அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அசின் நடிப்பதற்கு தடை?

asin.jpgஇலங்கை யில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்ததையும் மீறி, இந்திப் படத்துக்காக இலங்கை சென்ற நடிகை அசினுக்கு நடிகர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் உள்ளிட்ட தென் மாநில மொழிப் படங்களில் அசின் நடிப்பதற்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இறுதிப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவை தென்னிந்திய திரைத்துறையினர் புறக்கணித்தனர். இவர்களின் வேண்டுகோளை ஏற்று அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை.

மேலும் தமிழ் படப்பிடிப்பை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், நடிகர் நடிகைகள் யாரும் படப்பிடிப்புக்காக இலங்கை செல்லக்கூடாது என்றும் பிலிம்சேம்பர், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்பு எடுத்த முடிவை இப்போது நடிகை அசின் மீறி இருக்கிறார்.

சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கும் ரெடி என்ற இந்தி படத்தில், அவருக்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் நடக்கிறது. அதில் கலந்துகொள்வதற்காக, அசின் இலங்கை சென்று இருக்கிறார்.  முதலில் மொரீஷியஸில் நடக்கவிருந்த படப்பிடிப்பு இது. ஆனால் ராஜபக்சே அரசு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக சல்மான்கானுக்கு கூறியது. மேலும் தமிழ் மக்கள் அனுமதிக்கப்படாத வடக்கு இலங்கையின் சில பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

கேரளாவை சேர்ந்த அசின், உள்ளம் கேட்குதே என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அதற்கு முன்பு வரை மலையாளம், தெலுங்கில் இரண்டாம் நிலை நாயகியாக ஓரிரு படங்களில் நடித்திருந்தார். எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி, போக்கிரி, கஜினி, தசாவதாரம் ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகி ஆனார். பிற மொழி படவுலகிலும் அவரை கவனிக்க ஆரம்பித்தனர்.  கஜினி (இந்தி) படத்தின் மூலம் மும்பை பட உலகுக்கு அசின் அறிமுகமானார். அவர் நடித்து அடுத்து வெளி வந்த லண்டன் ட்ரீம்ஸ் என்ற இந்தி படம் படுதோல்வி அடைந்தது.

வேறு புதிய படங்கள் எதுவும் இல்லாமல் சும்மா இருந்த அசின் கவனம் மீண்டும் தமிழ் பட உலகம் பக்கம் திரும்பியது. விஜய் நடிக்கும் காவல்காரன் என்ற படத்தில், அவர் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் நடித்துக்கொண்டிருந்த போது, அவருக்கு மீண்டும் ரெடி படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இந்தி பட உலகில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்று கருதிய அவர், காவல்காரன் படத்தின் இயக்குநர் சித்திக்கிடம் கேட்டுக் கொண்டு, அந்த படத்தின் கால்ஷீட் தேதிகளை இந்தி படத்துக்கு கொடுத்து விட்டார். போகவேண்டாம் என்ற விஜய்யின் வேண்டுகோளையும் புறக்கணித்தார்.

தமிழ் நடிகர்-நடிகைகள் யாரும் இலங்கை சென்று நடிக்கக் கூடாது என்ற கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி, அசின் இலங்கை சென்று இந்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று நடிகர் சங்க செயலாளர் ராதாரவியிடம் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்து, ராதாரவி கூறியதாவது:

“கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை அசின் மீறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்து பேசிக் கொண்டுள்ளோம். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க தடை விதிப்பது குறித்து முடிவு செய்வோம்?” என்றார்.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி: நடிகை விஜயசாந்தி கைது

vijaya.jpgதெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நடிகை விஜயசாந்தி நேற்று கைது செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

வன்முறையை தூண்டும் வகையில் விஜயசாந்தி பேசியிருக்கிறார். இதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும் என்று விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் படியும் தேர்தல் ஆணையம் பொலிஸாருக்கு தெரிவித்திருந்தது. இதனையடுத்து விஜயசாந்தி கைது செய்யப்பட்டார். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,

