அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அரசின் நிகழ்ச்சி நிரலில் மக்களின் பாதுகாப்புக்கே முதலிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு

pr-tna.jpgநாட்டி னதும் மக்களினதும் நலனுக்காக ஒன்றாக இணைந்து செயலாற்றுவோம். விசேடமாக நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதற்கு அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தாங்கள் தயாரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அலரிமாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இதில் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தை சுமார் 03 மணித்தியாலங்களாக இடம்பெற்றன. பயங்கரவாதத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாக அரசு முன்னுரிமை அளித்து செயற்படுவதாகவும் கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசின் நிகழ்ச்சிநிரலில் முதலில் இருப்பது மக்களின் பாதுகாப்பும் நலன்புரியும் என்றும் இங்கு கூறினார்.

அரசு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்துக்கமைய கூடிய விரைவில் மீளக்குடியமர்த்தலை நிறைவு செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சுதந்திரமாக ஜனநாயகமாக சேவையாற்ற கிடைக்குமென்றும் இங்கு நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ.க்கோ அல்லது பயங்கரவாத அமைப்புக்கோ மக்களை பலியெடுப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையினை முதலாவது படியாக கருதி எதிர்காலத்தில் படிப்படியாக நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு செயலாற்றுவதற்காக இவ்வாறான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இங்கு சுட்டிக்காட்டியது.

இதில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, ரிசாட் பதியுதீன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், எம்.பியுமான பெசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் உட்பட தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சின் அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, கே. தங்கேஸ்வரி, சிவசக்தி ஆனந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன், ஆர். எம். இமாம் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

ராகுல் காந்தி சென்னை வருகை நகரில் 3,000 போலீஸ் பாதுகாப்பு

‘‘காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி சென்னை வருவதை முன்னிட்டு 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்’’ என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார். ராகுல் காந்தி 3 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். நாளை சென்னை வருகிறார். இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரன் நேற்று கூறியதாவது:

சென்னையில் 4 விழாக்களில் கலந்து கொள்ள ராகுல் காந்தி நாளை வருகிறார். 9ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம், சத்தியமூர்த்தி பவன், காமராஜர் அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு, ஓட்டலில் தங்குகிறார். அடுத்த நாள், ஒரு ஓட்டலில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அவரது வருகையை முன்னிட்டு, சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடக்கும் இடங்களில் 3,000 போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். அடையாள அட்டை இல்லாதவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாது.

நகரில் லாட்ஜ்கள், திருமண மண்டபங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு ஒத்திகைகளை ஏற்கனவே முடித்து விட்டோம். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. உயரதிகாரிகள் நேரடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரில் ஏற்கனவே வாகன சோதனை, இரவு ரோந்து, பகல் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது. தற்போது 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு கமிஷனர் கூறினார்.

அண்ணா பல்கலை. மாணவர்களுடன் கலந்துரை யாடல்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் நாளை ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார். இதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா கலையரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாத கேள்விகள் கேட்டு, நேரத்தை வீணடிக்க கூடாது என்று மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கேள்விகள் எந்த துறையை சேர்ந்ததாக இருக்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பது குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து நேற்று கூட்டம் நடத்தி முடிவு எடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் முஸ்லிம்களுக்கு எதிராக விமான தாக்குதல் வழக்கில் தீர்ப்பு

080909uk.jpg2006 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவுக்கு பயணித்த ஒரு விமானத்தை வெடி வைத்து தகர்த்து அதிலிருந்தவர்களைக் கொல்ல சதி வேலையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி 3 பிரிட்டிஷ் முஸ்லிம் பிரஜைகளுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

நீர்ம வெடிப்பொருட்களை குறைந்தது ஏழு விமானங்களுக்குள் அவர்கள் கடத்திக்கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சதித் திட்டம் அம்பலமாகியபோது விமானப் போக்குவரத்தில் பெரும் குழப்பம் எழுந்தது. இச்சம்பவத்தின் விளைவாக பயணிகள் தம்முடன் விமானத்திற்குள் கொண்டுசெல்லும் பொருட்கள் தொடர்பில் இன்றளவும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.

இந்தச் சதி நடந்திருந்தால் அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது இருந்திருக்கும் என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர். இந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனத் தீர்ப்பளித்து பிரதிவாதிகள் வேறு நான்கு பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலுமொருவர் மீது கொல்லச் சதி செய்தார் என்ற பொதுவான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தோட்டத்தொழிலாளர் சம்பள அதிகரிப்பு பேச்சு இணைக்கப்பாடின்றி முடிவு ஒத்துழையாமை போராட்டம் தொடரும் – தொழிற்சங்கம்

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிந்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார். இராஜகிரியிலுள்ள முதலாளிமார் சம்மேளனத்தில் நேற்று சுமார் இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் காணப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆகக்கூடியது 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் நேற்றுடன் ஆறு தடவைகள் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன.

