அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
விடுத லைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருக்கும் இடங்கள் பற்றிய புலனாய்வுத் தகவலை இந்தியா மற்றும் இன்ரர்போலிடமிருந்து பெற்றுக்கொள்ள மலேசியா விரும்புகின்றது. இது தொடர்பாக மலேசிய பொலிஸ் மா அதிபர் மூஸா ஹுசெய்னிடமிருந்து உத்தியோகபூர்வமான கருத்துக்கள் எதுவும் தெரிவிக்கப் படவில்லையாயினும் இடம்பெறும் விசாரணைகள் மலேசியா இந்தப் பாதையில் செல்வதை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று “இந்து” பத்திரிகை திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.
மலேசிய அரசாங்கத்தின் இவ் விசாரணைகள், பிரபாகரன் ஏற்கெனவே வேறு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டார் என ஊடகங்கள் வெளியிட்ட ஊகங்களை அடிப்படையாகக் கொண்டே இடம்பெற்று வருகின்றன. இவ் ஊகங்கள் மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் அதிகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும், புலிகள் அமைப்புடன் தொடர்புடையதென கருதி, ஒரு வருடத்தின் முன்னர் தடை செய்யப்பட்ட “இந்துராவ்’ என்ற மலேசிய, அமைப்பிற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
வன்னியில் காயமடைந்த 300க்கும் மேற்பட்டவர்களை வவுனியாவுக்கு கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை – ஐ.சி.ஆர்.சி.யுடன் சென்ற வாகனங்கள் மீண்டும் திரும்பின
முல்லைத்தீவில் உடையார்கட்டு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நாள் முழுவதும் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதலில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ள 300க்கும் மேற்பட்டவர்களை மேலதிக சிகிச்சைக்காக வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவர நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட முயற்சி கைகூடவில்லை. படுகாயமடைந்தவர்களை வவுனியாவுக்கு கொண்டுவர புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நோக்கி நேற்றுக் காலை17 அம்புலன்ஸ்களுடனும் ஐந்து பஸ்களுடனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) சென்ற போதும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் மோதல்கள் நடைபெற்று வருவதால் இவர்களால் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியவில்லை.
திங்கட்கிழமை காலை முதல் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் உடையார்கட்டு முதல் தேவிபுரம் வரை அரசால் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கில் ஆட்லறி ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதனால் 300க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளதாக “புதினம்’ மற்றும் “தமிழ் நெற்’ இணையத்தளங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் படுகாயமடைந்த நூற்றுக்கணக்கானோர் ஆபத்தான நிலையிலிருப்பதால் அவர்களுக்கு மேலதிக சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அவர்களை வவுனியாவுக்கும் வேறு ஆஸ்பத்திரிகளுக்கும் கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஐ.சி.ஆர்.சி.யிடம் அவசர கோரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து வவுனியா ஆஸ்பத்திரியில் நான்கு வார்ட்கள் ஒதுக்கப்பட்டதுடன் இரு சத்திரசிகிச்சை பிரிவுகளும் முழு அளவில் தயார்படுத்தப்பட்டதுடன் புதுக்குடியிருப்புக்குச் சென்று, காயமடைந்த 300பேரை வவுனியாவுக்கு கொண்டுவருவதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. மன்னார் ஆஸ்பத்திரியிலிருந்து அவசரமாக ஐந்து அம்புலன்ஸ்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்கு வரவழைக்கப்பட்டதுடன் அங்கிருந்து 17 அம்புலன்ஸ்களும் 5 பஸ்களும் ஐ.சி.ஆர்.சி.யின் வழித்துணையுடன் நேற்றுக் கலை புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரி நோக்கிச் சென்றன.