ஆந்திராவில் ஐந்து மாவட்டங்களில் உள்ள 12 சட்ட சபை தொகுதிகளுக்கும் எதிர்வரும் 27ந் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடைமுறை விதிகளை தேர்தல் ஆணைக்குழு அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 30ந் திகதி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி. நடிகை விஜயசாந்தி முன்னிலையில் பல்வேறு கட்சித் தொண்டர்கள் தெலுங்கானா கட்சியில் சேரும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயசாந்தி தனி தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கடுமையாக விமர்சித்து, தெலுங்கானா மாநிலத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை வெட்டி கொல்வேன் என்று ஆவேசமாக பேசினார். இது பற்றி தேர்தல் ஆணைக் குழுவுக்குப் புகார்கள் வந்தன.  இதையடுத்து தேர்தல் ஆணைக்குழு விஜயசாந்திக்கு விளக்கம் கேட்டு அழைப்பாணை அனுப்பியது. அதில் தேர்தல் விதி அமுலில் இருக்கும் போது அதை மீறி வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருக்கிaர்கள். உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது? இதற்கு 4ம் திகதிக்குள் (இன்று) நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

மேலும் விஜயசாந்தி வீடு உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதி பொலிசுக்கும் விஜயசாந்தி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டது. அதன்படி பஞ்சாரா ஹில்ஸ் பொலிஸார் விஜயசாந்தி மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்தனர். அவரை உடனடியாக கைது செய்யவும் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் விஜயசாந்தியை கைது செய்ய பொலிஸார் முயன்றனர். ஆனால் தொண்டர்கள் நடத்திய அமளியால் கைது நடவடிக்கை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கைது செய்யப்பட்டார்.

பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை

neda.jpgஉலக கோப்பை தொடரில் “கால்பந்து இமயம்’ பிரேசில் சரிந்த சோகத்தில் இருந்து ரசிகர்கள் இன்னும் மீளவில்லை. பயிற்சியாளர் துங்காவின் தவறான தேர்வு முறை, தற்காப்பு பகுதியின் பலவீனம், தாக்குதல் பாணியிலான ஆட்டத்தை கையாளாதது போன்றவை பிரேசில் அணியின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

இத்தொடர் துவங்கும் முன் பிரேசில் அணி பயிற்சியாளர் துங்கா சில தவறான முடிவுகளை கையாண்டார். அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த ரெனால்டினோ, அட்ரியானோ, டியாகோ,  அலெக்சாண்ட்ரோ பாடோ, மார்சிலோ போன்ற வீரர்களை தேர்வு செய்ய மறுத்தார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆடும் ஆற்றல் படைத்த இவர்களை நீக்கியது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. குறைந்தபட்சம் ரொனால்டினோவுக்கு வாய்ப்பு அளிக்கும்படி பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால்,  ஒழுக்கம் தான் முக்கியம் என்று கூறி,  அவரை சேர்க்க மறுத்தார். விளைவு…?

முன்னணி வீரர்கள் இல்லாத பிரேசில் அணி, நெதர்லாந்தை சமாளிக்க முடியவில்லை.கடந்த 2002ல் கோப்பை வென்ற பிரேசில் அணி, 2006ல் காலிறுதியுடன் நடையை கட்டியது. இம்முறையும் காலிறுதியுடன் வெளியேறியுள்ளது. இனி 2014ல் பிரேசிலில் நடக்க உள்ள 20வது உலக கோப்பை தொடரில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரேசில் தோல்வியை தாங்க முடியாத ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹெய்தி நாட்டை சேர்ந்த 18 வயதான இவர், பிரேசில் வெளியேறிய விரக்தியில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்ட இவர், ஓடும் கார் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதம் நிறைவேற்றம்

