நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. – ஜீ.எல்.பீரிஸ்

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது, செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளையும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவேன் என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் திங்கட்கிழமை (12)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டத்துக்கு அமைய நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது முற்றிலும் சட்டத்துக்கு விரோதமானதொரு செயற்பாடு.

நிகழ்நிலை காப்புச் சட்டத்தினால் ஊடகங்களினதும்,ஊடகவியலாளர்களினதும் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம் சட்டவிரோதமானது.இந்த சட்டத்தை சாதாண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமாயின் பெரும்பாலான ஏற்பாடுகளை திருத்தம் செய்ய வேண்டும்,அவ்வாறு இல்லையெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் மிக தெளிவாக வியாக்கியானம் வழங்கியுள்ளது.

இந்த சட்டம் தொடர்பில் உயர்நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்களில் ஐந்து முக்கிய திருத்தங்கள் பாராளுமன்ற குழுநிலை வேளையின் போது சட்டத்தில் உள்வாங்கப்படவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கும்,சபாநாயகருக்கும் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

இலங்கையிக் புகழ்பெற்ற நீதியரசரான மார்க் பெர்னான்டோ, உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது ‘சபாநாயகரால் சான்றுரைக்கப்படும் சட்டமூலம் அரசியலமைப்பின் விதிவிதானங்களுக்கு அமைவானதாக அமையாவிடின்  அவ்வாறான சட்டங்களுக்கு சட்ட அந்தஸ்து கிடைக்காது’ என தெளிவாக வாதிட்டுள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் உயர்நீதிமன்றத்தின் திருத்தங்கள் என்பனவற்றுக்கு அமைவாக நிகழ்நிலை காப்புச் சட்டம் நிறைவேற்றப்படவில்லை.ஆகவே இந்த சட்டத்துக்கு சட்ட அந்தஸ்து கிடையாது,செல்லுப்படியற்றது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் சகல ந்டவடிக்கைகளும் சட்டவிரோதமானது.ஆகவே இந்த சட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படு;த்துவேன்.

இந்த ஆண்டு தேசிய தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.நிகழ்நிலை காப்புச் சட்டத்தை செயற்படுத்தினால் இலங்கையின் மனித உரிமைகளை சவப்பெட்டியில் அடக்கம் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டு அனைவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கிறார். ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு மத்தியில்  சிறந்த மாற்றத்தை ஒருபோதும் உருவாக்க முடியாது என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *