அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

சார்க் வர்த்தக தலைவர்களின் 3வது மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பம்

சார்க் வர்த்தக தலைவர்களது மூன்றாவது மாநாடு நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு நடைபெறவிருக்கும் இம்மாநாட்டின் நேற்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இங்கை வர்த்தக சம்மேளனமும் சார்க் வர்த்தக சம்மேளனமும் இணைந்து, ‘தெற்காசியாவில் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான பிராந்திய ஒத்துழைப்பு’ எனும் தொனிப் பொருளில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந் தது. இம்மாநாட்டில் தெற்காசிய பிராந்தியத்தின் காலநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

ஒரு நாட்டின் அபிவிருத்தி தனியே அந்த அரசாங்கத்தில் மட்டும் தங்கியிருக்கவில்லை. தனியார் துறையின் பங்களிப்பும் இதற்கு மிக அவசியம்.

எமது நாட்டினுடைய எதிர்காலம் எமது கைகளிலேயே உள்ளது. தெற்காசிய பிராந்தியத்¨தைச் சேர்ந்த நாம் கைகோர்த்து செயற்படுவதன் மூலமே எமது நாடுகளை வளம் மிக்கதாக ஆக்க முடியும்.  அதற்கு வர்த்தக சம்மேளனத்தின் ஒத்துழைப்பு அவசியம் தேவையென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது உரையில் குறிப்பிட்டார்.

வவுனியா வடக்கு மீள்குடியமர்த்தும் தினம் பற்றி இன்று முடிவெடுக்கப்படும்

260909srilanka.jpgவவுனியா வடக்கில் மீள்குடியேற்றத்துக்கு தயார் நிலையிலிருக்கும் ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் அனைத்து உட்கட்டமைப்பு பணிகளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தியாக்கப்படுமென வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் நேற்று தெரிவித்தார்.

மோதல் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப் போரில் முதற் கட்டமாக 300 குடும்பங்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் தினம் தொடர்பாக தமது தலைமையில் இன்று கூடி ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வவுனியா வடக்கிலுள்ள 20 கிராம சேவகர் பிரிவுகளில் 06 கிராம சேவகர் பிரிவுகள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட நிலையில் மீள்குடி யேற்றத்துக்கு தயார் நிலையிலுள்ளன. இப்பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் துரித கதியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அனைத்துப் பணிகளும் இவ்வாரத்துக்குள் பூர்த்தியாக்கப்படுவதுடன் அனைத்து அலுவலகங்கள் மற்றும் உப அலுவலகங்களும் இவ்வாரம் முதல் செயற்படுமெனவும் அரசாங்க அதிபர் கூறினார்.

இதேவேளை மேற்படி ஆறு கிராமசேவகர் பிரிவுகளிலும் உள் வீதிகளை புனரமைப்பு செய்வதற்கென உலக வங்கி 25 மில்லியன் ரூபாவினை வழங்கியிருப்பதாகவும் புனரமைப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருதாகவும் அவர் மேலும் கூறினார். நிவாரணக் கிராமங்களில் நேற்றைய திகதிக்கு ஒரு இலட்சத்து 27 ஆயிரம் பேர் வரையிலானோரையே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளது.

இவர்கள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா வடக்கைச் சேர்ந்தவர்கள். அனைவரும் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதிக்குள் மீளக்குடியமர்த்தப் படவுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தோரை விரைவில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் வவுனியா வடக்கில் மீதமாகவுள்ள 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்ணிவெடியகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் சார்ள்ஸ் கூறினார்.

அதேவேளை நிவாரணக் கிராமத்திலுள்ள 800 பேர் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கில் மீளக்குடியமர்த்தப்பட விருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். கடந்த வாரம் இங்கு 1100 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மீன்பிடித்துறை அபிவிருத்திக்கு 1165 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

fisherman.jpgவட மாகாணத்தில் மீன்பிடித்துறை அபிவிருத்திக்கான மத்திய கால திட்டத்திற்காக 1165 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்தது.

