ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சூழலில் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதன் மூலம் தான் பெறுகின்ற சம்பளத்தை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதாக ஆப்கன் கிரிக்கெட் அணியின் வீரர் ரஷீத் கான் அறிவித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாது ரஷீத் கான் அறக்கட்டளை மூலமாக நிதி திரட்டும் முயற்சியிலும் அவர் இறங்கியுள்ளார். இதில் கிடைக்கும் நிதியை கொண்டு பாதிக்கப்பட்ட தனது நாட்டு மக்களுக்கு உதவ உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள மாகாணங்களில் ஏற்பட்ட பூகம்பத்தால் மோசமான பாதிப்பை நாடு எதிர்கொண்டுள்ளதாக அறிந்து நான் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எனது உலகக் கோப்பை தொடரின் போட்டிகளுக்கான சம்பளம் அனைத்தையும் நன்கொடையாக வழங்குகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் ரஷீத் கான் அறக்கட்டளை மூலமாக நிதி திரட்டுவது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சுமார் 1 லட்சம் டாலர்களை அவர் திரட்ட முடிவு செய்துள்ளார். இது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டமைக்க உதவும் என்றும். இதற்கு மக்கள் தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஹெராத் மாகாணம் உள்ளது. இந்த மாகாண தலைநகர் ஹெராத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (அக். 7) காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை பூகம்பங்கள் ஏற்பட்டன. இவை ரிக்டர் அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்று பதிவாகின. தொடர்ந்து பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
இந்த பூகம்பத்தால் ஹெராத் பகுதியில் 12 கிராமங்கள் முழுமையாக நாசமாகின. 1,500-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,060 பேர் உயிரிழந்தனர். 10,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.