அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

கிழக்கு இலங்கையில் புடவை விற்பனையில் ஈடுபட்ட மேலும் சில இந்தியர்கள் கைது

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்து சட்ட விரோதமான முறையில் துணி வியாபாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றத்தின் பேரில் ஐந்து இந்திய வியாபாரிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெற்று நாட்டிற்குள் நுழைந்து துணி வியாபாரத்தில் ஈடுபட்டதாக வாகரைப் பொலிஸார், குறிப்பிட்ட சந்தேக நபர்களை விற்பனைப் பொருட்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். வாகரையிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்து வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த இந்நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

   

பாவம் பார்த்த பாலகியையும் விட்டு வைக்காத பாம்பு – ஆனமடுவயில் நேர்ந்த பரிதாபம்

091009.jpgநாகப் பாம்பு தன்னைத் தீண்டிவிட்டதை அறியாத பதினைந்து வயது பாடசாலை மாணவி, அப்பாம்பினை கொல்ல முயன்ற தகப்பனை தடுத்து பாம்பைக் காப்பாற்றினார். எனினும் சிறிது நேரத்தினுள் அப்பாம்பின் விஷம் உடலில் ஏறியதால் அம்மாணவி பரிதாபகரமாக மரணமானார். இச் சம்பவம் ஆனமடுவ தேர்தல் தொகுதியில் உள்ள ஊரியால என்னும் விவசாயக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

நெஞ்சை உருக்கும் இச்சம்பவம் குறித்து மேலும் கூறப்படுவதாவது :- ஊரியாவ கிராமத்தில் உள்ள விவசாயியான இலங்கக்கோன் தனது குடும்பத்தாருடன் இங்கு வசித்து வருகின்றார். சம்பவம் இடம்பெற்ற தினமான செவ்வாயன்று (06.10.2009) வழக்கம் போன்று இரவு பணிகளை முடித்துக் கொண்டு படுக்கைக்குச் சென்று விட்டனர்.

இரவு சுமார் 11.30 மணியளவில் தன் மீது ஏதோ ஊர்ந்து செல்வதை அவதானித்த இலங்கக்கோன் படுக்கையை விட்டு எழுந்து பார்த்தபோது நாகப்பாம்பொன்று ஒரு மூலையில் நிற்பதை அவதானித்தார். அவ்வமயம் வீட்டிலுள்ள அனைவரும் எழுந்துவிட்டனர்.

இலங்கக்கோன் பாம்பை அடித்துக்கொல்ல முயன்ற போது அவரது மகளான சிங்கள மகா வித்தியாலயத்தில் பயிலும் 15 வயது நிரம்பிய நிரோஷா சந்திரரத்தின என்பவர் குறுக்கிட்டு பாம்பை அடிக்க வேண்டாமென்றும் அது எமக்கு எதுவிதமான தீங்கும் செய்யவில்லையே என்று கூறவும் தகப்பன் மனம் இரங்கி பாம்பை கொல்லாமல் துரத்தி விட்டார்.

இதனையடுத்து சற்று நேரத்தினுள் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், தொண்டை அடைப்பதாகவும் மகள் நிரோஷா தெரிவித்தார். சில கைமருந்துகள் செய்தும் நிலைமை மோசமாகவே புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமானார்.

பிரேத பரிசோதனையின் போது நிரோஷாவின் காலில் நாகப் பாம்பு தீண்டியதற்கான அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. மரண விசாரணை நடத்திய புத்தளம் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம். எச். எம். சபீயூ பாம்பு கடித்ததால் ஏற்பட்ட விபத்து மரணம் எனத் தீர்ப்பு வழங்கினார். வைத்திய அதிகாரி ஏ. ரவீந்திரன் பிரேத பரிசோதனை நடத்தினார்.

இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைவு

இடம் பெயர்ந்தோருக்கான வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ். பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பைத் தொடர்வதற்காக அனுப்பி வைக்கப்பட்ட மாணவர்களில், இரண்டு கால்களையும் இழந்த மாணவர் ஒருவர் யாழ். மருத்துவ பீடத்தில் இணைந்துள்ளதாகப் பல்லைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.  இந்த மாணவருக்கு யாழ். மருத்துவபீட மாணவர் ஒன்றியம் தனியான வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவருடன் இருந்து அவரது தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்

இந்த மாணவன் புதிய சூழலில் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தனது படிப்பை ஆரம்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

ஸ்டாலின் தலைமையில் இந்திய அனைத்துக் கட்சி குழு 10ஆம் திகதி இலங்கை விஜயம்

நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகளை நேரடியாக பார்வையிடும் பொருட்டு தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலைமைகளை ஆராயும் பொருட்டு அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என தமிழக அனைத்துக் கட்சிகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையிலேயே பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை அனுப்பிவைக்கும் தீர்மானத்தை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.இது தொடர்பான இறுதிமுடிவு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காந்தி வீட்டை பிரான்ஸ் சுற்றுலா நிறுவனம் வாங்கியது!

011009-gandhi.jpgதென்னா பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில், மகாத்மா காந்தி தங்கியிருந்த வீட்டை பிரான்ஸ் சுற்றுலா நிறுவனம் வாங்கியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு மகாத்மா காந்தி சென்றிருந்த போது,  ஜொகன்னஸ்பர்க் நகரில் ஆர்சர்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள வீட்டில் தான் தங்கியிருந்தார்.

இதைää காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரும்,  கட்டடக்கலை நிபுணருமான ஹெர்மன் கெலன்பாக் என்பவர் வடிவமைத்து இருந்தார். இந்த வீட்டில் தான் இருவரும் 1908ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் தங்கியிருந்தனர்.  அந்த வீட்டின் உரிமையாளரான நான்சிபால் கேப்டவுன் நகருக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளதால் காந்தி தங்கியிருந்த வீட்டை விற்பனை செய்ய முடிவு செய்தார்.

வரலாற்று புகழ் பெற்ற இந்த வீட்டை வாங்க காந்தியின் பேத்தி கீர்த்தி மேனன் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையே இந்த வீட்டை,  பிரான்ஸ் சுற்றுலா நிறுவனமான “வொயேஜர் டூ மோண்டி’ பல கோடியே ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியுள்ளது

இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து: மூவர் பலி; 19 பேர் காயம்

காலி மாவட்டத்திலுள்ள கொஸ்கொடையில் நேற்று அதிகாலை இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் உயிரிழந்திருப்பதுடன் 19 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து காலி நோக்கிச் சென்ற தனியார் பயணிகள் பஸ்ஸ¤ம் காலியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இபோச பஸ்ஸ¤ம் ஒன்றுடனொன்று மோதியுள்ளன. விபத்தில் தனியார் பஸ்ஸின் சாரதி உட்பட மூவர் உயிரிழந்திருப்பதுடன்.

இரண்டு பஸ்களிலும் பயணித்தவர்களுள் 19 பேர் காயமடை ந்திருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கொல்லப்பட்ட மூவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர். காயமடைந் தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்தா முல்லருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு

08-herta-mueller.jpgருமேனி யாவில் பிறந்த ஜெர்மனி எழுத்தாளர் ஹெர்டா முல்லருக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

56 வயதாகும் ஹெர்தா, 1987ம் ஆண்டு ருமேனியாவிலிருந்து ஜெர்மனிக்கு இடம் பெயர்ந்தவர். 1982ம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கியவர். அப்போது வெளியான இவரது சிறுகதைத் தொகுப்பான நிடருங்கன் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்தத் தொகுப்புக்கு ருமேனிய அரசு அப்போது தடை விதித்தது.

இருப்பினும் இந்தத் தொகுப்பின் தணிக்கை செய்யப்படாத பதிப்பு 1984ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு ருமேனியாவில் ஒப்ரசிவ் டோங்கோ என்ற படைப்பை வெளியிட்டார் ஹெர்தா. இதுவும் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

ருமேனியாவில் இவரது படைப்புகளுக்கு பெரும் எதிர்ப்புகள், விமர்சனங்கள் எழுந்தபோதிலும் கூட ஜெர்மனியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருக்கிறது -வோல்டர் கெலீன்

210909walter-kalin.jpgதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும், அப்பாவி பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்ளப் போகின்றதென ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. முகாம்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் அகதிகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலீன் பிபிசிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

வவுனியா உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுடன் புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாகவும், அவர்களை வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் வரையில் பொதுமக்களை மீளக் குடியேற்ற முடியாது எனவும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. எனினும், புலிகளையும் பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அரசாங்கத்தின் வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தாம் உணர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மக்களை மீள் குடியேற்றுவது குறித்த சரியான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சனல் 4 வீடியோ தொடர்பான இராணுவ விசாரணைகளை அரசு இதுவரை நடத்தவில்லை : மங்கள சமரவீர

mangala2222.jpgஇலங்கை இராணுவம் இன்று உலகில் பிரபல்யம் வாய்ந்த ஒரு படையணியாகப் போற்றப்பட்டாலும்,   இராணுவத்தின் 60 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டாலும்,  இன்று சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பல குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பில் எவ்வித விசாரணைகளும் நடத்தப்படவில்லை” என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மக்கள் பிரிவின் அமைப்பாளரும் எம்பியுமான மங்கள சமரவீர இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  “இராணுவத்தினர் 1982களில் கதிர்காம ரூபசுந்தரி என்ற பெண்ணைத் துஷ்பிரயோகம் செய்ததாக லெப்டினன் ஜெனரலாக இருந்த அல்பட் விஜயசூரிய மீது குற்றஞ் சுமத்தப்பட்டது. இவர் மீது விசாரணை நடத்தப்பட்டு,  சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. 1970-1980 களில் நாட்டின் இறைமையைப் பாதுகாக்க இரணுவத்தினர் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் கடந்த 20 வருட காலமாக நிலவிய யுத்தத்தின் போதும் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.மேலும் பலர் அங்கவீனர்களாயினர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் மேலும் 1994 ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் பொல்கொல்லை கங்கையில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பான நபர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 1996இல் இராணுவத்தினரால் கிரிஷாந்தி குமாரசுவாமி என்ற மாணவி மீதான துஷ்பிரயோக வழக்கில் பல இராணுவத்தினர் தொடர்புபட்டிருந்தனர். இவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உலகிலுள்ள சிறந்த இராணுவப் படைகளுக்கு எதிராகவும் கூட எத்தனையோ குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. உலகில் சிறந்த இராணுவமாகக் கருதப்படும் அமெரிக்க இராணுவத்தினர் மீதும் பல குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் எழும்போதெல்லாம்இ உரிய விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு எதிராக அந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது இவ்வாறிருக்க,  எமது இராணுவத்தினர் 60 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் போது,  வரலாற்றில் இல்லாத பல குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பில் எமது இராணுவத்தினர் மீதும் அரசு மீதும் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த அரசாங்கமோ இது தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் இதுவரை நடத்தவில்லை. இது எமது இராணுவத்தினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயலாகும்.

சனல் 4 வீடியோ தொடர்பில் இராணுவத்தினர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்கெதிராகவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆரம்பத்தில் தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினர் பற்றிக் கதைத்தாலும் தற்போது அவர்களைப் பற்றி எவருமே பேசுவதில்லை. யுத்தத்தை வெற்றிகொண்டவர்களை மறந்து விட்டார்கள் என்றார்.

நியூஸிலாந்திலும் பிலிப்பைன்ஸிலும் இன்று காலை பயங்கர நிலநடுக்கம்

நியுஸிலாந்தின் தெற்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. சான்டோ தீவிலிருந்து வடமேற்கே 294 கி.மீட்டரிலும் போர்ட்விலாவிலிருந்து வடமேற்கே 598 கி.மீ. தொலைவிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.
 
நில நடுக்கம் உணரப்பட்ட அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவானது. இதனால் ஆஸ்திரேலியாää நியுஸிலாந்துää பிஜி உள்ளிட்ட 11 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னர் சில மணி நேரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. நில நடுக்கம் காரணமாக பல இடங்களில் தகவல் துண்டிக்கப்பட்டுள்ளதால் சேத விபரம் குறித்து அறிவதில் சிக்கல் நீடித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை பிலிப்பைன்சிலும் இன்று அதிகாலை பயங்கர நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.7 ஆக பதிவாகி உள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நில நடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச் சேதம் குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை