அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

அமைச்சுகளின் பொறுப்புகள் தொடர்பாக அடுத்த வாரம் வர்தமானி அறிவித்தல்

அமைச்சுகளின் பொறுப்புகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவிருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அமைச்சர் ஏ. எச். எம். பெளசி தமது அமைச்சுப் பொறுப்புகளை பொறுப்பேற்கும் வைபவத்தில் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது,

அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள போதும் அதற்கான பொறுப்புகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த வாரம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாக உள்ளது. இதன்போது அமைச்சர் பெளசிக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.

மழையுடன் கூடிய காலநிலை தொடரும்

lightning-01.jpgநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் சில தினங்களுக்குத் தொடருமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

தென் மற்றும் மேல் மாகாணத்தின் கடற் பகுதியில் 30 கி. மீற்றர் வேகத்துடன் கூடிய காற்று மாலை வேளைகளில் வீசுவதுடன் இதனால் பாரிய கடல் கொந்தளிப்பு எதுவும் ஏற்படாதெனவும் வானிலை அவதான நிலைய உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

தென் மேற்கு பருவக்காற்று காரணமாக மத்திய, வட மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மாலையில் கடும் காற்று இடியுடன் கூடிய மழை பெய்யும், அத்துடன் மேல் மாகாணம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் காலை மற்றும் மதிய வேளைகளிலும் இடைக்கிடை மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழை, அதிகரித்து காற்று வீசியபோதும் பாரிய கடல் கொந்தளிப்பு அபாயம் எதுவும் இல்லையெனவும், இடி மின்னல்களின் போது மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வானிலை அவதான நிலைய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஆட்கடத்தலைத் தடுப்பதற்கு கூடுதல் அதிகாரத்துடன் செயலணி – அமுலிலுள்ள சட்டங்களுக்கு வலு சேர்க்கவும் ஏற்பாடு

ஆட்கடத்தலை தடுப்பதற்காக விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகிய நுழைவாயில் தளங்களில் செயலணி மற்றும் எல்லைப் பாதுகாப்பு அலகு அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள செயலணி அடுத்த சில மாதங்களுக்குள் செயற்படும் எனத் தெரிய வருகிறது. நீதி அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், சட்ட அமுலாக்க அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, மற்றும் குடியேற்றத்துக்கான சர்வதேச அமைப்பு ஆகிய அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த செயலணிப்படை செயற்படும். அதேவேளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் எல்லைப் பாதுகாப்பு அலகுகள் அமைக்கப்படவுள்ளன.

இந்த நுழைவாயில்களுக்கூடாக வருவோர் மற்றும் வெளிச் செல்வோரில் ஆட்கடத்தலினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் உள்ளோரை இனங்காண்பதற்கு இந்த அலகு பயன்படுத்தப்படும்.

அதேவேளை ஆட்கடத்தில் தொடர்பாக தற்போது அமுலில் உள்ள சட்டங்களுக்கு வலு சேர்க்கவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் செயலணி அமைப்பது தொடர்பாக பல பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில் இலங்கை நீதிமன்றமொன்றில் முதல் முறையாக ஆட்கடத்தல் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இலங்கை குற்றவியல் கோவையில் கடந்த 2006 ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டத்தையடுத்து ஆட்கடத்தல் குற்றங்களுக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம். இந்த தண்டனை ஏனைய பாரிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஒப்பானதாகும்.

ஆட்கடத்தல் தொடர்பாக அமெரிக்காவின் வருடாந்த அறிக்கையில் நாடுகள் மூன்று வெவ்வேறு வரிசைகளில் அவற்றின் பாதிப்பு இனங்காணப்படும் அளவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பட்டியலில் இலங்கை இரண்டாவது வரிசையில் இருப்பதையடுத்தே மேற்கூறிய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

அந்த அறிக்கையில் ஆண்கள் மற்றும் பெண்களை பணத்துக்காக வெளிநாடுகளுக்கு கடத்த உதவுதல் மற்றும் வர்த்தக ரீதியிலான பாலியல் நடவடிக்கை வியாபாரம் ஆகியவை இடம்பெறும் ஒரு நாடாக இலங்கை இனங்காணப்பட் டுள்ளது. இவ்வாறு ஆட்கடத்தல் இடம் பெறுவதற்கு பின்வரும் சாத்தியக்கூறுகளே காரணம். தொழில்களுக்காக குடியேறுவோர், வெவ்வேறு நாடுகளின் பிரஜைகளுக்கு இலங்கைக்கு வந்து சேர்ந்த பின்னர் விசா வழங்கும் நடைமுறைக் கொள்கை மற்றும் பிராந்தியத்தில் போக்குவரத்து மையமாக அது அமைந்துள்ளமை என்பனவாகும்.

16வது சார்க் உச்சி மாநாடு புதனன்று பூட்டானில் ஆரம்பம் – ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான குழு இன்று பயணம்

saarc-logo.jpg16 வது சார்க் உச்சி மாநாடு நாளை மறுதினம் பூட்டான் தலைநகரான திம்புவில் ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை தூதுக்குழு இன்று பூட்டான் புறப்பட்டுச் செல்கிறது.

சார்க் அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு இதுவாகும். அமைப்பின் முதலாவது உச்சிமாநாடு பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் 1985 டிசம்பரில் நடைபெற்றது. 16 வது உச்சி மாநாடு நாளை மறுநாள் பூட்டானில் ஆரம்பமாகிறது. பூட்டான் உச்சிமாநாட்டை பொறுப்பேற்று நடத்துவது இது முதல் முறையாகும். சார்க் அமைப்பின் தலைமைப் பதவியை தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வகித்து வருகின்றார்.

16 வது உச்சி மாநாட்டை தலைமை வகித்து நடத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு புறம்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவிக்கப்படுகிறது. உச்சி மாநாட்டு நிகழ்வுகளில் வெளிநாட்டமைச்சர்களின் பேச்சுவார்த்தை மற்றும் ஏனைய செயற்பாடுகளில் இலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றுவார். வெளிநாட்டமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பங்குபற்றும் முதலாவது நிகழ்வு இதுவாகும். தனது பூட்டான் விஜயத்துக்கு முன்பதாக ஊடகவியலாளர்களை அமைச்சர் பீரிஸ் நேற்று சந்தித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு கட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் இலங்கை மேற்கொண்ட செயற்பாட்டு அணுகுமுறையை இதே போன்ற பிரச்சினையை எதிர்நோக்கும் ஏனைய பிராந்திய நாடுகள் பாடமாக எடுத்துகொள்ளலாம். இலங்கையின் அணுகுமுறை ஏனைய பல நாடுகளுக்கு நல்லதொரு படிப்பினையாக அமையும் என்று ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

சார்க் அமைப்பு உண்மையிலேயே மக்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாக உருவாக வேண்டிய காலம் வந்து விட்டது. இந்நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு பின்னரான தற்போதைய நிலையை பற்றி ஆராய சார்க் அமைப்புக்கு இது நல்லவொரு சந்தர்ப்பமாக அமைகிறது.

எதிர்கால சவால்கள், மாற்றப்பட வேண்டிய விடயங்கள், பிராந்திய சேவைக்காக முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய விடயங்கள் ஆகியவை பற்றி தற்போது ஆராயலாம். தமது நலன் பேணுவதற்கு சார்க் அமைப்பு நேரடியாக தொடர்புள்ளது என்று பிராந்திய மக்கள் நினைக்கும் அளவுக்கு அமைப்பின் செயற்பாடுகள் அமைய வேண்டும். பொருளாதார நடவடிக்கை மூலம் கிடைத்த லாபங்களை அனைத்து தரப்பினரிடையிலும் சமமாக பகிர்ந்தளிப்பதில் பிராந்திய நாடுகள் அதிக அக்கறை காட்டவேண்டும்.

அத்துடன் பிராந்திய நாடுகளுக்கு தேவையேற்படும் நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வளங்களை சேமித்தல் மற்றும் சூழல் விவகாரங்கள் பற்றி தீர்க்கமாகப் பேசப்படவேண்டும். இந்த வகையில் இலங்கை அண்மையில் அரசியல் மற்றும் இராணுவ ரீதியில் பெற்றுக்கொண்ட வெற்றிகள் தொடர்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உச்சி மாநாட்டை ஒரு மேடையாக பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் குறிப்பிட்டார்.

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின

train.jpgரயில்வே தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ள தையடுத்து ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பி வருவதாக ரயில்வே வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க நேற்று கூறினார்.

சம்பள உயர்வு வழங்குமாறு கோரி ரயில்வே தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் கடந்த வாரம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதோடு ரயில் சேவையில் தாமதமும் ஏற்பட்டது.

ஆனால் தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் (24) வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதாக விஜய சமரசிங்க கூறினார். இவர்களின் பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நேற்றும் (25) சில ரயில் சேவைகள் தாமதமடைந்ததாக அறிவிக்கப்படுகிறது. இன்று முதல் வழமை போல ரயில் சேவைகள் இடம்பெறும் என வர்த்தக அத்தியட்சகர் கூறினார்.

புதுக்குடியிருப்பில் விரைவில் மீள்குடியேற்றம் – உடையார்கட்டில் நிலக்கண்ணிவெடி முழுமையாக அகற்றல்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் விரைவில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். விஸ்வமடு உடை யார் கட்டு பிரதேசத்தினூடாக புதுக் குடியிருப்புக்கான மீள்குடியேற்றத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

உடையார்கட்டு பிரதேசம் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு மீள் குடியேற்றத் துக்கு தயார் படுத்தப்பட்ட நிலையிலுள்ளது.  அதற்கான நடவடிக்கைகளை மாவ ட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் முன்னெடுத்து வருவதாகவும் இன் னும் இரண்டு மூன்று வாரங் களுக்குள் புதுக்குடியிருப்புக்கான மீள்குடியேற்றப் பணிகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் திருமதி இமெல்டா கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக் கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணி வெடிகள் அகற்றப்படும் ஒழுங்கி ற்கேற்ப மீள்குடியேற்றத்தை முன் னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். மாவட்டத்தின் நகர பிரதேச சபைக்குள் மாத்திரம் இது வரையில் 1500 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீளக் குடியேறியுள்ளார்கள்.

இதேவேளை முள்ளியவளை, கள்ளப்பாடு, வண்ணான்குளம் ஆகிய பகுதிகளிலும் தற்போது மீள் குடியேற்றம் நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட அராசங்க அதிபர் குறிப்பிட்டார்.

பொலிஸ் அகடமி இன்று திறப்பு

police.jpgநீர் கொழும்பு கட்டான பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள பொலிஸ் அகடமி இன்று 26ம் திகதி காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவு ள்ளது.

பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் தலைமையில் நடை பெறவுள்ள இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைக்கவுள்ளார்.

கட்டானயிலுள்ள பொலிஸ் பயிற்சி கல்லூரிக்குச் சொந்தமான 39 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பொலிஸ் அகடமி புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார்.

புலனாய்வு துறை தொடர்பான பாட நெறிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 200 பொலிஸார் இன்று உத்தியோகபூர்வமாக தமது கற்கை நெறியை ஆரம்பிக்கவுள்ளனர்.

கட்டுகஸ்தோட்டை உப்புவெளியில் ஆயுதங்கள் மீட்பு

கட்டுகஸ்தோட்டை மற்றும் உப்புவெளி ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப் பட்டிருந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

எஸ். எஸ். ஜி. 87 ரக 05 கைகுண்டுகள் அடங்கப் பெற்ற இரும்புப் பெட்டியொன்றை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் யடிகலபல மஹதென்ன எனும் காட்டுப் பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து சனிக்கிழமை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, உப்புவெளி பிரதேசத்திலுள்ள காடொன்றுக்குள்ளிலிருந்து பொலிஸார் ரி-56 ரக துப்பாக்கி எல். எம். ஜி. கிரனேற் கைக்குண்டு உள்ளிட்ட சில வகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்

நாவலப்பிட்டி வாக்கு மோசடி: ஒழுக்காற்று விசாரணைக் குழு சுதந்திரக் கட்சியால் நியமிப்பு

election_ballot.jpgபொதுத் தேர்தல் வாக்களிப்பு தினத்தில் நாவலப்பிட்டி தொகுதியிலுள்ள 37 வாக்குச் சாவடிகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரிக்கவென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய கட்சியின் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன இந்த குழுவை நியமித்திருக்கின்றார்.

ஐந்து பேரை உள்ளடக்கியுள்ள இந்த ஒழுக்காற்று விசாரணைக்குழுவுக்கு சட்டத்தரணி டப்ளியு. ஜி. கருணாஜீவ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இக்குழுவில் சட்டத்தரணிகள் சாலிய மெத்திவ், சந்ரா பெர்னாண்டோ, பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் செயலாளராக சட்டத்தரணி சம்பாணிபத்மசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை புதிய அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று நேரில் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து ஊடகவி யலாளர்களைச் சந்தித்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் கட்சியின் கொள்கைகளையும் ஒழுங்குகளையும் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்ல தவறியதினாலேயே கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரையும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லையென தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா காலமானார்

பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் தெரணியகலை விஸ்வநாதன் செல்லையா தமது 81 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். வீரகேசரி, டெய்லிமிரர், ஐலண்ட், டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக நீண்டகாலம் பணிபுரிந்தார்.
முன்னாள் அமைச்சர் வீ.குமாரசாமியின் பிரத்தியேக செயலாளராகவும் சிலகாலம் கடமை புரிந்துள்ளார். தினக்குரல் தெரணியகலை செய்தியாளர் நித்தியானந்தனின் தந்தையான இவரின் இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை தெஹியோவிட்ட பொதுமயானத்தில் நடைபெறவுள்ளது.