அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

யாழ்ப்பாணம் தனிநாடா? ரவி கருணாநாயக்கவின் சந்தேகம்

sri-lankan-parliament.jpgஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக பிரதியமைச்சர் அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். அவ்வாறெனில் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடாவென ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட ஒழுங்குப் பிரச்சினையொன்றின்போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கேள்வியெழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது; ஒரு அமைச்சர் வெளிநாடுசெல்லும்போதுதான் அவரின் அமைச்சுப் பொறுப்புக்குப் பிரதியமைச்சர் நியமிக்கப்படுவதும் அவர் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பதும் வழமை. ஆனால், பாரம்பரியக் கைத்தொழில்கள்,சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் சென்றதற்காக அவரின் அமைச்சுப் பொறுப்பைப் பிரதியமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்து ஏற்றுக்கொண்டுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா அமெரிக்கா செல்லவுள்ளதாலே இப்பதவிப் பிரமாணம் எனக் கூறப்பட்டது. ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமெரிக்கா செல்லவில்லை. யாழ்ப்பாணம் தான் சென்றார். அவ்வாறானால் யாழ்ப்பாணம் ஒரு தனிநாடா? அரசாங்கம் யாழ்ப்பாணத்தைத் தனிநாடாக ஏற்றுக்கொண்டுவிட்டதா? என்பது தொடர்பில் சபாநாயகர் தெளிவுபடுத்த வேண்டும்.

அத்துடன், இன்று ஒரு அமைச்சுக்கு இரு அமைச்சர்கள் உள்ளனர். இதில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரா அல்லது அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரதியமைச்சர் அமைச்சரா என்பதையும் கூற வேண்டும் என்றார்.இதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ. இது தொடர்பில் தனக்கு எந்தவித அறிவிப்புகளும் வரவில்லை என்று கூறினார்

திருகோணமலை சிறைச்சாலையில் நேற்று “தீ”

திருகோணமலை சிறைச்சாலையில் நேற்று காலை கைதிகள் கோபமுற்ற நிலையில் தங்களது படுக்கை விரிப்புக்களை தீயிட்டு எரித்ததன் விளைவாக அங்கு விரைவாக தீப்பற்ற தொடங்கியது.

திருகோணமலை சிறைச்சாலை யில் நேற்று அதிகாலை சிறைச் சாலை அதிகாரிகளால் கைதிகளை சோதனையிட்ட பொழுது அங்கு கைதிகளிடமிருந்து இரண்டு கையடக்கத் தொலைபேசி மற்றும் பணமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை கண்டித்து கோபமுற்ற நிலையில் கைதிகள் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந் நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் அப் பகுதி கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீ அணைப்பு படையினர் சென்று தீயை அணைத்துள்ளனர். இத் தீ ஏனைய இடங்களுக்கு பரவாமல் உடைமைகள் உயிர் சேதங்கள் ஏற்படாதவாறு காப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றன.

வடமாகாணத்தில் 120 பாடசாலைகள் தரமுயர்வு

cc.jpgவடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 120 பின்தங்கிய பாடசாலைகளே இவ்வாறு தரம் உயர்த்தப்படவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள ஆயிரம் பின்தங்கிய பாடசாலைகளை மத்திய கல்லூரி தரத்திற்கு மேம்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சருக்கும், மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது தீர்மானிக்கப் பட்டதாகத் தெரி வித்த அவர், இவற்றில் வடக்கிலுள்ள 120 பாடசாலைகளை மேம்படுத்த இணக்கம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

வட மாகாணத்தின் கல்வித்துறையை மேம்படுத்தத் தேவையான சகல நடவடிக்கைகளையும், அரசாங்கமும், மாகாண அமைச்சும் மேற்கொண்டுள் ளதாக ஆளுநர் தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கம் நடைமுறையில் வரவுள்ள இத்திட் டம் நான்கு ஆண்டு காலத்திற்குள் நிறைவடை யவுள் ளது என்றார். வட மாகாணத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஐந்து பாட சாலைகளும், மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் 1006 பாடசாலைகளும் உள்ளதாக தெரிவித்த அவர், இவற்றில் 82 பாடசாலைகள் இன்னும் மீள திறக்கப் படாமல் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி னார். ஐந்து கிராமங்களிலிருந்து ஒரு பாடசாலை என்ற அடிப்படையில் மாவட்டமொன்றி லிருந்து 20 தொடக்கம் 30 பாடசாலைகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது.

பின்தங்கிய 20 பாடசாலைகளையும் சம்பந்தப்பட்டவர்களின் உதவியுடன் தானே தேர்ந்தெடுத்து அதற்கான சிபாரிசு களை கல்வி அமைச்சுக்கு அனுப்பவுள் ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். இத்திட்டத்தின் மூலம் வடமாகாணத்திலு ள்ள பாடசாலைகள் மேம்படுத்தப்பட வுள்ளதுடன் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் நன்மையடைய வுள்ளனர். இதேவேளை, பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சிறந்த பாடசாலைகளைத் தேடி அலையும் சிரமத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும் என்று ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப் படும் பாடசாலைக்குத் தேவை விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடங்கள், நூலகம், கணனி அறைகள், பெளதீக வளங்கள், ஆசிரியர்கள் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன் மேற்படி பாடசாலைகளின் மாணவர்களின் எண்ணிக்கையும் 1500 ஆக அதிகரிக்கப்படும் என்றும் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் மூடப்பட்டுள்ள சுமார் 82 பாடசாலைகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பின்னர் விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தகவல் தருவோருக்கு ரூ. 25 இலட்சம் சன்மானம்

பேலியகொடையில் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்ற 7 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வழங்கு வோருக்கு 25 இலட்சம் ரூபாவை சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்பு டைய குற்றவாளிகளை கைது செய்வதற்கு தேவையான சரியான தகவல்களை வழங்குபவருக்கே இந்தச் சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

அவ்வாறு தகவல் தெரிந்தவர்கள் 011-2662311, 011-2662323, 011-2685151 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொலிஸ் திணைக்களம் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பணமாற்ற (டெல்லர்) இயந்திரங் களில் வைப்பதற்காக வாகனம் ஒன்றில் 7 கோடி ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு செல்லப்பட்ட போது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற் றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற் கொள்ளவென பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் உத்தரவின் பேரில் 5 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.

லண்டன் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா

Selvarajah_Nஇலண்டன் ஆங்கிலோ தமிழ்ச் சங்கம் 21 ஆண்டுகளாக நடத்திவரும் வடக்கு லண்டன் தமிழ்ப் பாடசாலையின் வருடாந்த கலைவிழா நேற்று 25.09.2010 என்பீல்டில் நடைபெற்றது. லீவலி உயர் தர பாடசாலையில் (Leavalley High School Hall, Bullsmoor Lane, Enfield EN3 6TW) 25.09.2010 சனிக்கிழமை மாலை 5.30முதல் இரவு 10.30 வரை நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக, நூலகவியலாளர் திரு என்.செல்வராஜா கலந்துகொண்டார்.

பேச்சு, கவிதை, வாய்ப்பாட்டு. நடனம், விசைப்பலகை, மிருதங்கம், வயலின், நாடகம், தனி நடிப்பு, மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து வழங்கும் வாத்திய இசை நிகழ்ச்சி என்பன கலைவிழாவில் நடைபெற்றன.

தமிழர் மேம்பாட்டுப் பேரவையினர் நடத்தும் வருடாந்த தமிழ் மொழிப் பரீட்சையில் அதி உயர் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் அன்றையதினம் நடைபெற்றது.

இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச் சங்கத்தின் தலைவராக திரு.க.புவனேந்திரனும், உபதலைவராக திரு.க.மதிசூடியும், செயலாளராக திருமதி சந்திரா இரவீந்திரகுமார் அவர்களும், உப செயலாளராக திருமதி தி.குணரத்தினம் அவர்களும் இயங்கி வருகின்றனர்.

தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் – பான் கீ மூன்

mainpic1.jpgஇலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடையாதென்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பின்போதே பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையுடனான எதர்கால உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியே நிபுணர் குழு தமக்கு ஆலோசனை வழங்கு மென்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் எதுவும் அதற்குக் கிடையாதென்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் லுசியன் ராஜகருணாநாயக்க நியூயோர்க்கிலிருந்து தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்துவதற்காக மேற்கொண்ட துரித நடவடிக்கைகளை ஐ. நா. செயலாளர் பாராட்டியதுடன், புலிகள் இயக்கத்தினரால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளிக்க மேற் கொண்ட நடவடிக்கைகளையும் பான் கீ மூன் பாராட்டியுள்ளார்.

புத்தாயிரமாம் ஆண்டின் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கான முன்னேற்றத்தையும் அதற்கான செயற்பாடுகளையும் அவர் பாராட்டியுள்ளார். அரசியல் தீர்வு, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை ஆகிய விடயங்கள் குறித்தும் ஜனாதிபதிக்கும் ஐ. நா. செயலாளருக்குமிடையிலான சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நீண்ட நாளைய முரண்பாடுகளுக்கான காரணத்தையும் அவை மீண்டும் ஏற்படாதிருப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்காக பொறுப்புக் கூறும் தன்மையின் கொள்கைகளுக்கு அமைவாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ அந்தக் குழு முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஆணைக்கு விசாரணை மேற்கொண்டமை குறித்தும் ஜனாதிபதி விபரித்துள்ளார். இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குமான தகவல்களை எந்தத் தனி நபரோ அல்லது அமைப்போ கொண்டிருந்தால் அதனைச் செவிமடுப்பதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிப்பதற்காக நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று இக்குழு தனது இடைக்கால அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். புலிகள் தோற்கடிக்கப்பட்டு கடந்த 16 மாதங்களில் 90% மீள்குடியேற்றம் நிறைவடைந்துள்ளதுடன், யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் ஐ. நா. சபையும் அதன் முகவர் அமைப்புகளும் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இரண்டு தேர்தல்களிலும் ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள வெற்றி குறித்து ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த அரசியல் ஸ்திரத்தன்மையின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடு சிறந்த இலக்கை அடையுமென்று தெரிவித்துள்ளதுடன் தேசிய தலைவரொருவர் மூன்றிலிரண்டுக்கும் கூடுதலான பெரும்பான்மையைப் பெறுவது அரிதாகவே இடம்பெறும் எனவும் இதனை ஜனாதிபதி பெற்றிருப்பது அவரது தலைமைத்துவ தகைமைக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘லயன்’களை இடித்து தரைமட்டமாக்கி கிராமங்களை உருவாக்கும் திட்டம்

sri-lanka.jpgமலையகப் பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களின் ‘லயன்’ வரிசைக் குடியிருப்புகளை இடித்தழித்துவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமங்களை அமைப்பதற்கு விரைவில் அடித்தளமிடப் படவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இந்தியா வழங்கும் ஆறாயிரம் வீடுகளைக் கொண்டு, ‘லயன்’ குடியிருப்புகளைத் தரைமட்ட மாக்கிவிட்டுத் தனித் தனி வீடுகளைக் கொண்ட கிராமம் உருவாக்கப்படுமென்று பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வருட இறுதிக்குள் இதற்கான அத்திவாரம் இடப்படுமென்றும் மூன்றாண்டுகளுக்குள் ஆறாயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு விடுமென்றும் பிரதியமைச்சர் கூறினார். தோட்டங்களில் கிராமங்களை அமைப்பதற்காகத் தொழி லாளர்களின் ‘லயன்’ வரிசை குடியிருப்புகள் தொடர்பான மதிப்பீடொன்றை மேற்கொள்வதாகத் தெரிவித்த பிரதியமைச்சர், முதற் கட்டமாக எந்தத் தோட்டத்தில் எத்தனை வீடுகள் அமைக்கப்படும் என்பதைப் பற்றிப் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

‘தேயிலைத் தோட்டத் தொழிற்துறை படிப்படியாக நலிவடைந்து வருகிறது. இலங்கையிலும் இதே நிலைதான்.  இன்னும் பதினைந்து ஆண்டுகளில் தோட்டத் தொழில் அருகி விடக்கூடும். அதற்கு முகங் கொடுக்கும் வகையில் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, வாழ்வாதாரம் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்றார்.

