அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

முதலாளிமார் சம்மேளனத்துடன் இனிப் பேச்சுவார்த்தை இல்லை : ஆறுமுகன் தொண்டமான்

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இனிமேல் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தும் நோக்கில் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடைபெற்ற எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையும் நேற்றைய தினம் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 290 ரூபா சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்த வேண்டுமென தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வரும் அதேவேளை, 360 ரூபாவாக நாட் சம்பளத்தை அதிகரிக்க முடியும் என முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாட் சம்பள உயர்வை வலியுறுத்தும் வகையில் கடந்த பத்து தினங்களாக பெருந்தோட்டங்களில் ஒத்துழையாமை தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

முதலாளிமார் சம்மேளனத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொட்டகலை நகரில் தொழிற்சங்கங்களுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் எவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைகளில் அரசாங்கம் தலையீடு செய்ய உள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் தி.மு.ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

த.தே.கூ. உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் : ஜனாதிபதியிடம் புகார்

120909tnalogo.jpgகல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு, தற்போது அரசாங்கத் தரப்பிலுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக ஜனாதிபதியிடம் புகார் செய்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்படி புகார் செய்யப்பட்டுள்ளது.

மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் (telo) உட்பட தமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பது குறித்து ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது தாங்கள் சுட்டிக் காட்டியதாகவும் நடவடிக்கை எடுப்பதற்கு விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதைத் தடுப்பதற்கான ஒரு அச்சுறுத்தல் முயற்சியாகவே இதனைக் கருத வேண்டியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். (வீரகேசரிnet 9/12/2009 11:27:07 AM )

ஜெட் ஏயார் ஊழியர்கள் வேலைநிறுத்தம் : 9 மணி நேர பேச்சுவார்த்தை தோல்வி

09-airways-99.jpgஜெட் விமான ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக நடத்திவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 9 மணி நேரம் நடந்த இந்த பேச்சு வார்த்தையில் சுமுகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை மும்பையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் சுமுகமான முடிவு எட்டப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.  இந்தப் போராட்டத்தினால் இன்று 242 ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் அருள்மெளலி இடம்பெயர் முகாமில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அருள்மெளலி இடம்பெயர் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
 
அருள்மெளலி தமிழீழ விடுதலைப் புலிகளின் உள்ளக புலனாய்வுப் பிரிவின் தலைவராக செயற்பட்டுவந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலித் தலைமை முதல் சாதாரண போராளி வரையில் இரகிய தகவல் சேகரிப்பு பணிகளை இவர் மேற்கொண்டு வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் கைது செய்யப்பட்ட பாதுகாப்பு தரப்பினர் குறித்த தகவல்களையும் அருள்மெளலியே திரட்டி வந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பாடசாலைகளுக்கு புலிகளால் சூட்டப்பட்ட பெயர்கள் நீக்க நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு புலிகள் வைத்த பெயர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த பாடசாலைகளுக்கு மரணித்த தமது தலைவர்களின் பெயர்களை அவர்கள் சூட்டியிருந்தனர். அதனை நீக்கி மீண்டும் அப் பாடசாலைகளுக்கு சூட்டப்பட்டிருந்த சொந்த பெயர்களை மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் தெரிவித்துள்ளார்.

சம்பர் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில் கணிசமானவற்றுக்கு புலிகள் பெயர் மாற்றியிருந்தனர். அவற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், புலிகளின் ஆதிக்கத்தில் இப்பகுதி இருந்தமையினால் பெயர் மாற்றத்தை கல்வி அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுத்கமை இந்துருவை ரயில் சேவை தற்காலிக இடைநிறுத்தம்

train0000.jpgஅலுத்கமை மற்றும் இந்துருவைக்கிடையிலான ரயில் சேவை இன்றும் நாளையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 8.00 மணி முதல் நாளை மாலை 5.00 மணி வரை இந்த ரயில் சேவைகள் தடைப்பட்டிருக்கும்.

பெந்தோட்டை ரயில் பாலத்தின் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கான காரணமாகும் என திணைக்களம் தெரிவிக்கின்றது. அதன்படி மருதானை ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 6.45 க்கு காலி நோக்கி புறப்படும் ரயில் சேவை மற்றும்  பிற்பகல் 1.40 மற்றும் மாலை 5.50 ஆகிய நேரங்களில் மாத்தறை நோக்கிப் புறப்படும் ரயில் சேவைகள் இடம்பெற மாட்டாது.

மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 க்கு மருதானை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் புறப்படும் கடுகதி ரயில் சேவையும் இடம்பெற மாட்டாது. இதேவேளை மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் 8050 இலக்கம் கொண்ட ரயில் சேவை இன்று சனிக்கிழமை அலுத்கமை வரை மட்டுமே இடம்பெறும் என திணைக்களம் அறிவித்துள்ளது

மாலபேயில் உயிரி தொழில்நுட்ப மத்திய நிலையம்

நாட்டின் விவசாய உற்பத்திப் பொருட்களை கெட்டுப்போகாமல் நீண்டநாட்கள் வைத்துக்கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான உயிரி தொழில்நுட்ப மத்திய நிலையம் ஒன்றை மாலபேயில் அமைப்பதற்கான ஆரம்பககட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டின் விவசாய உற்பத்திப் பொருட்களை கெட்டுப்போகாமல் நீண்டநாட்கள் வைத்துக்கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்குத் தேவையான உயிரி தொழில்நுட்ப மத்திய நிலையம் ஒன்றை மாலபேயில் அமைப்பதற்கான ஆரம்பககட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாலபே தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் அமைக்கப்படும் இதற்கு ஜப்பான் ஒத்துழைப்புக்கான திட்டத்தின் கீழ்; ஜப்பான் அரசாங்கம் 600 மில்லியன் ரூபாவை நிதியுதவியாக வழங்குகிறது. இதனை அமைப்பதற்கான காணியை நகர அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.

சகல வசதிகளையும் கொண்ட முழுமையான ஆய்வுகூடமாக அமைக்கப்படும் இதன் நிர்மானப்பணிகளை 2011 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 19 ஆயிரத்து 360 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு – பசில் ராஜபக்ஷ

basil-raja.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9920 பேரை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  வவுனியா நகரசபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும், வடக்கின் வசந்தம் திட்டத்தின் தலைவருமான பசில் ராஜபக்ஷ,  இடைத்தங்கல் முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியலை அந்தந்த மாவட்ட அரச உயரதிகாரிகளிடம் வைபவ ரீதியாகக் கையளித்தார்.

அங்கு உரையாற்றிய பசில் ராஜபக்ஷ,  “ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்திற்கும் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை இடைத்தங்கல் நிவாரண கிராமங்களிலேயே வைத்திருக்க வேண்டிய தேவை கிடையாது.  அவர்களை எவ்வளவு விரைவாக அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இதுவரை 19 ஆயிரத்து 360 பேர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த வைபவத்தின்போது வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிபரப் பட்டியலின்படி, 1474 குடும்பங்களைச் சேர்ந்த 4585 பேர் இரண்டு தொகுதிகளாக யாழ். மாவட்டத்தி்ற்கும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 159 பேர் அம்பாறை மாவட்டத்திற்கும், 520 குடும்பங்களைச் சேர்ந்த 1896 பேர் இரண்டு தொகுதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், 166 குடும்பங்களைச் சேர்ந்த 553 பேர் திருகோணமலை மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைவிட, 751 பேர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 7334 முதியவர்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 121 இந்து மற்றும் கிறிஸ்தவ குருமார்களும், அரச அதிகாரிகளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருமாக இதுவரையில் 19 ஆயிரத்து 360 பேர் முகாம்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக 9920 பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் வெள்ளியன்று ஆரம்பமாகி, அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கிளைக் காரியாலயங்கள்

110909passport.jpgகுடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கிளைக் காரியாலயங்கள் வடக்கு,  கிழக்கு மாகாணங்களில் விரைவில் அமைக்கப்படவுள்ளதாக திணைக்கள ஆணையாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் முடிவடைந்துள்ள நிலையில் அரச நிருவாக சேவைகளை வடக்கு,  கிழக்குப் பகுதிகளுக்கு விஸ்தரிக்கும் நோக்குடனும் அப்பகுதி மக்கள் கடவுச் சீட்டுக்களைப் பெறுவதற்காக கொழும்புக்கு நீண்ட தூரம் பிரயாணம் செய்து சிரமப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடனுமேயே அங்கு இந்த கிளை அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பொதுமக்களுடன் தொடர்புடைய பல்வேறு அரசாங்க காரியாலயங்கள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அமைக்கப்பட் வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

40 கோடியை இழந்தேன் : நடிகர் கமல் வேதனை

09-kamal-marmayogi.jpgபிரமிட் சாய்மீரா பட நிறுவனம் கமலஹாசனை வைத்து மர்மயோகி என்ற திரைப்படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்திருந்தது. பின்னர் இத்திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், மர்மயோகி படம் கைவிடப்பட்டதால், தாங்கள் வழங்கிய அட்வான்ஸ் தொகையான 10 கோடியே 90 லட்சத்தை வட்டியுடன் அளிக்க வேண்டும் என கமலஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், செய்தியாள்ர்களிடம் பேசிய கமலஹாசன், மர்மயோகி திரைப்படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக்‌கூடாது என்ற நிபந்தனையினால், தமக்கு 40 கோடி இழப்பு ‌ஏற்பட்டதாகவும், சட்டரீதியான நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காகவே, சாய்மீரா நிறுவனம் தன் மீது திட்டமிட்டு பொய்பிரசாரம் செய்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாவும் தெரிவித்துள்ளார்.