அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

தென்மாகாண சபையின் முதலாவது அமர்வு பலத்த சர்ச்சையின் பின் தவிசாளர் தெரிவு

தென் மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு நேற்று இடம்பெற்றபோது சபையின் தவிசாளரை தெரிவு செய்வதில் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. தவிசாளர் பதவிக்கு பிரேரிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் சபையின் நடுவில் நின்று சட்டபூர்வமாக தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் அவரது பதவிக்குரிய ஆசனத்தில் அமரவிடாது தடுத்ததுடன் கூச்சல் குழப்பத்திலும் ஈடுபட்டார். இதனையடுத்தே சர்ச்சை நிலை ஏற்பட்டது.

தென்மாகாண சபையின் முதலாவது கூட்ட அமர்வு நேற்றுக் காலை 9.30 மணிக்கு மாகாண சபையின் அவைச் செயலாளர் தயானந்த தலைமையில் கூட்டப்பட்டது. மாகாண சபை கூட்ட அறிவித்தலை அவைச் செயலாளர் சபைக்கு அறிவித்தார். அத்துடன், ஆறாவது தென் மாகாண சபைக்கான புதிய தவிசாளர் ஒருவரை தெரிவு செய்யும் படி அவர் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தென்மாகாண சபையின் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, மாகாண சபையின் புதிய தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர் மொஹான் பீ. சில்வாவை நியமிக்குமாறு பிரேரித்ததுடன் அதனை மாகாண சபை உறுப்பினர் அருண குணரத்ன ஆமோதித்தார்.

மாகாண சபைக்கு புதிய தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர் நிசாந்த முதுஹெட்டிகமவை நியமிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மனுச நாணயக்கார பிரேரித்ததுடன், அதனை அதே கட்சியைச் சேர்ந்த மைத்ரி குணரத்ன ஆமோதித்தார். இதனையடுத்து சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

தென்மாகாண சபையின் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா சபையில் எழுந்து முதுஹெட்டிகம இதுவரையில் சட்டரீதியாக சத்தியப் பிரமாணம் செய்யவில்லை என்பதால் அவரது பெயரை ஒதுக்கி விட்டு, மோஹான் பீ சில்வாவை மாகாண சபையின் புதிய தவிசாளராக தெரிவு செய்துள்ளதாக அறிவிக்குமாறு அவைச் செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

அதனையடுத்து மொஹான் பீ சில்வா தென்மாகாண சபையின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரகடனம் செய்யப்பட்டது.

புதிய தவிசாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள மொஹான் பீ சில்வா மாகாண சபையின் தவிசாளர் ஆசனத்துக்கு செல்ல முற்பட்டதும் நிசாந்த முதுஹெட்டிகம ஓடிச் சென்று தவிசாளர் ஆசனத்தில் பலாத்காரமாக அமர்ந்து கொண்டார்.

இந்நிலையில் மாகாண சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் மிகவும் கஷ்டப்பட்டு முதுஹெட்டிகமவை தவிசாளர் ஆசனத்திலிருந்து ஒதுக்கியதுடன் கூச்சல்களுக்கு மத்தியில் புதிய தவிசாளர் அவரது தவிசாளர் பதவிக்கான தலைமை ஆசனத்தில் அமர்ந்து சபையின் நடவடிக்கைகளை முன்னெடுக்க முற்பட்டார்.

அப்போது நிசாந்த முதுஹெட்டிகம அவரது ஆசனத்திலிருந்த ஒலிவாங்கியை உடைத்தெடுத்த வண்ணம் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவையும் மாகாண சபையின் அவை செயலாளரையும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார். அப்போது அங்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.

இக்கூச்சல்களுக்கு மத்தியில் மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் மாத்தறை மாவட்ட உறுப்பினர் திரு விஜய தஹநாயக்காவின் பெயரை முதலமைச்சர் பிரேரித்தார். அதனை, அம்பாந்தோட்டை மாவட்ட ஆளும் தரப்பு உறுப்பினர் ஆனந்த விதானபத்திரண ஆமோதித்தார்.