நாட் சம்பளத்தை ஆகக்கூடியது 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக இதற்கு முன்னர் 05 தடவைகள் இருதரப்புக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிற்சங்கங்களினால் ஒத்துழையாமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு நாட்களாக தொழிற்சங்கப் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று ஆறாவது தடவையாக முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிந்துள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை ஆகக்கூடியது 360 ரூபாவாக அதிகரிப்பதாக முதலாளிமார் சம்மேளனம் இப்பேச்சுவார்த்தையின் போது தீர்மானத்துக்கு வந்துள்ளது. இருப்பினும் தோட்டத் தொழிற்சங்கங்கள் இதனை நிராகரித்துள்ளன. அதனையடுத்து பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுமின்றி முடிவுக்கு வந்ததாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பேச்சாளர் கூறினார்.

தாம் முன்வைத்திருக்கும் கோரிக்கைக்கு சாதகமான முடிவு கிட்டும் வரை ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் தொடருமெனவும் தேவையேற்படின் வேறு விதமான தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க தயாரெனவும் தோட்டத் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பேச்சுவார்த்தையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம், எஸ். ஜெகதீஸ்வரன், முன்னாள் எம். பி. யோகராஜன் மற்றும் ஹரிஸ் சந்திரசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

லங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சார்பாக கே. வேலாயுதம், மொஹிதீன் மற்றும் பெருந்தோட்டக் கூட்டு கமிட்டி சார்பாகவ எஸ். இராமநாதன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

களனி கங்கைக்கு அருகில் வசிப்போரை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

070909.jpgமெளசாகலை நீர்த்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்திருப்பதால் பாதுகாப்பு கருதி மூன்று வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர சேவைகள் செயற்பாட்டுப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் கேர்ணல் கீர்த்தி ஏக்கநாயக்கா நேற்றுத் தெரிவித்தார்.

இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதால் களனி கங்கையின் இரு மருங்கிலும் வாழுகின்ற மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த சில தினங்களாக நீரேந்து பிரதேசங்களில் மழை பெய்து வருகின்றது.

இதனால் நேற்று காலை 5.30 மணியாகும் போது மெளசாகலை நீர்தேக்கம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்தது. இதன் காரணத்தினால் பாதுகாப்பு கருதி இந்நீர்த் தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வான் கதவும் நான்கு அங்குலத்திற்குத் திறக்கப்பட்ருக்கின்றது.

இந்நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டிருப்பதால் களணி கங்கையின் நீர்மட்டம் உயிரும். அதனால் களனி கங்கைக்கு இரு மருங்கிலும், கித்துல்கல, தெரணியாகல, யட்டியந்தோட்டை, கேகாலை, தெகியோவிட்ட, அவிசாவளை ஆகிய பிரதேசங்களிலும் வசிப்பவர்களை விழிப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

2008 ஆம் ஆண்டில் அதிக ஆயுத விற்பனை செய்த நாடு அமெரிக்கா

us-army.jpgகடந்த 2008 ஆம் ஆண்டில் உலகிலேயே அதிக ஆயுத விற்பனை செய்த நாடாக அமெரிக்காதான் என்று அமெரிக்க நாடாளுமன்ற குழு தாக்கல் செய்த அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” வளரும் நாடுகளுக்கான மரபு ஆயுத பரிமாற்றங்கள் ” என்ற தலைப்பின் கீழ் அமெரிக்கா கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கொண்ட் ஆயுத விற்பனை குறித்து ஆய்வு செய்து, அமெரிக்க நாடாளுமன்ற குழு ஒன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் மேற்கண்ட விவரம் இடம்பெற்றுள்ளதாகவும், உலகில் விற்பனையான மூன்றில் இரண்டு பங்கு ஆயுதங்களை அமெரிக்காவே விற்பனை செய்துள்ளதாகவும், ஏறக்குறைய 55.2 பில்லியன் டாலருக்கு இந்த் ஆயுத விற்பனை நடைபெற்றுள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இதுவரை ஆயுத விற்பனை செய்து வந்த ரஷ்யாவின் மார்க்கெட்டையும் அமெரிக்கா தற்போது பிடித்து விட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘றுகுணு குமாரி’ கடுகதி ரயில் சேவை நேற்று அஹங்கமையில் தடம்புரள்வு – நண்பகலுடன் சேவை வழமை நிலையில்

rail-070909.jpgமாத்தறை யிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற றுகுணுகுமாரி கடுகதி ரயில் அஹங்கமையில் நேற்றுக் காலை 6.00 மணியளவில் தடம்புரண்டது. இதனால் கரையோர ரயில்கள் அஹங்கமை வரை மட்டுப்படுத்தப்பட்டி ருந்ததாகவும், நண்பகலுடன் சேவைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

ரயில் தடம்புரண்டதையடுத்து பயணிகளை காலி வரை பஸ் வண்டியில் அழைத்துச் சென்று காலியிலிருந்து வேறொரு ரயில் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்ல ஒழுங்குகள் மேற்கொண்ட தாகவும் ரயில்வே திணைக்கள முகாமையாளர் தெரிவித்தார். ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நேற்று நண்பகலுடன் பூர்த்தியானதும் ரயில் சேவையும் வழமைக்கு திரும்பியுள்ளது.

மாகாண சபைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் 5 வருடங்கள் பூர்த்தியானதும் மீள வருவது அவசியம் – அமைச்சர் சரத் அமுனுகம

மத்திய அரச துறையிலிருந்து மாகாண சபைக்குச் சென்றுள்ள அரச உத்தியோகத்தர்கள் அங்கு ஐந்து வருடங்கள் பூர்த்தியானதும் மீள அரச சேவைக்கு வருவது அவசியமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

இதனை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தலைமையில் குழுவொன்றை அமைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மத்திய அரச துறையிலிருந்து ஐந்து வருடங்களுக்கென மாகாண சபை சேவைக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்கள் நிரந்தரமாக அங்கு தங்கி வருவதால் மாகாண சபையிலுள்ளவர்களுக்கான பதவியுயர்வு உட்பட பல சலுகைகள் தடைப்படுகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையிலேயே ஐந்து வருடம் கட்டாயமாக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் :- மத்திய அரச துறையிலிருந்து மாகாண சபைக்கு சுமார் 300 பேர் சென்றுள்ளனர். இவர்களை மீள அரச சேவைக்குத் திருப்பி அழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய அமைச்சர் சந்திரசிறி கஜதீர; அரச துறைகளை விரிவாக்குவதற்குப் பதிலாக அதனை மட்டுப்படுத்த செயற்பட்ட காலகட்டமொன்று இருந்துள்ளது. தற்போது அரச துறை மேம்பாட்டுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியினை செலவிட்டு வருகிறது. கட்டடங்கள் மட்டுமன்றி அரச துறையின் வெற்றிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் திஸ்ஸ விதாரண எஸ். எல். எஸ். தரச் சான்றிதழ் போன்றே வெளிநாடுகளிலிருந்து வரும் பொருட்களின் தரத்தை தரப்படுத்தவும் தரநிர்ணய நிறுவனமொன்றின் மூலம் நடவடிக்கை உருவாக்கப்படுமென தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு பாடசாலை: பாடப் புத்தகங்களை இம்மாத இறுதியில் அனுப்ப நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் இந்த மாத இறுதியில் அப்பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

வடக்கு பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஏ-9 வீதியினூடாக அனுப்பப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

2010 ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 30 லொறிகளில் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருவதோடு இதுவரை மேற்கு, தென், மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் புஷ்பகுமார தெரிவித்தார்.

வட பகுதிக்கான நூல்கள் 15 கொள்கலன்களில் அனுப்பப்படவுள்ளன.

2010 க்கான பாடநூல்களை அச்சிட 2700 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. பாடநூல் விநியோகப் பணிகள் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்யப்பட உள்ளதோடு டிசம்பர் 7 ஆம் திகதி முதல் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய 4 பெயர்களில் நடமாடிய புலி உறுப்பினர் நாவலப்பிட்டியில் நேற்று முன்தினம் கைது

முக்கியஸ் தர்களை இலக்கு வைத்து அவர்களை கொலை செய்வதற்காக நான்கு பெயர்களில் நடமாடிய புலி இயக்க முக்கிய உறுப்பினர் ஒருவரை புலிகளின் அடையாள இலக்க விபரங்களுடன் நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி கெட்டம்புலா தோட்ட பிரதேசத்தில் விறகு மடுவமொன்றுக்குள் ஒழிந்திருந்த வேளையிலேயே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். மன்னார் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பு, நீர்கொழும்பு மட்டக்குழி போன்ற இடங்களில் தற்காலிகமாக வசித்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. பெனடி சுஜான், கொலம்பஸ், டரிகுமார் மற்றும் கே. வை. என நான்கு பெயர்களில் இவர் நடமாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.