பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தொலைபேசியில் பேசி இந்திய பிரதமர் மோடி, காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
https://x.com/narendramodi/status/1714986693097664745?s=20
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்
“பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பேசினேன். காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன். இந்த உரையாடலின்போது, பாலஸ்தீன பகுதிகளில் வன்முறையினால் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதையும், பயங்கரவாம் குறித்த கவலைகளை பகிர்ந்துகொண்டோம். மேலும் இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியாவின் நீண்டகால கொள்கை நிலைப்பாடும் மஹ்மூத் அப்பாஸிடம் தெரிவிக்கப்பட்டது. பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து அனுப்பும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இந்த துயரத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்திக்கிறேன். இஸ்ரேல், ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில் தொடர்ச்சியாக பொதுமக்கள் உயிரிழப்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. மருத்துவமனை மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு காசா பகுதியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. இதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் ராக்கெட் குண்டு தாக்குதல்தான் இதற்கு காரணம் என ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம்சாட்டினர். ஆனால், இத்தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தவில்லை என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி பட தெரிவித்தார்.