இந்நிலையில் மீண்டும் பிரதித் தவிசாளர் பதவிக்கு நிசாந்த முதுஹெட்டிகமவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் மனுஷநாணயக்கார பிரேரித்ததுமே முதுஹெட்டிகம சபையில் சப்தமிட்டு சபையை விமர்சிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து ஜே.வி.பி. உறுப்பினர் நலின் ஹேவகே சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் மீண்டும் மீண்டும் கூச்சலும் குழப்பமும் அதிகரித்தது.

தவிசாளர், மொஹான் டி சில்வா மாகாண சபையின் பிரதி தவிசாளராக விஜய தஹநாயக்கா தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சபைக்கு அறிவித்ததுடன் கூட்ட அமர்வை எதிர்வரும் 19ம் திகதி வரை ஒத்திவைத்தார். நேற்றைய தினம் தென் மாகாண சபையின் கட்டடம் அமைந்துள்ள காலி கலேகான், போபே வீதி உட்பட அப் பிரதேசமெங்கும், பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

நிஷாந்த முதுஹெட்டிகம, ஜனாதிபதியின் ஆலோசகரும் பிரபல ஜோதிடருமான சுமனதாஸ அபேகுணவர்தன (அகில இலங்கை சமாதான நீதவான்) முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என சபையில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக தென்மாகாண சபை தவிசாளரின் உத்தியோகபூர்வ அறையில் நிஷாந்த முதுஹெட்டிகம தென்மாகாண சபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அடுத்துவரும் தேர்தல் வெற்றிகள் அரசின் ஸ்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும்

061109pm.jpgதேவையான போது தேவையான தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானிப்பதுடன் எந்தத் தேர்தலானாலும் அதனை நடத்தவும் அதனை எதிர்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே உள்ளதென பிரதமர் ரட்ணசிற விக்கிரமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கம் பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்து மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது. மக்கள் மாகாண சபைத் தேர்தல் மூலம் அதற்குப் பதிலளித்தனர். அடுத்துவரும் தேர்தல் வெற்றிகள் அரசாங்கத்தின் ஸ்திரத்தை மேலும் உறுதிப்படுத்தும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் மக்கள் சேவையை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. இதற்குப் பிரதிபலனாக அடுத்து என்ன தேர்தல் வந்தாலும் மக்கள் உரிய பதிலளிப்பர்.

அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று அரசாங்கம் மக்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கையுடன் அரசு தொடர்ந்து முன்னேறுவது உறுதி. அரசாங்கத்தின் எதிர்கால அபிவிருத்திப் பயணத்தில் மேலும் பல பில்லியன் ரூபா நிதிச் செலவில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் பல அடுத்தடுத்த வருடங்களில் நிறைவு பெறுவதுடன் அதன் பயனை மக்கள் அனுபவிப்பர்.

நாட்டை சுய உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்து வெளிநாட்டிற்குச் செல்லும் நிதியைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் பிரதான பாலங்கள் பல புனரமைக்கப்பட்டும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டும் உள்ளன.

இதற்கு 4,94,378 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளதுடன் அடுத்த வருடத்திற்குள் நாட்டில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான மக்களுக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் 2011ம் ஆண்டில் நிறைவு பெறுவதுடன் இதற்கென தேசிய நிதி 1500 மில்லியன் ரூபாவும் வெளிநாட்டு நிதி 8456 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளன.

மேலும் சீன அரசாங்கத்தின் 50,000 மில்லியன் நிதியுதவியுடன் இத்திட்டம் நிறைவுபெறவுள்ளது. அதேபோன்று திருகோணமலையில் 52,000 மில்லியன் ரூபா செலவில் புதிய மின் உற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

மேல் கொத்மலை நீர்மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருடத்தில் நிறைவடைகிறது. இதற்கென அரசாங்கம் 5952 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. இதற்கென கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் 4,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் 32,267 மில்லியன் ரூபாவை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

இத்தகைய பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நாடெங்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது. அரசாங்கம் மக்கள் நம்பிக்கையுடன் தமது பயணத்தைத் தொடரும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற 3174 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம்

அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற 3174 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இதற்கான அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவிக்கிறது.