இவை மாங்குளம் முல்லைத்தீவு வீதியால் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதும் புதுக்குடியிருப்புக்கு தெற்கே கடும் சமர் நடைபெறுவதால் அவர்களால் தொடர்ந்து பயணம் செல்லமுடியவில்லை. அங்கு நீண்டநேரம் காத்திருந்தும் அது சாத்தியப்படவில்லை. இதையடுத்து அப்புலன்ஸ்களும் பஸ்களும் நேற்று பிற்பகல் வவுனியாவுக்குத் திருப்பின
வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப் பாட்டுக்குள் வந்துள்ள பொதுமக்களின் பிள்ளைகளுக்கான இரண்டு தற்காலிக பாடசாலைகள் திங்கட்கிழமை முதல் வவுனியா மனிக்பாம் முகாமில் இயங்கவுள்ளன. மனிக்பாம் முகாமில் தங்கியுள்ள சுமார் 700 மாணவர்களுக்கு கல்விகற்கக் கூடிய விதத்தில் இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்குத் தேவையான சீருடைத் துணிகள், பாடநூல்கள், பாடசாலை உபகரணங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதுடன் பாடசாலைக்குத் தேவையான தளபாடங்களும் அன்றைய தினமே தற்காலிக கொட்டில்களுக்கு வழங்கப்படும் என வவுனியா கல்வி வலய பணிப்பாளர் திருமதி வீ. ரஞ்ஜனி எ. ஒஸ்வல்ட் தெரிவித்தார்.
மனிக்பாம் முகாமில் தற்காலிக பாடசாலைகள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக தற்காலிக கொட்டில்களில் மேற்படி பாடசாலைகள் இயங்கவுள்ளன.
கல்வி அமைச்சின் அனுமதி மற்றும் நிதி கிடைத்தவுடன் தற்காலிக பாடசாலைகள் விரைவில் அமைக்கப் பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார். திங்கட்கிழமை பாடசாலைகள் ஆரம்பமாகின்றபோதும் முகாமிலுள்ள மாணவர்கள் சீருடையின்றி வர்ண ஆடை யுடனேயே பாடசாலைக்குச் சமுகமளிக்கலாமென்றும் அவர் தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படும் சீருடைத் துணிகளை முகாமுக்குள்ளேயே தைக்கக்கூடியவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு தைத்துக் கொடுக்கவும் முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. முகாமுக்குள் 15 ஆசிரியர்கள் இருக்கின்றபோதும் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுக்குள் வந்து வேறு பகுதிகளில் தங்கியுள்ள சுமார் 255 ஆசிரியர்களுள் சிலரையும் மனிக்பாம் முகாம் பாடசாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மேலும் வன்னியிலிருந்து சுமார் 85,000 மாணவர்களும், 2500 ஆசிரியர்களும் வரவேண்டியுள்ளதாக வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தரவுகள் தெரிவிக்கின்றன.
சுதந்திர தினத்திற்கு முன் முல்லைத்தீவும் முழுமையாக மீட்கப்படும். வடக்கு உட்பட சகல நிலப் பிரதேசங்களும் உள்ளடக்கப்பட்ட இலங்கையிலேயே இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். படையினர் முல்லைத்தீவு நகரினைக் கைப்பற்றியுள்ளனர். இன்னும் சிறு பகுதியே மீட்கப்படவேண்டியுள்ளது. சுதந்திர தினத்திற்கு முன் இது மீட்கப்பட்டு விடுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறுவது உறுதியெனவும் தெரிவித்தார். மேற்படி ஐந்து மாவட்டங்களிலும் 40 பிரதேச சபைகள் உள்ளன. இச்சகல பகுதிகளிலும் அரசாங்கமே வெற்றிபெறுமெனவும் அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான செய்தியாளர் மாநாடொன்று நேற்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இரு மாகாண சபை பிரதேசங்களிலும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்களென மூவினத்தவர்களும் செறிந்து வாழ்கின்றனர். இதற்கமைய அபேட்சகர் பட்டியலும் இன விகிதாசாரத்தை அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாகாண சபைகளிலும் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. அவர் அதனை ஆதாரத்துடன் கூறவில்லை. எவரும் இதனை ஏற்கமாட்டார்கள்.
மத்திய மாகாண அபிவிருத்தி சம்பந்தமாக எஸ்.பி. திசாநாயக்க பேசி வருகின்றார். மத்திய மாகாணத்தில் அரசாங்கம் 3,779 தமிழ் ஆசிரியர்களையும், 600 முஸ்லிம் ஆசிரியர்களையும் நியமித்துள்ளது. அவர் சமுர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் எத்தனை பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கினார் எனக் கூறட்டும் பார்க்கலாம்.
மத்திய மாகாணத்தில் அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளை மும்முரமாக முன்னெடுக்கிறது. நாட்டின் சகல பகுதியும் அரசாங்கத்தின் கீழ் இருக்கும். அனைத்துப் பிரதேசங்களும் அபிவிருத்திக்குள்ளாக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசின் அழைப்பை யேற்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தார். இவர், நேற்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொது மக்களை புலிகளின் பயங்கரவாதப் பிடியிலிருந்து விடுவிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து வெற்றியளித்துக் கொண்டு இருக்கும் இவ் வேளையில் அமைச்சர் முகர்ஜியின் வருகை இடம் பெறுகின்றது.
இவ்வருகையானது பாரம்பரியமாக இந்தியா மற்றும் இலங்கையின் அதி உயர்மட்ட அரசியல் தலைவர்களிடையே நடைபெறும் பரஸ்பர – நன்மை பயக்கும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான கலந்துரையாடலாக அமைந்திருந்ததெனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.
வட பகுதியில் பல இடங்களை புலிகளிடமிருந்து மீட்டு அவர்களை தோற்கடித்துள்ளதாக கூறும் அரசாங்கம், அதனை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியின் சகல இடங்களிலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலிதரங்க பண்டார குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்;புலிகளைத் தோற்கடித்து வடபகுதியின் பெருமளவான பிரதேசங்களை மீட்டுள்ளதாக அரசு கூறி தம்பட்டம் அடித்துக்கொண்டு அந்த வெற்றிகளை வைத்துக்கொண்டு நாட்டின் தெற்குப் பகுதியிலும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் உச்சக்கட்டமாகவே புத்தளம் மாவட்டத்தில் பத்துதேர்தல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனது வாகனசாரதியும் கூட தாக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆயுதங்களை பறித்த காடையர் குழுவொன்று அதனை பயன்படுத்திய சம்பவங்களும் உள்ளன.
எனினும், சம்பந்தப்பட்டவர்களை பொலிஸார் கைது செய்த போது உயர்மட்ட அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டின் தென்பகுதியில் நாலாபுறங்களிலும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்ட அரசிடம் நீதியை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். இது இவ்வாறிருக்க, அரசாங்கம் தனது தேர்தல் வெற்றிக்காக அரச சொத்துகள் உட்பட அனைத்து வளங்களையும் பயன்படுத்துகின்றது. தேர்தல் வெற்றி என்றால் ஏன் இவ்வாறு செயற்பட வேண்டும். உண்மையில் மக்கள் எம்முடன் இருப்பதே காரணமாகும்.
இதேவேளை, தேர்தல் வன்முறை தொடர்பில் எனக்கோ அல்லது எனது கட்சிக்கோ எதிராக எதுவித முறைப்பாடும் பொலிஸில் செய்யப்படாத நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அரசுக்கு எதிராக நான் வன்முறைகளில் ஈடுபடுவதாகக் கூறியுள்ளார். இவரை நான் பொலிஸ் சேவையில் இருக்கும் போதே நன்கறிவேன். இவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் அணிதிரண்டிருப்பதால் மாகாண சபை தேர்தலில் எமக்கு வெற்றி என்றார
தமிழ் இனத்தை அழிக்க முற்படும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை :
“விதியே விதியே தமிழ்ச்சாதியை என்செய நினைத்தாய்? என்ற கவிஞன் பாரதியின் வேதனைக்குரல், நம் இதயச்சுவர்களில் மோதும் வகையில், அடுக்கடுக்கான துன்பச் செய்திகள் தாக்குகின்றன.
தன்னுடைய குடிமக்கள் மீது விமானங்ககளில் வந்து குண்டு வீசித் தாக்கும் மாபாதகத்தை, அடாஃல்ப் ஹிட்லருக்குப் பின்னர் உலகில் எந்த ஒரு நாடும் செய்யத் துணியாத கொடூரத்தை, இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது ஏவி கொன்று குவிக்கிறது. இதைச் சொன்னதற்காகத்தான், இலங்கையின் ‘சண்டே லீடர்’ ஆங்கிலச் செய்தித்தாளின் ஆசிரியரும், சிங்களவருமான லசந்த விக்கிரமதுங்க, ராஜபக்ச ஆட்களால் சில நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
கடந்த ஒரு வார காலமாக முல்லைத்தீவு பகுதியில் சிங்கள வான்படையும், ராணுவமும் நடத்தும் தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள்.
இத்தனை லட்சம் மக்கள் அவதிப்படும் முல்லைத்தீவில், இந்திய அரசு கொடுத்துள்ள குறைந்த தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைத்தான் சிங்கள ராணுவம் பயன்படுத்தி, இடைவிடாது எறிகணைகளை வீசுகிறது.
நேற்று, வல்லிபுனம் கோவிலுக்கும், மூங்கிலாறு பகுதிக்கும் இடையில், உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிகளிலும், சிங்கள ராணுவம் நடத்திய கோரத் தாக்குதலில், தாய்மார்கள், குழந்தைகள் உட்பட அப்பாவித் தமிழ் மக்கள் 500 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இதில் கொடுமை என்னவென்றால், ‘இங்கு தாக்குதல் நடக்காது; பாதுகாப்பான பகுதி’ என்று ராணுவம் அறிவித்து விட்டு, அங்கு மக்கள் வந்தபின்னர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற 2,000-க்கும் அதிகமான மக்கள், முதலுதவி கூடப் பெற முடியாமல், மருந்துகள் இன்றி, சிறுகச்சிறுகச் செத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஐ.நா. மன்றத்தின் இலங்கைக்கான அலுவலரும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து உள்ளார்.
எனவே, தமிழ் இனத்தை அழிக்க முற்படும் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு உதவுகின்ற துரோகத்தை மூடி மறைக்க பிரணாப் முகர்ஜி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
கடந்த மூன்று மாத காலமாக போர் நிறுத்தம் என்று ஒப்புக்குக்கூட மத்திய அரசு சொல்லவில்லை. அதைவிட, ‘அது எங்கள் வேலை அல்ல என்று ஆணவத்தோடு சொன்ன பிரணாப் முகர்ஜி, இன்று திடீரென்று கொழும்பு செல்ல வேண்டிய மர்மம் என்ன?
உலகெங்கும் உள்ள தமிழர்கள் நடுங்கும் நெஞ்சோடு, கண்ணீர் விட்டுக் கதறும், துயரம் சூழ்ந்து உள்ள இந்த நேரத்தில், திடீரென்று விடுதலைப் புலிகளுக்கு பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவிப்பதன் மர்மம் என்ன?
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை 900 தடவைகளுக்கு மேல் துப்பாக்கியால் சுட்டு, 500 -க்கும் அதிகமான தமிழக மீனவர்களைப் படுகொலை செய்ததற்கு இந்திய அரசோ, பிரணாப் முகர்ஜியோ ஒரு வார்த்தையாவது கண்டனம் தெரிவித்தது உண்டா?
தமிழக மக்களையும், உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காக, அப்பாவித் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று, புதிதாக ஏதோ ஞானோதயம் ஏற்பட்டதைப் போல் பிரணாப் முகர்ஜி, கொழும்பு செல்லும் முன் கூறுகிறார்.
ஐந்தரை லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கும் முல்லைத்தீவில், இடைவிடாத தாக்குதலும், வான் குண்டுவீச்சையும் சிங்கள அரசு நடத்துகையில், அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் பேரழிவு ஏற்படும் என்பது, பிரணாப் முகர்ஜிக்குத் தெரியாதா?
விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, தமிழ் இனத்தையே கரு அறுக்கத்தானே ராஜபக்சே இந்தத் தாக்குதலை நடத்துகிறான்? அதனால்தான், அகங்காரத்தோடு, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடைய வேண்டும் என்று கொக்கரிக்கிறான்.
இப்பிரச்சனையின் பின்னணியை, உண்மை நிலையைத் தமிழக மக்கள், உணர வேண்டும் என்பதற்காக,சில சம்பவங்களை இதோ பட்டியல் இடுகிறேன்:
இலங்கையில் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, ராணுவத் தாக்குதல் நடத்தும் சிங்கள அரசுக்கு, இந்திய அரசு நான்கு ஆண்டுக்காலமாக, ஒரு கொடிய உள்நோக்கத்தோடு, ராணுவ உதவிகளைச் செய்து வந்து உள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, பொறுப்பு ஏற்ற உடன், முதல் வேலையாக சிறிலங்காவுடன் ராணுவ ஒப்பந்தம் போட முனைந்ததும், அதைத் தடுப்பதற்குப் பல வழிகளிலும் நாம் போராடியதன் விளைவாக, அந்த ஒப்பந்தம் போடாவிட்டாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளை இந்தியா நிறைவேற்றும் என்று, அந்தச் சமயத்திலேயே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர்சிங் சொன்னதை, தொடக்கத்தில் மறைமுகமாகவும், பின்னர் வெளிப்படையாகவும் இந்திய அரசு செயல்படுத்தி வந்துள்ளது.
சிறிலங்கா விமானப்படைக்கு ராடார்களைக் கொடுத்து, சிங்கள விமானிகளுக்கு இந்தியாவில் பயிற்சி தந்து, இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவினரை இலங்கைக்கே அனுப்பிவைத்ததோடு, பலாலி விமான தளத்தை இந்திய அரசின் செலவிலேயே பழுது பார்த்தும் கொடுத்தது.
சிறிலங்கா கடற்படையுடன் இந்தியக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்துகொண்டதோடு, சிங்களக் கடற்படையினருடன் இணைந்தே கடற்புலிகளின் படகுகள் மீதான தாக்குதலிலும் உதவி, புலிகளுக்குப் பொருட்கள் கொண்டுவந்த கப்பல்கள் மீது தாக்குதலும் நடத்தி, புலிகளின் மரக்கலங்களைக் கடலில் மூழ்கடித்தது.
குறைந்த தொலைவு தாக்கும் ஏவுகணைகளையும், ராணுவத் தளவாடங்களையும் சிங்களத் தரைப்படைக்கும் வழங்கியது.
வட்டி இல்லாக் கடனாக ஆயிரம் கோடி ரூபாயும் கொடுத்து, சிங்கள அரசு பாகிஸ்தான், சீனா, இஸ்ரேலிடம் கப்பல் கப்பலாக ஆயுதங்களும், போர் விமானங்களும் வாங்குவதற்கும் வழிசெய்து, சிங்கள ராணுவத்தினருக்கும், விமானப்படையினருக்கும் பயிற்சியும் கொடுத்தது.
1987 தொடங்கி 89 வரை, இந்திய ராணுவத்தை அனுப்பி, ஈழத் தமிழர்களின் உரிமைப் படை அணியான விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமன்றி, அப்பாவித் தமிழர்கள் பலர் சாவுக்கும் காரணமான இராணுவத் தாக்குதல் நடத்திய துரோகத்தைவிடக் கொடூரமான முறையில், வஞ்சகமாக இந்திய அரசு இலங்கைத் தீவில் தமிழர் இன அழிப்பு போரில் பங்காளியாகச் சேர்ந்து, இப்போது, படு நாசத்தையும் ஏற்படுத்தி விட்டது
அதனால்தான், கடந்த மூன்று ஆண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் மத்திய அரசு துரோகம் செய்கிறது என்பதையும், அங்கு விழுகின்ற ஒவ்வொரு தமிழனின் பிணத்துக்கும், அவன் சிந்துகிற ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், அதில் பங்கேற்று உள்ள கட்சிகளில் முக்கியமாக இன்று தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க.வும்தான் பொறுப்பாளி ஆவார்கள் என்று குற்றம் சாட்டி வந்து உள்ளேன்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழகச் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தை, இந்திய அரசு அவமதித்து உதாசீனப்படுத்தியது.
இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்களின் காவல் அரணான விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்க, சிங்கள அரசோடு சதித்திட்டம் வகுத்து இந்திய அரசு செயற்பட்டதும், தமிழ் இனத்துக்குச் செய்த துரோகம் மட்டும் அல்ல, இந்தியாவின் பூகோள அரசியல் நலன்களைக் காவு கொடுக்கின்ற வடிகட்டிய முட்டாள்தனமும் ஆகும்.
சிங்கள மண்ணில், பாகிஸ்தானும் சீனாவும் கால் பதித்து விட்டன.இந்தியாவின் தென்முனையில், இந்தியாவுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடிய ஈழத் தமிழர்களை, அடிமை இருளிலே தள்ளுவதால், இயல்பாக ஏற்படும் தற்காப்பு அரணையும் உடைத்துவிட்டு, எதிர்காலத்தில் தென்முனையிலும் பகை நாடுகளின் ஆபத்தை வலியத் தேடி இந்திய அரசு உருவாக்குகிறது.
துரோகத்தின் உச்சகட்டமாக, இந்திய அரசு, சிங்கள ராணுவத் தாக்குதலுக்கு உதவ, இந்திய ராணுவ டாங்கிகளையும், 3,000 ராணுவ வீரர்களையும் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை மிக வேகமாகச் செய்து முடித்து உள்ளதாகத் தகவல் வந்து உள்ளது.
இது உண்மையாக இருக்கக்கூடாது என்று உள்ளம் பதறினாலும்கூட, இரண்டு நாட்களுக்கு முன்பு, ஏராளமான ராணுவ டாங்கிகள், தமிழகத்தில் ஈரோடு வழியாகக் கேரளாவுக்கு அனுப்பப்பட்டபோது எடுத்த படம், நேற்றைய (26.1.2009) தினத்தந்தி ஏட்டின் ஈரோடு பதிப்பில் வெளியாகி உள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய அரசு செய்து வந்து உள்ள துரோகங்களையும் நினைக்கையில், இந்தக் கொடிய துரோகத்தை இந்தியா செய்து இருக்கவும் கூடும் என்ற எண்ணமே வலுக்கிறது.
மொத்தத்தில் ராஜபக்சே அரசு நடத்துகின்ற இன அழிப்பு போரை பின்னால் இருந்து இயக்கி வந்து உள்ள இந்தியாவின் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஒரு கொடூரமான குறிக்கோளுடன், தீங்கான நோக்கத்துடன், ஆலகால விஷம் நிறைந்த வஞ்சக சதித்திட்டத்தைத் தீட்டி, அதனைச் செயல்படுத்துகிறது என்ற உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்.
ஏழு கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, தமிழ் இனத்துக்குத் துரோகம் செய்யும் இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் துரோகத்தைத் தமிழ் மக்களும், எங்கள் வருங்காலத் தலைமுறையினரும் மன்னிக்கவே மாட்டார்கள் என எச்சரிக்கிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்
மத்திய மாகாண முஸ்லிம் சமூகத்திற்கு புதியதொரு அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்துவதற்காக மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக மத்திய மாகாணசபை கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் ஏ.எல்.எம்.உவைஸ் தெரிவித்துள்ளார். கண்டி மஹிய்யாலையில் அண்மையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
மத்திய மாகாண முஸ்லிம்களின் அரசியலில் தலைமைத்துவ வெற்றிடம் நிலவுகின்றது. இதனை நிரப்ப கடந்த காலங்களில் அரசியல்வாதிகளால் முடியவில்லை. இவ்வெற்றிடத்தை நிரப்புவதன் மூலம் சிறந்த சேவையை முன்னெடுப்பது எனது நோக்கமாகும். மத்திய மாகாணசபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
கிழக்கு மற்றும் வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளில் அரசு பெற்ற வெற்றி இம்மாகாணசபைத் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான அறிகுறியாவவே உள்ளது. நாட்டில் யுத்தம் நிறைவுபெற்று சமாதானம் மலரும் காலம் வெகுதூரத்தில் இல்லை. எனவே நாட்டில் சகல இனமக்களும் சமாதானமாக வாழும் காலம் உருவாகும் என்றார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தேடிக்கண்டு பிடிப்பதற்கு இலங்கைக்கு இந்திய அரசாங்கம் உதவியளித்து வருவதாக “ஏசியன்ஏஜ்’ பத்திரிகை நேற்று முன்தினம் திங்கட் கிழமை தெரிவித்துள்ளது. பாக்கு நீரிணையில் ரோந்து நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது மாத்திரமன்றி, விடுதலைப்புலிகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களையும் புதுடில்லி பகிர்ந்து வருவதாக உயர்மட்ட பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் இறுதித்தளமாக இருந்த முல்லைத்தீவின் நகர் பகுதிக்குள் இலங்கை இராணுவம் பிரவேசித்ததையடுத்து பாதுகாப்பு வட்டாரங்கள் இத் தகவலை தெரிவித்துள்ளன. “இந்திய கடற்படை எமக்கு சிறப்பான விதத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றது. அத்துடன், இந்திய கடற்பரப்பில் புலிகளின் கப்பல்கள் பிரவேசிப்பதை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான இந்தியாவின் உதவி மட்டுப்படுத்தப்படாத அளவுக்கு உள்ளது. மேலும் இந்திய இலங்கை முகவரமைப்புகள் புலனாய்வுத் தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன’ என்று அந்த வட்டாரம் தெரிவித்ததுடன், இலங்கைப் படையினருக்கு இந்தியா பயிற்சிவழங்குவதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிரபாகரன் முல்லைத்தீவு காடுகளுக்குள் இருப்பதாக நம்பப்படுவதாக விநாயகமூர்த்தி முரளிதரன் எம்.பி. (கருணா) தெரிவித்துள்ளார். ஆனால்,கடல்வழியால் பிரபாகரன் சென்றிருக்கும் சாத்தியத்தை இங்கே பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரிக்கவில்லை. பிரபாகரன் செக் தயாரிப்பான சிலின் 143 ரக விமானத்தில் சென்றிருக்கலாமெனவும் ஏனைய செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, முல்லைத்தீவு நகரை படையினர் கைப்பற்றிய செய்தி தொடர்பாக மட்டக்களப்பு பகுதியிலுள்ள கிராமவாசிகள் நம்பிக்கொள்ளாமல் இல்லை. ஆனால், புலிகளின் கடைசி தளத்தில் இராணுவம் பிரவேசித்திருப்பது அமைதியைகொண்டு வருமா என்பது தொடர்பாகவும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இராணுவ வெற்றியை தொடர்ந்து பேச்சுவார்த்தை இடம்பெறும் வரை பிரச்சினை தொடர்ந்திருக்கும் சாத்தியம் உள்ளதாக தன்னை அடையாளம் காட்ட விரும்பாத மட்டக்களப்பு நகரைச்சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் ஏசியன் ஏஜின் நிருபருக்கு கூறியுள்ளார். அடிப்படை பிரச்சினைக்கு தீர்வுகாணாவிடின் பிரபாகரன் இருந்தாலோ இல்லாவிடிலோ எமது பிரச்சினைகள் தொடர்ந்தும் இருக்கும் என்றும் அவர் மேலும் கறியுள்ளார்.