மும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளில் அஜ்மல் என்பவர் கைது செய்யப்பட்டார். அவனை மும்பையில் பொலிஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அஜ்மலை மும்பை பொலிஸார் விசாரணையின்போது கொன்றுவிட்டதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவலை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ‘அஜ்மல் வாக்கு மூலங்கள் பற்றி சமீப காலமாக இந்தியாவிடம் இருந்து தகவல்கள் ஏதும் வரவில்லை. அவருடைய மரபு அணு மாதிரியை (டி. என்.ஏ) அனுப்புவதாக இந்தியா கூறியது. ஆனால் இதுவரை மரபு அணு அனுப்பப்ப டவில்லை. எனவே அஜ்மலை கொன்று விட்டார்கள்’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.
இதற்கிடையே இந்திய உளவு அமைப்பான ‘ரோ’ ஏராளமானோரை பயிற்சி அளித்து பாகிஸ்தானில் நாச வேலை செய்ய அனுப்பி வைப்பதாகவும் பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு உள்ளன. இப்படி வந்த 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்து இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.