::பொருளாதாரம்

::பொருளாதாரம்

இலங்கை மற்றும் சர்வதேச பொருளாதாரம் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

உலக பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஜி20 மாநாட்டில் நடவடிக்கை

g-20.jpgலண்டனில் ஆரம்பமாகியுள்ள ஜி 20 உச்சி மாநாட்டின் 2ஆம் நாள் அமர்வுகளின் போது, உலக நாடுகளின் தலைவர்கள் சர்வதேச பொருளாதர நெருக்கடிக்கு முகம் கொடுப்பது தொடர்பில் பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்துக்கான பணத்தை அதிகரிப்பது, நிதி கண்காணிப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட நெருக்கடியைச் சமாளிக்கும் பிரச்சினைகள் குறித்து லந்துகொண்ட தலைவர்கள் கலந்துரையாடியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பல இன்னல்களில் சிக்கியுள்ள நாடுகளுக்கு உதவி செய்யும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட நாணய நிறுவனங்களுக்கு 750 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க 20 நாடுகள் குழுவின் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.மேலும் 25 பில்லியன் டி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சிறப்பு நிதியுதவி, உறுப்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் என்று பிரிட்டன் தலைமையமைச்சர் கோர்டன் பிரவுண் தெரிவித்துள்ளார். செல்வாக்கு வாய்ந்த அனைத்து நிதி நிறுவனங்கள், நிதி உற்பத்தி பொருட்கள் மற்றும் சந்தைகள் மீது, கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புதிய நிதி ஆணையத்தை உருவாக்கி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து, உலக பொருளாதாரம் மற்றும் சந்தையின் அபாயத்தையும், கண்காணிக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிகின்றன. 

G20 கூட்டமைப்பும் லண்டனில் நடைபெறவுள்ள உச்சி மாநாடும் – (The G20- Part 1) : வி வசந்தன்

G20_Noteகடந்த சனிக்கிழமை (Mar 28, 2009)லண்டன் மாநகரில் பெரிய அளவில் கண்டன ஊர்வலம் ஒன்று “மக்களுக்கு முதலிடம் கொடு” என்னும் வானவில் கூட்டமைப்பினால் நூற்றி ஐம்பதுக்கும் அதிகமான தொழிற் சங்கங்கள், கிறிஸ்த்தவ தளங்கள், அரசு சார்பற்ற ஸ்தாபனங்கள் இணைந்து மிகவும் வெற்றிகரமாக நடாத்தினர். இது போன்று இன்னும் பல கண்டன ஊர்வலங்கள் இனிவரும் தினங்களில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் சித்திரை முதலாம் நாள் “யுத்தத்தை நிறுத்துவதற்கான கூட்டமைப்பு”, “நிதி அழிவு (Meltdown)”, “மக்களும் கிரகமும்” “சூழல் பாசறை”  போன்ற அமைப்புகள் நடாத்த உள்ள எதிர்ப்பு ஊர்வலங்கள் மற்றும் இவற்றை தவிர சித்திரை இரண்டாம் நாள் பல விதமான ஜனநாயக போரட்டங்களையும் வேறுவேறு அமைப்புகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. அனைத்து அமைப்புகளும் வேறுவேறு நோக்கங்களுக்காக தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினாலும் அவற்றின் அடிப்படை கோரிக்கையானது “லாபத்தை விட மக்களுக்கு முதலிடம் கொடு” என்பதே. இவ்வாறான ஒட்டுமொத்த எதிர்ப்புக்களையும்,  கண்டனங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியிருப்பது சித்திரை இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் G20 உச்சி மகாநாடு.
 
இம்மகாநாடு பத்தொண்பது நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் (EU), தென் கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN), ஆபிரிக்க அபிவிருத்திக்கான புதிய கூட்டுறவு (NEPAD), ஐக்கிய நாடுகள் சபை(EN) ஆகியவை பங்கு பற்றுகின்றன. G20 நாடுகளின் மொத்த சனத்தொகை உலக சனத்தொகையின் 67 சதவிகிதமும், இந்நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் அண்ணளவாக உலக நாடுகளின் 80 சதவிகித வர்த்தகத்திற்கு சமனாகவே உள்ளது. இவைதவிர உலக நாடுகளின் 90 விகித உள்நாட்டு உற்பத்தியை G20 நாடுகளே மேற்கொள்கின்றன. ஆகவே இந்நாடுகள் தமக்கிடையே உள்ள பொதுவான பொருளாதாரம் நிதி உலகமயமாக்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக தமது கருத்துக்களை பறிமாற்றிக்கொள்ளும் அத்தியாவசியத்தினை உணர்ந்து 1990 நடுப்பகுதியில் ஏற்பட்ட கிழக்காசிய நாடுகளின் அந்நியசெலாவணி நெருக்கடியினால் உந்தப்பட்டு 1999முதல் தொடக்கம் பல சந்திப்புகளை அந்நாடுகளின் அரசுகளின் தலைவர்களும், நிதி அமைச்சர்களும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் நிகழ்த்தியுள்ளனர். ஆனால் இம்முறை நடக்கவிருக்கும் சந்திப்பானது கடந்த ஆறு மாதங்களுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது மிக முக்கியமான மகாநாடுவாகும்.

கடந்த பல வருடங்களாக பொறுப்பற்ற முறையில் உலக நிதியைக் கையாண்ட வங்கிகள், எச்சரிக்கையற்று இருந்த அரசு கட்டுப்பாட்டாளர்கள், பொறுப்பற்ற பொருளாதாரக் கொள்கைகள், நிபந்தனையற்ற எல்லைகளற்ற பணப்பாச்சல்கள், இவையனைத்தும் உருவாக்கியதே இந்த உலகளாவிய நிதியியல் நெருக்கடி. இந்த நெருக்கடியானது கடன் பெறுவதற்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பொருளாதார தேக்கத்தையும் பின்னடைவையும் மேற்குலக நாடுகள் மட்டுமல்லாது ஏனைய வளர்ச்சியடையும் நாடுகளையும் பாதித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

G20 குழுவின் நோக்கங்களும் கட்டுமாணங்களும்

இக்குழுவானது இதனுள் அங்கம் வகிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் வளர்ந்து வரும் சந்தைகளை கொண்டிருக்கும் நாடுகளுக்குமிடையே உலக பொருளாதார திடநிலை தொடர்பாக வெளிப்படையானதும் உருப்படியானதுமான கருத்துப் பரிமாற்றம் செய்யும் கருத்தரங்காகவே ஸ்தாபிக்கப்பட்டது. நாடுகளின் அபிவிருத்தியயையும் அவற்றின் பொருளாதார வளர்ச்சியையும் ஆதரிப்பதும்; இவற்றிற்கு ஆதரவாக உலக நிதிக் கட்டுக்கோப்புக்களையும் பலப்படுத்துவதோடு தேசிய கொள்கைகள், உலகலாவிய ஒத்துழைப்பு, உலக நிதி ஸ்தாபனங்கள் போன்ற விடயங்களில் உரையாடலுக்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதும் இக்குழுவின் நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

பேர்லினில் 2004 ஆண்டு கார்த்திகை மாதம் நடைபெற்ற நிதி அமைச்சர்கள் மத்திய வங்கி ஆளுநர்கள் அடங்கிய மகாநாட்டில் சில கொள்கை இணக்கங்கள் காணப்பட்டது. அவையாவன:

•பணம் நிதி ஆகியவற்றின் திடநிலை பேணல் (Stability)

•விலைகளின் திடநிலை பேணல், பணவீக்கத்தை கட்டுப்படுத்தல்

•உள்நாட்டு வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நிரவும் பொதுக்கடனானது அந்நாட்டின் உற்பத்திக்கு பொருத்தமான அளவில் பேணப்படல்.

•உள்நாட்டு நிதியியல் துறையை பலப்படுத்தல்

•அந்நிய செலாவணிக்கான கட்டுப்பாடுகளை கவனமாக தளர்த்தல்
    
•போட்டியை பேணல் (Competiton)

•உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகங்கள் மீதுள்ள தடைகளை படிப்படியாக தளர்த்தல்

•நெகிழ்வான தொழிளாளர் சந்தையை உருவாக்குதல்

•சிறிய, மத்திய நிறுவனங்களை ஊக்குவித்தல்

•நேரடி வெளிநாட்டு மூலதனங்களை அனுமதித்தல்
 
•உரிமை கொடுத்தல் (empowerment).

