கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்

sridar.jpgஇலங் கையின் பிரபல நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா சுகயீனம் காரணமாக இன்று காலை 8.00 மணியளவில் கொழும்பில் காலமானார். இறக்கும்போது இவருக்கு வயது 47.  நாடகக் கலைஞர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், எழுத்தாளர், ‘மிமிக்ரி’, மற்றும் ஓவியம் என ஒட்டு மொத்தக் கலைத்துறையில் ஈடுபட்டு, தன்னை முழுமையாகக் கலைத் தாய்க்கு அர்ப்பணித்த ஸ்ரீதர் பிச்சையப்பா. 
1963 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி பிறந்தவர்

இவரது பூதவுடல் தற்போது அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை 2.00 மணியளவில் மாதம்பிட்டிய மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் உத்தியோகத்தர்கள்!

election-commisone.jpgஎதிர்வரும் பொதுத் தேர்தல் கடமைகளில் 3 இலட்சம் அரசாங்க உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த உத்தேசிப்பதாக தேர்தல் செயலகம் தெரிவிக்கின்றுது.

இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றவர்களின் விபரங்களை தேர்தல் தலைமை செயலகத்துக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்கா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளைக் கேட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது 2 இலட்சத்து 50 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டனர்.

தேர்தலில் வெற்றிபெறும் கட்சி அபேட்சகர்களின் விருப்பு வாக்குகள் முதலில் எண்ணப்படும் என்றும் ஏனைய வேட்பாளர்களின் விருப்பு வாக்குகள் பின்னர் எண்ணப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

வேட்புமனு ஏற்கும் பணி ஆரம்பம்: அரசியல் கட்சியொன்று, இரு சுயேச்சைகள் நேற்று வேட்புமனுத் தாக்கல்

parliament.jpgபொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்ட முதலாவது தினமான நேற்று இரண்டு சுயேச்சைக் குழுக்களும்,  ஒரு அரசியல் கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்தன.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவொன்று நேற்றுக் காலை வேட்புமனுவை தாக்கல் செய்தது. கச்சி மொஹமது மொஹமது ஜுனைதீன் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.  நுவரெலியா மாவட்டத்தில் மற்றுமொரு சுயேச்சைக் குழு வேட்புமனுவை தாக்கல் செய்தது என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தலைமையிலான ‘ஜனசெத பெரமுன’ கட்சி நேற்றுக்காலை நான்கு மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தது. புத்தளம், கம்பஹா, குருணாகல், கொழும்பு மாவட்டங்களில் நேற்றுக் காலை சுபவேளை 9.30 மணியளவில் வேட்பு மனுவை ‘ஜனசெத பெரமுன’ தாக்கல் செய்தது.

வேட்புமனு தாக்கல் நேற்று 19ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்றுக்காலை 9 மணிமுதல் 4 மணிவரை வேட்புமனுக்களை ஏற்கக் கச்சேரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆயினும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்வதில் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை.

பொலன்னறுவை, திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, காலி மாவட்டங்களில் வேட்புமனு ஏற்பதற்காக தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஆயத்தமாக இருந்தபோதும் எவரும் கட்டுப்பணம் செலுத்தவோ, வேட்புமனு தாக்கல் செய்யவோ வரவில்லை. இறுதி நேரத்திலேயே பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்புமனுவை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் 25ம், 26ம் திகதிகளில் முக்கிய கட்சிகள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐ. ம. சு. மு. 25ம், 26ம் திகதிகளில் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ரீ. எம். வி. பி), மலையக மக்கள் முன்னணி, ஐ. தே. கட்சி உட்பட முக்கிய கட்சிகள் 24, 25, 26ம் திகதிகளில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யுமென கட்சி வட்டாரங்கள் கூறின. ஆயினும், கட்சிகள் இன்னும் பேரம் பேசும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டாகப் போட்டியிடுவதா என்பதில் முடி வெடுக்க முடியாத நிலையில் இருக்கின்றன.

அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நேற்றும் ஐ. ம. சு. மு.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  ஆயினும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை. ஈ. பி. டி. பியும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது. ஆனால் முடிவுகள் எதுவும் தெரியவில்லை.

இன்னும், சில கட்சிகள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவதென தெரியாத நிலையில் திண்டாடுகின்றன. இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னரே வேட்பு மனுத் தாக்கல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவின் தலைவர் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன் என்பவரின் தலைமையில் இச் சுயேச்சைக் குழு வேட்பு மனுப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

இச் சுயேச்சைக் குழுவில் கச்சி முகம்மது முகம்மது ஜுனைதீன், அபூபக்கர் அமீர் ஹம்சா ஜெளபர்கான் சமீன், மீராசாகிபு இஸ்ஸதீன், முஹமத் செய்யத் அலவி சபீர் யூசுப் லெவ்வை பள்ளித்தம்பி, முகம்மட் இப்றாகீம் முகம்மட் இர்பான் முகைதீன் பாவா முபாறக் ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒபாமா, தலாய் லாமா சந்தித்துப் பேச்சுவார்த்தை! சீனாவுக்கு அதிருப்தி

obama__dalailama.jpgசீனாவின் கடும் அதிருப்திக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா,  திபெத்தின் பௌத்த தலைவர் தலாய் லாமாவை சந்தித்துப் பேசினார். அஹிம்சை முறையில் பிரச்னைக்கு தீர்வு காண முயன்று வருவது பாராட்டத்தக்கது என்று தலாய் லாமாவுக்கு ஒபாமா புகழாரம் சுட்டியுள்ளர்.

அமெரிக்கா சென்றுள்ள தலாய் லாமாவை,  அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா வாஷிங்டனில் சந்தித்துப் பேசியதுடன் திபெத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது உள்பட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது. இந்த சந்திப்பின் போது பத்திரிகை புகைப்படக்காரர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்னர் புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு அளித்தனர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

சீனாவுக்கும்,  திபெத்துக்கும் உள்ள பிரச்னையைத் தீர்க்க தலாய் லாமா அஹிம்சை முறையில் போராடி வருவது பாராட்டத்தக்கது. அந்த இரு நாடுகளும் தங்களுக்கிடையிலான பிரச்னைகளை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தலாய் லாமாவை சந்தித்துப் பேசக் கூடாது என்று அமெரிக்காவை சீனா வலியுறுத்தியது. சீனாவின் எதிர்ப்பை நிராகரித்து தலை லாமாவை ஒபாமா சந்தித்துப் பேசியதை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக திபெத் மக்கள் கருதுகின்றனர். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனையும் தலாய் லாமா சந்தித்துப் பேசவுள்ளார்.

தேர்தல் களத்தில் முரளி கண்டியில், சுசந்திகா கேகாலையில்…

muralidharan.jpgவிளையாட் டுத்துறை பிரபலங்கள் பலரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சனத் ஜயசுரிய ஆளும் கட்சியில் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னர் அறியக் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் பல விளையாட்டுதுறை முக்கியஸ்தர்களும் தேர்தல் களத்தில் குதித்துள்ளதாக தெரியவருகின்றது.

அதன்படி இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட வேட்பாளர் பட்டியலில் உபதலைவராக போட்டியிடவுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கட்டுகளை வீழ்த்தி முத்தையா முரளிதரன் உலக சாதனைப் படைத்துள்ளார். முத்தையா முரளிதரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைப்பதன் மூலம் தமிழ் சிங்கள இளைஞர்களின் வாக்குகள் குவியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் தெரிவுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக இன்றையதினம் தேர்தல் தெரிவுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

கலாபூசணம் மணிமேகலை காலமானார்

mani.jpgகலைஞர் கலாபூஷணம் மணி மேகலை இராமநாதன் கொழும்பில் காலமானார். சுமார் மூன்று மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்ப ட்டிருந்த வேளையிலேயே நேற்று முன்தினம் இரவு காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 64. அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 20 ஆம் திகதி கொழும்பு- 10. ஸ்ரீ பிரியதர்ஷன மாவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இருந்து கலாபவனத்திற்கு இன்று எடுத்துச் செல்லப்படும். நாளை பி.ப.4 மணியளவில் பொரளை மயானத்தில் நடைபெறும்.

கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞர் மணிமேகலை தனது 9வது வயதி லேயே பாடகியாக கலைத்துறைக்குள் பிரவேசித்தார். அதன்பின் நர்த்தகியாக, நடிகையாக கடந்த 53 ஆண்டுகள் ஈழத்துக் கலையுலகில் பிரகாசித்தார்.

மேடைநாடகம், வானொலி, வட மோடி தென்மோடிக் கூத்துகள், சினிமா சின்னத்திரை, வில்லுப்பாட்டு என எல்லாவற்றிலும் கடந்த 50 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த ஒரே கலைஞர் மணிமேகலை என்பது குறிப்பிடத்தக்கது

வாழ்வின் கொடுமையும்! கனவுகளின் வறுமையும்!! – சிறுவர் இல்லங்களில் சில மணிநேரங்கள் : த ஜெயபாலன்

மட்டக்களப்பில் அகிலன் இல்லத் திறப்பு விழா.இலங்கையின் 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தமும் அது மிகக் கோரமாக முடிவடைந்ததும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாழ்நிலையை மிகமோசமான பின்னடைவுக்குத் தள்ளியுள்ளது. இந்த யுத்தத்தால் தங்கள் உழைப்பையும் சேமிப்புக்களையும் இழந்து பல்லாயிரம் பேர் நிர்க்கதியாகி உள்ளனர். பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்வை இந்த யுத்தம் சின்னா பின்னப்படுத்தியும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்நிலையை அழித்தும் உள்ளது. இந்த அழிவுகளை மிகக் கணிசமான அளவுக்கு குறைத்து மக்களின் இழப்பைத் தடுத்திருக்க முடியும். ஆனால் அதனை யுத்தத்தில் இருந்த இரு தரப்புகளுமே செய்யவில்லை. அதனால் யுத்தம் ஏற்படுத்திய சுமைகளை மக்களே சுமக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.தமிழீழ விடுதலைப் புலிகளால் பராமரிக்கப்பட்ட காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை சிறார்கள் நடந்து முடிந்த யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தால் மீட்கப்பட்டனர். படையணிகளில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். தற்போது சரணடைந்து எட்டு மாதங்கள் வரை ஆகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் இவர்களது விடுதலையும் விவாதப் பொருளாகி சில நூறு போராளிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது. இப்போராளிகள் வன்முறைக்குப் பழக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுவது அவசியமானது. ஆனால் அரசு அதனை எவ்வாறு கையாள்கின்றது என்பது தொடர்ந்தும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகின்றது. அரசு இதுவரை யார் யாரை இவ்வாறு தடுத்து வைத்திருக்கின்றோம் என்ற பெயர் விபரத்தைக் கூட வெளியிடவில்லை. சரணடைந்த அல்லது யுத்தத்தின் போது பிடிக்கப்பட்ட இவர்கள் அதற்கான சர்வதேச விதிகளின் கீழ்நடத்தப்பட வேண்டும் போன்ற அடிப்படை அம்சங்களைக் கூட அரசு திருப்திப்படுத்தவில்லை.

டி லா சாலே பிரதேர்ஸின் நிர்வாகத்தில் உள்ள சென் சேவியர் பாடசாலை.இந்நிலையில் சில நூறு சரணடைந்த குழந்தைப் போராளிகள் செஞ்சோலை மற்றும் காந்த ரூபன் அறிவுச்சோலை சிறார்கள் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரில், மன்னார் சென் சேவியர் பாடசாலையில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றனர். இவர்களில் மன்னார் டி லா சலே பிரதேர்ஸ் இனால் சென் சேவியர் பாடசாலையில் 50 மாணவர்கள் பராமரிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே படையணிகளில் சேர்க்கப்பட்ட இம்மாணவர்கள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை இழந்தவர்கள். உறவுகளை இழந்தவர்கள். தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்டு இருந்த இச்சிறார்கள் தங்களையொத்த சக குழந்தைகளில் இருந்து மிகவும் மாறுபட்ட இயல்புகளைக் கொண்டிருந்ததாக இவர்களைப் பொறுப்பேற்றுப் பராமரிக்கின்ற டி லா சலே பிரதேர்ஸ் தெரிவிக்கின்றனர். இச்சிறார்கள் தொடர்ச்சியாக விசேட உளவியல் சிகிச்சைகளையும் பெற்று தற்போது இயல்பு மாணவர் வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டுள்ளனர்.

அகிலன் இல்லம் பொறுப்பெற்ற குழந்தைப் போராளிகளில் ஒரு பகுதியினர்.டி லா சலே பிரதேர்ஸ் இச்சிறார்களைத் தவிரவும் மேலும் நூறு வரையான சிறார்களைப் பராமரிக்கின்றனர். ஆனால் இந்த இரு தொகுதி சிறார்களையும் இணைத்துப் பராமரிப்பதில் அவர்கள் சில நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதனால் இவ்விரு தொகுதி சிறார்களையும் தனித்தனியாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட படையணிகளில் பயிற்றப்பட்ட இச்சிறார்கள் ஏனைய சிறார்களைக் காட்டிலும் விசேட தேவைகளைக் கொண்டிருப்பதும் புரிந்து கொள்ளத்தக்கதே.

இதே நிலையே பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் உள்ள சிறார்கள் மத்தியிலும் காணப்பட்டது. இச்சிறார்களைப் பொறுப்பெடுப்பதில் புலம்பெயர்ந்த அமைப்புகள் பல பின்னடித்திருந்தன. இச்சிறார்களால் பின்னாட்களில் சிக்கல்கள் எழலாம் என்ற அச்சம் பொறுப்பெடுக்க முன்வருபவர்கள் மத்தியில் காணப்பட்டது. வவுனியா அகிலாண்டேஸ்வரி இல்லத்திடம் செஞ்சோலைச் சிறார்கள் மற்றும் குழந்தைப் போராளிப் பெண்கள் உட்பட 160 பேர் வரை ஒப்படைக்க அரசு முன் வந்தது. ஆனால் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளைப் பொறுப்பேற்க அவ்வில்லத்தினர் மறுத்துவிட்டதாக அறியவருகின்றது. இச்சிறுமிகளை கட்டுப்படுத்துவது பராமரிப்பது போன்ற விடயங்களில் தங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என அவ்வில்லத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் வளர்க்கப்பட்ட முன்னால் போராளிகளான இச்சிறார்கள் பெரும்பாலும் கைவிடப்பட்ட மறக்கப்பட்ட நிலையே காணப்பட்டது.

டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் இருந்த சிறுவர்களை லண்டன் அகிலன் பவுண்டேசன் பொறுப்பேற்றது.இச்சுழலிலேயே லிற்றில் எய்ட் அம்பேபுச பின்னர் அங்கிருந்து பம்பலப்பிட்டிக்கு அனுப்பப்பட்ட சிறார்கள் தொடர்பில் முன்னின்று சில உதவித் திட்டங்களை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக மன்னார் டி லா பிரதேர்ஸின் பராமரிப்பில் உள்ள சிறார்களைப் பொறுப்பெற்கும்படியான வேண்டுகோள் லிற்றில் எய்ட்க்கு விடுக்கப்பட்டது. ஆனால் லிற்றில் எய்ட் அவர்களைப் பொறுப்பெற்று பராமரிக்கும் நிதி நிலையைக் கொண்டிருக்காத நிலையில் அச்சிறார்களைப் பராமரிப்பதற்கான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் பவுண்டெசன் பொறுப்பேற்கவும் முன்வந்து.

மன்னாரில் சிறுவர் இல்லம் அமைப்பதற்கான இடம்பார்க்கப்படுகின்றது.ஜனவரி 21 அன்று சென் சேவியர் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக அச்சிறார்களை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் லண்டன் அகிலன் பவுண்டேசன் நிறுவனர் எம் கோபாலகிருஸ்ணன், லிற்றில் எய்ட் தலைவர் ரி கொன்ஸ்ரன்ரைன், இவ்விரு அமைப்புகளின் சார்பிலும் த ஜெயபாலன், டி லா சாலே பிரதேர்ஸ் இன்னும் சிலரும் கலந்து கொண்டனர். இச்சிறு நிகழ்வின் பின்னர் சென் சேவியர் கல்லூரியிலும் அதற்கு அருகாமையிலும் தங்க வைக்கப்ட்டுள்ள இச்சிறார்களை தங்க வைப்பதற்கான புதிய கட்டிடம் ஒன்றின் அவசியம் பற்றிப் பேசப்பட்டது. லண்டன் திரும்பிய பின்னர் டி லா சாலே பிரதேர்ஸ் க்குச் சொந்தமான நிலத்தில் இச்சிறார்களைத் தங்க வைப்பதற்கான கட்டிடம் ஒன்றைக் கட்டிக் கொடுப்பதற்கும் லண்டன் அகிலன் பவுண்டேசன் முன்வந்துள்ளது.

குழந்தைப் போராளிகளுடன் எம் கோபாலகிருஸ்ணன்.மன்னார் சென் சேவியர் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட இச்சிறார்களுடன் ஒரு குறுகிய உரையாடலை நடத்த முடிந்தது. நாம் சந்தித்த சிறார்கள் பெரும்பாலும் பெற்றோரை தம் குழந்தைப் பருவத்திலேயே இழந்தவர்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதங்கள் திணிக்கப்பட்டவர்கள். இவர்களது உடல்கள் யுத்தத்தினால் பல் வகைப்பட்ட காயங்களுக்கும் உள்ளாகி இருந்தது. கடந்த காலத்தில் இருந்து மீள முடியாமல் எதிர்காலத்தை எதிர்கொள்கின்ற இவர்கள் பயணிக்க வேண்டிய பாதை மிகக் கரடுமுரடானதாக உள்ளது. தற்போது இவர்கள் சென் சேவியர் பாடசாலையில் காபொத உயர்தர வகுப்பில் படிக்கின்றனர். இன்னும் சிலர் 5ம் 6ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இவர்களிடையே படிக்க வேண்டிய ஆர்வத்தில் எவ்வித குறையும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்பும் சுழலும் தான் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினையாக உள்ளது.

சென் சேவியர் இல்லத்தில் சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அறை.மாணவப் பருவம் என்பது வாழ்வில் மிக இனிமையான பருவம். சுமைகளற்று கவலைகளற்று சுகமான சுமைகளைத் தாங்கிக் கனவுகாண்கின்ற பருவம். ஆனால் இந்த மாணவர்களுக்கு அது அவ்வாறில்லை. ஒரு அறையிலேயே 20 பேர்வரை படுத்து உறங்குவதற்கு மட்டும் உள்ள இடைவெளியில் அவர்களால் என்ன செய்துகொள்ள முடியும். அவர்கள் தினம் தினம் பொழுதைக் கழிப்பதற்கே பெரும் அவஸ்த்தைப்படுவதை பார்க்கக் கூடியதாக இருந்தது.  அவர்கள் கடந்து வந்த பாதை மிகக் கடுமையானதும் கொடுமையானதும். ஆனால் அவர்களது இன்றைய வாழ்வும் கனமானதாகவே உள்ளது. அவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் நம்பிக்கையும் வழங்கப்படுவதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

London_Sivan_Kovil_illam_Toilet_Not_in_useஉணவு உடை உறைவிடம் கல்வி என்ற அடிப்படைத் தேவைகள் மட்டும் ஒரு மாணவனுக்கு போதுமானதாக அமையாது. அவர்களது பொழுது போக்கிற்கும் சிந்தனையை விருத்தி செய்வதற்குமான சுழல் அமைய வேண்டும்.

இந்தச் சுழல் மன்னாரில் மட்டும் அல்ல நான் சென்று பார்த்த ஏனைய இல்லங்களிலும் காணப்படவில்லை அடிப்படைத் தேவைகளை வழங்கப்படுகின்றது என்ற விடயத்தில் ஆறுதல் அடையக் கூடியதாக இருந்தது. மாணவர்களும் அதற்கு தங்கள் நன்றியைத் தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் மேலதிகமாக எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் நிலையை உணர்ந்து தங்கள் எதிர்பார்ப்புகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதை என்னால் உணர முடிந்தது. அவர்களது தேவைகளை உணரந்து அவர்களது எதிர்கால விருத்திக்குத் தேவையான உதவிகளை வழங்குவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற எமது கடமையாகும்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.மட்டக்களப்பில் லண்டன் அகிலன் பவுண்டேசன் உறவுகளை இழந்த உறவுகளால் பராமரிக்க முடியாத நிலையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான இல்லம் ஒன்றை ஜனவரி 23ல் திறந்து வைத்தது. இந்நிகழ்வில் லண்டனில் இருந்து சென்றவர்களும் சமூக அந்தஸ்துடையவர்களும் விளக்கேற்றியது முக்கியமல்ல. அங்கு தங்கி வாழப் போகின்ற சிறுமி ஒருத்தியும் விளக்கேற்றி நிகழ்வைச் சிறப்பித்தார். இவ்வாறான நிகழ்வுகளில் அச்சிறுவர்கள் கெளரவிக்கப்படுவது மிக அவசியம்.

எம் கோபாலகிருஸ்ணன் தனது மகனின் நினைவாக மேற்கொள்ளும் பல்வேறு சமூகப்பணிகளில் இச்சிறார்களைப் பராமரிப்பதும் ஒன்று. மன்னாரில் டி லா சாலே பிரதேர்ஸின் பொறுப்பில் உள்ள 50 சிறார்கள், மட்டக்களப்பில் திறக்கப்பட்ட அகிலன் இல்லத்தில் 40 சிறார்கள் இவர்களைவிடவும் ஏனைய சிறுவர் இல்லங்களுக்கு பகுதியாக 35 சிறார்களுக்குமான நிதிப் பொறுப்பினை லண்டன் அகிலன் இல்லம் பொறுப்பேற்று நடாத்துகின்றது. இவற்றைவிட 15 முதியோர்களையும் லண்டன் அகிலன் இல்லம் பராமரிக்கின்றது.

