அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

வவுனியா நிவாரணக் கிராமம் – ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிர்ப்பீடன மருந்து வழங்கல் இன்று

vaccine.jpgவவுனி யாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சின்னமுத்து மற்றும் போலியோ நோய்களுக்கான நிர்ப்பீடன மருந்துகளும் வயிற்றுப் புழுக்களுக்கான தடுப்பு மருந்தும் இன்று 3 ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளன.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள குழந்தைகளின் நலன்கருதி இந்நிர்ப்பீடன மருந்து வழங்கல் மற்றும் வயிற்று புழுக்களுக்கான மருந்து விநியோகத் திட்டம் இன்று முதல் மூன்று நாட்களுக்குச் செயற்படுத்தப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ளவர்கள் புலிகளின் பிடியில் சிக்குண்டிருந்த சமயம் தமது குழந்தைகளுக்கு, நோய்த் தடுப்பு நிர்ப்பீடன மருந்துகளையோ, வயிற்று புழுக்களைத் தடுப்பதற்கான மருந்துகளையோ ஒழுங்கு முறையாக பெற்றுக் கொடுத்ததில்லை. இக்குழந்தை களின் நலன் கருதியே இத்திட்டத்தை சுகாதார அமைச்சு, யுனிசெப், உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து செயற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இப்பணியில் 140 அரசாங்க மருத்துவ மாதுகள் ஈடுபடுத்தப்படவிருப்பதுடன் 130 நிலையங்களும் அமைக்கப் படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்துள்ள சுமார் 40 ஆயிரம் குழந்தைகள் நன்மை பெறுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தென் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்டின் அரசுடன் இணைய தீர்மானம்

election_fingercolur.jpgதென் மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவரும் மாத்தறை தொகுதி ஐ. தே. கட்சி அமைப்பாளருமான ஜஸ்டின் கலப்பத்தி, அரசில் இணைய முடிவு செய்துள்ளார்.

தென் மாகாண சபை கலைக்கப்பட்டதும், தான் அரசாங்கத்துடன் இணைந்து, தென் மாகாண சபையின் அங்கத்துவம் பெற்று ஐ. ம. சு. முன்னணியில் தென் மாகாண சபைக்கு போட்டியிடப்போவதாகவும் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் கடந்த 1 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், உரை நிகழ்த்திய ஜஸ்டின் கலப்பத்தி கூறியதாவது:- யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவுக்கு கொண்டு வந்து, பிளவுபட்டிருந்த நாட்டை ஒன்றிணைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் துயரங்களை போக்கி நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருப்பதால், அவரின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கில் தான் அரசுடன் இணைய தீர்மானித்ததாக அவர் கூறினார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த சங்காய் பிரதிநிதிகள் இலங்கை வருகை

kandy-parahara.jpgஇலங்கை, சீனா ஆகில நாடுகளுக்கிடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்திலிருந்து நேற்று இலங்கை வந்திருக்கும் 10 பிரதிநிதிகளைக் கொண்ட குழு எதிர்வரும் 08 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்குமென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சபை ஆகியவற்றுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், சீனாவில் இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையிலும் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் அமைச்சின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சங்காயிருந்து இலங்கை வந்திருக்கும் பிரதிநிதிகள் குழு சுற்றுலாத்துறை அமைச்சர், சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திப்பதுடன், கண்டி பெரஹெராவில் கலந்து கொள்வரெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  சங்காய் மாநகர சுற்றுலாப் பணியகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் தடவையாகு மெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

சவூதி அரேபியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அலுவலகம்

iran-plane.jpgசவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அதன் உப அலுவலகங்களை சவூதி அரேபியாவின் வெவ்வேறு பிரதேசங்களில் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையரின் நலன் கருதி இந்த உப அலுவலகங்களைத் திறப்பதற்கு முடிவு செய்திருப்பதாக பணியகத்தின் பேச்சாளர் நேற்றுத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சுமார் ஆறு இலட்சம் இலங்கையர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இவர்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக ரியாத்திலுள்ள தூதரகத்துக்கோ அல்லது கிளையான தமாமுக்கோ செல்ல வேண்டிய நிலைமையுள்ளது.

இதனால் சவூதி அரேபியாவில் பணிபுரியும் இலங்கையர்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தூதரகத்தின் கீழ் செயற்படக் கூடியவகையில் உப அலுவலகங்களை மேலும் திறக்கவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் முன்னெடுப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தலைமையிலான குழு சவூதி சென்றுள்ளது.

