அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

குடாநாட்டு உற்பத்திப் பொருட்களுடன் 29 லொறிகள் கொழும்பு வருகை

a-9-loorys.jpgயாழ்ப்பா ணத்திலிருந்து உள்ளூர் விளைபொருட்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை 29 லொறிகள் ஏ9 வீதி வழியாக கொழும்புக்குப் புறப்பட்டதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் கே.கணேஸ் தெரிவித்தார்.
சோதனையிடப்பட்டு லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்ட பின்னர் எந்தவித தரிப்பிடமுமின்றி அவை நேரடியாக கொழும்பு சந்தைக்குக் கொண்டுவரப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் 30 லொறிகளில் குடாநாட்டின் விளைபொருட்கள் ஏற்றப்படுவதாகவும் இவை ஞாயிற்றுக்கிழமை புறப்படுமெனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

ஏ9 வீதி வழியாக இரண்டு நாளைக்கு ஒரு தடவை குடாநாட்டுக்கு கொழும்பிலிருந்து தனியார் லொறி சேவை தொடர்ச்சியாக நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து ஏ9 வீதி வழியாக கொழும்பிற்குப் பயணிகள் பஸ்சேவை நடத்துவது குறித்தும் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தவுடன் சேவையை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

டாக்டர் ஜயலத் இன்று யாழ். விஜயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன இன்று  22 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கும் 23 ஆம் திகதி வவுனியாவுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரமுள்ள பிரதிநிதியாக டாக்டர் ஜயலத் ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபை வவுனியா நகரசபைத் தேர்தல்களில் போட்டியிடவுள்ள ஐ.தே.க.வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை அவர் சமர்ப்பிக்கவுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணம், வவுனியாவில் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், அரச அதிகாரிகளையும் சந்தித்து அப்பிரதேசங்களின் நிலைமைகள் குறித்தும் அவர் கலந்துரையாடவுள்ளார்.

பட்டினியால் வாடுவோர் உலகில் 100 கோடி

world-maps.jpgசர்வதேச பொருளாதாரப் பின்னடைவால் பட்டினியால் வாடுவோரின் தொகை 100 கோடியை எட்டிவிட்டதாகவும் இது சமாதானத்திற்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் ஐ.நா. வின் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகிலுள்ள மக்களில் 6 பேருக்கு ஒருவர் என்ற விதத்தில் யுத்தம், வரட்சி, அரசியல் ஸ்திரமின்மை, உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு,வறுமை, பட்டினி என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பட்டினியால் வாடும் மக்கள் தொகை 10 கோடியால் அதிகரித்துள்ளதாக ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு எப்.ஏ.ஒ. தெரிவித்துள்ளது.

உலகின் எந்தவொரு பகுதியும் இதிலிருந்து தடுக்கப்படவில்லையெனவும் அனைத்துப் பிரதேசங்களும் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக உணவு ஸ்தாபனப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நெருக்கடி மனிதாபிமானம் சார்ந்தவொன்று மட்டுமன்றி அரசியல் விடயமாகவுமுள்ளது. பட்டினி மற்றும் உளவியல் தொடர்பான அழுத்தங்கள் தொடர்பாக ரோமிலுள்ள இந்நிறுவனம் வெளியிட்ட அளவீட்டில் கடந்த வருடத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருட்களின் விலையேற்றம் என்பனவும் உள்ளடக்கப்பட்டன.

இது தொடர்பாக ஐ.நா.வின் முகவர் நிலையமொன்றான உலக உணவுத் திட்டத்தின் அதிகாரியொருவர் தெரிவிக்கையில்;

பட்டினியான உலகம் மிகவும் ஆபத்தானது. மக்களுக்கு உணவு இல்லாது போகும் போது அவர்களுக்கு 3 வழிகளே உள்ளன. அவர்கள் கலகம் செய்யலாம், நாட்டை விட்டு வெளியேறலாம் அல்லது மடிந்து போகலாம். இம் மூன்றுமே ஏற்றுக்கொள்ளக் கூடிய தெரிவுகளல்ல என்றார்.

உணவு விவசாய அமைய அறிக்கையின் பிரகாரம் கடந்த 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகளுடன் ஒப்பிடும் போது உணவு விலை 24 வீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் தொடர்ந்து சந்தைகளில் கட்டுக்கடங்காது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. போசாக்கின்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இல்லாமை குழந்தைகளை பலி வாங்கலாம் என கிழக்கு ஆபிரிக்க சர்வதேச சுதந்திர செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அண்மையில் தெற்கு எதியோப்பியாவிற்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்த அவர், கென்ய எல்லைப்பகுதியில் மோசமான உணவுத் தட்டுப்பாடு காணப்படுவதாகத் தெரிவித்தார். அங்கு மலேரியா காய்ச்சலில் குழந்தையை இழந்த குடும்பமொன்றினைச் சந்தித்ததாகவும் போதிய போசாக்கின்மையாலேயே குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியாது போனதாயும் மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டில் 91 கோடி 50 இலட்சம் பில்லியனாக இருந்த பட்டினியால் வாடுவோர் தொகை 11 வீதத்தால் அதிகரித்து 100 கோடி 2 இலட்சத்தை அடைந்துள்ளதாக ஒவ்.ஏ.ஓ. தெரிவித்துள்ளது. இக்கணிப்பீடு அமெரிக்க விவசாய திணைக்களத்தின் ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்டது.

மேலும் உலக சனத்தொகை வளர்ச்சி வீதத்தை விட பட்டினியால் வாடுவோர் தொகை அதிகரித்துச் செல்வதாக எவ்.ஏ.ஓ. தெரிவிக்கின்றது. இது தொடர்பான தரவுகளை வழங்காவிடினும் இரு வருடங்கள் முன்பிருந்தே இப்போக்கு ஆரம்பித்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் அதிக சனத்தொகையைக் கொண்ட ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் 64 கோடி 20 இலட்சம் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் இத்தொகை கடந்த வருடத்தை விட 10.5 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆபிரிக்காவில் 26 கோடி 50 இலட்சம் மில்லியனாக இத்தொகை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 11.8 வீதத்தால் அதிகரித்துள்ளது.

ஈ.பி.டி.பி. தனித்தா, அரசுடன் இணைந்தா போட்டியிடும்- இரண்டொரு தினங்களில் முடிவு

21deva.jpgயாழ்ப் பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) போட்டியிடும் விதம் குறித்து இன்னும் இரண்டொரு தினங்களில் அறிவிக்கப்படுமென கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்தின் பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்து கட்சிக்குள் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியான ஈ.பி.டி.பி அரசாங்கத்தின் தோழமைக் கட்சியென்பது தெரிந்ததே.

இவ்வாறான நிலையில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இன்னும் இரண்டொரு தினங்களில் மேற்படி உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் விதம்பற்றி அறிவிப்பாரெனவும் கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் இறுதித் தினம் எதிர்வரும் 25 ஆம் திகதி வியாழக்கிழமையாகும். அன்றைய தினம் நண்பகல் 12 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இத்தேர்தல் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 23 உறுப்பினர்களும் வவுனியா நகரை சபைக்கு 11 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்

வணங்கா மண் கப்பலுக்கு 200 லிட்டர் குடிநீர் வழங்கிய சென்னை

 vanangaaman-captainali.jpgஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வந்த வணங்கா மண் கப்பலுக்கு சென்னை துறைமுகம் சார்பில் 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பினர்.

884 டன் எடை கொண்ட நிவாரணப் பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு வந்த இக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

இதையடுத்து எங்கு போவது என்று தெரியாமல் அந்த கப்பல் சென்னையில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. .இந்த நிலையில், கப்பலில் இருந்த இரண்டு ஊழியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் சிலரின் நிலையும் பாதிக்கப்பட்டது. குடிநீர் இல்லாததால் நிலைமை மேலும் மோசமாகியது.

கடந்த 12ம் தேதி முதல் நடுக்கடலில் இருந்த அந்த ஊழியர்கள் ஈழத் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு உயிர் பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு சென்னை துறைமுகம் சுமார் 200 லிட்டர் குடிநீர் வழங்கி உதவியுள்ளது.

இது குறித்து சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வணங்கா மண் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் அந்த கப்பல் சுமார் 1 வார காலத்துக்கு மேல் கடலில் நிற்கிறது.

அதில் 15 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்கு குடிநீர் இல்லை எனறும் கடந்த 16ம் தேதி அவசரத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு மறுநாளே 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் அந்த சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும். ஆனால் அதுதொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை. ஏதாவது உதவி கேட்டால் மனிதாபிமான அடிப்படையில் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

புதிய சிக்கல்…

பொதுவாக நிவாரண பொருட்களை அனுப்பும் போது அதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற பட்டியல் மற்றும் சில ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது வணங்கா மண் கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. மேலும், நிவாரணப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தூதரகம் மூலமாகவோ அனுப்புவது வழக்கம். ஆனால், இலங்கையில் தவிக்கும் மக்களுக்கு விரைவாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய தமிழர்கள் நடைமுறையில் உள்ள சில சம்பிரதாயங்களை கவனிக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது. சில ஆவணங்களை சேர்த்து இணைக்காமல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில் வணங்கா மண் கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு வர, ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த கப்பல் தொடர்பாக கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வருண்காந்தியின் சி.டி. பேச்சு உண்மையானது: தடயவியல் சோதனையில் முடிவு

21varun.jpgநாடாளு மன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது சிறுபான்மையினருக்கு எதிராக வருண்காந்தி பேசிய விடயங்களை உள்ளடக்கிய சி.டி. ஆதாரம் போலியானதல்ல என தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் பிலிபிட் மக்களவைத் தொகுதி பா.ஜ. வேட்பாளராக வருண்காந்தி போட்டியிட்டார். பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய போது அவர், சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டதாக குற்றசாற்று எழுந்தது.

இதனை வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்தார். இதன் பின்னர் அவரது பேச்சுகள் அடங்கிய சி.டி. வெளியானது. எனினும், அந்த சி.டி. போலியானது; ஜோடிக்கப்பட்டது என வருண் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சி.டி. ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வருண்காந்தி பேச்சுகள் அடங்கிய சி.டி. உண்மையானதுதான்; ஜோடிக்கப்பட்டது அல்ல என தெரிய வந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் இத்தகவலை பிலிபிட் மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கையாக சமர்பித்து உள்ளனர்.

சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து வெளியிட்டதைக் கண்டித்து பிலிபித் மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கைதான வருண் காந்தி, பிணையில் விடுதலை செய்யப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

நாங்கள் தோற்றதில் வருத்தமில்லை;புலிகள் தோற்றதுதான் கவலையாக இருக்கிறது: வைகோ பேச்சு

12vaiko000.jpg’மதி முகவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்புரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர்தொடர்ந்தும் உரையாற்றுகையில்
 
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க 50கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம். நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது’’என்று பேசினார்.

கச்சதீவில் இராணுவத்தளம் அமைக்கும் திட்டம் இல்லை – இந்தியாவுக்கு இலங்கை உறுதியளிப்பு

கச்சதீவில் கண்காணிப்புக் கோபுரத்தையோ அல்லது இராணுவ பிரசன்னத்தையோ இலங்கை அரசாங்கம் கொண்டிருக்க திட்டமிட்டிருப்பதாக வெளியான செய்திகளை அரசாங்கம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை விடுத்திருக்கிறது. கச்சதீவில் கண்காணிப்புக் கோபுரத்தை நிர்மாணிக்கவும் இராணுவத் தளம் அமைக்கவும் இலங்கை அரசாங்கம் திட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அத்துடன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்துவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

“இவை தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்ட பின் இலங்கைக் கடற்படை இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இவை இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்து வரும் நட்புறவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக மேற்கொள்ளப்படும் தரக்குறைவான குற்றச் சாட்டுகள், என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவில் கலங்கரை விளக்கம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராமநாதபுரத்தில் இந்தியக் கடற்படையின் கரையோரக் காவல்படையும் மறுத்துள்ளதாக “இந்து’ பத்திரிகை நேற்று தெரிவித்துள்ளது.

1974 இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவில் கலங்கரை விளக்கம் போன்றதொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்ட சபையில் வியாழக்கிழமை எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இது தொடர்பாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை உண்மையைக் கண்டறிவதற்கு கரையோரக் காவல் படைக் கப்பல் ஒன்று பாக்கு நீரிணைக்கு அனுப்பப்பட்டிருந்தது. சர்வதேச கடல் பரப்பிற்கு அருகே இந்திய கடல் பக்கத்தில் இந்தப் படகு நங்கூரமிட்டிருந்தது. அங்கிருந்தவாறு கச்சதீவின் ஏதாவது கோபுரம் கட்டப்படுகின்றதா என்பதை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்தனர். சர்வதேச கடற்பரப்பிலிருந்து 2 கடல்மைல் தூரத்தில் உள்ள கச்சதீவை அவர்கள் பார்வையிட்டனர். பைனாகுலர் மூலமும் அவர்கள் கச்சதீவை பார்வையிட்டனர். ஆயினும் அவர்களால் அங்கு கோபுரம் எதனையும் பார்க்க முடியவில்லை. அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர அங்கு வேறெந்தக் கட்டிடமும் இல்லையென கரையோர காவல்படையைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் “இந்து’வுக்குக் கூறியுள்ளார். கச்சதீவிலுள்ள அந்தோனியார் ஆலயம் பல வருடங்களுக்கு முன்னர் இந்தியர்களால் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

தொண்டமானாறு நீர்த்தடுப்பணையின் மீள் நிர்மாண பணிகள் ஆரம்பம்

jaffna-000.jpgகுடா நாட்டின் முக்கியமான நீர் அணைக் கட்டுகளில் ஒன்றான தொண்டமனாறில் ஆரம்பமாகவுள்ள பாரிய புனர் நிர்மாண நடவடிக்கைகளை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பார்வையிட்டனர்.

குடாநாட்டின் பிரதேசங்களான வலிகாமத்தையும் வடமராட்சியையும் இணைக்கும் பகுதியான தொண்டமானாறு, உப்பாறு பிரதேசத்தில் உள்ள நீர்த் தடுப்பணைத் திட்டம் பாரியளவில் புனர் நிர்மாணத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள அணைக்கட்டினூடாக கடல்நீர் உட்புகுவது தடுக்கப்படுவதுடன் அதன் தென்பகுதியில் மழை நீரைத் தேக்கி நிலத்தடி நீரை நன்னீராக்கும் பாரிய திட்டம் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டிற்கு முன்னதாக திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும், நாட்டில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் காரணமாக இத்திட்டம் சீர்குலைந்ததுடன் முழுமையடையவில்லை.

எனினும், மஹிந்த சிந்தனையின் கீழ் வடக்கின் வசந்தம் செயற் திட்டத்திற்கமைய தொண்டமானாறு தடுப்பணைத் திட்டமானது பாரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் குடாநாட்டில் நிலத்தடி நன்னீரை பாதுகாக்கும் பாரிய திட்டம் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மேற்படி திட்டத்தையும், உயரதிகாரிகளினால் சமர்ப்பிக்கப்பட்ட திட்ட வரைபுகளையும் பார்வையிட்டனர். இவ்விஜயத்தின் தொடர்ச்சியாக பிரசித்திபெற்ற தொண்டமானாறு செல்வச் சந்நிதி தேவஸ்தான பகுதிக்கும் சென்ற பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கு திரண்டிருந்த மக்களையும் சந்தித்து கலந்துரையா டினார்கள்.

ஈராக்கில் ‘டிரக்’ குண்டு வெடி – 72 பேர் பலி

21-iraq.jpgஈராக்கில் இன்று டிரக் குண்டு வெடித்ததில் சுமார் 72 பேர் வரை பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. சுமார் 200 பேருக்கு மேல் பலத்த காயமடைந்துள்ளனர். ஈராக்கை அமெரிக்கா கைப்பற்றிய நாளில் இருந்தே அங்கு அடிக்கடி தற்கொலை படை தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா இந்த மாதம் 30ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக படைகளை ஈராக்கில் இருந்து வாபஸ் வாங்க திட்டமிட்டுள்ளது. 2012ம் ஆண்டுக்குள் அமெரிக்க ராணுவம்  முழுமையாக திரும்ப பெறப்படும் என தெரிகிறது.

இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஈராக்கில் மேலும் பல குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு இருக்கிறது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்நிலையில் ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்கூக்கிற்கு தெற்கே சுமார் 16 கிமீ., தூரத்தில் இருக்கும் தாஷா என்ற பகுதியில் இருக்கும் மசூதியில் டிரக் வெடிகுண்டு வெடித்தது. இதில் மசூதியில் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி கொண்டிருந்த ஏராளமானவர்கள் பலியானார்கள். அந்த மசூதி மற்றும் அருகில் இருந்த பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் சுமார் 72க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பார்கள் என தெரிகிறது. 200க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பெறுப்பேற்கவில்லை.