அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இராணுவத்தின் வெள்ளி விழா நிகழ்வூகள் ஒக்டோபர் 02ஆம் திகதி ஆரம்பம் – இராணுவக் கண்காட்சிக்கும் ஏற்பாடு

இலங்கை இராணுவத்தின் 60 வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெள்ளி விழா நிகழ்வுகள் அடுத்த மாதம் 02ஆம் திகதி முதல் வெகுவிமர்சையாக ஆரம்பமாகவுள்ளன.

1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் வெள்ளி விழா நிகழ்வுகளின் முக்கிய அம்சமாக மாபெரும் இராணுவக் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியின்போது இராணுவத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் பற்றிய தகவல்கள்,  புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் உட்பட போர்த் தளபாடங்கள் மற்றும் இராணுவத்திடமுள்ள யுத்த உபகரணங்கள் போன்றன காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

இக்கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 07ஆம் திகதி முடிவடையவுள்ளது. இக்கண்காட்சிக்கு 50 ரூபா கட்டணமாக அறிவிடப்படவுள்ளதோடு கண்காட்சி நடைபெறும் தினங்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் இதனைப் பார்வையிட முடியும்.
ஒக்டோபர் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள வெள்ளி விழா நிகழ்வுகள் அடுத்த மாதம் 02ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சமயக் கிரியைகளையடுத்து ஆரம்பமாகவுள்ளன.

பௌத்த சமயக் கிரியைகள் ஒக்டோபர் 02ஆம் திகதி அநுராதபுரம்,  ஜய ஸ்ரீ மகா போதி விகாரையிலும், இஸ்லாமிய சமயக் கிரியைகள் ஒக்டோபர் 05ஆம் திகதி கொழும்பு, தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளியிலும்,  இந்துசமயக் கிரியைகள் ஒக்டோபர் 06ஆம் திகதி மருதானை,  ஸ்ரீ பாலா செல்வநாயகம் மூர்த்தி கோயிலிலும், கிறிஸ்தவ சமயக் கிரியைகள் ஒக்டோபர் 07ஆம் திகதி கொழும்பு,  கத்தோலிக்க தேவாலயத்திலும் நடைபெறவுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய மீனவர் தாக்குதல் : விஜய்காந்த் இன்று டில்லியில் உண்ணாவிரதம்

இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரம், கடந்த இரு வாரங்களாக தலைநகர் டில்லியை சூடேற்றி வருகிறது. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மீண்டும் அவரவர் இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரைச் சந்தித்து முறையிட்டனர்.

நாடாளுமன்ற எம்.பி.க்கள் அடங்கிய குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது வலியுறுத்தியும், இந்த கோரிக்கை குறித்து இதுவரை, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை.

மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், இந்தக் குழு வலியுறுத்தியது. ஆனால், இந்தச் சந்திப்புக்கு பிறகு தான், தமிழக மீனவர்கள் மீது மேலும் தாக்குதல்கள் அதிகமாக தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மீனவர்கள் பிரச்சினையை முன்னிறுத்தி, விஜய்காந்த்தின் உண்ணாவிரதம் இன்று டில்லியில் நடைபெறுகிறது. டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், காலை 9.00 மணி முதல் மாலை வரை நடக்கும் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கேற்க, விஜய்காந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் டில்லி வந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை மற்றவர்கள் எல்லாம் கையில் எடுத்த நிலையில், சற்று மாற்றமாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை, விஜய்காந்த் கையில் எடுத்து டில்லியில் உண்ணாவிரதம் இருக்கவுள்ளார்.

குஜராத் அருகே கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்குப் பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்குதல் ஏதும் நடந்துவிடாமல் இந்திய கடற்படை பாதுகாப்பு தருகிறது.

தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.அப்போது மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை இந்திய கடற்படை தருவதில்லை.

இந்திய கடற்படை தமிழக மீனவர்களுக்கு ஏன் உரிய பாதுகாப்பைத் தருவதில்லை என்ற கேள்வியை, இதுவரை எந்தக் கட்சியும் எழுப்பாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

வி்டுதலை வேண்டி அ’புரம் சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதம்

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தம்மை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, திங்கட்கிழமை நண்பகல் முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்கு அரசியல் கைதிகள் கொண்டு வந்துள்ளனர்.

இரண்டு தொடக்கம் ஐந்து வருடங்கள் வரையில் எந்தவிதமான வழக்கு விசாரணைகளுமின்றி இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுகின்ற இவ்வேளையில், விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் இவர்கள் கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

தண்ணீர் மாத்திரம் அருந்தி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ள இவர்கள் நீதி அமைச்சின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நேரில் வந்து தங்களிடம் உறுதிமொழி வழங்கும் வரையில் தமது உண்ணாவிரதம் தொடரும் எனத் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் தலைவர்களாக இருக்கின்றார்கள். பல முன்னணி தலைவர்கள் இன்று அரசாங்கத்திடம் சரணடைந்துள்ளனர்.

அவர்களில் சிலர் விசாரணைகளின் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தங்களைத் தடுத்து வைத்திருப்பது குறித்து அவர்கள் பெரிதும் விசனம் தெரிவித்திருப்பதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் 43 பேருக்கு ஆதரவாக மகசின், பூஸா, வெலிக்கடை உட்பட ஏனைய சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மன்னார் அபிவிருத்தி குறித்து அமைச்சர் தலைமையில் நேற்று கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி சம்பந்தமான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை 10.00 மணியளவில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் மன்னர் மாவட்டத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளுடன் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் வீதி, மின்சாரம், விவசாயம், உட்கட்டமைப்பு போன்ற வேலைத்திட்டங்களை மீள் குடியேற்ற அமைச்சுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்வது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் நடைமுறையிலுள்ள பாதுகாப்புக் கெடுபிடிகள் தொடர்பாக மக்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசி, உடன் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தர்.

கலந்துரையாடலை அமைச்சின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என். எம். முனவ்பர் ஏற்பாடு செய்திருந்தார்

இந்தியாவின் பிரதி பாதுகாப்பு ஆலோசகராக அலோக் பிரசாத்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் இந்தியாவின் பிரதி தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நியமனத்தின் ஊடாக இந்திய தேசிய பாதுகாப்புப் பேரவையின் பிரதான பொறுப்பதிகாரியாகவும் இவர் பதவியேற்கவுள்ளார். இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே. நாராயணன் தொடர்ச்சியாக கடமையாற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மத்திய அரசாங்கத்தின் முக்கிய பாதுகாப்பு பதவிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பிரதி ஆலோசகர் பதவிகள் முக்கியமானவை என சுட்டிக்காட்டப்படுகிறது.

ஜெனீவாவில் இன்று வருடாந்த அகதிகள் மாநாடு ஆரம்பம்

வருடாந்த அகதிகள் மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.

அகதிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் இந்த மாநாடு நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன.

இதன் போது அடுத்த ஆண்டுக்கான 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கான வரவு செலவுத் திட்டம்; மற்றும் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து இந்த மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த வருடத்தில் மாத்திரம் உலகளாவிய ரீதியாக 42 மில்லியன் மக்கள் பலவந்தமாக இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

பேரவையினால் இலங்கை, சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள சுமார் 25 மில்லியன் அகதிகளுக்கு உதவியளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவு நஞ்சானதால் 40 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதி

உணவு நஞ்சானதால் சுமார் 40 பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு ஏழு பேருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் ஏனையோர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலுள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோதே இவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது

பிரிட்டிஷ், பிரான்ஸ் அமைச்சர்கள் போகொல்லாகமவுடன் சந்திப்பு

rohithaogollagama.bmpபிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னார்ட் குச்னர், பிரிட்டிஷ் வெளி விவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் ஆகியோரை அமைச்சர் ரோஹித போகொல்லாகம சந்தித்துப் பேசியுள்ளார்.

 நியூயோர்க்கில் வெள்ளியன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் நிலை தொடர்பாக ஆராயப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் செயற்படுகின்ற மனிதாபிமான அமைப்புகள் நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்களின் தேவையின் அடிப்படையில், தடையின்றிக் கிடைக்கும் வகையில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரென அமைச்சர் போகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பயங்கரவாத அமைப்பிலிருந்து சரணடைந்துள்ளவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கே இதன் போது கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் போகொல்லாகம இதன் போது குறிப்பிட்டார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் முடிவடையும் பட்சத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த முடியுமென அமைச்சர் கூறினார். கண்ணிவெடியகற்றும் பணிகளுக்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் உதவி வரும் பட்சத்தில் இன்னும் பல நாடுகளின் உதவிகள் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

இதேவேளை இனப்பிரச்சினை தீர்வுக்காக முன்வைக்கப்படவிருக்கும் அரசியல் தீர்வு குறித்தும் அமைச்சர் குச்னர் மற்றும் மிலிபான்ட் ஆகியோருக்கு விளக்கமளித்துள்ளார்.

வட மாகாணத்தில் 500 பொலிஸாரை ஆட்சேர்க்க 6500 பேர் விண்ணப்பம் – இன்றும் நாளையும் நேர்முகப் பரீட்சை

260909srilanka.jpgவடக்கில் 500 பொலிஸாரை ஆட்சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சைகள் இன்றும் நாளையும் நடைபெறுமென யாழ்ப்பாணத்துக்கான பொலிஸ் சுப்ரின்டன்ட் ஜி. எச். மாரப்பன தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, காங்கேசன்துறை, சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இந்நேர்முகப் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

செப்டெம்பர் 19 ஆம் திகதிக்குட்பட்ட காலப்பகுதியில் 6 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதில் 400 பெண்களினுடையதெனவும் யாழ். பொலிஸ் சுப்ரின்டன்ட் மாரப்பன கூறினார்.

கடந்த 03 தசாப்தங்களுக்குப் பின்னர் இப்போதே முதல் தடவையாக யாழ்ப் பாணத்தில் பொலிஸ் ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக சுட்டிக்காட்டிய அவர், அடுத்த கட்டமாக சப் இன்ஸ்பெக்டர் தெரிவுக்காக விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படுமெனவும் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸில் கடும் மழை வெள்ளம் – சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

280909.jpgபிலிப் பைன்ஸ் தலைநகரில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தை தொடர்ந்து சர்வதேச உதவியை பிலிப்பைன்ஸ் கோரியுள்ளது. கெட்சானா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் இரண்டரை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சூறாவளியை தொடர்ந்த வெள்ளத்தால் குறைந்தது 70 பேர் பலியாகியுள்ளனர். கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் இதுவே மிக அதிக அளவு பெய்த மழையாகும். பருவகால சூறாவளியால் ஒரு மாத காலத்தில் பெய்ய கூடிய மழை, ஆறே மணி நேரத்தில் தலைநகர் மணிலாவில் கொட்டியுள்ளது. இன்னும் பல இடங்களில் சிக்கி தவித்து கொண்டிருக்கும் மக்களை காப்பாற்ற மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

தலைநகர் மணிலாவில் கூரைகள் மீது அமர்ந்துள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள், படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.உள்ளூர் தொலைக்காட்சிகளில், கூரை மேல் நின்று கொண்டிருந்த மக்கள் நீரில் அடித்து செல்லப்படுவது காண்பிக்கப்படுகிறது.

தலைநகர் மணிலா மற்றும் இருபத்து நான்கு மாகாணங்களில் அரசாங்கம் பேரிடர் காலநிலையை அறிவித்துள்ளது.