அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

விமான தகர்ப்பு முயற்சி எதிரொலி: அமெரிக்காவில் பாதுகாப்பு மறுசீரமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவு

obama.jpgநத்தார் தினத்தில் டெட்ராய்ட்டுக்கு அருகே விமானம் ஒன்றை குண்டுவைத்து தகர்க்க மேற்கொண்ட முயற்சி பற்றிய அறிக்கை, தொடர்ச்சியான பல தவறுகளை சுட்டிக்காட்டியதை அடுத்து, ஒரு பாதுகாப்பு மறுசீரமமைப்புக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

மிகவும் கடுமையாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், உளவுத்தகவல்களை மிகவும் அடிக்கடி பரிமாறிக்கொள்ளுமாறும், அவை குறித்து மிகவும் வேகமாக செயற்படுமாறும், சந்தேகத்துக்குரியவர்களின் பட்டியலை மேலும் செயற்திறனுடன் தயாரித்து, ஆபத்தானவர்களை விமானப் பயணங்களில் இருந்து தள்ளிவைக்குமாறும் தனது உளவுப்பிரிவினருக்கு அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அல்கயீதாவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் தோல்வியற்ற தீர்வு என்று எதுவும் கிடையாது என்று ஒப்புக்கொண்டுள்ள அவர், மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என்பதில் ஒருபடி அமெரிக்கா முன்னோக்கி செயற்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வத்திக்கான் பிரதிநிதி நாளை வவுனியா விஜயம்

கொழும்பில் உள்ள பாப்பரசரின் வத்திக்கான் பிரதிநிதி அதிவணக்கத்திற்குரிய ஆயர் யோசப் ஸ்பிரெறி ஆண்டகை நாளை வவுனியா வருகின்றார்.

முதல் தடவையாக வவுனியா வரும் இவருக்கு இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலயத்தில் அன்று மாலை 4 மணிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. சிறப்பு ஆராதனை கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று வவுனியாவில் விடுதலை – ஏனையவர்களை கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713 பேர் இன்று (09) சனிக்கிழமை வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து விடுவிக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகம் தெரிவித்தது. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்தார்.

வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவர்.  ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்ற வர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். ஏனையவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட உள்ளனர்.

படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544 புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவான காலம் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர் வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப்படுபவர்களிடையே அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது.

புனர்வாழ்வு அளிக்கப்படும் புலிகள் இயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றது.

இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயாரத்னாயக்க கூறினார்.

புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களிடையே பட்டதாரிகள் 22 பேரும் பட்டதாரி மாணவர்கள் 148 பேரும் அடங்குவர். இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ். பல்கலைக் கழகத்தில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரபாவின் தந்தையின் பூதவுடல் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு – பிரிகேடியர் தகவல்

prabakaeans-father.jpgபிரபாகரனின் தந்தையான திரு வேங்கடம் வேலுப்பிள்ளையின் பூத வுடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரி வித்தார். இராணுவ பாதுகாப்பில் இருந்த பிரபாவின் தாயாரையும் அவ ரிடம் ஒப்படைத்ததாக அவர் மேலும் தெரி வித்தார்.

பிரபாவின் தந்தையின் இறுதிக் கிரியை யாழ்ப்பாணத்தில் நடை பெறவுள்ளதாக தெரிவித்த அவர், இறுதிக் கிரியைகளுக்கான உதவிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தனது தந்தையின் பூதவுடலையும் தனது தாயாரையும் சிவாஜிலிங்கம் எம்.பியிடம் ஒப்படைக்குமாறு டென்மார்க்கிலுள்ள பிரபாவின் சகோதரியான வினோதினி ராஜேந்திரன் டென்மார்க்கிலிருந்து அட்டோர்ணி தத்துவத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்த பிரிகேடியர் அதற்கமைய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட் டதாகவும் சுட்டிக்காட்டினார்.

திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு தரைமார்க்கமாக கொண்டு செல்ல ஏற்பாடாகியுள்ளதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை நிலைநாட்ட மட்டு மேயர் சிவகீதா சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு

sivageetha.jpgமட்டுநகர் மேயர் சிவகீதா எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். இது விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் வேண்டுதலுக்கு இணங்க அரசியலில் நுழைந்து கொண்ட நான், அரசியலில் நுழைந்ததில் இருந்து எனது பிரதேசத்தில் உள்ள புத்திஜீவிகளின் ஆலோசனையை பெற்றே அரசியல் செய்துவருகின்றேன். இன்றைய நிலையில் எனது பிரதேசத்தில் உள்ள மக்களும், புத்தி ஜீவிகளும் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, இலங்கையின் பொருளாதாரத்தை உயத்துவார் என நம்பப்படுகின்ற ஜெனரல் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டியதை அடுத்து இம்முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

‘இதுவரை செய்த தவறையே கூட்டமைப்பு இப்போதும் செய்கிறது’ சம்பந்தனின் அறிவிப்பு தமிழ்ச்சமூகத்தின் குரல் அல்ல

anu.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை காலமும் செய்து வந்த தவறையே தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறதென அமைச்சரவை பேச்சாளரும், தகவல், ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் விடிவுக்காக இதுவரை என்ன செய்துள்ளது எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். சம்பந்தனின் கொள்கை தமிழ் சமூகத்தின் கொள்கை அல்ல என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுஷ பல்பிட உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நாட்டில் சட்டம், ஒழுங்கு, சமாதானம், ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கான வாழ்வுரிமை என்பவற்றை நிலைநாட்டினார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல பிரிவுகளாக தற்பொழுது பிளவுபட்டுள் ளது. அதில் சம்பந்தன் பிரிவினர் ஜனாதிபதியை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். புலிகளின் பிடியில் சிக்கித்த வித்து வந்த தமிழ் மக்களின் உரிமைகளை மீளப் பெற்றுக் கொள்ள சம்பந்தன் என்ன பங்களிப்பை செய்துள்ளார் என்று அமைச்சர் வினா எழுப்பினார்.

யுத்தம் முடிவடைந்த கையோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடம்பெயர் ந்த மக்களை மீளக்குடியேற்றுவதி லும், வட பகுதிக்கான முதலீடுகளிலும், அபி விருத்திகளிலும் மற்றும் தமிழ் சமூகத்தின் ஏனைய தேவைகளிலும் கூடிய கவனம் செலுத்தினார்.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவி ருத்தி செய்வதற்காக பல பில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை யானது அம்பாந்தோட்டை துறைமுக அபி விருத்தித் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த தொகையை விட பெருமளவு அதிகமானதாகும் என்றும் அமைச்சர் சொன்னார். இயல்பில் பிடிவாத போக்குடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எல்லா சந்தர்ப்பங்களிலும் புலிகளுக்கு சாதகமான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வந்ததால், தமிழ் சமூகம் அதன் தற்போதைய நிலை குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சம்பந்தன் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தமிழ் சமூகத்திற்கு தேவையானவற்றை அவர்களால் செய்து கொடுக்க முடியாமல் போனது. இவர்க ளால் தமிழ் சமூகத்தினர் பல்வேறு இன் னல்களுக்கே முகம் கொடுத்து வந்தனர். ஆனால், தமிழ் சமூகத்தை அழிவிலிருந்து பாதுகாத்து பூரண கெளரவத்தை பெற்றுக் கொடுத்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

எனவே மக்கள் ஜனாதிபதியுடன் உள்ளனர். பயங்கரவாதத்தை ஜனாதிபதி முற்றாக இல்லாதொழித்ததால் சம்பந்தன் குழுவினர் ஜனாதிபதியை வைராக்கியத்துட னும், பழிவாங்கும் நோக்குடனும் பார்க்கின்றனர். ஏற்கனவே பிரிவினை வாதத்தை ஏற்படுத்திய அவர்கள் தற்பொழுது வேறு வழிகளில் அதனை செயலுருப்பெற முயற்சிக்கின்றனர். தமிழ் சமூகத்திற்கு தேவையான சகலவற்றையும் பெற்றுக் கொடுத்தது அரசாங்கமே. நாங்கள் தனிப்பட்டவர்களுக்காக செய்வதை விட சமூகத்திற்காக செய்வதையே முக்கியமாக கருதுகின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

15 மாதக் கைக்குழந்தை கல்லில் அடித்துக் கொலை – வாழைச்சேனையில் பரபரப்பு

வாழைச் சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடைப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைக்குழந்தை ஒன்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது.

மீராவோடை ஜும்ஆப்பள்ளி, வீதியைச் சேர்ந்த காசிம் பாவா முகம்மது ஜவ்பர் (34) என்பவரின் 15 மாதக் கைக்குழந்தையே பரிதாபகரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கைக்குழந்தையின் மூத்த சகோதரர் மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய மாணவன்.

இவ்வருடத்திற்கான பாடசாலை கடந்த 04ம் திகதி ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இதன் பொருட்டு பாடசாலைக்குச் செல்வதற்காக கழுத்துப்பட்டி ஒன்றினை வாங்கித் தருமாறு தகப்பனிடம் கோரியிருந்தார். இவ்வேளையில், ஆத்திரம் கொண்ட தகப்பன் பாடசாலை செல்லும் தன் மகனையும், தன் மனைவியையும் தாக்கி, தன் மனைவியின் மடியிலிருந்த குறித்த கைக்குழந்தையை பறித்தெடுத்து அத்திவாரக் கல்லில் தலைகீழாக தூக்கி அடித்து கொலை செய்துள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்

ஜனாதிபதி விரைவில் யாழ் செல்ல முடிவு! – ‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ ஜனாதிபதி புலம்பெயர்ந்த தமிழ் குழுவிற்கு உறுதி

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். புலம்பெயர்ந்த தமிழ் குழு ஒன்று ஜனாதிபதியை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருக்கிறார்.

