கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பிபிசி உலக சேவையின் சில பிரிவுகள் வேலை நிறுத்தம்

bbc.gifபிபிசி உலக சேவையின் தெற்காசிய பிரிவின் சில சேவைகளைச் சேர்ந்தவர்கள் அவற்றின் ஆசிரிய பீட பணிகளை இந்திய துணைக்கண்டத்துக்கு மாற்றும் திட்டத்தை எதிர்த்து இன்று 24 மணி நேர வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.

ஹிந்தி சேவையின் முழுவதையும் இந்தியாவுக்கும், லண்டனில் இயங்கும் உருது மற்றும் நேபாள சேவைகளில் ஒரு பகுதியை முறையே இஸ்லாமாபாத் மற்றும் காத்மண்டு ஆகிய இடங்களுக்கும் மாற்றுவது, அந்தச் சேவைகளின் ஊடக சுதந்திரத்துக்கு பாதகமாக அமையும் என்று போராட்டத்தில் ஈடுபடும் செய்தியாளர்கள் கூறுகிறார்கள். இந்த மாற்றம் அந்த சேவையின் ஊழியர்களின் பணி நிலைமை மற்றும் ஊதியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கான தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

ஆனால், இந்தத் திட்டம் உலக சேவையை அதனது நேயர்களுக்கு அருகில் கொண்டு செல்லும் என்று பிபிசி முகாமையாளர்கள் கூறுகிறார்கள்.

வங்கதேச கலகக்காரர்கள் சரணடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது

buyinfromreuters.jpgவங்கதேச டாக்கா நகரில் கலவரம் நடத்திய படையினர் சரணடைந்துவிட்டதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது என பி.பி.ஸி. தமிழோசை செய்தி வெளியிட்டிருந்தது.  .

இருந்த போதிலும் சுமார் 130 அதிகாரிகளை காணவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர்களில் சிலர் கலகக்காரர்களால் கொல்லப்பட்டிருக்கக் கூடும். கலவரத்தை முறியடிக்க கொண்டுவரப்பட்ட இராணுவத்துடன், பொதுமக்களும் சேர்ந்து, தெருக்களில் கூடி, இந்த நெருக்கடி தீர்ந்ததை கொண்டாடினார்கள்.

ஆயுதங்களைக் களையும் கலவரகக்காரர்களுக்கு பகிரங்க மன்னிப்பு வழங்குவதாக உறுதியளித்த பிரதமர் ஷேக் ஹசீனா, அதனைச் செய்யாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தமது ஊதியம் மற்றும் பணி நிலைமை குறித்து விசனம் தெரிவித்து, நேற்று கலவரம் செய்த டாக்கா எல்லைக்காவல் படையினரின் தலைமையகத்தை சுற்றி 14 யுத்த தாங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்கொலை குண்டு தயாரிப்பு தொழிற்சாலை, சூசையின் பதுங்குகுழி நேற்று கண்டுபிடிப்பு

uthaya_nanayakara_.jpgபுதுக்குடி யிருப்பு மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் தற்கொலைக் குண்டு தயாரிக்கும் பாரிய தொழிற்சாலை மற்றும் கடற் புலிகளின் தலைவர் சூசையின் பதுங்கு குழி முகாம் ஒன்றையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்த முகாமை சூசை பாவித்தமைக்கான தடயங்கள் காணப்படுவதாக படைத் தரப்பினர் உறுதி செய்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த முகாமின் ஒரு பகுதி விமானப் படையினரின் விமானத் தாக்குதல்களில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினரும், இராணுவத்தின் ஏழாவது சிங்க ரெஜிமண்ட் பிரிவினரும் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர் இந்த குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை கைப்பற்றியுள்ளனர். தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் தற்கொலை குண்டுகள், கிளேமோர் குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய பாரிய தேடுதல்களில் கொல்லப்பட்ட புலிகளின் நான்கு சடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கிகள் இரண்டையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர். இந்த தற்கொலைக் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையின் எல்லைப் புரத்திலேயே சூசை பாவித்த முகாம் அமைந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

ஆதாரமில்லாத செய்திகளை வெளியிடுவது நியாயமற்றது – யாப்பா

anura.jpgவன்னி யிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வரும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை அரசாங்கம் குறைவின்றி செய்துகொண்டுள்ள இத்தருணத்தில் ஆதாரமற்ற இணையத்தளங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்படுவது எந்த வகையிலும் நியாயமற்ற செயல் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா நேற்று தெரிவித்தார்.

மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உட்பட பலர் நேரடியாகச் சென்று அங்குள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். பயங்கரவாதிகள் யார்? பொதுமக்கள் யார்? என்பது தொடர்பாக பிரித்தறிந்தவாறே படையினர் செயற்படுகின்றனர்.

ஹியூமன் ரைட்ஸ் வொட்ச் என்றழைக்கப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் தவறான செய்திகளை மேற்கோள்காட்டி எமது மனிதாபிமான நடவடிக்கைக்கு தவறான கருத்தை சர்வதேச சமூகத்திடம் கொண்டு செல்ல முற்படுகின்றனர் என்றும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.அத்துடன் பயங்கரவாதம் ஒழிக்கப்படும்போதே நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாப்பா மேலும் தெரிவித்தார்.

மேல் மாகாண சபைக்கு ஏப்ரல் 25ல் தேர்தல்; 38 கட்சிகள், 23 சுயேச்சைகள் போட்டி; 2378 வேட்பாளர்கள் களத்தில்

sri-lanka-election-01.jpgமேல் மாகாண சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல் திணைக்களம் நேற்று அறிவித்தது. 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 2378 பேர் போட்டியிடுகின்றனர்.

இம்முறை தேர்தலில் 38 கட்சிகளும் 23 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய இடதுசாரி முன்னணி, சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி அடங்லாக 17 கட்சிகளும் 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐ. தே. க. முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 11 கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் ஐ. ம. சு. முன்னணி, ஐ. தே. க., முஸ்லிம் காங்கிரஸ் அடங்கலான 10 கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிட உள்ளன. 07 கட்சிகள் 6 சுயேச்சை குழு நிராகரிப்பு கொழும்பு மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 07 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. கொழும்பு பதில் தெரிவத்தாட்சி அதிகாரி ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

இதன்போது இரண்டு கட்சிகளினதும் 3 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளினதும் எம். அன்பழகன், பி. பன்னீர்ச் செல்வன், விஜே குணவர்த்தன தலைமையிலான சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 14 அரசியல் கட்சிகளும் 6 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதில் 3 அரசியல் கட்சிகளினதும் 2 சுயேச்சைக் குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி, ஐக்கிய இலங்கை ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளினது வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டதாக கம்பஹா உதவித் தேர்தல் ஆணையாளர் மொஹமட் தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. இதிலே 2 அரசியல் கட்சிகளதும் ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பூமிபுத்ர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பு மனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

இம்முறை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணியில் இ. தொ. கா., மலையக மக்கள் முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி, மக்கள் ஐக்கிய முன்னணி, ஐ. தே. க. (ஜனநாயகக் குழு), கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி, மக்கள் கட்சி அடங்கலான பல கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன.

கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக சுனில் ஜெயமினியும் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளராக பிரசன்ன ரணதுங்கவும் களுத்துறை மாவட்ட முதன்மை வேட்பாளராக ரெஜினோல்ட் கூரேயும் போட்டியிடுகின்றனர். ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக லக்ஷ்மன் அபே குணவர்த்தன போட்டியிடுவதோடு ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக துமிந்த தாககமுவவும் முஸ்லிம் காங்கிரஸ் முதன்மை வேட்பாளராக அப்துல் ஹையும் போட்டியிடுகின்றனர். இது தவிர, ஐ. ம. சு. முன்னணி பட்டியலில் அஜ்மல் மெளஜுட், எம். எச். மன்ஸில், நவுஸர் பெளசி, வசந்தா ரோஹினி தேவி, கே. ரி. குருசாமி, செல்லசாமி திருக்கேஷ்வரன், முத்து சங்கரலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஐ. தே. க. சார்பாக 5 முஸ்லிம்களும் 2 தமிழர்களும் போட்டியிடுகின்றனர். சாஹுல் ஹமீட், எம். எஸ். எம். பைரூஸ், அப்துர் ரஹுமான் முஹம்மது முயீஸ், ஏ. ஜே. எம். முஸம்மில், துஆன் ஆமித், கிருஷாந்தா யோகதாஸ், குமர குருபரன் ஆகியவர்களே போட்டியிடுபவர்களாவர்.களுத்துறை மாவட்டத்தில் எம். எம். எம். அம்ஜாத், அம்ராஸ் மஜீத், தங்கராஜா ஜயராஜ் ஆகிய சிறுபான்மையினரும் கம்பஹா மாவட்டத்தில் சலீம் முஹம்மது சதாவுல்லா, கே. புஷ்பராஜ் ஆகியோர் ஐ. ம. சு. முன்னணியில் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக கித்சிறி கஹடபிடியவும், ஜே. வி. பி. முதன்மை வேட்பாளராக டாக்டர் நன் ஜெயதிஸ்ஸவும், மு. கா. சார்பாக எம். அஸ்லமும் போட்டியிடுகின்றனர்.

கம்பஹா மாவட்ட ஐ. தே. க. முதன்மை வேட்பாளராக மாதிவலயும் ஜே. வி. பி. சார்பாக வருணா தீப்தி ராஜபக்ஷவும் மு. கா. சார்பாக சாபி ரஹீமும் போட்டியிடுகின்றனர்.

முதலமைச்சர் வேட்பாளர்

ஐ. ம. சு. முன்னணி சார்பாக இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை. கட்சி இது குறித்து பின்னர் முடிவு செய்யும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார். ஐ. தே. க. வும் இம்முறை முதலமைச்சர் வேட்பாளர் எவரையும் அறிவிக்கவில்லை. கூடுதல் விருப்பு வாக்கு பெறுபவர் முதலமைச்சராக நிய மிக்கப்படுவாரென ஐ. தே. க. கூறியது.

திசைமாறிய 40 குடும்ப உறவுகள் ஒன்றிணைவு. வவுனியா நிவாரண கிராமத்தில் நிகழ்வு.

Wanni_Warபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து வெவ்வேறு இடங்களில் பிரிந்து தங்கியிருந்த 40 குடும்பங்களின் அங்கத்தவர்கள் ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர்.பல்வேறு வழிகள் ஊடாகத் தப்பிவந்தபோது, வெவ்வேறான நலன்புரி நிலையங்களில் தங்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருந்தவர்களே இவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளதாக மீள் குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஒன்றிணைந்த இந்த 40 குடும்பங்களும் தற்போது வவுனியா- செட்டிக்குளம் மனிக் பாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் தங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். செட்டிக்குளம் மற்றும் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 13 நலன்புரி நிலையங்களிலிருந்த போது, இந்தக் குடும்ப அங்கத்தவர்கள் கண்டறியப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

மோதல் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுள் மனிக்பாம் கதிர்காமர் நிவாரண கிராமத்தில் 2825 பேரும், அருவித்தோட்டம் வித்தியாலயத்தில் 582 பேரும் செட்டிக்குளம் வித்தியாலயத்தில் 1965 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம், பம்மைமடு, காமினி வித்தியாலயம், பூந்தோட்டம், கல்வியியற் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, கோவில் குளம் இந்து வித்தியாலயம், வவுனியா மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச பாட சாலை ஆகிய நலன்புரி நிலையங்களில் 26809 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் 13 நலன்புரி நிலையங்களில் 32, 181 பேர் தங்கியுள்ளதாகக் கூறிய அமைச்சர் பதியுதீன், கிழக்கு மாகாணத்தில் மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று வடக்கிலும் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இவர்கள் தொடர்ந்தும் நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்படமாட்டார்கள் என்றும், விரைவில் அவர்களின் சொந்தக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாற்றுத் தமிழ் அரசியல் தலைமைகள் வேறு பார்வையில், வேறு தளத்தில் விமர்சிக்கப்படல் வேண்டும். ! : ஆனந்த பிரசாத்

Rajapaksa_Douglas_Pirabaharan._._._._._.

‘மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல் – டக்ளசின் கலந்துரையாடல் : சபா நாவலன்’ என்ற தலைப்பில் சபா நாவலன் சபா நாவலன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த பற்றிய அரசியல் விமர்சனம் ஒன்றை ‘இனியொரு’ வில் எழுதி இருந்தார். அது தொடர்பான தனது கருத்துக்களை ஆனந்த பிரசாத் இங்கு பதிவு செய்கிறார். அவர் இவ்விடயம் தொடர்பான ஒரு திறந்த விவாதத்தையும் எதிர்பார்க்கிறார். ஆனந்த பிரசாத் என்ற பெயரிலேயே தேசம்நெற் அவரை அறிகிறது. அவர் தேசம்நெற்க்கு அறிமுகமானவரல்ல.
._._._._._. 

நண்பர் சபா நாவலனுடன் அரசியல் சர்ச்சையில் இறங்குவது எனது நோக்கமல்ல அவர் முன் வைத்துள்ள கணிதச்சமன்பாட்டு பார்வை குறித்த, அதன் அரசியல் குறித்த எனது கருத்தைச் சொல்வதே எனது நோக்கம்.

தமிழ் ஆயுதப்போராட்டத்தின் பின் தமிழ் அரசியல் போக்குப்பற்றிய பார்வை இந்த இடத்தில் நமக்கு அவசியமானது. அதற்கு தமிழ் அரசியல் இயக்கப் போக்கில் எழுந்த ஒற்றைத் தலைமை, ஏக பிரதிநிதித்துவம் ஏனைய தமிழ் இயக்க அரசியல் தலைமைகளைக் கொண்டு சென்று நிறுத்திய இடமும் அவர்களின் தவிர்க்க முடியாத அரசியல் நிலைப்பாட்டு நிர்ப்பந்தச் சூழலும் மிக முக்கியமாக இந்த விவாதங்களிலும் இப்படியான விமர்சனங்களிலும் நமக்கு அவசியமானது. இதனை வெறும் கணிதச் சமன்பாடாக பார்க்க முடியாது.

அரசு சமன் புலிகள், புலிகள் சமன் ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் ஈற்றில் எல்லாம் ஒன்றுதான் என நிறுவ முற்படுவது அரசியல் பார்வைக் கோளாறாகவே முடிவதுடன் வரலாற்றுச் சூழலின் விளைவை வெறுமனே புரிந்து கொள்ள மறுப்பதுமாகவே அமையும்.

யாரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதற்கு ஜனநாயக விளக்கம் கொடுக்கப்படலாம். ஆனால் அந்த விமர்சன முன் வைப்புகளில் நமக்குள் நடந்த அரசியலின் போக்கு வடிவம் பற்றிய பிரஞ்ஞையும் அரசியல் தெளிவும் வரலாறும் ஏற்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

இங்கு அரசியல் விமர்சகர்கள் என்ற போர்வையில் நாங்கள் அரசையும் விமர்சிக்கிறோம், புலிகளையும் விமர்சிக்கிறோம். ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளையும் விமர்சிக்கிறோம் என்று போக்குக்காட்டிக் கொண்டு “வெறுமனே விமர்சனங்களாக” காலத்தைக் கழித்து விடமுடியாது.

இலங்கை அரசு தலைமையை, புலித் தலைமையை, ஏனைய தமிழ் அரசியல் தலைமைகளை விமர்சிக்கும் போது அந்தந்த அர்த்தங்களில் அவை செய்யப்பட வேண்டும். ஒன்றின் மாற்றாக மற்றொன்றைக் காட்டுவதும் அதற்கு இது சமன் என நிறுவ முற்படுவதும் அரசியல் முட்டாள்தனம் என்பதுடன் இவ் விமர்சனங்களின் அர்த்தப்பாட்டுக்கும் காயடித்து விடுகிறது.

தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இருப்பதற்கு சிங்கள அரசு மட்டுமே காரணம் இல்லை என்பதை அரசியல் ரீதியாக தற்போது பலர் ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். தமிழர் அவலம் தொடரவும், அரசியல் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நீடிக்கவும், 1984க்குப் பின் விடுதலைப் புலிகள் கொண்ட அரசியல் நிலைப்பாடுகள், இராணுவ நிலைப்பாடுகள் பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன. இதனை விளக்கத் தேவையில்லை.

தமிழ் மக்களுக்குள் இருந்து வெளிக்கிட்ட ஏனைய அனைத்து இயக்கங்களையும் அரசின் பக்கம் கொழும்பை மையப்படுத்தி தள்ளியதே புலிகளின் அரசியல்தான். .ஈ.பி.ஆர்.எல்.எப். ஆக இருந்தால் என்ன புளொட், ரெலோ ஆக இருந்தால் என்ன? ஈபி.டி.பி. ஆக இருந்தால் என்ன? ஒன்றும் இதற்கு விதிவிலக்கானவை இல்லைதான். புலிகளின் ஏக தலைமையை ஏற்றுக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பிரதிநிதியாகவிருந்த தமிழர் கூட்டணித் தலைவர் திரு.ஆனந்தசங்கரியைக் கூட புலிகளின் அரசியல் கொழும்பை நோக்கியே தள்ளியது.

ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ போன்ற அமைப்புகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படும் வரை கொழும்பையே மையப்படுத்தி  இருந்தது. புலிகள் பாராளுமன்றப் பதவியை வழங்க முன்வந்த போது, இந்த அமைப்புக்களின் ஒரு பிரிவினர் கிளிநொச்சியை நோக்கி நகர்ந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, கூட்டணி போன்ற அமைப்புகளுக்குள் கொழும்பு, கிளிநொச்சி ஆதரவு கொண்ட இருதலைமைகள் உருவாகின.

அரசு சமன் புலிகள் ஆகவே அரசுக்கு ஆதரவு வழங்கும் அல்லது கொழும்புடன் நிற்கும் (புலிகளுடன் இல்லாது ) இருக்கும் அமைப்புக்கள், கட்சிகள் அரசின் முகத்தை அதன் பாத்திரத்தை பிரதிபலிப்பவர்கள் ஆகவே அவர்களும் புலிகளும் சமன்தான் என நிறுவலாம் என்பதே நாவலனின் வாதமாகும். அதற்கு அவர் உதாரணமாகக் காட்டுவது ஈ.பி.டி.பி தலைமையை.

மகிந்த சமன் டக்ளஸ் சமன் பிரபாகரன். இதுதான் சபா நாவலனின் கணிதச் சமன்பாடு சூத்திரவியல். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்களின்அரசியலை புலித் தலைமையுடனும் அதனது அரசியலுடனும் ஒப்பிடுவது பெரும் வரலாற்றுத் தவறு என்பதுடன் அரசியல் மோசடியுமாகும்.

என்னைப் பொறுத்த வரை மாற்று அரசியல் தலைமைகள் மீதும் (ஆனந்த சங்கரி உட்பட) எனக்கு அரசியல் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர்களின் நிலைப்பாட்டின் தவிர்க்கவியலாத நிலைமையும் தமிழர்அரசியலின் வரலாற்று நிகழ்வும், போக்கும் வழியும் நாவலன் சொல்வது போல் என்னால் அவர்கள் மீது சேற்றை அள்ளி வீச முடியாது. அவர்கள் மீதான நட்பு ரீதியான, அவர்களின் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான விமர்சனங்களையே என்னால் முன் வைக்க முடியும். ஏனெனில் நானும் 1982ம் ஆண்டிலிருந்து தமிழர் போராட்டத்திற்கு புறப்பட்டு அதன் காயங்களுடனும் துயரங்களுடனுமே இருப்பவன். 1987க்குமுன் என்னால் கொழும்புடன் இருப்பதை நினைத்துப் பார்ப்பதைக்கூட முடியாமலிருந்தேன். இப்படித்தான் எல்லோருக்கும் நிகழ்ந்தது.

மகிந்தவையோ, பிரபாகரனையோ விமர்சிப்பதற்கு சமாந்தரமாக ஒரே அளவுகோலைக் கொண்டு மாற்றுத்தமிழ் கட்சிகளை, அமைப்புக்களை விமர்சிக்க முடியாது. இவர்களை அணுகுவதற்கு நமக்கு வேறுதளம் இருக்கிறது. மாற்று விமர்சன வழிமுறை இருக்கிறது.

டக்ளஸ் தேவானந்தா மகிந்தவுடன் மட்டும் நிற்கவில்லை. 1990 க்குப் பின் கொழும்பு அரசியலின் ஊடாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கால்பதித்த பின் பிரேமதாஸ, சந்திரிக்கா போன்ற அரசியல் தலைமைகளுடனும் இணைந்து பணியாற்றி வருகின்றார்.அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடக்கம் அன்றாடப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவது வரை தன்னால் முடிந்த பணியை செய்து வருகிறார். 1994ம் ஆண்டு சந்திரிகாவின் அமைச்சரவையில் புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராகவிருந்து முடியுமானவரை வடபகுதி மக்களுக்கு சேவை செய்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு அன்றைய அப்பணி பெரிதும் ஆறுதலாகவே இருந்தது. யாழ்ப்பாணத்தின் உட்கட்டமைப்புகள் அபிவிருத்தி செய்யப்பட்டதுடன் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பு செய்யப்பட்டதும் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதும் இக்காலகட்டத்திலேயாகும்.

இப்பணியின் ஊடாக அரசின் உதவியளிப்புகள் அபிவிருத்தி திட்டங்கள் மக்களை சென்றடையும் அரசியல் பொறிமுறையை வடபகுதி தமிழ் மக்களிடம் கொண்டுசென்று சேர்த்தார். நான் நினைக்கின்றேன் 1978க்குப் பின் அரசு அபிவிருத்தி உதவியளிப்புகளை புறக்கணித்து, அல்லது அவற்றை கிடைக்க விடாமல் செய்த அரசியலின் போக்கு முதன் முதலாக வடபகுதி மக்களிடையே மாறத் தொடங்கியது. டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாட்டின் மூலம் வடபகுதியில் உதவிபெற்ற மக்கள் ஏராளம். சமூக சேவை, சமூக நலத்துறை அமைச்சராகிய பின்னும் அவர் இன்றுவரை வட பகுதி மக்களுக்கு ஆற்றிவருகின்ற பணிகள் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் இன்று மக்களிடையே உள்ளது.

புலிகளின் அரசியல் இராணுவ வழி முறை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வந்து சேர்க்கப் போவதில்லை என்பதை மக்களிடம் தினமும் கண்டு நேரடியாக புரிய வைத்த மாற்று அரசியல் தலைவர் டக்ளஸ் தேவானந்தாதான். 1980க்குப் பின் ஆயுத அரசியலின் தோற்றத்தின் பின் மக்களை அதிகளவில் சந்தித்து அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்க்க பணிசெய்த தமிழ் அரசியல் தலைவர் என்றால் அது டக்ளஸ் தேவானந்தாதான். ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வின் அடிப்படையில் மாநில சுயாட்சியை வலியுறுத்தி வருகின்றார். போரின் மூலம் அல்ல பேச்சு வார்த்தையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே அவரின் நிலைப்பாடாகும்.

யாழ்ப்பாணத்தில் அவர் தங்கி நிற்கின்றபோது அவரைச் சந்திப்பதற்கு வருகின்ற அரச ஊழியர் கள், பொதுநிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்களின் மன உணர்வுகளையும்  அவர்களது அபிப்பிராயங்களும் இந்த விவாதங்களிலும் விமர்சனங்களிலும் நமக்கு முக்கியமானது. ஏனெனில் நாம்தான் நமது மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோமே அப்படியானால் சபா நாவலன் போன்றவர்கள் யாழ் மக்களிடம் போய்,  போகமுடியாவிட்டால் தொலைபேசி வாயிலாவது மகிந்தவும் டக்ளசும் ஒன்றா? பிரபாகரனும் டக்ளசும் ஒன்றா எனக்கேட்டு கருத்தறிந்து எழுத முயற்சிக்கலாம்.

இறுதியாக நான்சொல்ல வருவது. அரசுடன் இந்த மாற்றுத்தமிழ் அரசியல்கட்சிகள் நிற்பது புலித்தலைமையின் அரசியலின் விளைவே அன்றி அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. புலிகளின் இராணுவத் தோல்வியின் முடிவு, வடக்கு கிழக்கில் புதிய அரசியலுக்கான சூழலை உதயமாக்கும்போது அரசு, இந்த மாற்றுக் கட்சிகள் அமைப்புக்களின் அரசியல் உறவுகள் வேறு வடிவம் எடுக்கும். இது தவிர்க்க முடியாதது. அச்சந்தர்ப்பத்தில்தான் இக்கட்சிகளின் நிலைப்பாடுகள் தொடர்பான முழுவதுமான அரசியல் விவாதத்துக்கும் விமர்சனத்திற்குமான அரசியல் சூழல் எழும்.

நமது பிரதான பிரச்சனை என்ன? உபபிரச்சனைகள் என்ன? எந்த விடயத்திற்கு நாம் இன்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பது அரசியலில் இன்று முக்கியமானது. நமது மக்கள் நலனில் நின்றும்…

முல்லைத்தீவிலிருந்து மேலும் 400 நோயாளர்களை திருமலை அழைத்துவர ஏற்பாடு

trico.gifமுல்லைத் தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்குண்டுள்ள மேலும் 400 நோயாளர்களை நாளை சனிக்கிழமை திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த நேற்று தெரிவித்தார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்களை அழைத்து வரவிருப்பதாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவில் புலிகள் இயக்கத்தினரின் பிடியில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் ஐ. சி. ஆர். சி. யின் உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை, ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய், பொலன்னறுவை, மன்னார், வவுனியா ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம், திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும், 15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு வவுனியாவில்அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொருநிவாரணக் கிராமத்திற்கும் ஒரு பொது சுகாதார பரிசோதகரும், ஒரு மருத்துவ மாதுவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

படையினரிடம் சரணடைவதைத் தவிர்க்க பிரபாகரன் படகு மூலம் தப்பிக்கலாம் – பாதுகாப்புச் செயலர்

gothabaya.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் படையினரிடம் சரணடைவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக படகின் மூலம் தப்பிச் செல்லலாமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவ்வாறு பிரபாகரன் தப்பிச் செல்வதை முறியடிப்பதற்காக கடற்பகுதியில் கடுமையான பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோதாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் ஏனைய உயர் மட்டத் தலைவர்களையும் பாதுகாப்பதற்காக 70 ஆயிரம் பொதுமக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவரும் ஏனைய அதிகாரிகளும் படகு மூலம் தப்பிக்கலாம் என்ற காரணத்தினால் கடற்படையினரின் கண்காணிப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், படகு மூலம் தப்பிச் செல்வது கடினமானதாக இருந்தாலும் அவ்வாறு தப்பிப்பதற்குச் சாத்தியம் உள்ளது. தற்போது முல்லைத்தீவிலேயுள்ள பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வாரா அல்லது சரணடைவாரா எனத் தெரியவில்லை.

30 வருட கால யுத்தத்தின் பின்னர் பிரபாகரன் சயனைட் உட்கொள்வார் என்று கூட நாம் நினைக்கவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆட்கடத்தல் நடவடிக்கையை கூட பிரபாகரன் எதிர் பார்த்திருக்கலாம் அதுதான் சாத்தியமானதொரு தெரிவாகவும் உள்ளது. பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களில் 40 அல்லது 50 பேரும் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரேயே பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்குவரெனவும் தெரிவித்தார்.

சரணடையுங்கள்: வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு ஹசீனா எச்சரிக்கை

bangladesh-president.jpgவங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் கலகம் நாடு முழுவதும் பரவத் துவங்கியுள்ளதைத் தொடர்ந்து, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு கிளர்ச்சியாளர்கள் சரணடைய வேண்டும் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தியுள்ளார்.

கலகத்தை கைவிடத் தவறினால் நாட்டின் நலன் கருதி எந்த விதமான நடவடிக்கையையும் எடுக்க வேண்டி வரும் என்றும் கிளர்ச்சியாளர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டுத் தொலைக்காட்சியில் பிரதமர் ஷேக் ஹசீனா ஆற்றிய உரையில், கலகத்தில் ஈடுபடும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களை மன்னிக்க முடிவு செய்துள்ளேன். வீரர்கள் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கோரிக்கை விடுக்கிறேன்.

கிளர்ச்சியை கைவிடுவதுடன், ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு முகாமுக்கு திரும்புமாறு வீரர்களை வலியுறுத்துகிறேன். கிளர்ச்சியாளர்கள் சரணடையும் பட்சத்தில் அவர்களை துன்புறுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்காது. ஊதிய விகிதம் தொடர்பாக எல்லைப் பாதுகாப்பு படையினர் எழுப்பியுள்ள கோரிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் ஹசீனா தெரிவித்தார்.