ஜே.வி.பியின் நிலைப்பாட்டை நட்புடன் எதிர்பார்க்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *