அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

விடியலிற்கான நம்பிக்கை – கறுப்பு யூலை அவலம்.

blackjuli.jpgஅவுஸ் திரேலிய சர்வமத குழுவுன் ஏற்பாட்டில் “விடியலிற்கான நம்பிக்கை” எனும் சர்வமத பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

காலம்:  யூலை மாதம் 25ம் திகதி மாலை 2 மணிதொடக்கம்
               4 மணிவரை   (25.07.2009 Saturday)  
      
இடம்:    ST.PATRICKS CATHEDRAL
                Cnr of Gipson street and Cathedral Place
                MELBOURNE.
                (Near the parliament Railway station)
 
வரலாற்றின் இருண்டகால பகுதியின் ஊடாகப்பயணிக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமைக்காகவும்,சுபீட்சத்துக்காகவும் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்துசமய மற்றும் கிறிஸ்த்தவ சமய பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.
 
இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய மதத்தலைவர்களும் அரசியல்பிரமுகர்களும் மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
 
எனவே அனைத்து தமிழ் உறவுகளையும் இந்த சர்வமத பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுக்கின்றனர்.
 
யூலை மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒரு “துயரமான மாதம்”.எனவே இந்த மாதத்தில் நிகழும் இந்த நிகழ்வானது தமிழ் மக்களின் விடியலுக்கான நம்பிக்கையை துளிர்விடவைக்கும்.
 
ஆயிரம் ஆயிரம் மனங்களின் உணர்வுகளும் ஆத்மார்த்தமான வேண்டுதல்களும் ஒரே நேரத்தில் ஒன்றாய் குவியும் போது,அதன் ஆன்மீக ரீதியான சக்தி நிச்சயம் பலனைப்பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை.

– அவுஸ்திரேலிய சர்வமத குழு

பிரான்சில் கறுப்பு யூலை நாளினை முன்னிட்டு ஒன்றுகூடல்

blackjuli.jpgகறுப்பு ஜூலை நினைவாக பிரான்ஸில் இன்றும், நாளை மறுநாளும் ஒன்றுகூடலும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.  1983 யூலை 23 தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கத்தில் நடைபெறவுள்ளது

இடம்  – பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கம்
காலம் – 23.07.2009 வியாழக்கிழமை
நேரம் – பி.ப 16.00 மணி தொடங்கி 18.00மணி வரை
Métro  – Trocadéro – Ligne 6, 9

கறுப்பு யூலை நாளை முன்னிட்டு நடைபெறும் ஒன்றுகூடலைத் தொடர்ந்து 24 மற்றும் 26ம் திகதிகளில் பஸ்ரில் பகுதியில் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 19.00 மணிவரை கவனயீர்ப்புப்போராடட்டம் நடைபெறும் அதேவேளை 26ம் திகதி மதியம் இரண்டு மணிக்கு றீப்பப்ளிக் பகுதியிலிருந்து மாபெரும் கண்டனப்பேரணி ஆரம்பமாகி ஏற்கனவே கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஸ்ரில் பகுதியை வந்தடையவிருக்கிறது.

மாபெரும் தமிழினப்படுகொலையின் 26 ஆண்டுகள் கடந்தும் இன்றும் திட்டமிட்ட இனப்படுகொலையும், மிகக்கொடுமையான வதைப்புக்களும் நடைபெற்றபடியே இருக்கிறது எமது மக்களைக்காப்பாற்ற பிரான்சு வாழ் தமிழ் அணிதிரள்வோம் என பிரான்ஸ் ஒருங்கமைப்பு குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளது.

இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா 14 மில். அமெ. டொலர் நிதியுதவி

jams_usa.jpgஇடம் பெயர் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது.

இடம்பெயர் மக்களது உணவு விநியோகத்தைச் சீர் படுத்தும் நோக்கில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்காக இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் பதில் தூதுவர் ஜேம்ஸ் மெர் இந்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இந்தப் பணம் பயன்படுத்தப்படவுள்ளது.

மீளக் குடியமர்த்துவதற்கு தெளிவான திட்டம். கால அட்டவணை அவசியம் – ஐ.நா

அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான தெளிவான திட்டத்தையும் கால அட்டவணையையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென ஐ.நா. செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருக்கிறது. உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு இவை முக்கியமான விடயங்கள் என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களில் 35 முகாம்களில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் திரும்பிச் செல்வது தொடர்பான தெளிவான திட்டங்களும் கால அட்டவணையும் இருப்பது முக்கியமானது என்று ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்திருக்கிறார்.

“மாதக்கணக்காக நீங்கள் தொடர்ந்தும் 3இலட்சம் மக்களை அங்கு (முகாம்களில்) நீண்டகாலத்திற்கு வைத்திருந்தால் நிதியைப்பெற்றுக்கொள்வது (நிவாரண நடவடிக்கைகளுக்கு) மிகவும் கடினமானதாக இருக்கப்போகின்றது, என்று நான் நினைக்கிறேன்’ என்று நீல் புனே கூறியுள்ளார். நல்லிணக்கத்தின் முதல் கட்டமானது எவ்வாறு (இடம்பெயர்ந்தோர்) நடத்தப்படுகிறார்கள் என்பதாகும். அரசு அதனை அடையாளம் கண்டுள்ளது. நாங்கள் அதனை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால் இதுவொரு பாரிய சவாலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடம் பெயர்ந்த மக்களை பராமரிக்கும் பொது மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டமானது 155 மில்லியன் டொலர் நிதித் தொகையை மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் அது 270 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதுவரை 97 மில்லியன் டொலரே கிடைக்கபெற்றுள்ளது.( தேவைப்படும் தொகையில் 36 ./.) 185 திட்டங்களுக்கு தேவையான 173 மில்லியன் டொலர் பற்றாக்குறையாக உள்ளது. ஆயினும் இடம்பெயர்ந்தோரின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதில் இப்போது அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நான் தற்போது நினைக்கிறேன் என்று புனே கூறியுள்ளார்.

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு – இன்றுமுதல் அமுலில்

mosquitfora.jpgநுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சரியாக விளங்கிக்கொள்ளாமையின் காரணமாக சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள்  தவறியுள்ளனர். இவர்களுக்கு அரசியல் யாப்பினூடாக மேலதிக அதிகாரங்களை வழங்க முடியாதுள்ளது. எனினும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை,  தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாகவுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் தொகுக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். டெங்கு நோயைப் பரப்பக்கூடிய சுற்றுச் சுழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அபராதம் அறவிடுவதுடன் மற்றும் தண்டனை வழங்குவதற்கான சட்டம் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.  இதன்படி குற்றவாளியாகக் காணப்படுகின்றவர்களுக்கு ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

மன்னார்-திருமலை பஸ் சேவை இன்று ஆரம்பம்

bus_ctb_logos.jpgமன்னாரி லிருந்து திருகோணமலைக்கு நேரடி பஸ் போக்குவரத்துச் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைப் போக்குவரத்துச் சபை இதனை ஆரம்பிக்கவுள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படவுள்ளது. மன்னாரிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பஸ், வவுனியா சென்று அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக திருகோணமலையைச் சென்றடையும்.

பின்னர் அதே பஸ் பிற்பகல் 1.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து அதே வீதியூடாக மன்னாரை வந்தடையும். இச்சேவை நாளாந்தம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 வருடங்களின் பின்னர் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு அரச பஸ் சேவை, போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 பாதை பஸ் சேவைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்

bus.jpgஏ9 வீதியூடாக கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ் சேவையை நடத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் அனுமதி கேட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களின் கோரிக்கை தொடர்பாக ஏ9 வீதியூடாக போக்குவரத்து செய்ய பாதுகாப்பு தரப்பினர் அனுமதி கிடைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

ஏ9 பாதையூடாகச் செல்வதற்கு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் இவர்களுக்கு ஏ9 பாதையூடாகச் செல்ல பாதை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
 

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

kamal.jpgவன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது கடமைகளைப் பொறுப்பேற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசுரியவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார். அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது அலுவலகத்துக்குச் சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார். இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரத்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கி வந்தார். இராணுவத்தினர் நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று மேற்கொண்ட கள நடவடிக்கைகளுக்கு இவர் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2010 ஜனவரியில் மற்றொரு சூரிய கிரகணம் யாழ், வல்வையில் 10 நிமிடங்கள் பார்க்க முடியும்

sun.jpg2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி மற்றொரு சூரிய கிரகணம் நிகழும் என்று கொழும்பு பல்கலைக்கழ கத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், நவீன தொழில்நுட்பத்திற்கான ஆதர் சி கிளார்க் நிலைய ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

இச்சூரிய கிரகணம் யாழ்ப்பாண நகரிலும் வல்வெட்டித் துறையிலும் முழுமையாகத் தென்படும் என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்; 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் திகதி ஏற்படும் சூரிய கிரகணத்தை இலங்கையின் யாழ்ப்பாண நகரிலும், வல்வெட்டித்துறையிலும் சுமார் பத்து நிமிடங்கள் பார்க்க முடியும். ஏனைய பிரதேசங்களில் அதற்குக் குறைவான நிமிடங்களே பார்க்க கூடிய தாக இருக்கும். ஏனைய பிரதேசங்களில் அதுபகுதியாகவே தென்படும்.

இச்சூரிய கிரகணத்தை யாழ்ப்பாண நகரில் பிற்பகல் 1.30 மணியளவில் பார்க்க முடியும். முழுமையான சூரிய கிரகணத்தை இலங்கையர் நீண்ட காலத்திற்குப் பின்னர் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பு இதுவேயாகும். இச்சூரிய கிரகணம் மிகவும் ஒளிர்விட்டு மாணிக்கம் போல் பிரகாசிக்கக் கூடியதாக இருக்கும்.

சந்திரனில் கால்பதித்த விண்வெளி வீரர்களுக்கு பராக் ஒபாமா பாராட்டு!

moon.jpgநாற்பது வருடங்களுக்கு முன்னர் சந்திரனில் முதன் முதலில் கால்பதித்த விண்வெளி வீரர்களான நீல் ஆம்ஸ்ட்ரோங்,  எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்ததாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது இந்த மூன்று விண்வெளி வீரர்களும் புரிந்த சாகஸத்தை ஜனாதிபதி ஒபாமா பாராட்டியுள்ளார். ஆம்ஸ்டே;ராங் நிலவில் கால் பதிக்கும்போது தனக்கு 7 வயது எனக் குறிப்பிட்ட ஒபாமா,  இந்த வரலாற்றுச் சாதனையாளர்கள் மூவரையும் ஒன்றாகச் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சந்திரனில் மனிதன் கால்பதித்து 40 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நிலவுக்கும் பின்னர் செவ்வாய்க் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பும் நாஸாவின் முயற்சிகளுக்கு ஒபாமா நிர்வாகம் இணங்க வேண்டுமென அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சித்துறை அழைப்பு விடுத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.