கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

ஈழப்பிரச்சனை பற்றி படம் எடுக்க ஆசை; ஆனால் பயமாக இருக்கிறது: கமலஹாசன்

kamal-hassan.jpgஉலக நாயகன் கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்து அசத்தும் படமான உன்னைப் போல் ஒருவன் படத்தின் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவின் போது  செய்தியாளர்கள் கமலிடம், இலங்கை பிரச்னையை மையமாக வைத்து படம் எடுப்பீர்களா என கேட்டதற்கு,  ’’ஆசை இருக்கிறது; ஆனால் அதை விட பயம் அதிகமாக இருக்கிறது’’ என்றார்.

எதற்காக என நிருபர்கள் கேட்டதற்கு,  ’’ஏன் பயம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்’’ என்று புன்னகையுடன் கூறினார்.

மனிதாபிமானம் இல்லாத வெற்றி வெற்றியல்ல

wanni-visit.jpg
“மனிதாபிமானம் இல்லாத வெற்றியானது வெற்றியாக இருக்க முடியாது’ என்று இலங்கைக்கு நேற்று முன்தினம் புதன்கிழமை வருகை தந்து திரும்பி சென்ற பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்டும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் தெரிவித்துள்ளதுடன், இலங்கைக்கு இப்போது சர்வதேச நிவாரண உதவி ஏன் அவசரமாக தேவைப்படுகின்றது என்பதை தாங்கள் நேரடியாகப் பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த இரு அமைச்சர்களும் லண்டன் ரைம்ஸ் பத்திரிகைக்கு உடனடியாக தமது விஜயம் தொடர்பாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளனர். அதனை அப்பத்திரிகை நேற்று வியாழக்கிழமை பிரசுரித்துள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

லண்டனிலும் பாரிஸிலும் வேறு பல இடங்களிலும் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இலங்கையின் நிலைமைகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பாரிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், இலங்கைத் தீவின் உள்நாட்டு யுத்தம் 28 வருடங்களாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தாங்கள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாக வடக்கிலுள்ள சிறுபான்மைத் தமிழ்ச் சமூகம் நீண்ட காலமாக வாதாடி வருகின்றது.

1980 களின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுதந்திரமான தமிழ் இராச்சியத்திற்கான போராட்டத்தை ஆரம்பித்தார்கள். 1986 இல் வடக்கிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டை அந்த அமைப்பு தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனால், கடுமையான எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்நாட்டு யுத்தத்திற்கு இட்டுச் சென்றது. இறைமையுள்ள அர சாங்கம் கொலைகார பயங்கரவாத இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கையென திட்டவட்டமாக அறிவித்து இராணுவ பலத்தை பிரயோகித்தது. அரசாங்கத்தினால் சிறுபான்மையினம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக அவர்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

மீண்டும் மீண்டும் எதிர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டு அரசியல் தீர்வுகள் ஸ்தம்பிதம் அடைந்தன. போராட்ட இறுதிக் கட்டத்தில் இலங்கை இருப்பதாக அரசாங்கம் இப்போது நம்புகின்றது. அதன் இராணுவ முன்னேற்றம் சந்தேகத்திற்கு இடமில்லாததாகும். விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் சுருங்கி வரும் நிலப்பரப்பில், அதாவது ஒரு சில சதுர கிலோ மீற்றர் பரப்பளவுக்குள் அகப்பட்டுள்ளது. அதன் அளவு ஒருபுறம் இருக்க சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் புலிகளிடம் உள்ளனர். ஏனையோர் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். சோதனை நிலையங்கள் மற்றும் முகாம்களுக்குள் அவர்கள் உள்ளனர்.

பொதுமக்களின் துன்பங்களும் உயிரிழப்புகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் இணக்கப்பாட்டிற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் பின்னடைவைக் கண்டதாகவேயுள்ளது.

இலங்கைக்கு நேற்று நாம் (நேற்று முன்தினம்) மேற்கொண்ட விஜயத்திற்கான காரணம் மிக எளிதானதாகும். மோதலினால் இடம்பெயர்ந்த மற்றும் அங்கு சிக்கியிருக்கும் மக்கள் தொடர்பான காலம் கையை விட்டுச் சென்று கொண்டிருக்கின்றது. நாம் அங்கு சென்ற நோக்கமும் மிகச் சாதாரணமானதாகும். ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம், ஜி8 என்பன அழைப்பு விடுத்த மனிதாபிமான நிவாரணம் தொடர்பாகவே நாம் அங்கு சென்றோம்.