இதேவேளை, பல்வேறு குற்றச் செயல்களை புரிந்துள்ளதாக காரணம் காட்டி தமாம் மற்றும் ரியாத் ஆகிய இடங்களிலுள்ள தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் 250 இலங்கையர்களை விடுவிப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் பணியகத்தின் தலைவர் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புலிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தகவல்; கிளிநொச்சி அரச அதிபர் மீது தொடர்ந்தும் விசாரணை

ranjith-gunasekara.jpgபயங்கர வாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர நேற்றுத் தெரிவித்தார்.

பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே கிளிநொச்சி அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தகவல் தருகையில்:- பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலர் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் புலிகளின் பல்வேறு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதுடன் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்தார் என்று தடுப்பு காவலில் உள்ள ஒரு புலி உறுப்பினர் தகவல்களை வழங்கினார்.
இதனை அடிப்படையாகக் கொண்டே பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் கொழும்பிலிருந்து வவுனியாவுக்குச் சென்று அவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தொடர்ந்தும் பல்வேறு கோணங்களில் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஐ.தே.க. இன்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது – அமைச்சர் அதாவுட செனிவிரட்ன

தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தையும் கொண்டுவந்து அவர்களுக்கு பயங்கரவாதிகள் என முத்திரை குத்திய ஐக்கிய தேசியக் கட்சியினர் இன்று தமிழ் மக்கள் துன்பப்படுவதாக முதலைக்கண்ணீர் வடிப்பதாக தொழில் மனிதவள அமைச்சர் அதாவுட செனிவிரட்ன தெரிவித்துள்ளார். மாவனல்ல நகர ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து பேசிய அமைச்சர் அதாவுட செனிவிரட்ன;

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சிக்கு வரும்போது தமிழ் மக்களின் ஆதரவைக் கேட்பார்கள். தமிழ் மக்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நம்பி வாக்களிப்பார்கள். ஆனால், தமிழர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் ஐ.தே.கட்சியே. இது கடந்த கால வரலாறு. இன்று தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களும் இந்த நாட்டு மக்கள் என்று எல்லாம் கூறிவருகின்றனர்.

17 வருடங்கள் ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி செய்தபோது தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் இன்று தீர்வு காணும்படி கேட்கின்றனர். இந்த நாட்டில் யுத்தம் ஏற்படக் காரணமானவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இன்று யுத்தம் முடிவுற்று தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நாட்டில் சகல இன மக்களும் இலங்கையர் என்று வாழ வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். அந்த சூழ்நிலையை விரைவில் ஜனாதிபதி ஏற்படுத்துவார். கடந்த 35 வருடங்களாக இன மத பேதமின்றி நான் சேவையாற்றி வருகின்றேன். சகலரும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்தால் நாடு முன்னேறும் என்றார்.

உபவேந்தராக சரத் நியமனம்

university-of-sri.jpgபேராதனை பல்கலைக்கழக புதிய உப வேந்தராக கலாநிதி சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உபவேந்தர் கலாநிதி சரத் அபேகோன் பேராதனை பல்கலைக்கழக பொறியியலாளர் துறை பீடாதிபதியாக நான்கரை வருடம் சேவை புரிந்த இவர் பல்கலைக்கழக ஆணைக்குழு அங்கத்தவருமாவார்.

36,000 சிறுவர்களுக்கு சின்னமுத்து தடுப்பு மருந்தேற்றும் திட்டம்

vaccine.jpgசிறப்பு சிறுவர் சுகாதார பிரசார திட்டத்தின் மூலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களில் உள்ள 36,000 சிறுவர்களுக்கு சின்னமுத்து நோய்க்கு எதிரான நிர்ப்பீடனம் செய்யப்படும். சுகாதார அமைச்சு, ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், உலக சுகாதார நிறுவனம் ஆகியன இணைந்து இதனை முன்னெடுக்கும். இம்முயற்சியானது, கடந்த காலத்தில் வெகுவாக பரவிய சின்னமுத்து நோயானது, மேலும் பரந்தளவில் பரவாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த சிறப்பு திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள். வவுனியாவில் உள்ள 30 நிலையங்களில், ஏறக்குறைய 100 பொது சுகாதார மருத்துவதாதிகளும் 1200 தொண்டர்களும் இம் முயற்சியில் பங்கெடுக்கவுள்ளனர். இதற்காக பல வாரகாலமாக, நிர்ப்பீடன மருந்து வழங்கல்களை எற்பாடு செய்தல், சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சியளித்தல், தொண்டர்களை அணிதிரட்டுதல் என முன்னேற்ற நடவடிக்கைகள் பல மேற் கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை அரசாங்கமானது சிறுவர் சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றது- இடம்பெயர்ந்தோர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் நாம் உறுதியுடன் உள்ளோம்’ என சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அதுல காந்தலியனகே தெரிவித்தார்.

சின்னமுத்துக்கு எதிராக நிர்ப்பீடனம் வழங்குவதுடன், சிறுவர்களை தாக்கும் பல நோய்களுக்கான எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், போஷாக்கின்மையை தடு க்கவுமென அவர்களுக்கு விற்றமின் ஏ மற்றும் பூச்சி மருந்து என்பனவும் வழங்கப்படவுள்ளன. அவர்களுக்கு போலியோ தடுப்பு மருந்தும் வழங்கப்படும்.

‘ஒரு அவசரநிலையின் போது, ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே அதிகம் பாதிப்படைவர். இம்முயற்சியினாது, பல உயிர்களைக் காக்கும்’, என ஐக்கிய நாடு கள் சிறுவர் நிதியத்தின் பதில் வதிவிடப் பிரதிநிதி டெசிரா ஜோன்ஸ்மா தெரிவித்தார். சுகாதார அமைச்சு, போஷாக்கு மற் றும் நோய் தொற்று பிரிவு உட்பட இம் முயற்சியில் ஈடுபட்ட ஏனைய பங்காளர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

சரணடைந்த சிறுவர்களுக்கென வவுனியாவில் இரு புதிய பாடசாலைகள் செப். 7 முதல் செயற்படும்

school-children000.jpgபுலிகள் இயக்கத்திலிரு ந்து படையினரிடம் சரண டைந்துள்ள சிறுவர்களுக்கென வவுனியா பூந்தோட்டத்தில் இரண்டு புதிய பாடசாலைகள் இயங்கவுள்ளன. வவுனியா பூந்தோட்டம் கூட்டுறவு சங்க கட்டடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளவர்களுள் 18 வயதுக்குட்பட்ட 250 சிறுவர் சிறுமியர்களுக்கென இரண்டு தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்க ப்படவுள்ளன.

8ஆம், 9ஆம், 10ஆம், 11ஆம், 12ஆம் வகுப்புகள் இயங்கும் விதத்தில் ஒரு அதிபரின் கீழ் 15 ஆசிரியர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கென ஈடுபடுத்தப்படவுள்ளதாக வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார். செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி முதல் பாடசாலைகள் இயங்கும் விதத்தில் இரண்டு தற்காலிக கொட்டில்களும் அமைக்கப்படவுள்ளன.

வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட், யுனிசெப் பிரதிநிதிகள், படைத்தரப்பின் பொறுப்பதிகாரிகள் அடங்கிய குழுவினர் பூந்தோட்ட முகாமுக்குச் சென்று பார்வையிட்டனர்.

மேற்படி 250 மாணவர்களுக்கும் தேவையான பாடநூல்களை வவுனியா வலய கல்விப் பணிப்பாளர் அலுவலகம் நாளை திங்கட்கிழமை வழங்குகிறது. மாணவர்களுக்குத் தேவையான அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்களை யுனிசெப் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது என பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர் சம்மாந்துறையில் கண்டுபிடிப்பு

ah1n1.jpgபன்றிக் காய்ச்சல் (AH1N1  வைரஸ்) நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவர் சம்மாந்துறையில் கண்டுபிடிக்கப்பட்டார். சம்மாந்துறை, பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மல்கம்பிட்டியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டு இவர் கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டிருப்பதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ஆர். நூர்தீன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரயாணிகள், குறித்த பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது ஐந்து பேர் பன்றிக் காய்ச்சல் தொற்றுடையவர்களென கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஏனைய நான்கு பேரும் கைது செய்யப்பட்ட அதே சமயம் குறித்த நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். இவருடைய தகவல்களை கொண்டு விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரால் சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இந்நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.