மேலும் வரும் தேர்தலையொட்டிய பிரச்சாரங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் யாழ்ப்பாணம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் எதிர்க் கட்சிக் கூட்டின் வேட்பாளர் யாழ் சரத்பொன்சேகாவின் யாழ் விஜயத்தைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவும் யாழ் செல்லத் தீர்மானித்து உள்ளதாக இக்குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மகிந்த ராஜபக்சவின் யாழ் விஜயத்தின் போது இச்சந்திப்பில் கலந்தகொண்ட பலரும் அவருடன் சமூக அளிப்பார்கள் எனத் தெரிவித்தார். இப் புலம்பெயர் குழுவில் இடம்பெற்ற சிலர் ஏற்கனவே மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கும்படி யாழ் மக்களைக் கேட்க உள்ளனர்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் நெயல் நடேசன், சவூதி அரேபியாவிலிருந்து டாக்டர் இராஜசிங்கம் நரேந்திரன், லண்டனிலிருந்து இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பில், டாக்டர் இராமநாதன் நரேந்திரநாதன் (அவுஸ்திரேலியா) மயில்வாகனம் சூரியசேகரம் (லண்டன்), சபாபதி சுப்பையா குகநாதன் (பிரான்ஸ்), இக்னேசியஸ் செல்லையா யோகநாதன் மனோரஞ்சன் (கனடா), முருகபூபதி (அவுஸ்திரேலியா) ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இக்குழுவினர் மகஜர் ஒன்றைக் கையளித்ததுடன், அதுதொடர்பாக நீண்டநேரம் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினர்.

இடம்பெயர்ந்த மகக்ளின் மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், வடக்கு கிழக்கின் கல்வி, அபிவிருத்தி திட்டங்கள், புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் தாயகம் வந்து செல்வதில் உள்ள சிக்கல்கள் போன்ற விடயங்கள் குறித்து ஜனாதிபதிடன் கலந்துரையாடினர். தமிழர்களின் அதியுயர் பிரச்னையான இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இக்குழு உரையாடி உள்ளது.

சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்த போது, “எந்தத் தமிழர்களையும் தேவையில்லாமல் சிறையில் வைத்திருப்பது தமக்கு விருப்பமானதல்ல. சட்டப்படியான விசாரணைகளை துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே தான் நீதி அமைச்சின் செயலாளருக்கு பணித்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்படுத்தப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்த்தரப்பு ஜனாதிபதி பேட்பாளர் உறுதியளித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு இணைக்கப்படுவதை தான் அனுமதிக்கப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தி உள்ளார். இந்தப் பின்னணியில் யாழ் செல்லவுள்ள மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கான சில விடயங்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் யாழில் ஜனாதிபதியின் உரை தமிழில் முழுமையாக இடம்பெறும் என்றும் அதற்கான பயிற்சிகளை அவர் எடுத்துவருவதாகவும் தெரியவருகின்றது. எதிர்க் கட்சி வேட்பாளர் நல்லூர் கந்தசாமி கோலிலில் சேட்டைக் கழற்றி விட்டு வழிபட்டதைப் போல் மகிந்த ராஜபக்சவும் ஏதாவது தேர்தல் ஸ்ரண்ட் செய்யலாம்.

செல்லசாமியும், பொன்சேகாவுக்கு ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த எஸ். செல்லசாமியும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். 

மீள் குடியேற்ற பணிகளை துரிதப்படுத்த இந்தியாவிலிருந்து தேவையான பொருட்கள்

வடக்கில் மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளைத் துரிதப்படுத்துவதற்காக, கூடாரத் துணி வகைகளும் ஏனைய உபயோகப் பொருட்களும் இந்தியாவிலிருந்து விரைவில் எதிர்பார்க்கப்படுவதாகக் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஆர். கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து உபயோகப் பொருட்கள் கிடைக்கப்பெற்றதும் கிளிநொச்சியில் மீள்குடியேற்றப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்று அரச அதிபர் கூநினார்.

பூநகரி, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்கனவே மக்களை மீளக் குடியமர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்த சகலரையும் ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் மீள்குடியமர்த்தும் இலக்குடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடியிருப்புப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிவில் நிர்வாகத்தைச் சீராக மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் திருமதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் தீர்ந்து வருவதால், அவை விரைவில் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்றன. அவை வந்து சேர்ந்ததும், தயார் நிலையில் உள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்களென்றும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.