::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு – தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது

assembly-tamil-nadu.jpgஇலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தம் சட்டத்துக்கு புறம்பானது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் விரைவில் போர் நிறுத்தம் கொண்டு வர, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 4ம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு இதை சட்டவிரோதம் என அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசிசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு எதிரானது. வேலை நிறுத்தத்தின் போது சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும். பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலவரையின்றி கல்லூரிகள் மூடல் – விடுதிகளையும் காலி செய்ய உத்தரவு

college.jpgதமிழகம் முழுவதும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை அனைத்து தனியார், அரசு கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளை மூட அரசு நேற்று இரவு உத்தரவிட்டது.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் சில கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், விடுதிகளை மறு உத்தரவு வரும்வரை உடனடியாக மூடுமாறு கல்லூரி நிர்வாகங்களுக்கு நேற்று இரவு தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. ஏற்கனவே சில கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சூழ்நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

போர் நிறுத்தம் கோரி தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்தவர் கைது!

சென்னை சென்ரல் ரெயில் நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீக்குளிக்க முடிவு செய்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் இன்று காலையில் சென்ரல் ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிற்பகல் வரை யாரும் வரவில்லை.

இதற்கிடையில் திடீரென்று மாலையில் வாலிபர் ஒருவர் இலங்கை அரசுக்கு எதிராக கோஷம் போட்டபடி கையில் பெட்ரோல் கேனுடன், மெமோரியல் ஹால் அருகே வந்தார். இது பற்றி தகவல் கிடைத்தவுடன் பூக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரது பெயர் ராஜி என்ற ராஜசேகரன். சென்னை ஜி.கே.எம். காலனியைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் அவர் சப்ளையராக பணிபுரிகிறார். பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக அவர் மீது வழக்கு போட்டு நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.

மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே ரவி தீக்குளித்தார் – டிஜிபி ராஜேந்திரன்

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கவில்லை. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாகவே தீக்குளித்தார் என டிஜிபி ராஜேந்திரன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (40). இவர் மனைவி சித்ரா. 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு வருவது உண்டு. ரவி மீது ஏற்கனவே 5 வழக்குகள் உள்ளன. 3 கஞ்சா வழக்குகள், 2 கள்ளச் சாராய வழக்குகளில் அவர் குற்றம் சாட்டப்பட்டு இருந்தார். அவற்றில் 4 வழக்குகளில் தண்டனை கிடைத்து விட்டது. கடைசி வழக்கில் வாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.

ரவி தனது மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு 30-ந் தேதி மாலை 5 மணி அளவில் வீட்டின் அருகே தீக்குளித்து விட்டார். அதைத் தொடர்ந்து அவரை நிலக்கோட்டை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரிடம் மரண வாக்குமூலம் கேட்கப்பட்டது. மரண வாக்குமூலம் தர அவர் மறுத்துவிட்டார். தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் ரவி தீக்குளித்தாரே தவிர, வேறு எதற்காகவும் அல்ல என்றார்.

ஹிலாரி நியமனத்தை எதிர்த்து வழக்கு

hilari.jpgஅமெரிக்க வெளியுறவு அமைச்சராக ஹிலாரி கிளிண்டன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.வாஷிங்டனைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் டேவிட் சி ரோடீர்மெல் சார்பில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. சட்ட ரீதியாக வெளியுறவு அமைச்சர் பதவியை வகிக்க ஹிலாரி தகுதி அற்றவர் என்றும் அவருக்குக் கீழ் ரோடீர்மெல்லை பணிபுரிய நிர்பந்திக்க முடியாது என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்பந்திப்பது 1991-ம் ஆண்டு வெளிப்பணி அதிகாரியாக ரோடீர்மெல் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டதற்கு எதிரானது என்றும் சுட்டிக் காட்டியள்ளது. தகுதியிழப்பு மற்றும் சம்பளப் படிகள் வழங்குவதற்கான அமெரிக்க அரசியல் சட்டப்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் எவரும் அவரது பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாக அமெரிக்க அரசு மற்றும் சம்பளம் மற்றும் படிகள் பெறும் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்ற விதி உள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிலாரியின் சம்பளம் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

ஹிலாரியின் பதவிக் காலம் 2007-ஜனவரி 4-ம் தேதி தொடங்கி 2013-ம் ஆண்டு நிறைவடைகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விதிமுறையை மீறி கடந்த மாதம் வெளியுறவு அமைச்சருக்கான ஊதியத்தை ஜனவரி 1,2007-ம் ஆண்டு நிலைக்கு குறைத்துள்ளனர் என்றும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் அரசியல் நிர்ணய சட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.வெளியுறவு அமைச்சரின் சம்பளம் மற்றும் படிகள் உள்ளிட்டவை கிளிண்டனின் பதவிக் காலத்தில் உயர்த்தப்பட்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரும் கலக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அரசியல் ரீதியாக பழி வாங்குவதற்கோ அல்லது தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நோக்கிலோ இந்த வழக்கு தொடரவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் அதேநேரம் அரசியல் சட்ட விதிகளில் உரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ரோடீர்மெல் தெரிவித்தார்.

இந்தியாவில் பிரபாகரன் மீது விசாரணை நடத்தப்படும் வரை காங்கிரஸார் ஓய மாட்டார்கள்.

assembly.jpgஇலங்கை அரசு பிரபாகரனை பிடித்தவுடன் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். பிரபாகரனை இந்தியாவில் வைத்து விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. சட்டசபையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் துணைத் தலைவர் யசோதா பேசுகையில்,

எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை நாங்கள் பலி கொடுத்திருக்கிறோம். சிலர் அதை கூட விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வந்தால் தான் வலி தெரியும். ஒரு தொலைக்காட்சியில் இலங்கை எம்.பி ஒருவர் இங்குள்ள தமிழர்களை தூண்டும் விதத்தில் பேசுகிறார். உண்மையான அக்கறை இருந்தால் இலங்கையில் இருந்து போராட வேண்டியது தானே. தமிழகத்தில் அமைதியை கெடுப்பதற்காக அப்பாவிகளை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனால் முதல் குற்றவாளியான பிரபாகரனை இன்னும் கைது செய்யவில்லை. அவரை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவரை இங்கு வைத்து விசாரிக்க வேண்டும். இப்படி நாங்கள் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை, இந்தியாவில் அவர் மீது விசாரணை நடத்தப்படும் வரை காங்கிரஸார் ஓய மாட்டார்கள்.

இலங்கையி்ல் அப்பாவி தமிழர்கள் பலியாகும் பிரச்சினையை ஒரு காரணமாக வைத்து சிலர் தேசிய தலைவர்களை அவமதித்து வருகிறார்கள். அவர்களை கைது செய்து அரசியல் நாகரீகத்தை ஏன் காப்பாற்றவில்லை என்று இங்கு நான் கேட்க கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் என்றால் எதுவும் பேசலாம் என்று நினைக்க வேண்டாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது. எங்கள் கட்சி 125 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஆனால் கட்சி தொடங்கி 6 ஆண்டு ஆகாதவர்கள் எங்களை எதிர்க்கிறார்கள். நாங்கள் செய்த நன்றிகளை மறந்தது ஏன்? என்றார் அவர்.

மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் இறந்துவிட்டதாக பாக். பத்திரிகை தகவல்

mumbai.jpgமும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவனை மும்பையில் பொலிஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அஜ்மலை மும்பை பொலிஸார் விசாரணையின்போது கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.

பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவலை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ‘அஜ்மல் வாக்கு மூலங்கள் பற்றி சமீப காலமாக இந்தியாவிடம் இருந்து தகவல்கள் ஏதும் வரவில்லை. அவருடைய மரபு அணு மாதிரியை (டி. என்.ஏ) அனுப்புவதாக இந்தியா கூறியது. ஆனால் இதுவரை மரபு அணு அனுப்பப்ப டவில்லை. எனவே அஜ்மலை கொன்று விட்டார்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கிடையே இந்திய உளவு அமைப்பான ‘ரோ’ ஏராளமானோரை பயிற்சி அளித்து பாகிஸ்தானில் நாச வேலை செய்ய அனுப்பி வைப்பதாகவும் பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. இப்படி வந்த 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.

முத்துக்குமார் உடலை அடக்கம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் போர்க்கொடி

muthukumar-30011.jpgமுத்துக்குமாரின் குறிக்கோள் நிறைவேறும்வரை அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என மாணவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இன்று காலை 10 மணிக்கு முத்துக்குமாரின் உடல் அடக்கம் செய்யப்படுவதாய் இருந்தது. ஆனால் தமிழகமெங்கிலும் இருந்து மருத்துவ,சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்கள் வந்து முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்துவதால் இன்று மாலை உடல் அடக்கம் செய்யலாம் என்று முடிவெடுத்தனர் அரசியல்வாதிகள்.

முத்துக்குமார் தனது கடைசிக்கடிதத்தில், ‘என் பிரேதத்தை உடனே எரித்து விடாதீர்கள். துருப்புச் சீட்டாக வைத்துக்கொண்டு முடிந்தவரை போராடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால் சீக்கிரத்தில் உடல் அடக்கம் செய்ய மாட்டோம் என்று மாணவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மேலும்,முத்துக்குமார் உடல் அடக்கம் செய்வதை பொறுத்தவரை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அரசியல்வாதிகள் தலையிடாதீர்கள் என்று சொல்லி வருகின்றனர். இதனால் முத்துக்குமாரின் உடல் அடக்கம் வரும் ஞாயிற்றுக் கிழமைதான் நடக்கும் என்று தெரிகிறது.

முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி

muthukumar.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க கோரி தீக்குளித்து உயர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்க முடியாது. இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக் கூடிய செயல். முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஒப்புதலுடன் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தமிழகத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயம்

tamilar-phathukappu.jpgஇந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணத்தால் எந்தவொரு பயனும் இலங்கைத் தமிழர் தொடர்பாக ஏற்படவில்லையென அதிருப்தியடைந்திருக்கும் தமிழகக் கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்து வரும் நிலையில், “தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க.பெப்ரவரி 3இல் செயற் குழுவை கூட்டி முக்கிய தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா புலிகளின் ஆதரவைத் தவிர இலங்கைத் தமிழர் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் தனது கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென தனது கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புதன்கிழமை உறுதியளித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக இரவு ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் பா.ம.க.நிறுவுநர் ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயமாகியுள்ளது. உடனடியாகவே (இன்று) வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சென்னையில் மௌனவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவதையடுத்து இப்பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு கட்சியுமே தினமும் போராட்டம் என்று அறிவித்து சுறுசுறுப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன