அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அகதிகள் போர்வையில் விடுதலைப் புலிகள் ஆஸிக்குள் நுழையலாம் என சந்தேகம்

boat.jpgஇலங் கையின் முன்னாள் போராளிகள் அகதிகள் என்ற போர்வையில் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழையலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற 194 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  மேற்படி 194 சட்டவிரோத குடியேற்றவாசிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிலுள்ள கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள் எனவும் 15 படகுகளில் இவ்வாறு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இவ்வாறு சட்டவிரோத குடியேற்ற வாசிகள் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பது பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்து சேர்ந்த 194 சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் இதுவரை 300 இலங்கையர் இவ்வாறு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன் இவர்கள் எவரும் அகதிகள் அந்தஸ்தை பெறக்கூடிய தகுதியில் இல்லையெனவும் அதேவேளை இவர்கள் முன்னாள் போராளிகள் என்று கூறுவதற்கான எந்தவொரு சான்றும் இல்லாது இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இலங்கையிலிருந்து மலேஷியாவின் தென்பகுதியூடாக கிறிஸ்மஸ் தீவை வந்து சேர்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.

விமான இடிபாடுகளிலிருந்து 14 வயதுச் சிறுமி உயிருடன் மீட்பு!

image-air-team.jpgஇந்தியப் பெருங்கடலில் நேற்று அதிகாலை விழுந்து விபத்துக்குள்ளான யெமன் நாட்டு விமானத்தில் பயணம் செய்த 14 வயது சிறுமி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலிருந்து 142 பயணிகள் மற்றும் 11 விமானச் சிப்பந்திகளுடன் நேற்று காலை புறப்பட்ட யெமனியா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் யெமனில் தரையிறங்கி,  மீண்டும் மரோனிக்கு புறப்பட்டு இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானது.

விமானம் விபத்துக்குள்ளாகி நடுக்கடலில் விழுந்ததால் அதில் பயணம் செய்த எவரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது. இந்நிலையில் விமானம் விழுந்ததாகக் கருதப்படும் கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பிரான்ஸ் மற்றும் யெமன் நாட்டு மீட்புப் பணியாளர்கள் இவ்விமானத்தில் பயணம் செய்த சிறுமி ஒருவரை விமான இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சிறுமி,  கடலில் சடலங்களுக்கும் விமானத்தின் சிதைவுகளுக்கும் மத்தியில் நீந்திக்கொண்டிருந்தபோது தான் கண்டதாக பிரான்ஸ் நாட்டு மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடும் குளிரினால் சிரமப்பட்ட இந்தச் சிறுமி கோமோரோஸ் தீவுகளிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை 3 பயணிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையோரின் சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யெமன் குடியேற்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பின்னா கையளிப்பு!

இந்தியாவில் 1992 ஆம் ஆண்டு உத்திரபிரதேசத்திலுள்ள பாபர் மசூதி  தீவிரவாத இந்துக்களால் இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபர்ஹான் விசாரணைக் குழு 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக்கையை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேற்று கையளித்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி  இடிக்கப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் மதக்கலவரங்கள் ஏற்பட்டன. பாபர் மசூதி இருக்கும் இடம் இந்துக் கடவுள் ராமர் பிறந்த இடம் என்பது இந்து செயற்பாட்டாளர்களின் வாதமாக இருக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் இந்திய சரித்திரத்தில் மிக சர்ச்சைக்குரிய பல சம்பவங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் இடம்பெற்று பத்து நாட்களுக்கு பிறகு நீதிபதி லிபர்ஹான் தலைமையிலான இந்தக் குழு அமைக்கப்பட்டது. தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அளிக்குமாறு அந்தக் குழு வேண்டப்பட்டது. ஆனால் 17 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று செவ்வாய்கிழமையன்று அந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை இந்தியப் பிரதமரிடம் அளித்துள்ளது. இந்த விசாரணைக் குழு அந்த பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு என்ன நிகழ்வுகள் காரணமாக இருந்தன என்றும் இதற்கு யார் பொறுப்பு என்றும் ஆராயுமாறு கோரப்பட்டிருந்த்து.

