அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ். குடாநாட்டில் இன்று மாபெரும் மக்கள் பேரணி – தேச மக்கள் எழுச்சி பேரவை நடத்துகிறது

“வன்னி வாழ் எமது உறவுகளை மீட்க ஒன்றிணைந்து எழுவோம் வாருங்கள்” என்ற அழைப்புடன் யாழ். மாவட்ட தேச மக்கள் எழுச்சிப் பேரவை இன்று யாழ். குடாநாட்டில் மாபெரும் மக்கள் பேரணியை நடத்துகிறது.

யாழ். குடாநாட்டில் அனைத்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக இந்த எழுச்சிப் பேரணி நடைபெறுகிறது.

பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தில் கடையடைப்பு: இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

flag_logo_sl.jpgஇலங்கை சுதந்திரதினமான பிப்ரவரி 4ஆம் தேதி தமிழத்தில் கடையடைப்பு நடத்துவதென இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக சென்னையில் உள்ள தியாகராய அரங்கில், இலங்கைத் தமிழர்கள்  பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில்  இலங்கைத் தமிழர்கள்  பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட  பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் இறுதியில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இலங்கையின் சுதந்திரதினமான, இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வரும் அரசை கண்டித்தும், ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தியும்   தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் செய்வதென முடிவு எடுக்கப்பட்டது.

மேலும் வரும் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதவாச்சி வரையே எதிர்வரும் 6 ஆம் திகதி வரை யாழ் தேவி சேவைகள்

train.jpgகொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா வரை நடத்தப்படும்; யாழ். தேவி ரயில் சேவைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மதவாச்சி வரை மாத்திரமே நடைபெறும் என இலங்கை புகையிரத  திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியா- மதவாச்சி இடையிலான புகையிரதப் பாதை  புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

“தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சிமாற்றமொன்று அவசியமாகும்’

ballot-box.jpgதமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சி மாற்றமொன்று அவசியமாகும் என்று தெரிவித்துள்ள ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் உதவிச் செயலாளரும் மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் நுவரெலியா மாவட்ட ஐ.தே.க. வேட்பாளருமான, முரளி ரகுநாதன் எதிர்வரும் தேர்தலில் மலையக மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

மலையகத்தில் இரட்டை வேடம்பூண்டு வாக்கு வேட்டைகளில் ஈடுபட்டுள்ள வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் வாக்களித்து ஏமாற்றமடையக்கூடாது. கட்சிக்கு விசுவாசமாக இருந்து மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களுக்கு மலையக மக்கள் வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு ஐக்கிய தேசியக் கட்சியையும் மலையக மக்களையும் ஏமாற்றி வாக்குகளை பெற்று கட்சிமாறும் பச்சோந்திகளும் ஐ.தே.க.சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பிக்கையாக இருந்து சேவை செய்யும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா? அல்லது கட்சி தாவும் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதா? என்று மலையக மக்கள் சிந்திக்க வேண்டும். இன்று மலையக பெருந்தோட்டங்களில் க.பொ.த. உயர்தர கல்வி கற்றுவிட்டு வெளிமாவட்டங்களில் சென்று தொழில் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

அதேவேளை, இந்த அரசாங்கத்தின் பாதுகாப்பு கெடுபிடியால் தலைநகரில் தொழில்புரிந்த இளைஞர்களும் தொழிலைவிட்டுவிட்டு மலையக பெருந்தோட்டங்களுக்கே திரும்பிவருகின்றனர். எனவே, தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தேவைப்படுகின்றது.