parliament.gifபாராளு மன்றத்தில் பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் 138 வாக்குகள் ஆதரவாகவும் 75 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்ட நிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட் 2ம் நிலை வாசிப்பு மீதான விவாதத்தின் போது 11 சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சூரிச் மாநகரில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தினம் வருடாவருடம் ஜூலை மாதம் 13ம் திகதிமுதல் 16ம் திகதிவரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம்திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பினர் பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்தவகையில் சுவிஸ்லாந்தின் சூரிச் மாநிலத்தில் எதிர்வரும் 04.07.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00மணியளவில் புளொட்டின் 21வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. அன்றையதினம் மெளன அஞ்சலி மற்றும் மலராஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து வரவேற்புரை> அஞ்சலிக் கூட்டம் என்பன இடம்பெறவுள்ளன. இக்கூட்டத்தில் கழகத் தோழர்கள்> தோழமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் உரைகளும் இடம்பெறவுள்ளன. மற்றும் விநோதவுடைப் போட்டி> சிறுவர்களின் நாட்டியம்> நாடகம்> இசைநிகழ்ச்சிகள்> பாட்டுக்கேற்ற அபிநயம்> நகைச்சுவைக் கதம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளதுடன்> இதில் பங்கேற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுறவுள்ளன. இந்நிகழ்வுகளில் அனைத்துத் தமிழ் மக்களையும் பங்கேற்குமாறு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Gemeinschaftszentrum unter Affoltern, Bodenacker 25, 8046 Zürich

கே.பி.யை வடமாகாண முதலமைச்சராக்க முயற்சி :பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகா தெரிவிப்பு

sarath-fonseka.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் என அழைக்கப்பட்ட கே.பி. (குமரன் பத்மநாதனை)  வடமாகாண முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: கே.பியை கைது செய்த விதம் பற்றி குறிப்பிட்டால், அரச பாதுகாப்பு இரகசியங்களை வெளியிட்டதாக என் மீது குற்றஞ் சுமத்துவார்கள் என்பதனால் அதனை கூற நான் விரும்பவில்லை. இராணுவ வீரர்கள் சிறைக்கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கே.பி.வடக்கில் சுற்றுலா செய்கின்றார்.

அவரது கணக்கில் பில்லியன் டொலர்கள் இருக்கின்றன. வடக்கில் மாவட்ட செயலாளர்களை அழைத்து அவர் கூட்டங்களை நடத்துகிறார். கே.பியை. வடமாகாணத்தின் முதலமைச்சராக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றார்.

ஐரோப்பிய நாடுகளுடன் நட்புறவு தொடரும் – ஜி.எஸ்.பி விவகாரத்தை வைத்து பகையை ஏற்படுத்த எதிர்க்கட்சி முயற்சி

denes.jpgஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை நீடிக்கவில்லை என்பதற்காக ஐரோப்பிய நாடுகளை நாம் எதிராளிகளாகப் பார்க்க மாட்டோம் என்று ஆளும் கட்சி பிரதம கொறடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய நாடுகளுடனான எமது நட்புறவு தொடரும். ஐரோப்பிய நாடுகள் இலங்கையின் நட்பு நாடுகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜி. எஸ். பி. நிவாரண விவகாரத்தை வைத்து அரசாங்கத்திற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையில் நிரந்தரப் பகைமையை ஏற்படுத்துவதற்கு எதிர்க்கட்சி முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தை ஆளும் தரப்பில் தொடக்கி வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணத்தை நீடிப்ப தற்காக ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை களை முன்வைத்திருக்கின்றது. அதனை நாம் மறுக்கவில்லை.

இலங்கை இறைமையும், சுயாதிபத்தியமும் தனித்துவம் மிக்க ஒரு நாடு என்ற வகையில் நாம் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜி. எஸ். பி. பிளஸ் நிவாரணம் நீடிக்கப்படாவிட்டாலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வேறு உதவி ஒத்துழைப்புக்களை நாம் பெற்றுக் கொள்ளுவோம்.

நாம் ஜனநாயகத்தைப் பாதுகாத்து மேம்படுத்தியுள்ளோம். எமது பொருளாதாரம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இதற்கு வடக்கும் கிழக்கும் பெரிதும் பங்களிப்பு செய்யும் வெளிநாணய கையிருப்பு பாரியளவு அதிகரித்துள்ளது. இந்த வரவு – செலவு திட்டத்தில் குடிநீர் வழங்கலுக்காக 25 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார, கூட்டமைப்பு மேம்பாட்டுக்கு மஹிந்த சிந்தனை அடிப்படையில் முக்கிய இடமளிக்கப்படுகின்றது.

புலிப் பயங்கரவாதிகளால் அச்சம், பீதி கொண்டிருந்த மக்களை அந்த பீதியிலிருந்து விடுத்துள்ளோம். அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை முழு நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். புலிகளின் பிடியில் சிக்கி இருந்த மக்களை விடுவித்து அவர்களை ஜனநாயக வழிக்குக் கொண்டு வந்துள்ளோம்.

புலிகளின் பிடியில் சிக்கி இருந்த சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் மக்கள் கடந்த வருடம் அரசாங்கத்திடம் சரணடைந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தி சகல வசதிகளையும் செய்து கொடுத்தோம்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உலகில் எந்த நாடும் செய்யாத அளவு நாம் சேவை செய்துள்ளோம். இது வரலாறாகும். புலிகளுடன் தொடர்புடையவர்கள் சிறுதொகையினர் மாத்திரமே தற்போது விசாரிக்கப்படுகின்றனர். விசாரணைகள் முடிவுற்றதும் அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவர்.

தமிழ்க்கட்சிகள் ;மீண்டும் சந்திப்பு

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் இனப் பிரச்சினைக்கான தீர்வு போன்றவை குறித்து பொது இணக்கப்பாட்டுக்கு வரும் நோக்குடனான தமிழ்க் கட்சிகளின் சந்திப்பு நேற்று இரண்டாவது தடவையாகவும் கொழும்பில் நடைபெற்றது. ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

வடகிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் ஆகியோருடன் த. ம. வி. பு. சார்பில் கைலேஷ்வரராஜா, நிஷாந்தன் ஆகியோரும் முதல் முறையாக கலந்துகொண்டனர். தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் என பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற அனைத்து உறுப்பினர் களும் நேற்றைய சந்திப்பின் போது கருத்துக்களை முன்வைத்தனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகள், எதிர்கால திட்டங்கள், குறுகிய கால திட்டங்கள், மக்களின் உடனடித் தேவைகள், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அணுகுமுறை போன்ற விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய விடயங்கள் அடுத்தடுத்து வரும் கூட்டங் களில் ஆராயப்பட வேண்டிய விடயங்கள் குறித்து வரைபு ஒன்றை தயாரிக்கவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்ப ட்டது.

இதற்கென 8 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. எதிர்வரும் 7ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் மீண்டும் கூடும் போது மேற் படி குழு தயாரிக்கும் வரைபு சமர்ப்பிக்கப்படும். இந்த வரைபின் அடிப்படையில் அடுத்த கட்ட நகர்வுகளை தமிழ்க் கட்சிகளின் ஒன்றியம் மேற்கொள்ளும். அத்துடன் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும் மேற்படி தமிழ்க் கட்சிகளின் ஒன்றியத்தினுள் உள்வாங்குவது தொடர்பாகவும் அனைத்து கட்சிகளும் செயற்படுவது என நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.

நல்லிணக்க ஆணைக்குழு முறைப்பாடுகளை முன்வைக்க ஓகஸ்ட் 18 வரை கால அவகாசம்

நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க விரும்பும் பொதுமக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ந் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாகாண மட்டத்தில் விசாரணைகளை நடத்தவும் நல்லிணக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவால் 2010 ஜுன் மாதத்தில் கிரமமாக கூட்டங்கள் நடாத்தப்பட்டன.

ஆணைக்குழுவின் தற்போதைய வேலைகளில் நிறுவனம்சார்ந்த விடயங்கள் மீது முதற்கட்டமாக கவனம் செலுத்தப் பட்டது. எதிர்காலத்தில் இடம்பெறும் பகிரங்க சாட்சி விசாரணைகளுக்கு வசதியாக அமையும் பொருட்டே அவ்வேலைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆணைப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான எழுத்திலான முறைப்பாடுகளை ஆணைக்குழுவிடம் முன்வைக்குமாறு பொதுமக்களிடம் கோரும் மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட அறிவித்தலொன்று செய்தி தாள்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2010 ஓகஸ்ட் மாதம் 18 ஆந் திகதி வரையில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக பொதுமக்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவுக்கு தமது பணிகள் தொடர்பில் வசதியாக அமையக் கூடிய விதத்தில் தாமதமின்றி தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும் பொருட்டு ஆணைக்குழுவுக்கு எளிதாக வரக்கூடிய வகையில் அந்தந்த மாகாணங்களில் குறிப்பாக தொடர்புபட்ட நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தமது பகிரங்க கூட்டங்களை நடாத்துவதற்கு ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் காரணமாக நிகழ்வுகள் மீது தாக்கம் செலுத்தியுள்ள பிரதேசங்களிலிருந்து ஆணைக்குழுவினால் நேரடியாகவே விடயங்களைத் திரட்டிக்கொள்ளக்கூடியதாக இருக்கும். இச்செயற்பாட்டின் ஓர் அங்கமாக ஆணைக்குழு தற்போது வேலைத்திட்ட மொன்றை வகுப்பதில் ஈடுபட்டுள்ளது.

ஆணைக்குழு அதற்கு வசதி அளிப்பதற்காகவும் துணைபுரிவதற்காகவும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளிக்குமாறு ஆணைப்பத்திரத்தின் வரம்பிற்கு உட்பட்ட துறைகளில் முனைப்பாக ஈடுபட்டிருந்தவர்களும் பரந்தளவிலான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களான ஆட்களுக்கு அதன் சொந்த விருப்பத்தின் மீது அழைப்பு விடுக்கும்.

ஆணைக்குழு 2010 ஓகஸ்ட் மாதத்தில் பொதுமக்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றது.

தற்காலிக குடியிருப்புகளில் வாழும் தோட்ட தொழிலாளருக்கு நிரந்தர வீடுகள் பட்ஜட் விவாதம் முடிந்ததும் பணிகள் ஆரம்பம்

muttu.jpgமலையகப் பெருந்தோட்டங்களில் நிரந்தரக் குடியிருப்பின்றித் தற்காலிகக் குடியிருப்புகளில் வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

வரவு- செலவுத் திட்டம் நிறைவு செய்யப்பட்டதும் அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுமென்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்குப் புறம்பாக அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்குள் 125 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்தப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட வுள்ளதாகப் பிரதியமைச்சர் கூறினார்.

தற்காலிகக் குடியிருப்பில் உள்ளவர்களுக்குக் காணிகள்

பெற்றுக்கொடுக்கப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படும். வீடுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தோட்ட உட்கட்டமைப்பு பிரிவு, பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம், நிர்வாக ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

தோட்டங்களில் வீடுகளை நிர்மாணிப்பதில் முன்பு முறைகேடுகள் இடம்பெற்றதாகப் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நிரந்தரமாகக் குடியிருப்பு வசதிகள் இருப்பவர்கள் காணிகளைப் பெற்றுக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதியமைச்சர் சிவலிங்கம், இந்தக் குறைபாடுகளைத் தவிர்த்து சரியானவர்களைத் தெரிவு செய்வதற்கு ஏதுவாகக் குழுவை அமைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.