இந்த விசாரணை அறிக்கை தாமதவாவதற்கு பல்தரப்பிலிருந்து ஒத்துழைப்பு இல்லாமையே காரணம் என்று அதன் தலைவர் நீதிபதி லிபர்ஹான் தெரிவித்துள்ளார்.

லிபர்ஹான் விசாரணைக் குழுவின் அறிக்கை இன்னமும் வெளியாகவில்லை என்றாலும் அது முக்கியமான அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.

நாட்டையும் மக்களையும் மீண்டும் காட்டிக்கொடுக்க இடமளியோம் – ஜனாதிபதி

slprasident.jpgபாதுகாப்பு படையினருடன் இணைந்து வெற்றிகொள்ளப்பட்டுள்ள நாட்டையும், நாட்டு மக்களையும் மீண்டும் காட்டிக்கொடுப்பதற்கு எவருக்கும் இடமளியோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில், மஹிந்த சிந்தனை ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்ட சகல வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

ஸ்ரீ.ல.சு.கட்சி எப்போதும் நாட்டையும், நாட்டு மக்களையும் முன்னிறுத்தியே முடிவுகளையும், தீர்மானங்களையும் எடுத்து வந்திருக்கிறது. அதேவேளை அரசியல் அதிகாரத்தில் தொடர்ந்திருக்கும் நோக்கில் ஒரு போதும் எமது கட்சி தீர்மானங்களை எடுத்தது கிடையாது. நாடு தொடர்பாக எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் உரிய நேரகாலத்தில் எடுக்கப்படும். இவ்விடயத்தில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம்.

கடந்த காலத்தில் ஒரு குழுவாக செயற்பட்டு பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டைவிடுவித்தது போல் எதிர்காலத்தில் அபிவிருத்தி தொடர்பான சவால்களை வெற்றி கொள்வதற்காக சகலரும் ஒன்றுபட்டு பொது நோக்கில் செயற்பட முன்வர வேண்டும் என்றார்.

இவ்வைபவத்தின் போது ஸ்ரீ.ல.சு.கட்சியின் 12 புதிய தொகுதி அமைப்பாளர்களுக்கும், 12 புதிய மாவட்ட அமைப்பாளர்களுக்கும் ஜனாதிபதியினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம ஜயந்த் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் கனணி மயப்படுத்தப்படும் – அமைச்சின் செயலாளர் தகவல்

நாடு பூராவும் உள்ள உள்ளுராட்சி மன்றங்களைக் கனணி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாக உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கெசன் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலைங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபண வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இத்திட்டத்திற்கு தகவல் தொழிநுற்ப இலத்திரணியல் உள்ளுராட்சி மன்ற சேவை திட்டம் என்று பெயரிடபட்டுள்ளது. முதலாவது செயற்திட்டம் தற்பொழுது நீர் கொழும்பு மாநகரசபை, சீதவாக்க நகரசபை மற்றும் ஹோமாகம பிரதேசசபை ஆகியவற்றை மையமாகக் கொண்டு; ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழிநுற்பதொடர்பாடல் முகவர் நிறுவனத்தின் இச்செயற்திட்டமானது அடுத்த வருடம் சகல உள்ளுராட்சி மன்றங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு தேவையான மென்பொருட்களைத் தயாரிக்கும் பணி அடுத்த வருட முற்பகுதியில் நிறைவடையுமென தகவல் தொழிநுற்பதொடல்பாடல் முகவர் நிறுவணத்தின் பணிப்பாளர் வசந்தந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்படடுள்ளவாறு நாட்டில் தகவல் தொழிநுற்பத்தையும் வலுவடையச்செய்யும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் வெள்ளநிலை பிரகடனம்

images.jpgமலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருகின்ற நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் சிறிய வெள்ள நிலைமை ஏற்பட்டிருப்பதாக நேற்று பிரகடனப்படுத்தப்பட்டது.

களுகங்கையின் நீர் மட்டம் 19 அடிகள் வரை உயர்ந்திருப்பதால் இம் மாவட்டத்தில் உள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதன் காரணத்தினால் இரத்தினபுரி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிறிய வெள்ள நிலைமையைப் பிரகடனப்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் பிரியந்த அபேரட்ன தெரிவித்தார். இதேநேரம், களுகங்கையின் இருமருங்கிலும் வாழும் மக்கள் திடீர் வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் : இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 9.00 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீச்சு பதிவுப்படி 120 மி. மீ. மழை பெய்திருக்கின்றது. இதனால் இரத்தினபுரி, எலப்பாத்த, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்கிறது. ஆகவே தான் சிறிய வெள்ள நிலமை பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார். இதேவேளை, காலி, மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“தோட்டப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை’

aedes_aegypti.jpgமத்திய மாகாணத்திலுள்ள தோட்டப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இதுவரை உரியவகையில் மேற்கொள்ளப்படவில்லையென ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்துள்ளார். இச் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், பொதுசுகாதார தரப்புகள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் என்பனவற்றின் ஒத்துழைப்புடன் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் தோட்டப் பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. தோட்டப் பகுதிகளைப் பொறுத்த வரையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிறுவனமே பொதுசுகாதார வைத்திய சேவைகளுக்குப் பொறுப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை இந்த நிறுவனமும் சுகாதர அமைச்சும் உரிய வகையில் முன்னெடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். ஏற்கனவே பெருந்தோட்டப் பகுதிகளில் அடிப்படை சுகாதாரம் மற்றும் வைத்திய சேவை உரிய வகையில் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, இவ்விடயம் குறித்து மத்திய மாகாண சபை சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிறுவனம் என்பன உரிய கவனம் செலுத்த வேண்டும்.

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் பாரிய மோசடிகள் இல்லை – சிறிய மோசடிகள் பெரிய வெற்றியைப் பாதிக்காது

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவான மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் எதிர்க்கட்சிக் காரர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றதென்றும் உயர் பாதுகாப்பு சபைத் தலைவர் ஜனாதி தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் பத்து சதவீதமானவை எண்ணப்பட்டன. இதற் கென 12 பேர் கொண்ட விசேட குழு அமைக்கப்பட்டது. இதற்கு ஜனாதி தலைமையேற்றார். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் அரச தொலைக்காட்சி ஜனாதியின் செய்தியை வெளியிட்டது. அதில் அவர் கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவான வாக்கு மோசடிகள் இடம்பெறவில்லை. சிறிய மோசடிகள் இடம்பெற்றுள்ள போதும் தேர்தல் முடிவுகளில் இது மாற்றத்தை ஏற்படுத்தாது. தேர்தல் சட்டங்களுக்கமைய முடிவுகள் வெளியாகி பத்து நாட்களுக்குள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டோம்.

எதிர்க்கட்சிக்காரர்கள் சொல்வதைப் போன்று பெரிய மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என குவார்டியன் குழுத் தலைவர் ஆயதுல்லா அஹமட் ஜனாதி சொன்னார். 63 வீதமான வாக்குகளை ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் பெற்றுள்ளதால் சிறிய மோசடிகள் இவ்வெற்றியைப் பாதிக்காது என்பதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்த விரிவான கடிதமொன்று குவார்டியன் குழுவால் நாட்டின் உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரச தொலைக்காட்சி தெரிவித்தது.

திங்கட்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நகரைச் சுற்றி பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டனர். வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டது. சாரதிகளின் அடையாள அட்டைகள். உடல்களும் சோதனை செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் வகையில் பொலிஸார் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.கைதுகள் அச்சுறுத்தல்கள் அடக்கு முறைகள் என்பவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. ஈரானில் நடப் பவற்றை ஐரோப்பாவும், அமெரிக்காவும் நன்கு அவதா னிப்பதாக ஹிலாரி கிளின்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோஸி மானுவெல் ஆகியோர் தெரிவி த்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஈரான் அடக்கிய முறைக ளுக்கெதிராக ஐ. நா.வில் கடும் கண்டனத்தையும் தடைகளையும் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டது.

அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆராய சர்வகட்சி குழு – ஜனாதிபதி தீர்மானம்

he_president.jpgஅபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கென சர்வகட்சிக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வதுடன் இக் குழு ஜனாதிபதியின் தலைமையில் மாதமொரு முறை கூடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் 2ம் திகதி நடைபெறவுள்ளது.

ஈராக் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் பொறுப்பேற்றது – அமெரிக்க இராணுவம் முகாம்களுக்குள் முடக்கம்

ஈராக்கின் முக்கிய நகரங்கள், மாகாணங்களின் பாதுகாப்பை ஈராக் அரச படைகள் பொறுப்பேற்றன. தற்போது இங்குள்ள அமெரிக்கப் படைகள் வெளியே செல்லாமல் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஈராக்கிலுள்ள அனைத்து அமெரிக்கத் துருப்பினரும் தங்களது பாதுகாப்பு பொறுப்புகளை ஈராக் அரச படைகளிடம் ஒப்படைத்துள்ளதாக அங்குள்ள அமெரிக்க கட்டளைத் தளபதி தெரிவித்தார்.  

பாரிய குண்டு வெடிப்புகள் வன்முறைகளுக்கு மத்தியிலும் ஈராக் அரசாங்கம் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. எனினும் ஈராக் இராணுவத்துக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை அமெரிக்க இராணுவம் வழங்கவுள்ளது. இரண்டு நாடுகளிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கடந்த எட்டு மாதங்களாக படிப்படியாக அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பை ஈராக் இராணுவத்திடம் வழங்கி வருகின்றனர்.

ஈராக்கின் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டது. நேற்று ஜூன் 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் ஈராக்கில் ஆற்றி வந்த பாதுகாப்புப் பணிகள் யாவும் நிறுத்தப்பட்டு ஈராக் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.

சுமார் 8 மாதங்களாக இவ்வாறு படிப்படியாக ஈராக்கின் பாதுகாப்பு பிரதமர் நூரி அல்மாலிகி தலைமையிலான அரசாங்கத்தின் படையினரிடம் வழங்கப்பட்டு வந்தது. நேற்றுடன் முற்று முழுதாக ஈராக் இராணுவம் தனது நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்றுக் கொண்டது. கட்டம் கட்டமாக மாகாணங்கள் மாவட்டங்கள் நகரங்கள் எனப் பாதுகாப்புகள் கையளிக்கப்பட்டுவந்தன.

அமெரிக்கா, ஈராக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் நேற்று 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் தங்கள் பணிகளை நிறுத்தி ஈராக்கின் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும் 2010ம் ஆண்டுக்குள் ஈராக்கை விட்டே அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமென்றும் அந்த ஒப்பந்தம் கூறுகின்றது. இதற்கமைய பாதுகாப்புகளை ஒப்படைத்த அமெரிக்கப்படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன.

இவர்கள் விரைவில் படிப்படியாக அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. அதுவரை ஈராக் இராணுவத்துக்குத் தேவையான இராணுவ ஆலோசனைகள் பயிற்சிகளை வழங்கவுள்ளன. வன்முறைகள் குண்டு வெடிப்புகள் ஈராக்கில் இடம்பெற்று வருகின்ற போது ஈராக் படைகள் பாதுகாப்பை பொறுப்பேற்றமை துணிச்சலான விடயம் எனக் கருதப்படுகின்றது.

ஈராக்கின் பாதுகாப்பு சொந்த இராணுவத்திடம் வந்த பின்னர் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளைக் கொளுத்தினர், தேசிய விடுமுறை தினமாக நேற்றுப் பிரகடனம் செய்யப்பட்டது. பல் நாட்டு படைகளின் ஆட்சி முடிவடைந்தமைக்கான அடையாளம் இதுவென அவதானிகள் தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டமையிலிருந்து நான் விசேட பைவங்களில் பங்கேற்றதில்லை.

ஈராக் மக்கள் முழு மையான சுதந்திரத்தை அனுபவித்த மனமகிழ்ச்சியில் காணப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் ஈராக்கின் எதிரிகள் குழப்பம் விளைவிக்கலாம் என்பதால் ஈராக் படைகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.