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற வேண்டும். தலைநகரில் தமிழ் மக்களுக்காக தனி மனிதனாக இருந்து தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பும் பாராளுமன்ற உறுப்பினரும், எமது தலைவருமான மனோ கணேசனின் தன்னலமற்ற சேவையை மலையக மக்களுக்கும் செய்வதற்காகவே நுவரெலியா மாவட்டத்தில் நானும் அவரது சகோதரருமான பிரகாஷ் கணேசனும் போட்டியிடுகின்றோம். தேர்தலில் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும் நாங்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களாகவே இருப்போம். நாங்கள் கட்சி மாறமாட்டோம். எனவே, மலையக மக்கள் எங்களுக்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஹிலாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு

hilari.jpgஅமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.வாஷிங்டனைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் டேவிட் சி ரோடீர்மெல் சார்பில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. சட்ட ரீதியாக வெளியுறவு அமைச்சர் பதவியை வகிக்க ஹிலாரி தகுதி அற்றவர் என்றும் அவருக்குக் கீழ் ரோடீர்மெல்லை பணிபுரிய நிர்பந்திக்க முடியாது என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்பந்திப்பது 1991-ம் ஆண்டு வெளிப்பணி அதிகாரியாக ரோடீர்மெல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டியள்ளது. தகுதியிழப்பு மற்றும் சம்பளப் படிகள் வழங்குவதற்கான அமெரிக்க அரசியல் சட்டப்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக அமெரிக்க அரசு மற்றும் சம்பளம் மற்றும் படிகள் பெறும் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்ற விதி உள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிலாரியின் சம்பளம் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

ஹிலாரியின் பதவிக் காலம் 2007-ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு நிறைவடைகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விதிமுறையை மீறி கடந்த மாதம் வெளியுறவு அமைச்சருக்கான ஊதியத்தை ஜனவரி 1,2007-ம் ஆண்டு நிலைக்கு குறைத்துள்ளனர் என்றும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அரசியல் நிர்ணய சட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.வெளியுறவு அமைச்சரின் சம்பளம் மற்றும் படிகள் உள்ளிட்டவை கிளிண்டனின் பதவிக் காலத்தில் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்கோ அல்லது தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நோக்கிலோ இந்த வழக்கு தொடரவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் அதேநேரம் அரசியல் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ரோடீர்மெல் தெரிவித்தார்.

இராணுவ விமான நிலையம் முற்றுகை. -கொளத்தூர் மணி உட்பட 250 பேர் கைது

kolathur_mani.jpgதஞ்சை விமானப் படைத்தளத்தில் இருந்து இலங்கை ராணுவத்திற்கு போர்க்கருவிகள் அனுப்பப்படுவதாகக் கூறி தமிழர் ஒருங்கிணைப்பு குழு “விமானப் படைத்தள முற்றுகைப் போராட்டம்” நடத்த அழைப்பு விடுத்திருந்தது.  நேற்று (31) தேசிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தஞ்சை.மணியரசன், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழுணர்வாளர்கள் விமான தளத்தை நோக்கி ஊர்வலம் போனார்கள்.

விமான நிலையத்திற்கு முன்பாக அவர்களை மறித்த தஞ்சை மாவட்ட காவல்துறை போராட்ட குழுவை அதற்கு மேல் செல்ல விடாமல் தடுப்பு வைத்து தடுத்தனர்.தடையை மீறி விமான நிலையத்தை நோக்கி சென்ற குழவினரை போலிஸார் மீண்டும் தடுத்ததால் அங்கேயே உட்கார்ந்து விட்டார்கள். அக்கூட்டத்தில் மணியரசன் பேசும்போது, தமிழர்களை கொல்லும் இந்திய அரசே உடனே போரை நிறுத்து தமிழர்களை கொல்லாதே, ஈழதமிழர்களை கொல்ல ஆயுதம் அனுப்பிய இந்த விமான படைதளத்தை உடனே மூட வேண்டும். இல்லையேல் பொதுமக்களே இந்த விமான படை தளத்தை மூடுவார்கள் என எச்சரித்தார். மணியரசன் பேசும்போதே போலிஸார் அதை தடுக்க போராட்ட குழுவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

உடனே போராட்ட குழவினர் மணியரசன், கொளத்தூர் மணி உட்பட 250க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து வல்லத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  நேற்று மாலை அவர்களில் 244 பேரை ரிமாண்ட் செய்து திருச்சி சிறைக்கு காவல்துறை அனுப்பியுள்ளது.

தற்காலிக யுத்தநிறுத்தமொன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

louis-michel-in.jpgஇலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து வியாழக்கிழமை ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதநேயப் பணிகளின் ஆணையாளர் லூயிஸ் மைக்கல் தெரிவிக்கையில்;

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் யுத்தத்திற்குள் அகப்பட்டிருக்கும் பொதுமக்களை அப்பகுதியிலிருந்து பாதுகாப்பான பகுதிக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும். இந்த யுத்தம் மாபெரும் மனித அவலத்திற்கு வழிகோலும். வடக்கு, கிழக்கில் போரிற்குள் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் தற்போதைய நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.

பொதுமக்கள் இழப்புகளை தவிர்க்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இருதரப்பாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட யுத்தம் நடைபெறாத பகுதிக்குள் பொதுமக்களைப் பாதுகாத்து அவர்களுக்குரிய மனித நேய பணிகளை செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். இதற்காக தற்காலிக யுத்த நிறுத்தமொன்று உடனடியாகத் தேவை.

வன்னிப் பகுதியில் பல நூற்றுக்கணக்கானோர் இறந்தும் அநேகமானோர் காயமடைந்தும் போதிய மருத்துவ வசதி இன்மையால் அல்லலுறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்காக மற்றுமொருவர் தீக்குளித்ததாக பரபரப்பு : ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார் – போலீஸார்

திண்டுக்கல் மாவட்டம் – பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (46). இவர் நேற்று இரவு பலத்த தீக்காயத்துடன் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ரவியின் மகன் பிரபாகரனுடன் வக்கீல்கள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குதித்தனர். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்துத்தான் ரவி தீக்குளித்தார். ஆனால் இதை போலீஸார் மறைக்க முயலுகிறார்கள் என்று கூறி போராட்டம் நடத்தினர். பிரபாகரனும், தனது தந்தை ரவி ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்தார் என்று தெரிவித்தார்.

ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர். ரவி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவர் வீட்டில் ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கூறினர்.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர்

muthukumar-111.jpg
தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்ததால் நேற்று நடைபெற முடியாமல் போன முத்துக்குமாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற்றது. முத்துக்குமாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று மாலை தொடங்கின. மாலை 3 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இறுதி ஊர்வலம் கொளத்தூரில் தொடங்கி செம்பியம் பேப்பர் மில் சாலை வழியாக பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி பாலம், புரசை வாக்கம் நெடுஞ்சாலை வழியாக சூளை கண்ணப்பர் திடல் யானைகவுனி பாலம் வழியாக வால்டாக்ஸ் சாலை சென்று மூலக் கொத்தளத்தில் மொழிப் போர் தியாகிகள் நினைவிடத்தை சென்றடைகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் ஊர்வலப் பாதை நெடுகிலும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. பெருமளவில மக்கள் அணிவகுத்து வந்ததால் மிக மிக மெதுவாக இறுதி ஊர்வலம் நகர்ந்தது.மூலக்கொத்தளத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதி ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ். உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம்

வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றுவருகின்ற உண்ணாவிரதம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. வழமைபோல் நேற்றுக் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் ஆரம்பமானது.

உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகின்ற இடத்திற்கு நேற்றுக் காலை வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம், மதகுருமார்கள், அருட்சகோதரிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் நேற்று உண்ணாவிரதத்தில் பங்குபற்றினர்.

உண்ணாவிரதப் போராட்டம் இன்றிலிருந்து விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இன்று சனிக்கிழமை யாழ்.குருநகர் புதுமை மாதா ஆலயத்திலும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும் இவ் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வகுப்புப் புறக்கணிப்பும் ஊழியர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டமும் நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது. இதனால், மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களின் வரவின்றி பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடியிருந்தது.

பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் விரிவுரைகள் மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களின் பரீட்சைகள் என்பன நடைபெறாததோடு நிர்வாக வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது