அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

பயங்கரவாதம் தொழிலாளர் வர்க்கத்துக்கும் அச்சுறுத்தல் – ஜனாதிபதி

Mahinda Rajapaksa பயங்கரவாதம் தற்போது தொழிலாளர் வர்க்கத்துக்கும் அச்சுறுத்தலாகியுள்ளது என்பதை சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவனத்திற் கொள்ளவேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொழிற்தளங்களில் மாத்திரமின்றி தொழிலாளர்களின் சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில் சகல விதமான பயங்கரவாதத்துக்கும் எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பு செயற்படல் அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 90வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,

பயங்கரவாதம் நாட்டில் ஒழிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் இரண்டு பகுதியிலும் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அற்றுப்போயிருந்த சுதந்திரம் மீளப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் அமைதியான சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் அதன் முன்னேற்றத்தின் எதிரியாகவே உள்ளது. எமது படையினர் பயங்கரவாதத்தை துடைத் தெறிந்து விட்டனர். இதன் மூலம் எமது நாட்டு மக்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

எனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்று வருட காலப் பகுதியில் நாம் பாரிய பயங்கரவாதத்துக்கெதிரான சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். அதற்கான பதிலடியையும் கொடுத்துள்ளோம். கலந்துரையாடல்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண நாம் முற்பட்ட போதும் பயங்கரவாதிகள் அதனை நிராகரித்துவிட்டனர்.

அதன் பின்னரே அரசாங்கம் அதன் உரிமையைக் கையிலெடுத்தது. பலத்தைப் பாவித்து பயங்கரவாதத்துக்குப் புரியும் பாஷையில் பதிலடி கொடுக்க நேர்ந்தது. விவசாயிகள் அவர்களது பிள்ளைகள் பாதிக்காதவாறு மிக அவதானத்துடனேயே நாம் எமது நடவடிக்கைகளை மேற் கொண்டோம்.

இதனால் எமக்குக் கடினமான தீர்மானங்களை எடுக்க, நேர்ந்ததுடன் இறுதியில் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் வெற்றி காண முடிந்துள்ளது. பயங்கரவாதம் இன்று முழு உலகிலும் வியாபித்துள்ளது. வளர்முக நாடுகள் மற்றுமின்றி வறுமை நிலை நாடுகளையும் அது பாதித்து வருகிறது.

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் கடந்த 90 வருடங்களுக்கு முன் சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவாக்கப்பட்ட போது பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கவில்லை. ஆனால் அது இன்று தொழிலாளர் வர்க்கம் உட்பட பல்வேறு துறைகளையும் பாதித்து வருகிறது.

தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு சகல துறையிலும் அச்சுறுத்தலாகிவரும் பல்வேறு வித பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் தமது கவனத்தை செலுத்துதல் அவசியம்.

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பங்களிப்பு அவசியமானது. யாரோ விடும் தவறினால் அதன் பாதி ப்பை அபிவிருத்தி காணும் நாடுகளும் முகம்கொடுக்க நேர்கிறது. இத்தருணத்தில் இத்தகைய அமைப்புக்கள் எமது சமூகத்தை பாதுகாப்பதுடன் சரியான திசையில் வழிநடத்தவும் முன்வர வேண்டும்.

2006ம் ஆண்டில் எமது அரசாங்கம் ‘மஹிந்த சிந்தனை’ பத்தாண்டுக் கொள்கைத் திட்டத்தை முன்வைத்தது. மக்களுக்கான கெளரவத்தையும் தொழில் வாய்ப்பையும் பெற்றுக் கொடுப்பதில் இது முன்னுரிமையளிக்கின்றது.  இத்திட்டங்களில் நாம் வெற்றியடைந்து வருவதையும் குறிப்பிட்டாக வேண்டுமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவுமாறு தொடர்ந்தும் பொதுமக்களிடம் கோரிக்கை

flee0009.jpg
வன்னியிலிருந்து படை நடவடிக்கை காரணமாக வவுனியா வந்தவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி உதவுமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இடம்பெயர்ந்து வந்த மக்களில் பலருக்கு மாற்று உடைகள் இல்லை. சமூக நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் உடைகளை அன்பளிப்பு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  பெண்கள் சிறுவர்களுக்குரிய ஆடைகள் அதிகளவு தேவைப்படுகின்றது. சவக்கார வகைகள், துவாய், படுக்கை விரிப்புக்கள், பற்பசை. தூரிகை, முகச்சவரம் செய்வதற்குரிய பொருட்கள், சுகாதார துவாய் போன்ற பொருட்கள் அதிகளவில் தேவைப்படுவதாக நலன்புரிநிலைய பொறுப்பதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றபோதிலும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் சொல்ல எவருமே கிடையாது. சிறுவர்களுக்கு போசாக்கு உணவுகளும் தேவைப்படுகின்றது. சில தற்காலிக நலன்புரிநிலையங்களில் அடிப்படைவசதிகள் போதுமானதாக இல்லை எனவும் குறைகூறப்படுகின்றது.

‘இடர்படும் மக்களின் துயர் துடைப்போம்’ – அமைச்சர் டக்ளஸ் அவசர கோரிக்கை

Douglas Devananda வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளைச் செய்யுமாறு சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டு கோள்விடுத்துள்ளார். இடர்படும் மக்களின் துயர் துடைப்போம் என்ற தொனிப் பொருளின் கீழ் நிவாரண உதவிகளை வழ ங்க முன்வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசாங்கமும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கான உதவிப் பணிகளை முன்னெடுத்து வருகின்றபோதிலும், எதிர்பாராத அளவில் பெரும் எண்ணிக்கையில் வந்திருக்கும் இந்த மக்களுடைய அவசர உதவிகளை உடனடியாக முன்வந்து செய்யுமாறு மனிதாபிமான உள்ளம் கொண்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவர்களுக்கான அவசர உதவிப் பொருள்களான பிஸ்கட் வகைகள், போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், பிற அனைத்து வகை உணவுப் பொருள்கள் மற்றும் உடு புடவைகள், பாய், தலையணை போன்றவற்றை, இல. 61 இசிபத்தான மாவத்தை, கொழும்பு 5 இல் அமைந்துள்ள, சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சகல அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகங்களும் நிவாரண சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை என்ற உறுதிமொழியை அரசு நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் – ஜோன் ஹோம்ஸ் தெரிவிப்பு

john_holmes.jpgவடக்கில் மோதல்கள் இடம்பெறும் பகுதியிலுள்ள பொதுமக்கள் உயிராபத்தை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் கனரக ஆயுதங்களைப் பாவிப்பதில்லையென்ற புதிய வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நடைமுறையில் செய்து காட்ட வேண்டுமென ஐ.நா. தெரிவித்துள்ளது.

வன்னியில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்கான நடவடிக்கையில் கனரக ஆயுதங்கள் பாவிக்கமாட்டோம் என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது தொடர்பிலேயே மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா. வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று திங்கட்கிழமை இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

முன்னரை போன்ற நிலைமை ஏற்பட்டு விடக் கூடாதென்றே நான் அஞ்சுகிறேன். கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லையென்ற யோசனையை நேர்மையாக மதித்து செயற்படுவார்களென நான் நம்புகிறேன் என்று ஜோன் ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.  அரசாங்கம் கூறியதை தற்போது மதிக்கிறதா என்பது இதில் மிகவும் முக்கியமானதென்றும் அவர் கூறியிருக்கிறார்.

இரு நாட்கள் விஜயமாக இலங்கை வந்திருந்த ஜோன் ஹோம்ஸ் வவுனியா முகாம்களுக்குச் சென்று திரும்பியதன் பின்னர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசியிருந்தார். இதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே ஹோம்ஸ் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டிருக்கிறார்.

இவற்றுக்கமைய களத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கூறியது நடைபெற்றால் மோதல் நிலைமைகள் வெகுவாக குறைவடையும் என நான் நம்புகிறேன் என்று ஹோமஸ் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் வன்னியிலிருந்து பெருந்தொகை மக்கள் அரச கட்டுப்பட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததையடுத்து அங்கு 20 ஆயிரத்திற்கும் குறைவான மக்களே எஞ்சியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் இன்னும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எஞ்சியிருக்கின்றனர் என்பதே ஐ.நா.வின் மதிப்பீடென்று ஹோம்ஸ் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கத்தினது புள்ளி விபரங்களிலும் பார்க்க எமது புள்ளிவிபரங்கள் சரியானவை? என்று கூறியிருக்கும் அவர், 70 ஆயிரத்துக்கும் குறைவான மக்களே அங்கு இருப்பதாக பெப்ரவரி மாத நடுப்பகுதியில் கொழும்பு தெரிவித்திருந்ததையும் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், இந்த மக்கள் உயிராபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறியிருகிறார்.

இதேநேரம், ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்ற போதிலும், ஐ.நா.புள்ளிவிபரங்களென ஜனவரி மாத இறுதியிலிருந்து 6,500 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த அவர் மறுத்து விட்டதாகவும் ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது. அத்துடன், அது ஐ.நா.வின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களென கூற போதிய தெளிவான தகவல்கள் இல்லையென்றும் ஹோம்ஸ் இதன்போது கூறியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளுடான பேச்சுக்கள் பயனுடையதாக அமையவில்லை. நான் தொடர்பு கொண்டிருந்த போது, பொது மக்களை விடுவிப்பது பற்றியோ அல்லது ஆயுதங்களை கீழே வைப்பது பற்றியோ அவர்கள் உரிய பதிலெதுவும் அளிக்கவில்லை. தப்பிச் செல்ல முயற்சிக்கும் மக்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும், ஏனையவர்களை பலவந்தமாக படைக்கு சேர்ப்பதாகவும் பல்வேறு சாட்சியங்கள் தெரிவிக்கின்ற போதிலும், மக்கள் அவர்களது தெரிவின் பேரிலேயே தங்களுடன் இருப்பதாக புலிகள் கூறுகின்றனர்.

இதேநேரம், மோதல் இடம்பெறும் பகுதிகளுக்கு ஐ.நா.மனிதாபிமான அணியொன்றை அனுமதிக்க வேண்டுமென கடந்த வாரம் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் விடுத்த வேண்டுகோள் தொடர்பாகவோ, அகதி முகாமிலுள்ள ஐ.நா.வின் உள்நாட்டு பணியாளர்களை விடுவிப்பது குறித்தோ எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்றும் ஜோன் ஹோம்ஸ் இதன்போது மேலும் தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

பிரான்ஸினால் நடமாடும் மருத்துவமனை அன்பளிப்பு!

france.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பிவந்து வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நடமாடும் மருத்துவமனையொன்றை பிரான்ஸ் அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

100 கட்டில்களைக் கொண்ட இந்த நடமாடும் மருத்துவமனை விமானம்மூலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன்  75 பேரைக் கொண்ட பிரான்ஸ் நாட்டின்  மருத்துவர்கள் குழுவொன்றும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்வீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வர அனுமதி மறுப்பு; அனுமதி மறுக்கவில்லை என்கிறது இலங்கை அரசு – அருட்சல்வன்

carl-bildt-swe-foreigh-mini.jpgஸ்வீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர் கார்ள் பில்ட் அவர்கள் தமது நாட்டுக்குள் வருவதற்கு இலங்கை அரசு அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து இலங்கைக்கான தமது நாட்டு தூதரை அவசர ஆலோசனைக்காக ஸ்வீடன் அரசு அழைத்துள்ளது.

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒன்று ஏற்பட வேண்டும் என வலியுறுத்துவதற்காக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் இன்று இலங்கை வருகின்றனர். அவர்களுடன் ஸ்வீடிஷ் வெளியுறவு அமைச்சரும் வரவிருந்த நிலையில் அவருக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் கார்ள் பில்ட் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள இலங்கை அரசின் உயரதிகாரி ஒருவர், ஒரே சமயத்தில் பல உயர்மட்ட விஜயங்களை தாங்கள் கையாள்வது கடினமான விடயம் என்று கூறியுள்ளார்.

பிறிதொரு சமயத்திலும் இலங்கை செல்லும் நோக்கம் இல்லை என சுவீடன் வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு
 
“பிறிதொரு சமயத்தில் தான் இலங்கைக்கு வரமுடியும் என இலங்கை அரசு கூறியிருந்தாலும் அப்படிச் செல்லும் நோக்கம் தனக்கு இல்லை” என சுவீடன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் கார்ள் பில்ட் கூறியிருக்கின்றார். தனக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கார்ள் பில்ட் “பிறிதொரு சமயத்தில் இலங்கைக்கு வர முடியும் என்று இலங்கை அரசு குறிப்பிட்டிருந்தாலும் , அப்படி செல்லும் நோக்கம் தமக்கு கிடையாது” என்று கூறுகின்றார்.

இந்த முடிவை ஒரு விசித்திரமான நடவடிக்கை, என்று விமர்சித்துள்ள அவர் பி.பி.சி. க்கு அளித்த செவ்வியில், ” பிறிதொரு தடவை இலங்கைக்கு வரமுடியும் என்று அவர்கள் சொல்வதற்கு நான் என்ன, அந்த நாட்டுக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்ட ஒருவனா? எவ்வாறாயினும் அவர்களின் அழைப்பை நான் ஏற்கப் போவதில்லை. கொழும்பிலுள்ள எமது தூதரையும் அவசர ஆலோசனைக்கான நான் திரும்பி அழைத்திருக்கிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

சுவீடிஷ் அமைச்சருக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அரசாங்கம் மறுப்பு

சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சர் கார்ல்பில்ட் இலங்கை வருவதற்கு இலங்கை அரசாங்கம் விசாவழங்க மறுத்துள்ளதாக வெளியான செய்தியை வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு எவ்வித அடிப்படையும் அற்றதென வெளிவிவகார அமைச்சு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட்குச்னர், பிரிட்டிஷ் வெளிவிவகாரஅமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோர் இன்று இலங்கை வருகின்றனர். இவர்களோடு சேர்ந்து சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சரும் இலங்கை வருவதற்கு விசா மறுக்கப்பட்டதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது. அடுத்த மாத முற்பகுதியிலேயே அவர் வருகை தருவதற்கு ஏற்பாடாகியுள்ளது.

இலங்கைத் தூதரகத்திற்கு அவர் முறையாக விண்ணப்பிக்கவில்லை. இலங்கைக்கு இவர் வருவதனை தடுக்கும் எந்த நோக்கமும் இலங்கை அரசுக்கு கிடையாது. உண்மையில் சுவீடிஷ் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை வருமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவே அழைப்பு விடுத்திருந்தார்.

பிரிட்டிஷ், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சரினதும் வருகைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலக மட்டத்திலும், அமைச்சர்கள் மட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. ஆயினும், சுவீடிஷ் அமைச்சரின் வருகை தொடர்பாக ஆராயப்படவில்லை.மேற்படி இரு நாடுகளின் அமைச்சர்களின் வருகையானது இருதரப்பு உறவுகளுடன் தொடர்பானது. எந்த வகையிலும், இவர்களின் வருகையானது, ஐ. நா என்ற வகையிலோ பிராந்திய அங்கத்தவர் என்ற வகையிலோ அமையவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் நிலை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை -ஸ்வீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர்

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரில் சிக்குண்டிருக்கும் பொதுமக்களின் நிலை குறித்து தாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும்,  அவர்களின் மனிதாபிமான நிலைமைள் குறித்து இலங்கை அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஸ்வீடன் நாட்டு வெளியுறவு அமைச்சர் கோரியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்ணார்ட் குஷ்னர் ஆகியோரின் விஜயத்துக்கு தமது ஆதரவை அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அதற்கேற்ப இலங்கை அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையிலுள்ள அனைத்து சமூகத்தினரும் தாம் இலங்கையர் என்கிற எண்ணம் ஏற்படும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அங்கு ஸ்திரத்தன்மை ஏற்படப் போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று வர்ணித்துள்ள கார்ள் பில்ட் அவர்கள், அவர்களை நசுக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்துவரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பையும், மனிதாபிமான நிலைமைகளையும் கவனத்தில் எடுக்க வேண்டிய தருணம் இது என்றும் கூறியுள்ளார். அரசியல் தீர்வு ஒன்றும் முன்வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு விசா அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவே ஐரோப்பிய ஒன்றியம் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கேரல் ஸ்வாரண்பர்க் கருத்து வெளியிடுகையில்,

“இலங்கை அரசின் இந்த முடிவானது மிகப்பெரிய தவறு ஐரோப்பிய வட்டாரத்தில் இது பின்விளைவுகளை ஏற்படுத்தும் . இலங்கை அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் “என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வந்தடைந்தனர்
 
பிரிட்டன், மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளனர். யுத்தநிறுத்த அறிவிப்பை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்தே இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாகவும் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் கோர்டன் பிறவுணுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை அடுத்தே இந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் விஜயம் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தகக்து.

முப்பது கோடி ரூபா, மருந்து மற்றும் வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு

australia.jpgஅவுஸ் திரேலிய அரசாங்கம்  முப்பது கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்திய உபகரணங்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்வதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு வலயத்திலிருந்து படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த உதவி வழங்கப்படுகிறது. 

பிரச்சாரம் ஓய்ந்தது

advani.jpgமக்களவை தேர்தலில் 3ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ள 107 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. பிஜேபி பிரதமர் வேட்பாளர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரின் அரசியல் எதிர்காலத்தை இந்த 3ம் கட்ட தேர்தல் நிர்ணயிக்க உள்ளது. 

இடம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு ஐ.நா.விடம் ஐ.தே.க. கோரிக்கை – ஹோம்ஸை சந்தித்தார் ரணில்

john_holmes.jpgவன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்துக்கு அதிகபட்சம் உதவுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை வந்திருந்த மனிதாபிமான விடயங்களுக்கான ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று திங்கட்கிழமை முற்பகல் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க. பிரதிநிதிகள் குழுவை சந்தித்துப் பேசிய போதே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கொழும்பு, சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நடைபெற்ற இச் சந்திப்பில் ஐ.தே.க. சார்பில் ரணில் விக்கிரமசிங்கவுடன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷமன் கிரியெல்ல இருவரும் கலந்துகொண்டனர்.

இடம்பெயர்ந்து வரும் மக்கள் தொடர்பான மனிதாபிமான நடவடிக்கைகளில் அரசாங்கத்துக்கு ஐ.நா. போதிய உதவிகளை வழங்க வேண்டுமென இச் சந்திப்பில் ஹோம்ஸிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக ரவி கருணாநாயக்க கூறினார். இதேநேரம், பெருந்தொகையான மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பிரதேசம் நோக்கி இடம்பெயர்ந்து வரும் நிலையில் அவர்கள் அனைவருக்குமான நிவாரண உதவிகளை வழங்க போதிய பலம் அரசிடம் இல்லாமையால், அதற்கான உதவிகளை அரசாங்கத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.

அதுமட்டுமல்லாது, இடம்பெயர்ந்து வந்த மக்கள் ஒரு வருடத்திற்குள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த முயற்சிப்பதாக இலங்கை அரசாங்கம் ஐ.நா.வுக்கு உறுதியளித்திருப்பதாக இதன்போது ஜோன் ஹோம்ஸ் கூறியதாகவும் தங்களது கட்சி அதை வரவேற்றதாகவும் கிரியெல்ல எம்.பி. மேலும் தெரிவித்தார்.

இடம்பெயார்ந்த மக்களுக்கு மேலும் 25 கோடி நிவாரண உதவி : தமிழக அரசு அறிவிப்பு

flee0009.jpgஇலங் கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ஏற்கனவே 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, பேஸ்ட் மற்றும் துணி வகைகள் கொண்ட ரூ.10 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் 13-11-08 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது.

பின்னர் அவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங் கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

மேலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் ரூ.6 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் சமையல் பாத்திரங்களும், நிவாரணப் பொருட்களாக 40 ஆயிரம் சிப்பங்களில் கடந்த 22-4-09 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இவை மிக விரைவில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக விநியோகிக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : இலங்கையில் தற்காலிக முகாம்களுக்கு தற்போது கூடுதலாக இடம் பெயர்ந்து வந்து சேர்ந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிப்பதற்காக மூன்றாம் கட்டமாக ஏறத்தாழ ரூ.7 கோடி மதிப்புடைய மேலும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய சிப்பங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

வழக்கமாக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் இம்முறை குடிநீரைச் சுத்திகரிக்கத் தேவையான வில்லைகளும், 10 ஆயிரம் கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களும் சேர்த்து அனுப்பப்படுகின்றன.

இந்த நிவாரணப் பொருள்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிர்வரும் மே மாதம் 5ஆந்திகதிக்குள் சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டு, அங்குள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

இந்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய பணத்தில் மீதப்பட்ட 25 கோடி ரூபாவை தமிழக அரசின் சார்பில் நிதி உதவியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்தொகை மத்திய அரசு அறிவித்துள்ள ஒதுக்கீடான ரூ. 100 கோடியுடன் சேர்த்து ரூ. 125 கோடியாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும்.” என அதில் கூறப்பட்டுள்ளது.