207,761.81 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்

sri-lankan-parliament.jpg2009ஆம் ஆண்டில் அரசாங்கம் 207,761.81 மில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன் பெற்றுள்ளது.

2009ல் 93,389.86 மில்லியன் ரூபா கடன் மீள்கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளது என நேற்று சபையில் அறிவிக்கப்பட்டது.

ஜே. வி. பி. எம்.பி. எழுப்பிய வாய் மூல விடைக்கான கேள்விக்கான பதில் நேற்று சபையில் சமர்ப்பிக்கப் பட்டது.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தக் கடன்கள் தொடர்பில் நிபந்தனை எதுவும் முன்வைக்கப்படவில்லை.

முஸ்லிம்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை – ஆளுநர் அலவி மெளலானா

alevi.jpgஇலங் கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் எந்த பயங்கரவாத இயக்கமோ அல்லது ஆயுதக் குழுக்களோ இங்கில்லை. முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பிரசுரிக்கின்றன.

ஊடகங்கள் செய்திகளில் உண்மைத் தன்மையை எழுத வேண்டும். இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலா ளர்கள் கலந்துகொண்ட விசேட கலந்துரையாடலில் ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார்.

இலங்கை முஸ்லிம்களை இயக்க ரீதியாக பிரித்து காட்டுவதற்கு ஒரு சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இதற்கெதிராக முஸ்லிம் சகோதரர்கள் துணைபோகக் கூடாது. முஸ்லிம்கள் கலிமாவின் அடிப்படையில் ஒற்றுமையின் கயிற்றைப் பற்றிப் பிடித்து ஒன்றுபடல் வேண்டும். இயக்கங்கள் கூறுகளாக பிரியக்கூடாது.

இதற்கு பின்னால் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகள் உள்ளன. நாம் விழிப்புடன் செயற்படல் வேண்டும். அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ கூட இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளார் என அலவி மெளலானா கூறினார்.

இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தீர்க்க நிறுவன ரீதியான ஏற்பாடு அவசியமானது – முன்னாள் அமைச்சர் பேரியல்

fer.jpgஇனங் களுக்கிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு நிறுவனமய ரீதியான ஏற்பாடொன்று அவசியமானதென்று முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த அமைப்பை தேசிய ரீதியில் ஏற்படுத்த வேண்டுமென்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அவர் நேற்று (24) பிற்பகல் சாட்சியமளித்தார்.கொழும்பு 7, ஹோட்டன் பிளேசில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையில் இடம்பெற்ற விசாரணையில் சாட்சியமளித்த திருமதி பேரியல் அஷ்ரப், “முஸ்லிம்கள் ஏனைய இனத்தவர்களோடு சகவாழ்வுடன் வாழ தயாராக இருக்கிறார்கள். முஸ்லிம் மதத் தலைவர்களும் மெளலவிமார்களும் இதனையே வலியுறுத்துகிறார்கள்” என்று தெரிவித்ததுடன், கிழக்கில் காணாமற்போன முஸ்லிம் இளைஞர்களைக் கண்டறிந்துகொள்வதற்கு நல்லிணக்க ஆணைக் குழு உதவ வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். கிழக்கில் கலவரத்தால் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் புலிகள் இல்லாதுபோனதன் பின்னர் திரும்பி வந்து தமது காணிகளைக் கோருகிறார்கள். எனினும் அவர்களின் காணிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. இவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார். மேலும், அம்பாறை மாவட்டத்தில் தாம் வீடமைப்புத் திட்டமொன்றை ஆரம்பித்தபோது முஸ்லிம் என்பதால் தடுக்கப்பட்டதாகவும் ஆணைக்குழு முன்னிலையில் அளித்த சாட்சியத்தில் அவர் தெரிவித்தார்.