காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கொழும்பு ஐ.நா அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு போராட்டம் !

காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (05) பதாதைகளை ஏந்திக்கொண்டு காஷ்மீர் விடுதலைக்கான அமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெறும் அட்டூழியங்களையும் ஆக்கிரமிப்புப் படைகள் அப்பாவி காஷ்மீரிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதையும் தமது பதாதைகளில் ஏந்தியிருந்தனர்.

ஜக்கிய நாடுகள் சபையும் ஐ.நா. மனித உரிமை அமைப்பும் இவ்விடயத்தில் தலையிட்டு இரு நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்து வைக்க வேண்டும்.

சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக காஷ்மீரிகளின் சுயநிர்ணய உரிமைக்கான நியாயமான போராட்டத்திற்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதுடன் காஷ்மீர் மக்களின் நிரந்தர துயரங்களை நோக்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப காஷ்மீர் பிரச்சனைக்கு ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் அடிப்படையில் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதை வலியுறுத்துவதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஏழு தசாப்தங்களாக ஆக்கிரமிப்புப் படைகள் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் செய்த மனித உரிமை மீறல்களை கண்டித்த அவர்கள் காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப காஷ்மீரில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய உலக நாடுகளும் கடமைப்பட்டுள்ளது  எனக்குறிப்பிட்டனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கொழும்பு நகரசபை முன்னாள் உறுப்பினர்களான ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான், எஸ்.எம். முஸம்மில் உட்பட பலரும் கலந்து கொண்டு மகஜர்களையும் கையளித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *