கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

செட்டிகுளம் கதிர்காமர் கிராமத்தில் 728 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர்

Wanni_Warசெட்டி குளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்குரிய கதிர்காமர் கிராமத்தில் 728 குடும்பங்களைச் சேர்ந்த 2791 பேர் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என செட்டிகுளம் பிரதேச செயலக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் வந்துள்ள மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை விரைவில் திறக்கும் நோக்குடன் செட்டிகுளத்தில் அமைக்கப்படும் கிராமங்களில் இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர் என மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண அமைச்சு தெரிவிக்கின்றது.

இராமநாதன், அருணாசலம் ஆகியோரின் பெயர்களிலும் வன்னி அகதிகளுக்கு கிராமங்கள், செட்டிகுளத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்கள் வசித்த பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியானதும் மீள்குடியேற்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். அதுவரையிலும் இவர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு பராமரிக்கப்படுவர்.

சுகாதாரம், மருத்துவம், கல்வி, கூட்டுறவு மற்றும் வங்கி சேவைகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும். கல்வியை இடைநடுவில் தவறவிட்ட இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. ஆலயங்களும் இங்கு அமைக்கப்படும். உலக உணவு நிறுவனம் இவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க முன்வந்துள்ளது. செட்டிகுளத்தில் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடுகள் அமைக்கும் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது.

முல்லைத்தீவிலிருந்து 400 நோயாளர்களை இன்று திருமலைக்கு அழைத்துவர ஏற்பாடு.

trico.gifமுல்லைத் தீவில் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலில் சிக்கியுள்ள மேலும் 400 நோயாளர்கள் இன்று திருகோணமலைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் மருத்துவ சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் விமல் ஜயந்த தெரிவித்தார். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியோடு கப்பல் மார்க்கமாக இவர்கள் அழைத்து வரப்படுவர் என்றும்  அவர் கூறினார்.

முல்லைத்தீவில் சிக்கி இருந்த 1996 நோயாளர்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்; உதவியோடு ஏற்கனவே திருமலைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயப்பட்டவர்களும் திருமலை,  ஆஸ்பத்திரிக்கு மேலதிகமாக கந்தளாய்,  பொலன்னறுவை, மன்னார்,  வவுனியா ஆகிய ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து வந்து சேர்ந்துள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவையை வழங்கவென மன்னார், வவுனியா, செட்டிக்குளம்,திருமலை, கந்தளாய் ஆகிய ஆஸ்பத்திரிகளில் பணியாற்றவென 35 டாக்டர்களும், 120 தாதியரும்,  15 மருத்துவ நிபுணர்களும் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றம்

vanni-injured.gifவன்னிப் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மக்களில் சுமார் 152 பேர்  (26.02.2009) வியாழன் இரவு 8.15 மணியளவில் மன்னார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துவரப்பட்டுள்ளார்கள்.
 

வன்னியிலிருந்து கொண்டுவரப்பட்ட 15 சிறுவர்களுக்கு கொழும்பில் சிகிச்சை

army-help.jpgவன்னிப் பகுதியில் இருந்து காய மடைந்த நிலையில் திருகோணமலைக்குக் கொண்டு வரப்பட்ட ஐந்து சிறுமிகள் உட்பட பதினைந்து சிறுவர்கள் கொழும்பில் உள்ள சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை நன்கு தேறிவருகின்றது எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித் திருக்கின்றது,

இந்தச் சிறுவர்களின் உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களே காணப்படுகின்றன எனவும், திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மருத்துவமனைகளில் இருந்து கொழும்புக்கு மாற்றப்பட்ட இந்தச் சிறுவர்கள் பூரணமாகக் குணமடைந்ததும், அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

வங்கதேச துணை ராணுவத்தினர் கலகத்தில் 200 ராணுவ அதிகாரிகள் கொலை -பாதாள சாக்கடையில் பிணக் குவியல்

buyinfromreuters.jpgவங்க தேசத்தில் 2 நாட்களாக துணை ராணுவத்தினர் நடத்திய கலகம், அரசின் கடும் எச்சரிக்கையால் ஓய்ந்தது. கலவரத்தில் ரைபிள் படைப் பிரிவின் இயக்குனர் உட்பட 200 ராணுவ அதிகாரிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.  130 அதிகாரிகளை காணவில்லை. பாதாள சாக்கடையில் குவியல் குவியலாக பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. வங்கதேசத்தில் வங்கதேச ‘ரைபிள் படை’ என்ற துணை ராணுவ படையில் 40 ஆயிரம் வீரர்கள் உள்ளனர்.

அவர்களில் 20 ஆயிரம் பேர் தலைநகர் தாகாவில் உள்ள தலைமை அலுவலகத்திலும், மற்றவர்கள் மற்ற மாகாணங்களில் உள்ள முகாம்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம், பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இது அலட்சியப்படுத்தப்பட்டு வந்ததால் ஆத்திரத்தில் இருந்த அவர்கள், கடந்த புதன்கிழமை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு, வீரர்கள் கலகத்தில் இறங்கினர். அதிகாரிகளை விரட்டி விரட்டி சுட்டனர்.

தலைமை அலுவலகத்துக்கும் தீ வைத்தனர். கலகத்தை அடக்க ராணுவம் அழைக்கப்பட்டது. கலகத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று பிரதமர் ஹசீனா  அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஒரு பிரிவு வீரர்கள் சரண் அடைந்தனர். மற்றொரு பிரிவினர்  தொடர்ந்து கலகத்தில் ஈடுபட்டனர். 2வது நாளில் மற்ற முகாம்களுக்கும் கலகம் பரவியது. அதைத் தொடர்ந்து பிரதமர் ஹசீனா கடும் எச்சரிக்கை விடுத்தார்.

தலைமையகத்தை டாங்கி களுடன் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்த ராணுவம் தயாரானது. இதையடுத்து, எல்லா வீரர்களும் சரண் அடைந்தனர். இதன் மூலம், 2 நாட்கள் நடைபெற்ற கலகம் முடிவுக்கு வந்தது. இந்த கலகத்தில் துணை ராணுவ படையின் இயக்குனர் ஷகீல் அகமது உட்பட 200 ராணுவ அதிகாரி கள் சுட்டுக் கொல்லப் பட்டள்ளனர். சம்பள உயர்வு பற்றி வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய சில நிமிடங்களில் ஷகீல் அகமது அங்கிருந்து வெளியேறி உள்ளார்.

அப்போது, 4 வீரர்கள் பாய்ந்து சென்று அவரை பிடித்து சுட்டுக் கொன்றதாக துணை ராணுவத்தின் லெப்டினென்ட் கர்னல் சையது குவாம் ரஜ்மான் கூறினார். இவரும் வயிற்றில் குண்டு பாய்ந்து உயிர் தப்பியுள்ளார். தலைமையக வளாகத்தில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் கொள்ளை யடிக்கப்பட்டு உள்ளன.கலகம் ஓய்ந்ததும் தலைமை அலுவலகத்துக்குள் ராணுவம் நுழைந்து, மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டது.

பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஒரு இடத்தில் புதிதாக குழி தோண்டி மூடப்பட்டதற்கான அடையாளம் காணப் பட்டது.  அந்த இடத்தை தோண்டியபோது, 38 அதிகாரிகளின் உடல்கள் புதைக்கப்பட்டு இருந்தன.
 
மேலும் உடல்கள் புதைக்கப்பட்டு இருக்கிறதா என்று தேடப்படுகிறது.  அலுவலக வளாகத்தில் உள்ள பாதாள சாக்கடையிலும் பிணக் குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இன்னும் 130க்கும் மேற்பட்ட அதிகாரிகளை காணவில்லை.  கலவரத்தில் ஈடு பட்ட 300 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலகத்தில் காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வரும் அதிகாரிகளை பிரதமர் ஹசீனா நேற்று பார்த்தார்.

அப்போது அவர், ”கலகத்தில் ஈடுபட்ட வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அதிகாரிகள் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்ட வர்களுக்கு மன்னிப்பு கிடையாது”  என்று அறிவித்தார்.

பிரணாப்புக்கு எதிர்ப்பு:தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு

Pranab_Mukherjeeதூத்துக் குடிக்கு இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகட்ஜி அரசு விழா சம்பந்தமாக வருகை தருகிறார்.
இவர் இலங்கை தமிழர்களை காக்க முயற்சி எடுக்கவில்லை என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்  பிரணாப்புக்கு கறுப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டம் நிலவுகிறது. இப்பதட்டத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பில் 5 படையணிகளை பயன்படுத்துவதாக இலங்கை இராணுவம் கூறுகிறது

wanni-operations.jpgஇலங்கை யின் வடக்கே விடுதலைப்புலிகளிடம் எஞ்சியுள்ள கடைசி நகரமாகிய புதுக்குடியிருப்பு பகுதியை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இலங்கை இராணுவம், ஐந்து படையணிகளை அந்தப் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருப்பதாக இலங்கை இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 24 மணிநேரத்தில் புதுக்குடியிருப்பு கிழக்கு, அம்பலவன் பொக்கணை பொதுப் பிரதேசம், சாலை, திருமுறிகண்டி ஆகிய பகுதிகளில் உக்கிர சண்டைகள் இடம்பெற்றதாகவும், அதில் விடுதலைப்புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், இராணுவத்தரப்பில் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.

போலீஸ்காரர் தீக்குளிப்பு-வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் எதிரொலி

court-tamilnadu.jpgசென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஆயுதப்படை காவலர் ரவிக்குமார் என்பவர் நேற்று திடீரென தீக்குளித்தார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் ரவிக்குமார். ஆயுதப்படையில் இவர் காவலராக உள்ளார். கலவர தினத்தன்று இவர் உயர்நீதிமன்றத்திற்கு வெளியே பணியில் இருந்தார். அப்போது வக்கீல்கள் அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பிளேடுகளால் அவரது உடலில் கீறியதில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரவிக்குமார். சில நாட்களுக்கு முன்பு அவர் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆட்டோவில் வந்து வக்கீல்களுக்கு எதிராக கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், நேற்று மாலை, திடீரென உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். நீதிமன்றத்தின் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்தார்.அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் ரவிக்குமாரை மீட்டுக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர் கொடுத்த வாக்குமூலத்தில், வக்கீல்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள், ஆனால் போலீசாரிடம் ஒற்றுமை இல்லை. போலீசாரும், வக்கீல்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது என் ஆசை. ஆனால், தொடர்ந்து எல்லா சம்பவங்களிலும் போலீஸ்காரர்கள் தான் தாக்கப்படுகிறார்கள். போலீஸ்காரர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்போது ஐகோர்ட்டு சம்பவத்தில் 5 உயர் போலீஸ் அதிகாரிகளை உடனே மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு போட்டுள்ளது. ஆனால் கல்வீசி தாக்கிய வக்கீல்கள் மீதும், போலீஸ் நிலையத்தை எரித்த வக்கீல்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது.

வக்கீல்கள் கல்வீசி தாக்கியதையும், போலீஸ் நிலையத்தை எரித்ததையும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் ஆதாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டன. ஆனால், போலீஸ் அதிகாரிகளை மட்டும் மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

போலீசாருக்கு பாதுகாப்பு கொடுப்பது யார்? என்று தெரியவில்லை. இதனால் மன ரீதியாக நான் வருத்தம் அடைந்தேன். எனது வருத்தத்தை தெரிவிப்பதற்காக தீக்குளித்து உயிரைவிட முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார் ரவிக்குமார்.

ரவிக்குமாருக்கு தொடை மற்றும் காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ்காரர் தீக்குளித்த சம்பவம் சென்னை காவல்துறையில் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின் முக்கிய தலைவர் பலி; வாகனமும் சேதம். ஆயுத, ஆட்பற்றாக்குறையை எதிர்நோக்கிய நிலையில் புலிகள்

armyvictory.gifபுதுக் குடியிருப்பில் அம்பலவன் பொக்கணை, மற்றும் முள்ளியவளை, சாலை ஆகிய பகுதிகளில் தேடுதல் நடத்தி வரும் படையினர் பெருந்தொகை ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர். இதேவேளை புலிகளின் முக்கியஸ்தர்கள் பயன்படுத்தி வந்த பங்கர்களையும் படையினர் கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.

இதேவேளை, படையினர் நேற்றுமுன்தினம் மாலை புதுக்குடியிருப்புப் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் பயணித்த வாகனம் படைகளின் தாக்குதலுக்குள்ளாகி முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-

விடுதலைப் புலிகள் தற்போது பெரும் ஆயுதப் பற்றாக்குறைக்கும் ஆட்பற்றாக்குறைக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் மோதல்களில் பெருமளவான விடுதலைப்புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளதுடன், இராணுவத்தினர் புலிகளின் பெருமளவு ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

புலிகளின் உளவுத்துறைத் தலைவர் உட்பட தலைவர்கள் மட்டத்திலுள்ள சகலரும் களமுனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னேறிச் செல்லும் படையினரின் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத புலிகள் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தின் காட்டுப் பகுதிக்குள் தப்பியோடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களில் சின்னம்மையினால் பீடிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்க தனியான ஆஸ்பத்திரி

trico.gifவவுனியா நிவாரணக் கிராமங்கள், இடைத் தங்கல் முகாம்களில் சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென பூவரசன் குளம் அரசினர் வைத்தியசாலை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், நேற்று வரை அங்கு சுமார் 143 நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலதிக மருந்துகள், தாதியர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த பொது மக்கள் பல நாட்களாக காட்டுக்குள் ஒளிந்தும், புழுதியில் படுத்துறங்கியும், நீராட வசதியின்றியுமே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்தனர். இதனால், அவர்களுக்கு சின்னம்மை வைரஸ் தொற்றியுள்ளது. முகாம்களுக்குள் வந்தவுடனேயே சின்னம்மை வைரஸ் தலைதூக்கியிருக்கலாம் என சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இவர்களை முகாம்களில் வைத்திருக்காமல் வேறுபடுத்தி வவுனியா பூவரசன்குளம் அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்றும், தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியா பூவரசன்குளம் அரசினர் வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவிக்கையில், சின்னம்மையினால் பாதிக்கப்பட்ட 143 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலையில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நோயாளர்களை தங்கவைக்க தற்காலிக கொட்டகைகளை அமைக்க மாவட்ட செயலகத்தின் அனுமதி கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வன்னி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் வசித்தவர்கள்.

வவுனியாவில் பகலிலும் இரவிலும் கடும் வெப்பமான காலநிலை உள்ளது. கூடாரங்களிலும், தகர கொட்டகையிலும் தங்கியுள்ள மக்களே சின்னம்மை நோய்க்கு இலக்காகிவருகின்றனர் எனவும் செட்டிகுளம் வைத்தியசாலையிலும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.

தடுப்பு நடவடிக்கைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுகாதார அமைச்சிலிருந்து வவுனியாவிற்கு வந்துள்ள மருத்துவ குழுவினர் நிவாரணக் கிராமங்களில் தமது பணிகளை மேற்கொண்டுள்ளனர். தொற்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டுள்ளனர்.