திலகவதியார் இல்லச் சிறுமிகளுடன் த ஜெளபாலன்.மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட அகிலன் இல்லம் அங்கு லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தால் பராமரிக்கப்படுகின்ற திலகவதியார் சிறுமிகள் இல்லத்திற்கு அருகில் உள்ளது. இவர்களுக்கும் கல்வி உட்பட அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்பட்டு இருந்தது. அச்சிறுமிகளுடன் உரையாடியதில் அவர்கள் தங்கள் நிறைவை வெளிப்படுத்திக் கொண்டனர். ஆனால் அவர்களும் தங்கள் எதிர்பார்ப்புகளை மட்டுப்படுத்தியே வைத்திருந்தனர். அச்சிறுமிகள் உட்பட இவ்வாறான சிறுவர்களது கனவுகள் பரந்து விரிந்ததாக இருக்கவில்லை. படித்து கிளாக் ஆசிரியை ஆக வரவேண்டும் என்றளவில் தான் அவர்கள் தங்கள் கல்விக் கனவை மட்டுப்படுத்தி இருந்தனர்.

அகிலன் இல்லத் திறப்புவிழா நிகழ்வு.இராணுவக் கெடுபிடிகளோ மற்றும் தொல்லைகளோ தங்களுக்கு இதுவரை இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதே கருத்தை அங்குள்ள ஏனைய இல்லங்களும் தெரிவித்தன. இராணுவத்தினரிடம் இல்லங்கள் பற்றிய விபரங்கள் உண்டு. அவர்களுடன் இல்ல நிர்வாகம் நல்லிணக்கமான உறவைப் பேணி வருகின்றது.

மட்டக்களப்பில் அகிலன் இல்லத்தின் திறப்பு விழாவிற்கு அப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரியும் அழைக்கப்பட்டு இருந்தார். அது சற்று சங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஏற்பாட்டாளர்களிடம் அது பற்றி விசாரித்த போது ஒரு இராணுவ அதிகாரியை அழைப்பதால் தங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் நாளை ஒரு பிரச்சினை என்று வந்தால் தேவையற்ற கெடுபிடிகளைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த இல்லங்கள் தொடர்பான நடவடிக்கைகள் எதற்கும் இடைஞ்சல்கள் ஏற்படுவதும் தவிர்க்கப்படும் எனத் தெரிவித்தனர். அங்கு மக்கள் தங்கள் நாளாந்த வாழ்வை நகர்த்த சமயோசிதமாக நடந்து கொண்டு முரண்பாடுகளைத் தவிர்த்து தங்கள் வாழ்வை நகர்த்துகின்றனர்.

லண்டண் கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டி தேவசகாயமும் அவருடைய துணைவியாரும்.மேலும் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயமும் பெருமளவிலான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஒரு குறுகிய காலம் ஆலயத்தில் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால் இப்பணிகளில் தடையேற்பட்டு இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு எதிராக சில ஆலய ரஸ்டிகள் செயற்பட்டனர். இது பற்றிய விரிவான கட்டுரைகள் செய்திகள் லண்டன் குரலில் வெளிவந்திருந்தது. ஆனால் மீண்டும் நிர்வாகத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட எஸ் கருணைலிங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மீள ஆரம்பித்து வைத்ததை ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய ரஸ்டிகளில் ஒருவரான தேவசகாயம் கிழக்கு இலங்கைப் பல்கலைக் கழகத்தில் நடந்த வைபவம் ஒன்றில் சுட்டிக்காட்டினார்.

வன்னி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு எம் கோபாலகிருஸ்ணன் உதவித்தொகை வழங்குகின்றார்.ஜனவரி 23ல் வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25000 ரூபாய் படி உதவித் தொகை வழங்குகின்ற திட்டத்தை லண்டன் அகிலன் பவுண்டேசன் மேற்கொண்டது. அன்றைய நிகழ்வில் முதற்கட்டமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 5000 ரூபாய் வழங்கப்பட்டது. கிழக்கு லண்டன் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

செட்டிபாளையம் விபுலானந்தர் இல்லத்தில் மாணவர்கள் உணவு உண்பதற்கும் கல்வி கற்பதற்குமான மண்டபம் ஒன்று – அகிலன் மணிமண்டபம் – கட்டப்பட்டு இந்த விஜயத்தின் போது திறந்து வைக்கப்பட்டது.

லண்டன் சிவன் கோவில் இல்லச் சிறுமிகளுடன்.மட்டக்களப்பில் லண்டன் சிவன் கோவில் இல்லம் ஒன்றும் உள்ளது. இந்த இல்லத்தில் 20 சிறுமிகள் வரையுள்ளனர். இவர்களது உணர்வுகளும் தேவைகளும் மற்றைய இல்லங்களில் உள்ளவர்களில் இருந்து வேறுபட்டதல்ல. இவர்களது கனவுகளும் கூட ஆசிரியைகளாக வர விரும்புவதாகவே இருந்தது. இந்தச் சிறார்கள் யாரும் எதிலும் குறைகூற விரும்பவில்லை. தங்களுக்கு கிடைத்ததை எண்ணி திருப்தியடைந்துள்ளனர். ஆனால் அவர்களை இந்நிலைக்கு அப்பால் எடுத்துச் சென்று அவர்களை தங்கள் சொந்தக் காலில் நிலைக்கச் செய்கின்ற பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு உண்டு.

மட்டக்களப்பில் உள்ள லண்டன் சிவன் கோவில் இல்லம் - படுக்கை மண்டபம்.தற்போது லண்டனில் இருந்து அகிலன் பவுண்டேஸன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் என்பனவே பெரிய அளவிலான உதவிப் பணிகளை முன்னெடுக்கின்றன. ஏனைய நாடுகளில் இருந்தும் சில சில உதவிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள ஒவ்வொரு ஆலயமும் தமது வருமானத்திற்கு ஏற்ப பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறவுகளை இழந்த குழந்தைகளுக்கு தனிப் பெற்றோருக்கு (தாயை அல்லது தந்தையை இழந்தவர்களுக்கு) உதவ முன்வந்தால் வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் எதிர்கால வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

மன்னாரில் புதிய தங்;குமிடத்திற்குக் கட்டப்பட்டுக் கொண்டுள்ள குளியல்பகுதி.தமிழ் மக்களை இன்றைய நிலையிலிருந்து மீட்பது அரசின் கடமையென்றும் அவ்வாறு அப்பொறுப்புக்களை ஏற்பது இனவாத அரசின் இனவாத நடவடிக்கைகளுக்கு உதவும் என்றும் கூறி இப்பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தத்துவ அரசியல் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித பயனையும் ஏற்படுத்தப் போவதில்லை. பாதிக்கப்பட்ட மக்களை நெருங்காமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து டயரெக் டெபிற்றில் நடாத்திய அரசியலற்ற வன்முறையின் விளைவுகள் தாம் இன்று அந்த மக்கள் அனுபவிக்கும் இந்த துயரங்களுக்கு அடிப்படை. அதே போல் ஆனால் டயரெக்டெபிற்றும் செலுத்தாமல் வெறும் வாய்ச்சொல் புரட்சியாளர்களை நம்பும் நிலையில் இலங்கைத் தமிழ் சமூகம் இன்றில்லை. அவரவர் தங்கள் அரசியல் அடையாளங்களை பில்ட் அப் செய்ய வாய்ச்சொல் புரட்சிகளும் தத்துவங்களும் உதவுமேயன்றி தங்களை அர்ப்பணிக்கத் தயாரற்ற இந்த வாய்ச்சொல் வீரர்கள் கூவித்தான் பொழுது விடிய வேண்டும் என்ற அவசியம் அங்கில்லை.

யுத்தம் ஏற்படுத்திய இந்தச் சுமைகளை சுமப்பது ஒன்றும் இலகுவானதல்ல. அதிலும் யுத்தத்தில் தங்கள் தாய் தந்தையரையும் உறவுகளையும் இழந்த சிறார்களின் மீது இச்சுமைகளை சுமத்திவிட முடியாது. இந்தச் சிறார்கள் விடயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்திலும் தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் பொறுப்பு உண்டு. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினால் இந்தப் பொறுப்புக்களை தாங்கும் வலுவில்லை. அப்பொறுப்புக்களை ஏற்கின்ற கடமைப்பாடு மேற்கு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற பொங்கு தமிழ் கொண்டாடிய மற்றும் கொண்டாடாத தமிழ் மக்களுக்கு உண்டு.

வேட்புமனுத் தாக்கல் நாளை ஆரம்பம்

srilanka_parliament_02.jpgவேட்பாளர் நியமனப்பத்திரங்களைத் தயாரிக்கும் பரபரப்புக்கு மத்தியிலும், தேர்தலில் போட்டியிடும் சின்னத்தைத் தெரிவு செய்வதில் சிறு அரசியல் கட்சிகள் இன்னமும் முடிவெடுக்க முடியாத நிலையில் இறுதி நேர பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன.

பெரிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் நியமனப் பத்திரங்களைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. அதேநேரம் சிறிய கட்சிகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிக் கொடுப்பதில் முனைப்புக் காட்டியுள்ளன.

இந்த நிலையில் பெரிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது இணைந்தே போட்டியிடுவதா என்பதில் இன்னமும் தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலையில் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடுவதெனவும் அதேநேரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்புறவுடன் செயற்படுவதெனவும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தீர்மானித்திருக்கிறது. எனினும், அரச தரப்புடன் நேற்றைய தினமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கட்சியின் பேச்சாளரொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

அரசாங்க ஆதரவு கட்சியாகத் தேர்தலில் களமிறங்குவதுடன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து போட்டியிடுவதனை விடவும், தனித்து வீணைச் சின்னத்தில் போட்டியிடுவது சாதகமானது என ஈ.பி.டி.பி. நம்புகிறது.

இதேபோன்று ஆளுந்தரப்பில் உள்ள மலையக மக்கள் முன்னணி நுவரெலியா, பதுளை மாவட்டங்களில் தனித்து கட்சியின் மண்வெட்டிச் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. அமரர் பெ. சந்திரசேகரனின் பாரியார் சாந்தினி சந்திரசேகரனின் தலைமையில் நுவரெலியா மாவட்டத்திலும், மாகாண சபை உறுப்பினர் எஸ். அரவிந்த்குமார் தலைமையில் பதுளை மாவட்டத்திலும் மலையக மக்கள் முன்னணி களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்திலும் அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்றும் கூடி ஆராய்ந்துள்ளது. இம்முறை கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலருக்குப் போட்டியிட வாய்ப்பளிக்காதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக எம்.கே. சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா ஆகியோருக்கு வாய்ப்பளிக்கக் கூடாதெனக் கூட்டமைப்பின் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிவாஜிலிங்கமும், ஸ்ரீகாந்தாவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தலைமையிலான புதிய இடதுசாரி விடுதலை முன்னணி கட்சியில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் திருப்திகரமாக உள்ளன – ஐ. சி. சி. பிரதிநிதி தெரிவிப்பு

cricket.jpgஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக் கென விஷேடமாக பள்ளேகல சூரியவெவ மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சர்வதேச விளையாட்டு மைதானங் களின் தரம் திறமையான முறையில் இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனப் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

2011ம் ஆண்டில் உலக கிரிக்கெட் கிண்ணத்துக்கான 12 போட்டிகள் இலங்கையில் அமைக்கப்பட்டு வரும் மேற்குறிப்பிட்ட மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இதனை முன்னிட்டு இவைகளின் தரங்களை பார்வையிட அண்மையில் இலங்கை வந்த பிரதிநிதிகள் குழுவினரே இவ்வாறு கருத்துத் தெரிவித் தனர்.

இம்மூன்று மைதானங்களின் நிர்மாணப் பணிகளைப் பற்றி குறை கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் இணைப்பதிகாரி திராஜ் மல் ஹோத்ரா குறிப்பிட்டார்.

தாங்கள் எதிர்பார்ததை விட பல மடங்கு திருப்த்தியளிக்கும் வகையில் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகி வருகின்றமையிட்டு மகிழ்ச்சியடைவ தாகவும் அவர் இதன்போது மேலும் கூறினார்.

இதனைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு இறுதியில் சூரியவெவ சர்வதேச விளையாட்டு மைதானத்தில், மேற்கு இந்திய அணியுடனான போட்டியொன்றை நடாத்துவதற்கு சகல நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றது என இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் இடைக்காலச் சபையின் தலைவர் டீ. எஸ். த. சில்வா தெரி வித்தார்.

டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து நான்கு சதம் குவித்தார் சச்சின்

thendur.jpgஇந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கொல்கத்தாவில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் சதம் அடித்தார்.

டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் அடித்த 47வது சதம் இதுவாகும். இந்த ஆண்டு டெண்டுல்கருக்கு மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது எனலாம்.

அவர் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து 4 சதங்கள் அடித்துள்ளார். முன்னதாக கடந்த மாதம் பங்களாதேசத்துக்கு எதிராக சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் சதம் கண்ட டெண்டுல்கர், மிர்புரில் நடந்த 2வது டெஸ்டிலும் சதம் அடித்தார். நாக்பூரில் நடந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டிலும் டெண்டுல்கர் சதம் கண்டு இருந்தார்.