வவுனியாவில் நிலைமையை நாம் நேரில் பார்த்தோம். இடம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்தோம். அத்துடன், பிரான்ஸின் தளவைத்தியசாலையொன்று அங்கு புதிதாக அமைக்கப்பட்டதையும் கண்டோம். ஒவ்வொரு தனி மனிதரினதும் துன்பகரமான கதைகளை நாம் கேட்டோம். தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து பொதுமக்களைச் செல்ல வேண்டாம் என அவர்கள் புலிகளால் வற்புறுத்தப்பட்டிருந்தனர். குண்டுகளாலும் ஆட்லறிகளாலும் அங்கு இறந்தவர்களும் காயமடைந்தவர்களும் உள்ளனர். குடும்பங்கள் பிரிந்து விட்டன. தமது அன்புக்குரியவர்கள் குறித்து ஏதாவது செய்திகள் கிடைக்குமா என்று அநேகமானோர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த காலம் தொடர்பான அச்சம், தங்களின் தற்போதைய நிலைமை தொடர்பான பீதி, எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற பயம் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றது.

உடனடித் தேவைகள் குறித்து ஐ.நா.வும் ஐரோப்பிய ஒன்றியமும் உரத்தும் தெளிவாகவும் கூறியுள்ளன. முதலாவதாக இரு தரப்பும் மோதல் சூன்ய வலயம் (அது எதிரானதாக உருவாகியுள்ளது) என்று கூறப்படும் பகுதிகளிலுள்ள பொதுமக்களை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இலங்கை அரசாங்கத்தை சில காலத்திற்கு யுத்த நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு நாம் அழைப்பு விடுத்தோம். புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தும் தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களை வெளியேற்றுவதற்காகவும் இதற்கான கோரிக்கையை விடுத்தோம். சாத்தியமானளவு விரைவாக மோதல் பகுதியிலிருந்து பொதுமக்கள் ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் வெளியேறுவது தொடர்பாகவே சில காலத்துக்கு யுத்த நிறுத்தத்தை அறிவிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தோம்.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதென்ற இலங்கை அரசின் அறிவிப்பு பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பாக வரவேற்கத்தக்க படிமுறை ஒன்றாகும். இத்தகைய அறிவிப்புகள் கடந்த காலத்திலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது அமுல்படுத்தப்பட வேண்டியதும் பேணப்பட வேண்டியதும் அவசியமானதாகும். மோதல் பகுதிக்கு மனிதாபிமான குழுவை அனுப்புவது தொடர்பான ஐ.நா. அரசாங்கத்துடன் உடன்பாட்டை எட்டியிருந்தது. அந்த உடன்பாடு அமுல்ப்படுத்தப்படவில்லை. அது நடைமுறைப்படுத்தப்படுவது அவசியமானதாகும்.

இரண்டாவதாகவுள்ள கவலையானது இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் தொடர்பானதும் அவற்றின் நிலைபற்றியதானதாகும். ஐ.நா. நிவாரண நிறுவனங்கள், ஊடகங்கள் என்பன இங்கு செல்வதற்கு முழுமையான அனுமதி வழங்க மறுக்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் தவறான நடவடிக்கையாகும். தப்பி வரும் பொதுமக்களை சோதனையிட அரசு விரும்புகின்றது மக்களுடன் விடுதலைப் புலிப் போராளிகள் நுழைந்து விடக் கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அரசாங்கம் இதனை செய்ய விரும்புகின்றது. அவ்வாறு வரும் புலிப் போராளிகள் தொடர்ந்தும் பயங்கரவாதப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அரசு கருதுகின்றது. ஆனால், இந்த நடவடிக்கையில் வெளிப்ப?டத்தன்மை பேணப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஐ.நா. மற்றும் ஏனைய சர்வதேச நிறுவனங்களை சோதனை நடவடிக்கைகளின் சகல கட்டங்களிலும் அரசாங்கம் அனுமதிப்பது அவசியமாகும்.

மோதல் பகுதியிலிருந்து வெளிவரும் பொதுமக்களின் நிலைமைகள் தொடர்பாக அக்கறை செலுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். 2 இலட்சம் இடம்பெயர்ந்தவர்களுடன் நாடு திண்டாடுகின்றது. இவர்களில் பலர் காயமடைந்தவர்களும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களாகவும் முதியவர்களாகவும் குழந்தைகளாகவும் காணப்படுகின்றனர். கடந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவி வழங்கும் அமைப்புகள் நேரடியாக பணியில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுத்திருந்தது. ஆனால், ஒழுங்கான முறையில் நிர்ணயிக்கப்படாமலும் போதிய வளங்கள் இல்லாமையும் மனிதாபிமான உதவியை வழங்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பில்லாமல் இருப்பதானது அந்த மக்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்கவே வழி செய்யும்.

ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவே நாம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டோம். இடம்பெயர்ந்து தங்கியிருக்கும் முகாம்களுக்குள் சிறந்த மருத்துவ சேவைகள் இருப்பது அவசியம். உணவு, தங்கும் இடம் என்பன சிறப்பான முறையில் அமைய வேண்டும். பணம், மருந்து, தங்கும் இடம் போன்ற வசதிகளுக்காக பிரிட்டனும் பிரான்ஸும் தமது உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், அவை ஒழுங்கான முறையில் சென்றடைவதற்கான தேவைகள் உள்ளது.

இறுதியாக இங்கு நாம் குறுகிய கால நடவடிக்கைகளிலேயே எமது கவனத்தைச் செலுத்தியிருக்கின்றோம். ஆனால், நீண்ட கால தேவைகளை நாம் அலட்சியப்படுத்த முடியாது. இலங்கை அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாகும். ஆதலால், ஐ.நா. உறுப்பினர்கள் எதிர்பார்க்கும் உயர்மட்ட தரத்தை அது கொண்டுள்ளது. அதேசமயம், அதன் கடப்பாடுகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதாக அமைய வேண்டும். அதேவேளை, வன்முறையானது தமிழ் மக்களுக்கு பயனளிக்கப் போவதில்லை என்றும் வன்முறைகளைக் கைவிடுவதே முன்னேற்றத்திற்குக் கொண்டுவரும் என்பதும் நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியும் கொண்டிருக்கும் நிலைப்பாடாகும் என்பதை புலிகளுக்குத் திரும்பத் திரும்பக் கூறுகின்றோம்.

எதிர்காலத்தில் ஒன்றாக வாழ்வதற்குரிய வழி முறைகளை இலங்கைச் சமூகங்கள் கண்டுகொள்ள வேண்டும். அதனை தனியாக இராணுவ வெற்றியினால் மட்டும் வென்றெடுக்க முடியாது. தமிழர்களின் எதிர்ப்புணர்வுகளுக்கு எண்ணெய் ஊற்றியதாக காணப்படுவது அரசியல் ரீதியாக அந்நியப்படுத்தப்பட்டிருப்பதாக காணப்படுவதும் மிக ஆழமாக வேரூன்றியிருக்கும் உணர்வாகும். தொடர்ந்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கம் தொடர்பாக இந்த உணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு கண்ணியமான முறையிலும் தார்மிகக் கொள்கை அடிப்படையிலுமான அரசியல் நடவடிக்கைகள் மூலம் தீர்வு காணவேண்டும்.

இரு தரப்பு தொடர்பாகவும் நாம் எந்தவிதமான வேறுபட்ட உணர்வுகளையும் கொண்டிருக்கவில்லை. 3 தசாப்தங்களாக மேற்கொண்ட முயற்சிக்கு இப்போது வெற்றிகள் கிடைத்திருப்பதாக இலங்கை அரசாங்கம் நம்புகின்றது. ஆனால், அதிக எண்ணிக்கையான பொதுமக்களின் உயிர்களுக்கு விலை செலுத்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாகும். அது தற்போது அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கின்றது. இந்த நிலைவரத்தின் பாரதூரத் தன்மையை கருத்தில் கொண்டு பொதுமக்களின் துன்பத்தை நிறுத்துவதற்கான கடமை சர்வதேச சமூகத்திற்குள்ளது.

எங்களுக்கு இது என்ன தொடர்பு என்று மக்கள் எங்களைக் கேட்கலாம். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்களாகிய நாம் இறைமையுள்ள அரசாங்கங்களும் சர்வதேச சமூகமும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்தும் விலகிச் செல்ல முடியாது. இலங்கையின் பொதுமக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் தோல்வி கண்டிருப்பதையிட்டு எங்களுடன் இணைந்து அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இலங்கை அரசாங்கத்திடம் எமது வேண்டுகோளை நேரடியாக விடுத்தோம். இலங்கை அரசாங்கம் வெற்றிகொண்ட தருணத்திலுள்ளது. இந்தத் தருணத்தில் அது மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவது அவசியம். அத்துடன், சமாதானத்தை வென்றெடுக்கும் வழிமுறைகளை வழியைக் கண்டறிய சுய ஆர்வம் காட்டுவதும் அவசியமானதாகும்.

வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு வெளியார் செல்ல அனுமதி இல்லை – தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம்

menikfarm.gifவவுனியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும முகாம்களுக்கு வெளியாரோ, அமைப்புகளோ பிரவேசிக்க அனுமதி வழங்கப்படாது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல நேற்று வியாழக்கிழமை அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

20 ஏப்ரல் 2009 இல் 58 ஆவது படையணிப் பிரிவானது மனிதக் கேடயங்களாக அப்பாவிப் பொதுமக்களை பிடித்து வைத்திருந்த புலிப் பயங்கரவாதிகளை அழித்ததன் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது. படையினரின் தீவிரமான முயற்சிகளை யடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரசகட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். இந்தப் பொதுமக்களுக்கு பலவழிகளில் தனிப்பட்ட பலரும் அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்த இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசும் மேலதிகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வவுனியா மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் கிராமத்தில் திருப்திகரமான முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆதலால், தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் மெனிக்பாம் கிராமத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்கு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் பொதுமக்களின் நலனுக்காக மேற்கொண்டுவரும் பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக இக்கோரிக்கை விடுக்கப்படுகிறது.

பாதுகாப்பு அமைச்சிடம் தனிப்பட்டவர்கள் பலரும் அமைப்புகளும் அனுமதி கோரியுள்ளனர். வவுனியா மெனிக்பாம் கிராமத்துக்கு செல்ல அனுமதி கோரியுள்ளனர். ஆனால், வெளியாட்களினால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தங்கள் பணியின் முன்னேற்றத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும் முகாமில் பணிபுரியும் அதிகாரிகள் அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். இதனடிப்படையில் எந்தவொரு சூழ்நிலையிலும், மெனிக்பாமுக்கு வெளியாட்கள், அமைப்புகள் பிரவேசிக்க அனுமதி வழங்குவதில்லையென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பிற்கான மத்திய ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருதரப்புக்கிடையில் கடும் மோதல்

waroooo.jpgவன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் விடுதலைப் புலி உறுப்பினர்களை முடக்கியுள்ள படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன என்று படைத்தரப்பு தெரிவிக்கினறது.

ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலைக்கு சர்வதேச தொழிலாளர் தினம் – புன்னியாமீன்

mayday01.jpgஇன்று மேதினம்  Day of the International Solidarity of Workers. அதாவது ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

உலக கைத்தொழில் புரட்சியின் பயனாக ஆலைகளின் பெருக்கம்,  இயந்திரமயமாக்கம், பேரளவு உற்பத்தி ஆகிய காரணிகள் தொழிலாளரை ஒரு வர்க்கமாக ஒன்றுபட வைத்தது. ஒருபுறம் முதலாளிகள் உற்பத்தி முயற்சியில் இலாபம் பெறுகின்றனர். தொழிலாளரிடமிருந்து ஊழியத்தைப் பெறுகின்ற அளவு அவர்களுக்கான உரிமைகள், ஊதியம், சலுகைகள் என்பவற்றை வழங்குவதில் உற்பத்தியாளர் ஆர்வம் காட்டவில்லை. கால்வயிற்றுக் கஞ்சிக்காக தம் உழைப்பை நல்கும் தொழிலாளர் வேறு வழியின்றி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டனர். இதனால் தொழிலாளர் வாழ்க்கையை சிறுமையும், வறுமையும் ஆட்கொண்டன. அதே நேரம் தொழில் உரிமையாளர்களால் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்யவேண்டுமென  தொழிலாளிகள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

இப்படிப்பட்ட பின்னணியில் கட்டாய வேலைநேரத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளில்  குரல்களும் ஆங்காங்கே எழ ஆரம்பித்தன. குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய  ஆவண இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தியது. இதில்  10 மணி நேர வேலைக் கோரிக்கை முதன்மை பெற்றிருந்தது.

1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால் இப்போராட்டங்கள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். மெல்பேர்ன் கட்டிடத் தொழிலாளர்களின் போராட்டம் 8 மணி நேர வேலை, 8 மணி நேர பொழுதுபோக்கு, 8 மணி நேர ஓய்வு என்ற அடிப்படையில் அமைந்திருந்தது. மெல்பேர்ன் தொழிலாளர்களின் வெற்றி தொழிலாளர்  வர்க்க போராட்டத்தின் மைல்கல்லாக அமைந்தது எனலாம்.

சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 – 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக எடுத்துரைத்திருந்ததுடன் ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் – அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே 1917- ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832இல் பொஸ்டன் நகரில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அமெரிக்க முதலாளிகள் ஆரம்பத்தில் இதனைக் கண்டு கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் 1884ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் அடிப்படையில் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ளதொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர் என கூறப்படுகின்றது. தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்காவின் பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்துக் கொண்டனர்.

இந்த எழுச்சி சிக்காகோவிலும் ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்தன. சிக்காகோவில் வேலை நிறுத்தப்போராட்டம் சூடுபிடித்தது. மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை தொழிலாளர்கள் நடத்தினர் . ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். இச்சம்பவத்தில் 7 பொலிஸாரும், 4 தொழிலாளர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து  தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 21, 1886 ஆரம்பமாகியது. இறுதியில் 7  தொழிலாளர் தலைவர்களுக்கு  தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக – உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது. 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.

mayday01.jpg1890 மே 1 இலிருந்து இன்று வரை ஒவ்வொராண்டும் மே 1ம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

தொழிலாளரின் அவர்களது ஆற்றலின் தேவையை உணர்த்த வேண்டிய, போற்ற வேண்டிய இந்நாள் உண்மையான நோக்கத்திலிருந்து தலைகுப்புறப் புரண்டுவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுப்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற இந்நாளானது இன்று உருவாக்கத்தின் நோக்கத்தையே மறந்து விட்டு  ஒரு கேளிக்கை தினமாக மாறி வருவது சிந்திக்க வேண்டியதொரு விடயமாகும். தொழிலாளரின் ஒற்றுமையை உறுதிப்படுத்த சபதமேற்கும் இந்நாள் தொழிலாளரின் உரிமைகள் வெற்றிகொள்ள ஒன்றுபட்டுக் குரல் எழுப்ப வேண்டிய இந்நாள் பல்வேறு பிரிவினைகளுக்கு உரமூட்டும் நாளாக அமைந்துவிட்ட அவலத்தை நாம் மூன்றாம் உலக நாடுகளின் காணக்கூடியதாக உள்ளது.

உழைப்பாளரின் சக்தியை, ஒற்றுமையை ஓங்கியொலிக்க வேண்டிய இந்நாள் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்ட அவல நிலையையே வெளிப்படுத்துகின்றது. இத்தினத்தின் நோக்கம் இன்று புறந்தள்ளப்பட்டு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளதும் ஆள்பலத்தை வெளிப்படுத்தும் தேசிய நாளாக அமைந்துவிட்டது என்றால் அதுவே யதார்த்தம். அதுவே உண்மை. பிள்ளையார் பிடிக்க குரங்கானது என்பது போல் தொழிலாளரின் உரிமை பற்றி குரல் கொடுக்க வேண்டிய மேதின ஊர்வலங்களும், கூட்டங்களும் இன்று அரசியல் ஊர்வலங்களாகவும் அரசியல் மேடைகளாகவும் மாறிவிட்டன. ஜனநாயக நாடான நமது நாடுகளில் மேதினம் நடத்த, ஊர்வலம் செல்ல, கூட்டத்திற்கு ஆள்திரட்ட பண நாயகமும், மதுநாயகமும் உதவும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது.

மேதினத்தின் நோக்கத்தையே, அதன் உண்மைத் தாற்பரியத்தையே குழிதோண்டிப் புதைத்துவிட்டு அதன் மேல் நின்று ஒப்பாரி வைப்பது போன்றே இன்றைய காலத்தில் மேதினம் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர் வர்க்கமே ஒன்றுபட உரிமைகளை வென்றெடு, நிலைநாட்டு என்று குரல் எழுப்ப வேண்டிய பெறுமதிமிக்க இத்தினத்தில் மூன்றாம் உலக நாடுகளின் நவீன சுரண்டல்கள் பற்றியும்,  நமது நாடுகளின் தொழிலாளர் நிலைபற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.

பின்னிணைப்பு

சர்வதேச தொழிலாளர் தினமான மே 1ம் திகதியை அரசாங்க பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தியுள்ள நாடுகள்

Albania, Argentina, Aruba, Austria, Bangladesh, Belgium, Bolivia, Bosnia, Brazil, Bulgaria, Cameroon, Chile, Colombia, Costa Rica, China, Croatia, Cuba, Cyprus, Czech Republic, Denmark,Dominican Republic Ecuador, Egypt, Finland, France, Germany, Greece, Guatemala, Haiti, Hungary, Iceland, India, Italy, Jordan, Kenya, Latvia, Lithuania, Lebanon, Malaysia, Malta, Mauritius, Mexico, Morocco, Myanmar (Burma), Nigeria, North Korea, Norway, Pakistan, Paraguay, Peru, Poland, Philippines ,Portugal, Romania, Russian Federation, Singapore, Slovakia, Slovenia, South Korea, South Africa, Spain, Sri Lanka, Serbia, Sweden, Syria, Thailand, Turkey, Ukraine, Uruguay, Venezuela, Vietnam and Zimbabwe.

‘ஈழத் தாய்’ ஜெயலலிதா- ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம்

j-j-j.jpgதனி ஈழம் அமைக்க வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு புலம் பெயர்ந்து வாழும் ஆஸ்திரேலிய தமிழ் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது.

தனி ஈழம் அமைப்போம் என்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பேச்சுக்கு உலகம் முழுவதும் உள்ள புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியாவில் உள்ள தென்துருவத் தமிழ் சங்க சம்மேளனம் தலைவர் சிற்றம்பலம் ராகவன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் வாழ்வா சாவா என்ற இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதன் நீண்ட இரத்தம் தோய்ந்த அதே சமயம் அடிபணிய மறுக்கும் ஒரு தேசத்தின் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை அறிந்த ஒரு புரட்சித் தலைவரின் வழியில் வந்த திராவிட சிசு நீங்கள். ஆறுதல் அடைகிறோம்…

அண்மையில் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவல நிலை கண்டு துடிக்கும் எம் உடன்பிறப்புக்களின் எழுச்சியைக் கண்டபோது தாங்க முடியாத வலியில் தவிக்கும் நாம், நாங்கள் யாரும் அற்ற அனாதைகள் அல்ல என ஆறுதல் அடைகின்றோம்.

இதற்கெல்லாம் சிகரமாக இந்திய மத்திய அரசு தமிழின அழிப்புக்கு துணைபோவதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டிய தங்களின் அறிக்கை அமைந்தது. இதற்காக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து வாழ் ஈழத் தமிழர்களின் அன்பையும் நன்றிகளையும் தங்களுக்கும் அதிமுக கட்சிக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த சமயத்தில் தங்களின் குரல் எமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. ஈழத் தமிழர்களின் விடிவிற்கு ஒரே வழி சுதந்திர ஈழமே. இதனை வலியுறுத்தி தமிழகத்தில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும் என உரிமையோடு வேண்டுகிறோம்.

இவை சம்பந்தமாக தமிழக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட தாங்கள் வலியுறுத்த வேண்டும் என்பதே புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். இவற்றை செய்திட விரையுங்கள். புதிய நாடு ஒன்றின் பிரசவத்தின் தாயாக வரலாற்றில் வாழுங்கள் என அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

மோதல் பகுதிகளிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவது அத்தியாவசியம் : நியூயோர்க்கில் ஜோன் ஹோம்ஸ்

UN_Logoமோதல் பிரதேசங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களை வெளியேற்ற அரசாங்கம் துரிதமான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் இதன் பொருட்டு மனிதாபிமான யுத்த இடைநிறுத்தத்தினையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்கள் பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் எறிகணைகள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகங்களினால் மாத்திரமன்றி உணவு மற்றும் இதர அத்தியாவசிய வசதிகள் இல்லாததன் காரணமாகவும் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவி செயலர் ஜோன் ஹோம்ஸ் நேற்று நியூயோர்க் நகரில் வைத்து செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

தற்போது பாதுகாப்பு வலயம் அல்லது மோதல் தவிர்ப்பு பிரதேசம் என்று ஒன்று அங்கு இல்லை. அது கனரக ஆயுதங்களின் தாக்குதல் இடம்பெறும் தளமாகவே காணப்படுவதாக ஜோன் ஹோம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

படையினர் எல்ரிரிஈயினரின் கடைசி பகுதியை அண்மித்துள்ளனர் – பாதுகாப்பு அமைச்சு

navy.jpgஇரட்டை வாய்கல் தெற்கு பகுதியில் 7 சதுரக்க கி.மீ.பரப்புக்குள் எல்ரிரிஈயினரை முடக்கியுள்ள இராணுவத்தின் 58வது டிவிசன் படையினர் எல்ரிரிஈயினர் பதுங்கியுள்ள இடங்களை அண்மித்துள்ளதாகவும் எல்ரிரிஈயினர் கடைசி சண்டைக்கு எதிர்பார்த்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

58வது டிவிசன் படையினருக்கு பக்கமாக படை நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் 53வது டிவிசன் படையினர் முள்ளிவாய்கல் மேற்கு பகுதியில் எல்ரிரிஈ பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள 15,000 -20,000 வரையான சிவிலியன்களை மீட்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரையமுள்ளிவாய்கல் பகுதியில் கண்ணிவெடிகளையும் அகற்றிக்கொன்டு பயங்கரவாதிகளின் பகுதிக்குள் இராணுவத்தினர் நுளைந்துள்ளனர்.இதன்போது 15 எல்ரிரிஈயினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதா பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.

107 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்தது

india.jpgபதினொரு மாநிலங்களில் உள்ள 107 தொகுதிகளுக்கு இன்று மூன்றாவது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. குஜராத்தில் 26 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 16, உத்தரப் பிரதேசத்தில் 15, மேற்கு வங்காளத்தில் 14, பிகாரில் 11, கர்நாடகத்தில் 11, மகாராஷ்டிரத்தில் 10, காஷ்மீர், சிக்கிம், தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகியவற்றில் தலா 1 தொகுதிகளில் என மொத்தம் 107 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

இந்தத் தேர்தல் 101 பெண்கள் உள்பட மொத்தம் 1,567 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.4 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இதற்காக 1,65,112 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

நக்சலைட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பிகார், மேற்கு வங்கத் தொகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டள்ளனர். இன்று தேர்தல் நடந்த தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பாஜக தலைவர் அத்வானி போட்டியிடும் காந்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடக்கம்.

அதேபோல முன்னாள் பிரதமர் தேவ கெளடா போட்டியிடும் ஹாசன், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் போட்டியிடும் மாதேபுரா, கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா போட்டியிடும் ஷிமோகா ஆகிய தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடந்தது. மும்பையின் அனைத்துத் தொகுதிகளிலும் இன்று வாக்குப் பதிவு நடந்தது.

இன்றைய வாக்குப் பதிவுடன் நாட்டில் மொத்தமுள்ள 372 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள 171 தொகுதிகளில்  4-வது கட்டமாக வரும் மே 7ம் தேதி 85 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. 5வது கட்டமாக 13ம் தேதி தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 86 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

நிவாரண உதவிகளை வவுனியாவுக்கு எடுத்துச் செல்ல விசேட விமான சேவை

fily-ap.jpgபுலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தோருக்கு விநியோகிப்பதற்காக தெற்கில் பொது மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் வவுனியா செட்டிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு தினமும் விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இலங்கை விமானப் படையின் சரக்கு விமானங்கள் பல இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வவுனியாவிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலருணவுப் பொருட்கள்,  மருந்து வகைகள்,  குடிநீர்,  மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இவ்வாறு விமானம் மூலம் வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.