இதன்படி யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைதீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

வடக்கிலுள் மீன்பிடித்துறைமுகங்கள், இறங்குதுறைகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதோடு நாரா நிறுவன பிரதேச அலுவலகங்களும் அங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர நன்னீர் மீன்வளர்ப்புத் திட்டங்களும், சிறிய மீன் குஞ்சுகளை வளர்க்கும் நிலையங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவசக்கல்வி

இலங்கை அகதிகளின் பிள்ளைகள் குறிப்பாக தமிழ் நாட்டிலுள்ள அகதிகளின் பிள்ளைகள் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பை இலவசமாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு அனுமதியளிப்பதென அப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு தொடக்கம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகத்தில் இலவசக்கல்வி வழங்கப்படும்.விசேடமாக தொலைக்கல்வியூடாக கல்வியை முன்னெடுக்க விரும்புவோருக்கு இந்தவசதி மேற்கொள்ளப்படும்.அகதிகள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மட்டும் தீர்வாக அமையாது. இந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மேம்படுத்த சரியான கருவி கல்வியேயாகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.திருவாசகம் கூறியதாக “ரைம்ஸ் ஒவ் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானம் கடந்த வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது.அத்துடன், பி.எச்.டி. நெறியை பல்கலைக்கழகங்கள் அல்லது இணைக்கப்பட்ட கல்லூரிகளில் முன்னெடுக்க விரும்புவோருக்கு இடஒதுக்கீட்டை மாநிலமட்டத்தில் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2010 முதல் இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று பேராசிரியர் திருவாசகம் கூறியுள்ளார்.

மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை வழங்கி வானை கடத்திய மர்ம மனிதர் வானுடன் கைது

arest.jpgவானில் பயணம் செய்தோரை மயக்கி வேனை அபகரித்துச் சென்ற மர்ம மனிதரை பொலிஸார் வேனுடன் கையும் மெய்யுமாக கைது செய்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்தார்.

இச்சம்பவம் கட்டுநாயக்க பகுதியில் வெள்ளி இடம்பெற்றுள்ளது. கிரிபத்கொடையில் வேனை வாடகைக்கு அமர்த்தி மூன்று நண்பர்கள் அதில் சுற்றுலா சென்றுள்ளனர். இதன்போது ஹோட்டல் ஒன்றில் வைத்து இடை நடுவே இந்நண்பர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு மர்ம மனிதர் நீர்க்கொழும்பு செல்வோமெனக் கூறி அதேவேனில் பயணித்துள்ளார்.

வெலிசர பகுதியில் வைத்து அனைவரும் இந்த மர்ம மனிதர் வாங்கிக்கொடுத்த குளிர்பானத்தை அருந்தியதையடுத்து மயக்கமுற்றுள்ளனர். இதனையடுத்து அம்மர்ம நபர் 16 இலட்சம் ரூபா பெறு மதியான வானை கடத்திச் சென்றுள்ளார். சனிக்கிழமை கட்டுநாயக்க எவரிவத்தை பகுதியில் வைத்து வேனை குறித்த மர்ம மனிதனுடன் கைது செய்துள்ளனர்.

சமையல் எரிவாயு விற்பனையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய அரசிடம் இருந்து ரூ.1.7 பில்லியன்; ல்காஸ் நிறுவனம் கோருகிறது

சமையல் எரிவாயுவை சூத்திரத்தின் பிரகாரம் விற்பனை செய்வதால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய அரசாங்கம் 1.7 பில்லியன் ரூபாவை வழங்க வேண்டும் என்று ஷெல்காஸ் நிறுவனம் விலை மாற்ற சூத்திர உடன்படிக்கையின் கீழ் மத்தியஸ்த நியாய சபைக்கு முறைப்பாடு செய்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக சட்ட மா அதிபரை தொடர்பு கொண்டு தேவையான அறிவுறுத்தல்களை பெற்றுக் கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கூறப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு விலையை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் என்று ஷெல் காஸ் நிறுவனம் கேட்கிறது. ஆனால் கணக்கிடுவதில் ஏற்படும் வித்தியாசங்கள் காரணமாக அவர்கள் கேட்கும் விலை ஒரு போதும் கிடைப்பதில்லை என்று வர்த்தக, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி, கூட்டுறவு மற்றும் பாவனையாளர் அலுவல்களு க்கான அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்.

சமையல் எரிவாயு விலை வருடத்துக்கு ஆறு முறை மாற்றத்துக்குள்ளாவதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விலை நிர்ணய குழு, சமையல் எரிவாயு நிறுவனங்கள் வழங்கும் தகவல்களுக்கேற்ப எரிவாயு விலையை தீர்மானிப்பதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு விலையை தீர்மானிக்கும் விடயத்தில் அரசாங்கம் தலையிடுவது தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சை நிலை ஏற்பட்டது. ஊடகமொன்று மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தவறான கருத்து காரணமாக அரசாங்கமே சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதாக மக்கள் நினைக்கின்றனர். சமையல் எரிவாயு விலையை கம்பனிகளின் தீர்மானத்துக்கு விடுவதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என்பதே அந்த ஊடகத்தின் நோக்கமாக இருப்பதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையில் இரகசிய தீவாக இந்தியத் தூதரகம்

வெளிநாட்டுக்கு நாம் செல்லும்போது, அந்த நாட்டில் நமக்கு வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் இருக்கக் கூடியது நமது தூதரகம்தான். ஆனால், கொழும்பில் செயல்படும் இந்தியத் தூதரகம் பத்திரிகையாளர்கள் உட்பட இந்தியர்கள் யாரும் நெருங்க முடியாத தீவாக உள்ளது.

இந்தியத் தூதராக கோபால் காந்தி பொறுப்பேற்கும் வரை அதன் செயல்பாடுகள் இந்தியப் பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை ஓரளவு வெளிப்படையாகத் தான் இருந்து வந்தது. சிவ்சங்கர் மேனன் தூதராக இருந்தபோது, பத்திரிகையாளர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் கிடையாது. செய்திகளை அளிக்கும் போது பெயர் வெளியிட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொள்வார்.

கோபால் காந்தி சிறப்பாக உபசரித்தாலும் தகவல்களை ஓரளவுதான் கூறுவார். ஆனால், டில்லியில் இருந்து அமைச்சர்களோ, அதிகாரிகளோ வந்தால் தகவல் நிச்சயமாகத் தெரிவிக்கப்படும். நிருபமா ராவ் தூதரான பின்தான் நிலைமை மோசமடையத் தொடங்கியது. பாராட்டி செய்திகளை வெளியிட்டால் அவர் விரும்புவார்.

எந்த அளவுக்கு உண்மையாக இருந்தாலும் தூதரகத்தின் செயல்பாடுகளை விமர்சித்து எழுதினால் அதை விரும்பமாட்டார். இதன் காரணமாக இந்திய மற்றும் உள்ளூர் பத்திரிகையாளர்களுடனான அவரது உறவு வெகுவாக பாதிக்கப்பட்டது. தூதரகத்தின் ஊதுகுழலாகவே இந்திய பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அலோக் பிரசாத் தூதராகப் பொறுப்பேற்ற பின்னர் நிலைமை தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்டது. பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதோ அல்லது கலந்துரையாடுவதோ இல்லை. மாறாக,வெளிப்படையாகவே அவர் பத்திரிகையாளர்களிடம் வெறுப்பை உமிழ்ந்தார்.

இலங்கையில் சீனா செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்து இந்திய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள வந்த செய்திகளை தூதரகம் முழுமையாக மறைத்துவிட்டது. வடக்குப் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் இரண்டு இந்தியக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், காரணம் ஏதும் இல்லாமல் அவை மூடி மறைக்கப்பட்டு விட்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இந்தியா கட்டிய 2 மருத்துவமனைகளில் இந்திய டாக்டர்கள் பலரும் பாராட்டும் வகையில் அற்புதமாகப் பணிபுரிந்தனர். ஆனால், எந்த ஓர் இந்தியப் பத்திரிகையாளரும் அந்தப் பகுதிக்குச் செல்லவோ, அவர்களைச் சந்திக்கவோ அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் கொண்ட குழு அண்மையில் இலங்கை முகாம்களைப் பார்வையிட வந்தது. ஆனால், அவர்களது பயணம் குறித்து எந்தவொரு தகவலும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுடன் எந்த விதத்திலும் தொடர்புகொள்ளக்கூடாது என இந்திய ஆட்சசியாளர்கள் ஏற்கனவே கூறி அனுப்பியுள்ளனர் என்பது எம்.பி.க்களது செயல்பாடுகளில் இருந்து தெரியவந்தது.

(தங்களுக்குப் பழக்கமில்லாத கொழும்பைச் சேர்ந்த தொலைபேசி எண்ணாக இருந்தால் பேசுவதைத் தவிர்ப்பதற்காக இணைப்பைத் துண்டித்தனர்.) இந்திய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பயணம் கூட இலங்கைக்கான புதிய இந்தியத் தூதர் அசோக் காந்தை சந்திக்காமல் இருந்திருந்தால் பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியமான விடயமாக இருந்திருக்கும்.

மற்ற நாடுகளின் அமைச்சர்ளோ, உயர் அதிகாரிகளோ கொழும்பு வந்தால், அந்த நாட்டு தூதரகங்கள் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றன. ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தியத் தூதராகம் இதுவரை அப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதில்லை.

இந்தியாவின் “பெரிய அண்ணன மனப்பான்மை அல்லது இரகசியத் திட்டம் காரணமாகவே இந்தியத் தூதரகம் இப்படி செயல்படுகிறது என இலங்கை பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

தினமணி

மெளலவி ஆசிரியர் நியமன போட்டி பரீட்சை அடுத்த வாரம்

மெளலவி ஆசிரியர் நியமனத்துக்கான நேர்முகப் பரீட்சை, அடுத்தவாரம் கொழும் பில் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் கே. முகம்மட் தம்பி கூறினார்.  போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்தவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர்.

நாடு மீண்டும் பிளவுபட இடமளிக்க முடியாது – ஜனாதிபதி

041109ma.jpgமீண்டும் இந்த நாடு பிளவுபட இடமளிக்க முடியாது. மக்கள் பலம் மிகவும் சக்திவாய்ந்தது. நாட்டை பலப்படுத்த சிந்திப்பவர்களே எப்போதும் வெற்றிபெறுவர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த காலங்களையும் இன்றைய நிலையையும் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர். சுபீட்சமான நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் எம்முடனே மக்கள் பலமும் உள்ளது. அதனை எவரும் அசைக்க முடியாது எனவும் ஜனாதிபதி உறுதிபடத் தெரிவித்தார்.

நாம் யுத்தம், இன்னோரன்ன சவால்களுக்கு மத்தியிலும் கிராமிய அபிவிருத்திக்காக 38 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளோம். இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றில் இது ஒரு சாதனை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புத்தளம் நகரில் திறந்த பல்கலைக்கழகத்தின் கிளையொன்றை நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

புத்தளம் மாவட்டத்திற்கு புதிய யுகம் பிறந்துள்ளது. இம் மாவட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுவதுடன் இன்று உயர்கல்வி சம்பந்தமான மூன்று முக்கிய நிறுவனங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இப்பகுதியைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. நாம் பதவியேற்ற பின் நாட்டின் சகல பகுதிகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்தோம்.

அந்த வகையில் புத்தளம் பகுதி அபிவிருத்தி பற்றியும் சிந்தித்தோம். இப்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் பல திட்டங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும். 30 வருட பயங்கரவாதத்தின் பின் தற்போது அபிவிருத்தி யுகம் பிறந்துள்ளது. பயங்கரவாதிகள் தமது ஈழ விவரணத்தில் சிலாபம் வரைக்குமான எல்லையைக் குறிப்பிட்டிருந்தனர். அப்படியானால் புத்தளம் உட்பட இப்பகுதிகளில் புலிகளின் வங்கி, புலிகளின் பொலிஸ், புலிகளின் பாடசாலையே இயங்கியிருக்கும். அந்நிலையை நாம் மாற்றினோம்.

இன, மத பேதமின்றி சகல மக்களும் சம உரிமை பெற்று வாழும் நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு எமக்கு உள்ளது. அதனை நாம் மறக்கவில்லை. இப்பகுதியில் பிரதியமைச்சர் பாயிஸ் சிறந்தபல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். நான் வடக்கிற்குப் போனேன். அங்குள்ள மக்கள் மத்தியில் சூழ்ந்திருந்த பயமும் அச்சமும் சந்தேகமும் தற்போது நீங்கியுள்ளன. கிளிநொச்சி மக்களும் இன்று நாட்டின் சகல பகுதிகளுக்கும் சென்று வரக்கூடிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இந்நிலையை நன்குணர்ந்து தெளிவுடன் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும்.

இன்று வடக்கு, கிழக்கில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கச் செல்ல வழி பிறந்துள்ளது. நுரைச்சோலை மின் நிலையத்திட்டத்தை ஆரம்பிக்க நாம் வந்தபோது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் இன்று நீலக் கொடிகளால் தோரணமிட்டு எம்மை வரவேற்கின்றனர். தலைவர்களின் உத்தரவுகளை கட்சியிலுள்ளோர் நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அர்த்தம் அது.

நாட்டு மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலங்களில் அபிவிருத்தி பற்றி பேசினாலே அன்றைய தலைவர்கள் யுத்தம் நிறைவுபெறட்டும் பார்க்கலாம் என்றனர். நாம் அப்படியல்ல. யுத்தத்தையும் அபிவிருத்தியையும் ஒன்றாக முன்னெடுத்தோம். நாம் ஏற்றுள்ள பொறுப்புகளுக்கு இணங்கவே நாடு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறும். இதில் அனைவரும் பங்காளிகளாகச் செயற்பட வேண்டும். இந்த அழகிய நாட்டை ஒரே சிங்கக் கொடியின் கீழ் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைப்போம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

புத்தளம் நகரில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கிளை நிறுவனம், வட மேல் மாகாண பல்கலைக்கழக வெளியடைவு நிறுவனம், மும்மொழி விஞ்ஞான கல்லூரி ஆகியவற்றை நேற்று ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது

இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு பாராட்டு

22mainpic.jpgநிவாரணக் கிராமங்களிலிருக்கும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதித்துள்ளதையும் தடைகள் நீக்கப்பட்டுள்ளதையும் அகில இலங்கை இந்து மாமன்றம் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களை மீள் குடியேற்றுவதில் அயராது உழைத்து வரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுக்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்களது வேண்டுகோளையேற்று இந்து மத குருமாரையும், முதியவர்களையும் விடுவித்தீர்கள், அதற்கும் எங்களது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரம், ஜனாதிபதி அவர்களே, பொதுமக்கள் பாவனைக்காக ஏ-9 வீதியைத் திறப்பதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கையை நாம் வர வேற்பதோடு நன்றிகளைத் தெரி வித்துக்கொள்கிறோம். அதேநேரம், நிவாரணக் கிராமங்களில் நிவாரணத் திட்டங்களுக்கு உதவிய முகவர் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக நீங்களும், உங்களது அரசாங்கமும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எங்களது ஒத்துழைப்பு தொடருமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.