பஹ்ரெய் னின் வீடொன்றில் பணிபுரிந்த இலங்கைப் பணிப் பெண்ணொருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அவ்வீட்டைத் தீக்கிரையாக்கியதுடன் தானும் தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீடொன்றில் பணிபுரிந்த மரியம்மா பெருநான் (வயது 32) எனும் பெண்ணே வீட்டின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்கிரையாக்கியுள்ளதாக நம்பப்படுவதாக கல்வ் டெய்லி நியூஸ் தெரிவித்திருக்கிறது.
இவ்விபத்தையடுத்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் அவ்வீட்டினுள் சுயநினைவற்ற நிலையிலிருந்த பஹ்ரெய்னைச் சேர்ந்த இரு பிள்ளைகளைக் காப்பாற்றியதுடன், அவ்வீட்டின் கூரையில் பொருத்தப்பட்டிருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாகவிருந்த அப்பணிப் பெண்ணின் உடலையும் மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தீக்கிரையாக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் ஏ.ஏ.எம். அல் ஹமாடா தெரிவிக்கையில்;
ஆயிஷா (வயது 21), தலால் (வயது 15) ஆகிய இரு பிள்ளைகளும் தூங்கிக் கொண்டிருக்கும் போதே இப் பணிப்பெண் வீட்டிற்கு தீயிட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது தலால் சுகயீனம் காரணமாக பாடசாலை செல்லாமையாலும் பஹ்ரெய்ன் பல்கலைக்கழகமொன்றின் மாணவியான ஆயிஷாவிற்கு அன்று மதியமே வகுப்புகள் இருந்ததாலும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர் என்றார்.
வீட்டிலிருந்து புகையேறுவதைக் கண்ட அயலவர்கள் அச்சமயத்தில் வெளியே சென்றிருந்த அல் ஹமாடாவின் மனைவிக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
புகையை சுவாசித்தமையால் சுயநினைவற்ற நிலையிலிருந்த இருபிள்ளைகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சில மணி நேர சிகிச்சையைத் தொடர்ந்து இருவரும் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இப் பணிப்பெண் கடந்த 8 மாதங்களாக இவ்வீட்டிலேயே பணிபுரிந்தார் எனவும் இவர் எவ்வித பிரச்சினையுமின்றி நல்ல முறையிலேயே பணியாற்றியதாகவும் வீட்டின் உரிமையாளர் அல் ஹமாடா தெரிவித்தார்.
மேலும், இப்பணிப் பெண் தூக்கிட்டுக் கொள்வதற்கு சற்று முன்னர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் எனவும் அதுவே இச்சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இப் பணிப்பெண் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட தொலைபேசி பொலிஸாரால் மீட்கப்பட்ட போதிலும் அது மிக மோசமாக சேதமடைந்த நிலையிலிருந்தது.
இத்தீவிபத்து தொடர்பாக அவசர அழைப்பையடுத்து காலை 11.09 மணியளவில் இரு பிள்ளைகளும் காப்பாற்றப்பட்டதுடன், இறந்த பணிப் பெண்ணின் உடலும் மீட்கப்பட்டது என அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது. அத்துடன், இவ்விபத்து மண்ணெண்ணெயை வீடு முழுவதிலும் ஊற்றி எரிக்கப்பட்டதாலேயே ஏற்ப்பட்டுள்ளதென்பதை அவ்வமைச்சின் ஊடகப் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
ஆயினும் எவ்விதமான எரிகாயங்களும் காணப்படவில்லை என மருத்துவ அறிக்கை தெரிவிக்கின்றது.