::சர்வதேச விடயங்கள்

::சர்வதேச விடயங்கள்

சர்வதேச விடயங்கள் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல்

india-elc-2009.jpg சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகை சந்திப்பில் எப்போது தமிழகம் வருவீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன். வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான்.

எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள். இலங்கையில் வாழும் தமிழர்களும் எங்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இலங்கையில் வாழும் நம் சகோதரர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் நடக்கும் பிரச்சனைக்கு ஜனநாயக முறையில்தான் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த சில மாதங்களாக இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய அமைச்சர்கள், அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி பேச்சு நடத்தி வருகிறது. இலங்கை தமிழர்கள் அமைதியாக முறையில் வாழ மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். எங்களது முயற்சியால் தான் அதிநவீன ஆயுதங்களை இலங்கை அரசு தவிர்த்துள்ளது. இலங்கை தமிழர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

விடுதலைப்புலிகள் தமிழர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்: க.அன்பழகன்

anbazhagan.jpgவிடுதலைப் புலிகள் தமிழர்களை தாக்குவதாலும் அவர்களை கேடயமாக பயன்படுத்துவதாலும் தமிழர்கள் அதிக அளவு இறக்கின்றனர் என திமுக பொதுச் செயலர் க.அன்பழகன் கூறியுள்ளார். திமுக கூட்டணிக் கட்சியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரியை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பண்ருட்டியில்  நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசும் போதே இதை குறிப்பிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானமும், அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டினார். போரை நிறுத்த சொல்ல நமக்கு உரிமை கிடையாது, மத்திய அரசுதான் சிங்கள அரசை வலியுறுத்தும். அதற்காக கருணாநிதி முயற்சி எடுத்தார். விடுதலைப் புலிகளை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க முடியாது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியின் எண்ணிக்கை அதிகமானால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்,  இதனால் இந்தியாவும்,  தமிழகமும் பலன்பெறும். இந்த அணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கம்யூனிஸ்டுகள் 3-வது அணி அமைத்து தவறான எண்ணத்தை பரப்புகின்றனர். சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறிய வைகோஇ ராமதாஸ் அத்திட்டத்தை தடை செய்ய நினைக்கும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்றார் அன்பழகன்.

ஈ.வி.கே.எஸ். : மன்னிப்புகேட்க 48 மணி நேர கெடு: இளந்தமிழர் இயக்கத்தினர்

semaan.jpg ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன் ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்துவந்தார். அப்போது, ‘’பெரியாரின் உண்மையான பேரன் என்று சீமான் தன்னை சொல்லிவருகிறார். உண்மையில் நான் தான் உண்மையான பேரன். சீமான் அவர் தான் உண்மையான பேரன் என்று அப்படி சொல்வதை பார்க்கும் போது பெரியார் சின்ன வயதில் செய்த தவறு போலிருக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது’’என்று பேசினார்.

இளங்கோவனின் இத்தகைய பேச்சால் இளந்தமிழர் இயக்கத்தினர் கொந்தளித்து போய்விட்டார்கள். இந்த இயக்கத்தின் அமைப்பாளர் செந்தமிழன், ‘’பெரியாரை கொச்சைப்படுத்திய இளங்கோவன் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை யென்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம்’’ என்று அறிவித்துள்ளார். இதனால் போலீசார் இளந்தமிழர் இயக்கத்தினரை வலைவீசி தேடி கைதுசெய்துவருகின்றனர். ‘’கைது செய்தாலும் மிச்சம் இருப்போர் முற்றுகையிடுவோம்’’என்று மீண்டும் அறிவித்துள்ளார் செந்தமிழன்.

சோனியாவின் சென்னை-புதுச்சேரி பிரசாரம் திடீர் ரத்து

06-sonia.jpgகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் சென்னை, புதுச்சேரி பிரசார பொதுக் கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுவிட்டன. இத் தகவலை காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாகவும், புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்தும் இன்று நடக்கவிருந்த பிரசாரக் கூட்டங்களில் பேச சோனியா திட்டமிட்டிருந்தார். ஆனால், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருப்பதால் சென்னை கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

மேலும் இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்ததாக சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டவும் சில அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. திரையுலகினரும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் போராட்டம் நடத்த இருந்தனர். இந் நிலையில் சோனியா தனது ‌சென்னை, புதுச்சசேரி பிரசாரக் கூட்டங்களை திடீரென ரத்து செய்துள்ளார். இத் தகவலை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் உறுதி செய்தார்.

பங்களாதேஷ் உருவான வரலாறு ஜெயலலிதாவுக்குத் தெரியாது – பி. சிதம்பரம்

chitambaram.jpg
பங்களாதேஷ் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்ற வரலாறு ஜெயலலிதாவுக்குத் தெரியாது. 1971 ஆம் ஆண்டு   பங்களாதேஷ் உருவாக்கப்படுவதற்கு வழிவகுத்த சூழ்நிலைபற்றி ஜெயலலிதா படித்துப்பார்க்க வேண்டும் என இந்திய உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
   
பங்களாதேஷ் உருவாக்கத்தின் போது இந்தியா வழங்கிய பங்களிப்பைப் போன்று இலங்கைக்கு படைகளை அனுப்பி தமிழர்களுக்கு மிக நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் ஒரு தனி ஈழத்தை உருவாக்க வேண்டும் என ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பது தொடர்பாக வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜெயலலிதாவுடைய இக்கூற்று முற்றிலும் பொறுப்புணர்வற்றதாகும் என காங்கிரஸ் தெரிவித்திருப்பதாகவும்  அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

கோயம்புத்தூரில் இடம்பெற்ற இராணுவ தொடரணி மீதான தாக்குதல் சம்பவம் தெடர்பில் அவர் கருத்து வெளியிட்டபோது, இது மிகவும் பாரதூரமான ஒரு செயலாகும். மாநிலத்தில் கடந்த 20 வருடங்களாக தணிந்திருந்த நக்ஸலைட்டுகள் போன்ற வன்முறைக்குழுக்கள் மீண்டும் அவர்களது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இது ஒரு பாரதூரமான செயல் என்பதை பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்; மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் இந்நிகழ்வை மிகுந்த எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும் என்றார்.

பெரியார் திராவிடக்கழகம் போன்ற அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டுமா? என கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதில் அளித்த அவர்,  நான் உள்துறை அமைச்சர் என்றவகையில் அது தொடர்பாக கருத்துக்கூற விரும்பவில்லை. என்றாலும் ஒரு பொறுப்புணர்வுள்ள குடிமகன் என்றவகையிலும் ஒரு அரசியல் கட்சியின் உறுப்ப்னர் என்றவகையிலும் இது ஒரு பாரதூரமான விடயம் என மக்களை எச்சரிக்கின்றேன் என்றார்.

இலங்கையில் யுத்தநிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசாங்கம் தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் விமர்சனம் குறித்து வினவப்பட்டபோது, ஒரு நாடு அதன் அயல் நாட்டில் ஒரு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக எடுக்க முடியுமான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தடுப்பு முகாம்களில் கொடுமை – பிரித்தானியாவின் ‘சனல் – 4’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

chenal-04.jpg பிரித்தானியாவின் ‘சனல் – 4’ காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் வைக்கப்பட்டுள்ள ‘முகாம்’களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன;. குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

பக்கச்சார்பற்ற முறையில் – சுதந்திரமாகப் – படமாக்கப்பட்டதாகக் கூறும் காட்சிகளும் முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டர் நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன.

சோனியாகாந்திக்கு எதிரான கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தடை

india-election.jpgஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி சென்னை தீவுத்திடலில் இன்று(புதன்கிழமை) நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

சோனியாகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டப்போவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது. இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். சினிமா டைரக்டர் பாரதிராஜா உள்பட ஏராளமான பேர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி அளவில் சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகே நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

புதிய திட்டங்களை விரிவுபடுத்த கூடாது: நவீன் சாவ்லா

iindias-election.jpg தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான விரிவான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா மற்றும் தேர்தல் கமிஷனர்கள் குரேஷி, சம்பத் ஆகியோர் சென்னை வந்தனர்.

தேர்தல் ஏற்பாடுகள் குறித்து உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் நரேஷ் குப்தா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவீன் சாவ்லா,

தேர்தலையொட்டி புதிய திட்டங்கள் எதுவும் கொண்டு வரவோ அல்லது விரிவுபடுத்தவோ கூடாது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் அரசியல் நோக்கத்துடன் யாரையும் கைதுசெய்ய கூடாது என்றும் வலியுறுத்தினார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார் என்று கூறினார்.

கிளிநொச்சியில் சிங்களவனால் இறக்கப்பட்ட புலிக்கொடி இன்று உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது; – சீமான்

semaan.jpg
கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு  சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய ‘மேலைக் கடலில் ஈழக்காற்று’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.
 
இவ்விழாவில் கலந்து சிறப்பித்த இயக்குனர்  சீமான், ஒரு மணிநேரம் உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார். இங்கே நான் பேசுவதால் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் பிரச்சினை வந்துவிடப் போகிறது. காரணம் என்னைப் புலி என்கிறார்கள். நண்பர்களே!  யார் புலி? இந்த சீமான் புலிதான். நான் மட்டுமல்ல.என் ஈழத்து அக்கா தங்கையை கற்பழித்து மானபங்கப்படுத்தியவர்களை எதிர்த்துக் குரல் கொடுக்கும் அனைவருமே போராளிகள்தான்.  புலிகள்தான்!

கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. பிரபாகரனை என் அண்ணன் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக என்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்ததாக எனக்கு விளக்கம் அளித்துள்ளார்கள்.

இத்தாலி சோனியாவை “பாரதத்தின் அன்னை” என்று அழைக்கும்போது, என் சொந்த இரத்தம், என் தொப்புள் கொடி உறவு பிரபாகரனை அண்ணன் என்று சொல்லாமல் வேறு என்னவென்று அழைப்பேன். தமிழன் சாவதை, தமிழ்ப் பெண்கள் மானம் சூறையாடப்படுவதை, தமிழ்ச் சகோதரன் வெட்டப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாய் கிட்பபதை நம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. இழவு வீட்டில் அழத்தானே செய்வார்கள். வாய் மூடி நடிக்க இங்கே என்ன படமா எடுக்கிறார்கள்..சூடு சொரணை இல்லாத ஈனப்பயலா நாங்க…இலங்கை என்ற ஒரு நாடு கிடையாது. ஈழம்தான் அதன் உண்மையான பெயர். சட்டம், போலீஸ், இராணுவம், வரி வசூல், கல்வி, போக்குவரத்து.  என ஒரு பிரபாகரன் கட்டியெழுப்பிய ஒரு அற்புதமான நாட்டை அழிக்க முழு முதல் காரணம் இந்த காங்கிரஸ். அந்தக் காங்கிரஸ் இந்த மண்ணிலிருந்தே விரட்டப்பட வேண்டும். நான் செத்தாவது இந்தக் காங்கிரஸை விரட்டியடிப்பேன்’’ என்று ஆவேசமாக பேசினார்   சீமான்.

4வது கட்டத் தேர்தல்-இன்று பிரச்சாரம் முடிகிறது

iindias-election.jpg மக்களவை தேர்தலில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 85 தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்தத் தொகுதிகளில் நாளை மறுநாளான 7ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. நாடாளுமன்றத்திற்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதுவரை 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. நான்காவது கட்டத் தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 85 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கும்.

இதில் ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகள், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 18 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 4 தொகுதிகளுக்கும், பிகாரில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது.

இந்தத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

நான்காம் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்களில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, லாலு பிரசாத், கபில் சிபல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், தேசிய மாநாடு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் அடங்குவர்.