•கல்வி கற்கவும் பயிற்சிகளைப் பெறவும் வசதிகளை செய்து கொடுத்தல்

•சிறிய நிறுவனங்களை ஆரம்பிக்க இலகு முறையில் கடன் பெற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

•சமூக கட்டுமாணங்களான நன்நீர் வசதிகளை தருவது, சுகாதார சூழலை உருவாக்குதல்

  
கடந்த பத்துவருட காலங்களில் இக்குழுவின் சாதனைகள் என பட்டியல் போடப்படுபவை கீழே தரப்படுகின்றன:
•நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கொள்கைகளில் இணக்கம்

•நிதி முறைமையை துஸ்பிரயோகங்களை குறைத்தல்

•நிதி நெருக்கடியை கையாள்வது

•பயங்கரவாதத்திற்கு பயன்படும் பண முதலீடுகளுக்கு எதிராக செயல்படல்

•உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடைக் கோட்பாடுகளை பயன்படுத்தி இறைதிறை கொள்கைகளில் (Fiscal Policy) ஒளிவின்மையை கொணர்தல்

•உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏற்புடைக் கோட்பாடுகளை பயன்படுத்தி பணச்சலவை, பயங்கரவாததிற்கு பயன்படும் பண முதலீடுகளுக்கு எதிராக செயல்படல்

•வரி ஏய்ப்பு, நிதி முறைமையை துஸ்பிரயோகங்கள், சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வது

•உலக நிதி கட்டுமாணத்தை மறுசீர்அமைப்பது.

•இவ்வருடம் பங்குனி 14 திகதி வெளிட்ட அறிக்கையில், இன்றைய நிதி குழப்ப நிலையிலிருந்து விடுபட நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தி மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், நிதி தொடர்பான விதிகளையும் அவற்றின் நிர்வாகத்தையும் செம்மைப்படுத்துவதன் மூலமே உலக நிதிச்சந்தையை சீராக்க முடியும் என ஏற்றுக்கொண்டனர்.

தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும்:- கயந்த கருணாதிலக்க

gayantha.jpgமேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்தகருணாதிலக்க தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படவுள்ள பாரிய பொருளாதாரச் சீரழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க மஹிந்த சிந்தனை கொள்கைகளினால் முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 54 ரூபா எனவும், மத்திய மற்றும் வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது ஒரு கிலோ சீனியின் விலை 64 ரூபா எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் ஒரு கிலோ சீனியின் விலை 75 ரூபாவாக உயர்வடைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் அத்தியாவசிய பொருட்களுக்கான விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படுவதனை தடுக்க முடியாதென அவர் எதிர்வு கூறியுள்ளார். அரசாங்கம் தேர்தல்களை இலக்காக வைத்தே பொருட்களின் விலையை கட்டுப்படுத்தி வருவதாகவும் மாகாணசபைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி பொருட்களின் விலை ஏற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

.

29 டொலருக்கு மசகு எண்ணெயினை கொள்வனவு செய்யும் அரசு பெற்றோலை 120 ரூபாவுக்கு விற்கின்றது – ரவி எம்.பி.

ravi-karunanayaka.jpgஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின் போது 43 டொலர்களுக்கு மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்டு ஒரு லீற்றர் பெற்றோல் 75 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 29 டொலர்களுக்கு மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்ற போதிலும் பெற்றோல் ஒரு லீற்றர் 120 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

அரசாங்கம் ஏன் மக்களுக்கு இவ்வாறான அநீதியை இழைக்கின்றது என்று ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். எரிபொருள் தொடர்பான சிறிய கேள்விக்கு பதிலளிப்பதற்காக அமைச்சர் உலகத்தையே சுற்றிவருவதாகவும் ரவி எம்.பி. பரிகாசம் செய்தார். பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 க்கு சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் வாய்மூல வினா விடைக்கான நேரத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

உலகில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழப்பு

2009 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் உலகம் முழுவதிலும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சமாகும். அதாவது, ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழந்துள்ளனர்.

சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாளர்களை வேலையைவிட்டு நிறுத்துவது மற்றும் பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் தானாக முன்வந்து ஓய்வுபெற்றால் சலுகை அளிப்பது போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன.

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்கள் தங்களது செலவைக்குறைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பணியிடங்களை சர்வதேச நிறுவனங்கள் குறைத்துள்ளன.

ஒவ்வொரு ரூபாவைவும் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி நிவாரணம் ஏதும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் ஜனவரி 26 ஆம் திகதி ஒருநாள் மட்டும் 80,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. பெப்ரவரியில் அதைவிடக் குறைவான அளவிலேயே வேலை இழப்பு ஏற்பட்டது.

பெப்ரவரியில் சுரங்கத்துறையில் பெரும் நிறுவனமான ஆங்லோ அமெரிக்கன் 19,000 பணியாளர்களைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தது. ஜப்பானின் பனாசோனிக் நிறுவனம் 15,000 பணியிடங்களைக் குறைத்தது. இதுதவிர ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 10,000 பணியாளர்களையும் நோர்ட்டல் நிறுவனம் 3,200 பணியாளர்களையும் வேலையை விட்டு நிறுத்தியது.

இதேபோன்று குட் இயர் நிறுவனம் 5,000 பணியாளர்களையும் மைக்ரான் 2,000 பணியாளர்களையும் யு.பி.எஸ். 1,600 பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பணிநீக்கம் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறையும். அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

bandula_gunawadana.jpgஅரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் வெகுவாகக் குறைவடையும் என்று வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அதேநேரம் சமையல் எரிவாயுவின் விலையில் மார்ச் மாதமளவில் மாற்றம் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பணவீக்கம் குறைவடைந்து வருவதால் நூற்றுக்கு 28 ஆக விருந்த வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் வெகுவாகக் குறைவடைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டு வாரங்களில் நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக இது குறைவடையுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.எதிர்வரும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கான எவ்வித தட்டுப்பாடும் இருக்கமாட்டாதென தெரிவித்த அமைச்சர், குறைந்த விலையில் சகல பொருட்களையும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நெல் அறுவடைக்காலம் என்பதால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியின் விலையில் வீழ்ச்சி ஏற்படும். பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்ட பின் இம்முறை ஒரு இலட்சத்து இருபதினாயிரம் ஏக்கரில் புதிதாக நெற்செய்கை செய்யப்பட்டுள்ளது. இதனால் போதுமானளவு அரிசி கையிருப்பில் வருவதுடன் குறைந்த விலையிலும் அரிசியை விற்பனை செய்ய முடியும்.

அண்மைக்காலங்களில் சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல் உட்பட எரிபொருட்கள் மற்றும் பஸ், ரயில் கட்டணங்கள் குறைவடைந்துள்ளதால் வாழ்க்கைச் செலவுப் புள்ளிவீதம் குறைந்து வருகிறது. எதிர்வரும் இரண்டொரு வாரங்களில் வீழ்ச்சியும் பணவீக்கத்திற்கமைய நூற்றுக்கு எட்டு அல்லது ஒன்பது வீதமாக வாழ்க்கைச் செலவு குறைவடையும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

ஆசியாவில் வேலைவாய்ப்பின்மை 9 கோடி 70 இலட்சமாக அதிகரிக்கும்

economics.jpgஉலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழந்த ஆசிரியர்களின் தொகை இவ்வருடத்தில் 9 கோடியே 70 இலட்சமாக அதிகரிக்கும் சாத்தியமுள்ளதென சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் நேற்று புதன்கிழமை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த ஆண்டில் வேலை இழந்த ஆசிரியர்களின் தொகையை விட இவ்வருடம் வேலையிழப்போர் தொகை 7.2 மில்லியன் அதிகமாகும். இதன்படி பிராந்திய ரீதியில் கடந்த ஆண்டில் 4.8 சதவீதமாகவிருந்த வேலையற்றோர் தொகை இவ்வாண்டில் 5.1 சதவீதமாக உயர்வடையவுள்ளது.

அண்மைய வருடங்களில் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கொன்றை ஆசியா வகிக்கின்ற போதிலும் மொத்த சனத்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் நாளொன்றிற்கு ஒரு அமெரிக்க டொலருக்கும் குறைவான வருமானத்தையே பெறுகின்றனர்.

ஆசியாவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இளவயதினரின் அதாவது வேலைதேடும் பருவத்தினரின் சனத்தொகைக்கேற்ப இங்கு 51 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை இவ்வருடத்திலும் அடுத்த வருடத்திலும் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

இதில் இப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை இந்தியாவில் 20.3 மில்லியன் வேலைவாய்ப்புகளும் சீனாவில் 10.9 மில்லியன் வேலைவாய்ப்புகளும் இந்தோனேசியாவில் 3.6 மில்லியன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டியுள்ளது.

எனினும், வேகமாக அதிகரித்து வரும் வேலை தேடுவோரின் சனத்தொகைக்குப் போதுமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆசியாவின் வெளிநாட்டு வருமானத்தில் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியும் ஆசியர்களுக்கான வேலைவாய்ப்புகளை குறைக்குமென உலக வங்கியின் அறிக்கையை மேற்கோள் காட்டி சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கு அமெரிக்காவிலிருந்து 44 வீத வெளிநாட்டு வருமானமும் தெற்காசியாவுக்கு 28 வீத வெளிநாட்டு வருமானமும் கிடைப்பதாகவும் இவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது