கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

கோர்ட் முன் தீக்குளிக்க காங். வக்கீல் முயற்சி

 நாகர்கோவில் கோர்ட் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க வக்கீல் ஒருவர் முயன்றதை அடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோர்ட் வாளகத்தின் முன் வக்கீல் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டில் ஒன்றுடன் வந்தார்.

பின்னர் அவர் இலங்கை தமிழர் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க போவதாக அறிவித்தார். இதையடுத்து கோர்ட் வளாகத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. போலீசாருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். விசாரணையில் அவர் நாகர்கோவிலை சேர்ந்த வக்கீல் கோசல்ராம் என்றும் அவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர் என்பது தெரிய வந்தது

பாக்கு நீரிணையில் இந்திய போர்க் கப்பல்கள்!

boats-1002-2.jpgஇலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் வேளையில் இராமேஸ்வரம் கடல்பகுதியில் புலிகள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில் விமானப்படையினரின் போர் விமானங்களும் போர்க்கப்பலும் தீவிர கண்காணிபபில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செயதிகள் தெரிவிக்கின்றன.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுருவலாம் எனக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இராமநாதபுரம் கடல் பகுதியின் மாவட்டக் கடலோரப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது இராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான 4 போர்க்கப்பல்கள் 500 க்கும் மேற்பட்ட கமாண்டோ படைவீரர்களுடன் தீவிரமாக பாதுகாப்புபணியில் ஈடுபட்டு வருகின்றன.

இராமேஸ்வரம் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம் ஆகிய பாககு நீரிணை  கடல்பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான் போர்க்கப்பல்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளன

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் தூத்துக்குடியில் உள்ள கடலோர காவல் படைக்குசொந்தமான போர்க்கப்பல் ஒன்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்திய கடற்படை ஹெலிகொப்டர்  இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்றும் கடலில் தாழ்வாகப் பறந்து கண்காணித்து வருகிறது மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான தரையிலும் நீரிலும் அதிவேகமாக செல்லக்கூடிய 2 ஹோவர்கிராப்ட் ஐசி 181 183 ஆகியவையும் 24 மணிநேரமும் கடலில் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன

கடலுக்குள் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்களின் அடையாள அட்டைகள் படகுகள் சோதனையிடப்பட்டு வருகின்றன. இதுதவிர கியூப்பிரிவு பொலிஸார் கடலோரப்பகுதியில் ரோந்து சென்று இலங்கையில் இருந்து யாரும் தப்பிவருகிறார்களா இலங்கைக்கு பொருட்கள் எதுவும் கடத்தப்படுகிறதா என்று கண்காணித்து விசாரணை நடத்திவருகின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறை

mahinda_samarasinghe.jpgபுலிகளின் பிடியிலிருந்து விடுபட்டுப் பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறையை பாதுகாப்புப் படையினர் அமுல் படுத்தவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு பாதுகாப்பை நாடி வரும் அப்பாவி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பாதுகாப்பை நாடி மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  விசுவமடு, சுதந்திரப் பிரதேசத்தை நோக்கி வந்த சிவிலியன்களை இலக்கு வைத்து புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி நேற்றுக்காலை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது.  இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-

புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் அழைப்பை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கினர்.  சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கடந்த சில நாட்களுக்குள் வந்துள்ளனர். நேற்றும் ஐயாயிரம் பொது மக்கள் வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியை நோக்கி படகுகள் மூலம் 2 ஆயிரம் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர் என்று யாழ். அரச அதிபர் தனக்கு தகவல் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பை நாடி எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான சகல நிவாரண நடவடிக்கைகளை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

தற்பொழுது படுதோல்வியடைந்துள்ள புலிகள், இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிவிலியன்களே புலிகளை பாதுகாத்துக் கொள்ளவுள்ள ஒரே ஒரு ஆயுதமாகும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நாடி வருவதையிட்டு விரக்தியடைந்த புலிகள் அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிவரும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி அவர்களின் வருகை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பை நாடி வந்த ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம்.
இந்த மக்களை தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம். இந்த மக்களை தங்க வைக்கவென மேலும் 5 நலன்புரி நிலையங்களை அமைக்க வவுனியா அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

72 மணித்தியாலங்கள் தொலைக்காட்சி பார்த்து கனடிய தமிழர் சாதனை

suresh.jpgஇலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவருமான சுரேஷ் ஜோக்கிம் (39 வயது) என்பவர் 72 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியைப் பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  சுரேஷ் ஏற்கனவே 52 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார். ஏற்கனவே கடந்த 2005 இல் நியூயோர்க்கில் ஏபிசி ஸ்ரூடியோவில் 69 மணித்தியாலங்கள் 48 நிமிடங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து சாதனை படைத்திருந்தார். இப்போது ஸ்ரொக்ஹோமில் 72 மணித்தியாலங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்து தனது முன்னைய சாதனையை முறியடித்துள்ளார்.

கின்னஸ் ஏட்டில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ள சுரேஷ் ஜோக்கிமை சுவீடனின் தொலைக்காட்சி சேவையான ரிவி4 நிலையம் சுவீடனைச் சேர்ந்தவருடன் போட்டியிடுமாறு அழைத்திருந்தது. அதற்கிணங்கி அங்கு சென்று ஞாயிற்றுக்கிழமை ஜோக்கிம் சாதனை புரிந்துள்ளார்.  ரொறன்ரோவில் மிஸ்ஸிசாகுவா பகுதியில் தனது மனைவியுடன் சுரேஷ் வாழ்ந்து வருகிறார். கோப்பி குடித்தவாறு தொலைக்காட்சி தொடர் நாடகங்களைப் பார்ப்பதில் தனது நேரத்தை செலவிட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியை பார்க்கும் போட்டியை ஆரம்பித்த அவர் ஞாயிறு மாலையே பார்ப்பதை நிறுத்தியுள்ளார். தனது சாதனையை முறியடிக்க கடந்த 3 வருடங்களாகப் பலர் முயன்றதாகவும் ஆயினும் முடியவில்லை என்று ஜோக்கிம் கூறியுள்ளார்.

25 மணித்தியாலங்கள் 49 நிமிடங்களில் மரதன், 120 மணிநேரம் வானொலி ஒலிபரப்பு, ஒற்றைக்காலில் 76 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள், 55 மணித்தியாலங்கள் 5 நிமிடங்கள் உடுப்புகளை இஸ்திரிகை செய்தமை என்பன இவரின் சாதனைகளில் முக்கியமானவையாகும்.  தொடர்ச்சியாக 84 மணித்தியாலங்கள் மேளம் அடித்தமை, 168 மணித்தியாலங்கள் ரெட்மில்லில் (659.27 கிலோமீற்றர் தூரம்) ஓடியமை, 4.5 கிலோகிராம் எடை கொண்ட 135.5 கிலோ மீற்றர் தூரம் காவிச் சென்றமை, 56.62 கி.மீ.தூரம் தொடர்ந்து தவழ்ந்தமை, 100 மணித்தியாலங்கள் நடனமாடியமை, 24 மணித்தியாலயத்தில் 19.2 கி.மீ.தூரம் காரை தள்ளிச் சென்றமை என்பனவும் ஜோக்கிமின் சாதனைகளாகும்.

கடற்புலிகளின் பாரிய தளம் முல்லை காட்டுப் பகுதியில் அழிப்பு

mi24_2601.jpgமுல்லைத் தீவு காட்டுப் பகுதியில் மறைவான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடற் புலிகளின் பாரிய தளம் மற்றும் கட்டடத் தொகுதி என்பனவற்றை நேற்றுக் காலை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். விமானப் படையினரின் இந்த கடுமையான தாக்குதல்களில் கடற் புலிகளின் பாரிய கட்டடத் தொகுதிகளுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான படகுகள் மற்றும் உழவு இயந்திரங்களும் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு கடலேரிக்கு வடக்கேயும், வெள்ளைமுல்லை வாய்க்கால் காட்டுப் பகுதியின் கரை யோரத்திற்கு மேற்கே ஒரு கிலோ மீற்றர் தொலைவிலும் இந்த முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான கிபீர் மற்றும் மிக் – 27 ரக தாக்குதல் விமானங்களை பயன்படுத்தி நேற்றுக்காலை 7.00 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ ஐ. நா தொண்டு நிறுவனங்கள் மீண்டும் தயார்

mullai-ahathi.jpgஇலங் கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் பிரதேசத்தி்லிருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டு்ப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதிலும், அவர்களின் முக்கிய அவசர தேவைகளை ஈடுசெய்வதிலும், ஐநா மன்றத்தின் தொண்டு நிறுவனங்கள் தமது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.

விடுதலைப்புலிகளின் பிரதேசங்களில் இருந்து இந்த நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அங்கிருந்து வெளியேறி வந்து வவுனியாவில் தமது அலுவலகங்களை அமைத்திருந்த போதிலும் அந்த நிறுவனங்கள் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கான நிவாரண பணிகளில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த அனர்த்த முகாமைத்துவ மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் வவுனியா செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டம் ஒன்றில் ஐநா மன்றத்தின் தொண்டு நிறுவனங்கள், அரசாங்கத்தின் வழிகாட்டலில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண பணிகளில் ஈடுபடுவது தொடர்பாக ஆராயப்பட்டு, அவற்றிற்கான பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

போர்ப்பிரதேசத்திலிருந்து இதுவரையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்து சேர்ந்திருக்கின்றார்கள் என்பதும், ஏற்கனவே இராணுவத்தினரிடம் வந்து சேர்ந்துள்ள மேலும் 12 ஆயிரம் பேர் இந்த முகாம்களுக்கு படிப்படியாகக் கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் அரச திணைக்களங்களும் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயற்படத் தொடங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலில் சுசந்திகாவும் களத்தில் குதிக்கிறார்

susanthika.jpgமுன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் வேட்பாளராகவே இவர் எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

சுசந்திகா தடகள விளையாட்டுகளில் இருந்து ஓய்வுபெறப்போவதாக கடந்தவாரம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய அரசியல் கட்சியொன்றிலிருந்து அண்மையில் விலகிச் சென்ற குழுவினரே இப்புதிய கட்சியை உருவாக்கியுள்ளனர். இக்கட்சியின் தலைவர் மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சுசந்திகா உட்பட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களையும் அணுகியுள்ளதாகவும் அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரைப்போலவே தேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர்கள் வெற்றிபெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு பாஃப்டா விருது

rahman.jpg‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரகுமானுக்கு, பிரிட்டிஷ் பிலிம் அகாடமியின் பாஃப்டா விருது கிடைத்துள்ளது.

பிரிட்டிஷ் இயக்குனர் டேனி பாயல் இயக்கத்தில் வெளியான ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம், ஆஸ்கார் விருதுக்கு அடுத்து உயரியதாகக் கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்றது.

இப்படத்தில் இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு ‘கோல்டன் குளோப்’ விருதும் கிடைத்தது. மேலும் ஆஸ்கார் விருத்துக்கும் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் உயரியதாகக் கருதப்படும் பாஃப்டா விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு பிரிட்டிஷ் பிலிம் அகாடமி விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் இசையமைத்ததற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்து திரைக்க‌தை, ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் என மேலும் ஆறு விருதுகளையும் ‘ஸ்லம்டாம் மில்லினர்’ பெற்றுள்ளது.

மக்களை அழைத்துவர 40 பஸ்கள் சேவையில்

bus.jpgவன்னியில் இருந்துவரும் மக்களை வவுனியாவுக்கு அழைத்துவருவதற்கென 40 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வந்த சுமார் 12 ஆயிரம் பேர் ஓமந்தை மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கட்டம் கட்டமாக வவுனியா அழைத்து வரப்படுவதாகவும் அவர் கூறினார்.

மக்களை அழைத்துவர இ.போ.ச. மற்றும் தனியார் பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, வவுனியாவுக்கு அழைத்துவரப்படும் மக்கள் வவுனியாவிலுள்ள பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்ட பின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படவுள்ளனர்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: பலி 173 ஆக உயர்வு

forest_fire.jpgஆஸ்தி ரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இறந்தோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள காடுகளில் கடந்த சனிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. அங்கு வீசும் அனல் காற்று, வெப்பம் காரணமாக தீ மேலும் பல இடங்களுக்கு பரவியது. சுமார் 30 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தொலைவுக்கு தீ கொளுந்து விட்டு எரிந்தது. தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் உடனடியாகப் பலன் உண்டாகவில்லை.

இந்த தீ விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இதுவரை 173 பேர் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருப்பதாக, காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், 750-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின. பொது மக்களின் உடமைகளுக்கும் பலத்த சேதம் உண்டானது. காட்டுத் தீயில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் இந்த அளவுக்கு பெரிய தீவிபத்து ஏற்பட்டதில்லை என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. காட்டுத் தீயால் கடும் பாதிப்பை சந்தித்திருக்கும் மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஊர்களிலும்தான் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.