தற்போது தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 3175 அழகியற் கல்வி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கத்துடனேயே கல்வி அமைச்சு மேற்படி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளது.

சித்திரம், நடனம், சங்கீதம், நாடகம் போன்ற அழகியற் கல்வித் துறைக்கு மேற்படி 3174 பட்டதாரிகளும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன்படி தேசியப் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளும் பட்டதாரிகள் கல்வி அமைச்சினூடாகவும், மாகாண பாடசாலைகளுக்கு மாகாண கல்வி அமைச்சினூடாகவும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் படியே வர்த்தமானி அறிவித்தல் வெளி யிடப்படும்.

அழகியற் கல்வியில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக் கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.

இவ்வாறு புதிய ஆசிரியர் நியமனங்கள் நிரப்பப்படுவதற்கு முன்ன தாக பாடசாலைகளில் நிலவும் மேலதிக ஆசிரியர்கள் தொடர்பாக விபரங்கள் பெறப்பட்டு நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களின் சமநிலை பேணவும் கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

இடைக்கால கணக்கறிக்கை நிறைவேற்றம்!

parliament.jpgஅரசாங் கத்தால் சமர்பிக்கப்பட்ட இடைக்காலக் கணக்கறிக்கை இன்று பாராளுமன்றத்தில் 47 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று மாலை நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 78 வாக்குகளும் செலுத்தப்பட்டன.

ஜீ. எஸ். பி. சலுகைக்காக எதையும் செய்யத் தயாராகக் கூடாது – அமைச்சர் பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

ஜீ. எஸ். பி. சலுகையைப் பெறுவதற்காக நாம் எதையும் செய்யத் தயாராகக் கூடாது. பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இது விடயத்தில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியுள்ளது என அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு தொடந்து கருத்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கான சலுகை என்பதால் ஓரளவு வளைந்து கொடுக்க முடியுமே தவிர முழுமையாக சர்வதேசத்திடம்  மண்டியிட முடியாது. அரசாங்கம் சட்டங்களையும் பொது விதிமுறைகளையும் மதிக்கிறது. உதாரணமாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வீதித் தடைகளை நீக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்வொன்றை வழங்கியிருந்தது.

எனினும் அது தவறான முடிவென்பதை அரசாங்கம் உணர்ந்தது. அமைச்சரவை கூடி இது விடயத்தில் கலந்துரையாடியும் காலத்துக்குப் பொருந்தாத தீர்ப்பு எனினும் நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்து அதனை செயற்படுத்தியது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

துணுக்காய், முழங்காவில் பிரதேசங்களுக்கு ஜனாதிபதி நேற்று திடீர் விஜயம். ‘நான் உங்கள் சொந்தக்காரன்’: மக்களுடன் தமிழில் உரையாடினார்

0511mainpic.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள துணுக்காய்க்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முழங்காவிலுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திடீர் விஜயம் மேற்கொண்டார்.

துணுக்காய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தில் வைத்து மனிதாபிமான நடவடிக்கைக்குப் பங்களித்த முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட படை வீரர்களை சந்தித்த ஜனாதிபதி முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் விஜயம் செய்தார்.

துணுக்காய் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டு வரும் பெருந்திரளான மக்களை துணுக்காய் 65 ஆவது படைப் பிரிவு தலைமையத்தில் வைத்து ஜனாதிபதி சந்தித்தார். மேடைக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர், கிளிநொச்சி, முல்லைத்தீவு கட்டளையிடும் தளபதிகள், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்றப்படும் மக்கள் மத்தியில் தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரை முடிவடைந்த பின்னர் அவர்களின் அருகில் சென்று மக்களுடன் சுமுகமாக உரையாடினார். மக்களின் பலத்த கரகோஷத்துக்கு மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்தத் தேசத்தை மீண்டும் ஒரே தேசிய கொடியின் கீழ் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார். ‘நான் உங்களின் தோழன்; சொந்தக்காரன்; நீங்கள் என்னை நம்பலாம்; உங்களுக்கு சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் எனவும் ஜனாதிபதி கூறினார். மேலும் உரையாற்றிய ஜனாதிபதி :-

உங்களை மீளக் குடியமர்த்துவது போல ஏனைய மக்களையும் விரைவில் குடியமர்த்த உள்ளோம். அதற்காக முதலில் மிதிவெடிகளை அகற்ற வேண்டும். அந்தப்பணியை துரிதமாக பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீங்கள் நீண்டகாலமாக அனுபவித்த கஷ்டங்களை நான் நன்கு அறிவேன். பயங்கரவாதிகள் உங்களை தவறான பாதையில் இட்டுச் சென்றனர். அதனால் நீங்கள் அங்கும் இங்குமாக கஷ்டப்பட நேரிட்டது. எமது மக்களுக்கு சொந்த நாட்டிற்குள் அகதிகளாக இடம்பெயர நேரிட்டது.

இது எமது நாடு. இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒரே தாயின் பிள்ளைகளாக வாழ வேண்டும். இங்கு இன, மத, குல, பிரதேச வேறுபாடு இருக்க முடியாது. எமது பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம். இந்த நாட்டின் மீது அன்பு காட்டும் அனைவரும் இலங்கை மக்களே. நீங்கள் பணயக் கைதிகளாக்கப்பட்ட அந்த கஷ்ட காலம் இனி கிடையாது. புதிய வாழ்க்கை உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இந்த நாட்டில் வாழும் சகல மக்களையும் பாதுகாக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.

அதனை நிச்சயம் நான் நிறைவேற்றுவேன். சகல மக்களும் பயம், சந்தேகம் இன்றி வாழவேண்டும். நீங்கள் சம உரிமையுடன் வாழும் சூழல் உருவாக்கப்படும். துப்பாக்கிக் கலாசாரம் மீண்டும் தலைதூக்க இனியும் இடமளியோம். வடக்கு வசந்தம் திட்டத்தினூடாக இதற்கு முன்பு காணாத அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இடம்பெயர்ந்த சகல மக்களுக்கும் நிச்சய மாக வீட்டு வசதி வழங்கப்படும். சகலருக்கும் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் உருவாகும். ங்கள் பிள்ளைகள் தான் உங்கள் சொத்து. அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். அதனூடாக அவர்கள் நாட்டில் முக்கிய பதவிகளை பெற வேண்டும்.

நீங்கள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்றார்.

அடுத்து முழங்காவில் 651 ஆவது படைப் பிரிவு தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி படைவீரர்களை சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்தார். சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் இங்கு குழுமியிருந்தனர். அதனைத் தொடர்ந்து முழங்காவில் ஆஸ்பத்திரிக்கும் ஜனாதிபதி விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தார்.

எவ்வித விசாரணையுமின்றி ஜெனரல் பொன்சேகா நாடு திரும்பினார்

031109sarathfonseka.jpgபிரதான பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா நேற்று புதன்கிழமை காலை அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியுள்ளார். இவர் நாடு திரும்புவதற்கு முன்னதாக அமெரிக்காவின் உள்துறை பாதுகாப்பு திணைக்களத்தினாலோ அல்லது அமெரிக்க அரசாங்கத்தின் ஏனைய முகவர் அமைப்புக்களினாலோ எவ்வித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி நேற்றுத் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவை நேற்று 04 ஆம் திகதி ஒக்லாமா சிட்டியில் இடம்பெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அந்நாட்டின் உள்துறை பாதுகாப்பு திணைக்களத்திடமிருந்து அவருக்கு கடந்த மாத இறுதியளவில் எழுத்து மூலமான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெனரலை உள்துறை பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவர் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டிருந்தார்.

இதற்கிடையில் பிரதான பாதுகாப்பதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா எவ்வித கேள்விகளுக்கும் உட்படுத்தப்படாமல் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருந்தது.

இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-இலங்கை அரசாங்கமும், ஜனாதிபதியும் பிரதான பாதுகாப்பு அதிகாரியின் சார்பாகவே எப்போதும் இயங்கும் என்பதில் முப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியுமான பாதுகாப்பு செயலாளர் மற்றும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஆகியோர் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளனர்.

உயர் பதவியை பலவீனப்படுத்தவோ அதன் மதிப்பை குறைக்கச் செய்யவோ ஒருபோதும் இடமளிக்கமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக ரோஹித்த போகொல்லாகம கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

பாதுகாப்பு படையினருக்கு உடனடி சம்பள அதிகரிப்பு

சகல பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நேற்று புதன்கிழமை முதல் அமுலாகும் வகையில் உடனடியாக சம்பள உயர்வு வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தாய் நாட்டை பயங்கரவாதப் பிடியில் இருந்து மீட்டு அனைத்து மக்களும் ஐக்கிய இலங்கையினுள் ஒன்றாக வாழும் நிலையை உருவாக்கிய படை வீரர்களை கெளரவிக்கும் வகையிலே சம்பள உயர்வு வழங்க முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.

கிளிநொச்சி, முழங்காவில் பகுதிக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு படைத்தளங்களில் பணிபுரியும் சுமார் 4 ஆயிரம் படை வீரர்கள் முன்னிலையில் உரையாற்றியபோதே ஜனாதிபதி படைவீரர்களுக்கான சம்பள அதிகரிப்பு பற்றிய தகவலைத் தெரிவித்தார்.

பாடசாலை சீருடை விநியோகம் நாளை ஆரம்பம். முதல் தொகுதி யாழ்குடாவுக்கு

பாடசாலை மாணவர்களுக்கான 2010 ஆம் ஆண்டுக்கான இலவச சீருடை விநியோகம் நாளை முதல் ஆரம்பமாகின்றது. இதன் முதல் தொகுதி ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

1200 மில்லியன் ரூபா செலவில் நாற்பது லட்சம் மாணவர்களுக்கான நான்கு வகையான,  65 லட்சம் சீருடைகளை விநியோகிக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதிலுள்ள 92 வலய கல்வி காரியாலயங்களுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இரண்டு லட்சம் சீருடைகள் அடங்கிய முதல் தொகுதி நாளை ஏ-9 வீதியூடாக யாழ். வலயக் கல்வி காரியாலயத்துக்கு வைபவ ரீதியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது. 7 லட்சம் ரூபா போக்குவரத்து செலவில் இவை அனுப்பி வைக்கப்படவுள்ளன.சீருடை விநியோகத்துக்காக பத்து மில்லியன் மீட்டர் துணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அரசாங்க பாடசாலை  மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தக விநியோகத்தை உத்தியோகபூர்வமாக இம்முறை யாழ்ப்பாணம் வேம்படி மகா வித்தியாலயத்தில் டிசம்பர் 07 ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அன்றைய தினத்திலேயே சீருடைகளையும் வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. 

வடக்கில் 397 பாடசாலைகளை புனரமைக்க ரூ. 200 மில்லியன்

வட மாகாணத்திலுள்ள 397 பாடசாலைகளைப் புனரமைக்கவென 200 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.)யின் பாராளுமன்ற உறுப்பி னர் ஆர். பி. ஏ. ரணவீர பத்திரன கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதேநேரம் இடம்பெயர்ந்துள்ள சகல மாணவர்களுக்கும் டிசம்பர் மாதம் 7ம் திகதிக்குள் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். இவர்களுக்கென 130 மில்லியன் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.